கலைஞர் தயவில் மீண்டும் மும்மொழித்திட்டம் : வாழ்த்துவோம் வரவேற்போம்

This entry is part [part not set] of 46 in the series 20041021_Issue

மஞ்சுளா நவநீதன்


இது கலைஞருக்குப் போற்றி பாடும் பக்தகோடிகளைப் பற்றிய செய்திக் குறிப்பு .

http://www.thedmk.org/murasoli/urai/2k41011u.htm

திராவிட இயக்கங்களின் தமிழ்ப் பற்றின் போலித்தனத்தை வெளிக்காட்ட இது இன்னொரு உதாரணம் என்பதால் இதன் சில பகுதிகளை இங்கே கொடுக்கிறேன்.

செய்தி தொடக்கம் :

தமிழ் மத்திய ஆட்சி மொழியாவதற்கு தி.மு.க. வாதாடும்!

கர்நாடகத்தில் கன்னட மொழி கட்டாயமாக்கப்பட்டதுபோல் தமிழ்நாட்டில் தமிழ் மொழியை கட்டாயமாக்க பணியாற்றுவோம்!

தமிழ் மொழி அகாதமி நடத்திய பாராட்டு விழாவில் தலைவர் கலைஞர் உறுதி

ஈ.டிலாத் தமிழ் மொழியை செம்மொழியாக்கிய இலக்கியக் கடல் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு தமிழ் மொழி அகாதமி சார்பில் சென்னை – இராணி மெய்யம்மை மண்டபத்தில் நேற்று மாலை தனிப் பெரும் பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவில் ஏற்புரையாற்றிய தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள்; “தமிழ் மத்திய ஆட்சி மொழியாகிட போராடத் தேவையில்லை, வாதாடினாலே போதும். சர்வபுரி தியாகம் செய்தேனும் தமிழை மத்திய ஆட்சி மொழியாக்கிட உறுதியேற்போம்’’ என்று குறிப்பிட்டார்.

தமிழகத்தில் பள்ளிகளில் தமிழைக் கட்டாய மாக்குவது குறித்து தமது உரையில் குறிப்பிட்ட கலைஞர் அவர்கள் ; “கர்நாடகத்தில் எப்படி கன்னட மொழி கட்டாயமாக்கப்பட்டிருக்கிறதோ, அதற்கு என்ன வழிவகைகளை அவர்கள் இன்றைக்குக் கடைப்பிடிக் கிறார்களோ அதே வழிவகைகளைக் கடைப்பிடித்து தமிழ்நாட்டில் தமிழ் மொழியை கட்டாயமாக ஆக்குவதற்கு பணியாற்றுவோம்!’’ என சூளுரைத்தார்.

நான் உளிதான் சிற்பிகள் பல்லாயிரவர்

நான் ஒரு கருவி. இந்தக் கருவியைத் தமிழ்நாட்டு மக்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். தமிழ்ப் புலவர்கள், தமிழ்ப் பேரறிஞர்கள் பயன் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். உளி சிற்பம் செதுக்குவதற்காகப் பயன்படுத்தப்பட்டால், அந்த உளியே அந்தச் சிற்பத்தை செதுக்கியதாக பொருள் கொள்ள முடியுமா ? (கைதட்டல்) அந்தப் பணியை ஆற்றியது சிற்பி. அதைப் போல நான் உளி தான், சிற்பிகள் பலர், பல்லாயிரவர். அந்தச் சிற்பிகளுக்கெல்லாம் என் சிரம் தாழ்ந்த வணக்கத்தை, நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். (பலத்த கைதட்டல்)

இன்னும் கொஞ்சம் அணுகிப் பார்த்தால் எந்தவொரு மொழியும் ஒரு அரசைப் பொறுத்துத்தான் வளர முடியும். வரலாற்றை நீங்கள் புரட்டிப் பார்ப்பீர்களேயானால் நாட்டில் உருவாகின்ற அரசுகளைப் பொறுத்துத்தான் மொழி ஆதிக்கம் பெற்றிருக்கின்றது. நாம் பேசுகிறோம், இன்றைக்குக் கூடப் பேசுகிறோம், தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழனைப் பற்றி. ஒரு இளைஞனைப் பார்த்து, ராஜராஜ சோழன் காலத்திலே தமிழ் எப்படி வளர்ந்தது என்று கேட்டால், ஆயிரக்கணக்கான தமிழ்ப் புலவர்களுக்கு அவர் அருட்கொடை, பொருட்கொடை இவைகளையெல்லாம் வழங்கினார் என்று அந்த இளைஞன் சொல்வான். ஆனால் உண்மை அது அல்ல.

ராஜராஜ சோழன் வளர்த்தது தமிழ் மொழியை அல்ல, வடமொழியை. சமஸ்கிருதத்தைத்தான் ராஜராஜ சோழன் வளர்த்தான் என்று வரலாறு கூறுகிறது. சென்னைக்கு அருகே யுள்ள காஞ்சிபுரத்தை ஆண்டவர்கள் பல்லவ மன்னர்கள். அவர்களுடைய காலத்திலே, அவர்கள் தமிழை வளர்க்க வில்லை. ஓரிருவர், நந்திவர்மன் போன்றவர்கள் தமிழ்க் கவிஞர் களாக வாழ்ந்தார்களே அல்லாமல், ஆண்ட மன்னர்கள் அத்தனை பேரும் வடமொழியை, பாலி மொழியை வளர்ப்பதற்காகத் தான் பாடுபட்டார்கள், வட மொழியிலே தான் அவர்கள் நாடகங்களை எழுதினார்கள், கவிதைகளைத் தீட்டினார்கள், எனவே ஒரு மொழி வளர அரசும், அரசின் ஆதிக்கமும் அந்த அரசை நடத்துகின்றவர்களுடைய ஆதரவும் தேவை. அப்படிப்பார்த்தால் தமிழ் செம்மொழியாக ஆவதற்கான வழிவகை வகுக்கின்ற ஒரு அரசு இந்தியாவிலே உருவாயிற்று என்பதே உண்மை.

மத்தியிலே ஆட்சி மொழியாகவும் இந்த மொழி ஆகவேண்டுமென்று அடுத்த கட்ட கோரிக்கையை நான் வைக்க வேண்டுமென்று நம்முடைய ஆர்.எம்.வீ. அவர்களும், உவமைக் கவிஞர் சுரதா அவர்களும், வாழ்த்துரை வழங்கியவர்களும் இங்கே குறிப்பிட்டார்கள். உங்கள் முன்னிலையிலே நான் அந்த உறுதியை எடுத்துக் கொள்கிறேன். (பலத்த கைதட்டல்) இன்று செம்மொழியாக ஆக்கப்பட்டு, அறிவிக்கப்பட்ட தமிழ், இந்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஆவதற்கு நிச்சயமாக நான் குரல் கொடுப்பேன். என்னைத் தலைவனாகக் கொண்டிருக்கின்ற இயக்கம் போராடும், வாதாடும். போராடத் தேவை யில்லாமலே வாதாடுகின்ற நேரத்திலேயே வழங்குவார்கள், இந்தியாவின் ஆட்சி மொழிகளில் தமிழ் மொழி என்ற அந்த அறிவிப்பை மத்தியிலே பேரரசை நடத்துபவர்கள் வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிரம்ப உண்டு.

நான் என்ற முனைப்பு எனக்கு என்றைக்கும் இருந்ததில்லை

கடந்த காலத்தில் தமிழ் செம்மொழியாக ஆவதற்காகவும், ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஆவதற்காகவும் விழுப்புரம் மாநாட்டிலே தீர்மானம் நிறைவேற்றி போராட வேண்டி யிருந்தது. ஒரு லட்சம் பேர் என்னுடைய தலைமையிலே உள்ள இந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சிறைச்சாலைக்கு செல்லவேண்டியிருந்தது. அப்பொழுதும் கவனிக்கப்படும், பார்ப்போம் என்ற ஒரு ஆறுதல் மொழி கூட கடந்த காலத்திலே இருந்த அரசிடமிருந்து நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால் இந்த அரசு, இன்றைக்கு இந்தியாவை ஆண்டு கொண் டிருக்கின்ற அரசு, குறைந்தபட்ச செயல் திட்டத்தை வகுக்கும்போதே, நானும், தமிழகத்தைச் சேர்ந்த ஜனநாயக முற்போக்குக் கூட்டணியைச் சேர்ந்த தலைவர்களும் எடுத்துச் சொன்னவுடன் – இதில் நான் மாத்திரம் பெருமை தேடிக் கொள்ள விரும்பவில்லை, நான்தான் செய்தேன் என்று சொல்லுகின்ற இந்த நான் என்கின்ற முனைப்பு எனக்கு என்றைக்கும் இருந்ததில்லை (கைதட்டல்), எப்போதும் இருந்ததில்லை, இனியும் வரக்கூடாது என்று நீங்கள் வேண்டிக் கொள்ளுங்கள் என்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். வராது, ஏனென்றால் இன்று நேற்றல்ல, நான் இளமைப் பிராயத்திலே ஒரு கல்லூரியிலே பேசும்போது குறிப்பிட்டதை அடிக்கடி நினைவுபடுத்திக் கொண்டு வருகிறேன், எழுதும்போதும், பேசும்போதும்.

நான் என்பது – நான் எம்.ஏ.எம். ராமசாமி அவர்களைச் சந்தித்தேன் – என்று சொல்லும்போது வேண்டுமானால் அப்போது நான் என்பதை குறிப்பதற்காகப் பயன்படுத்தலாம். ஆனால் “நான் செய்தேன்”, “நான் இதை நிலைநிறுத்தினேன்” என்று சொல்லும்போது “நான்” மறைய வேண்டும், அங்கே “நாம்” வரவேண்டும். (கைதட்டல்)

அதைப்போல தமிழ் இனத்தின் போராட்டமாக, இந்தியாவில் எல்லா மொழிகளும், மாநிலத்திலே ஆட்சி மொழிகளாக இருக்கின்ற அத்தனை மொழிகளும், இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமே யானால் அட்டவணையிலே இடம் பெற்றிருக்கின்ற தமிழ் உள்ளிட்ட அத்தனை மொழிகளும் ஆட்சி மொழிகளாக மத்தியிலே இடம் பெறவேண்டுமென்பதற்காக நாம் வாதாடுவோம். அதற்காக நம்மை சர்வ புரி தியாகம் செய்யவும் தயாராக இருப்போம் என்ற உறுதியை இங்கே எடுத்துக் கொள்வோம்.

ஆர்.எம்.வீ. அவர்கள் ஒன்றைச் சொன்னார்கள். அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கும் சொன்னார்கள். தமிழ், தமிழ்நாட்டிலே கட்டாய மொழியாக ஆக இயலவில்லை, அதற்குள்ள காரணத்தை கலைஞர் அறிவார் என்று குறிப்பிட்டார்கள். அவரும் அறிவார், நானும் அறிவேன். ஆனால் அதை இன்னும் வெளிப்படையாக விளக்க நான் முன்வரவில்லை. ஆனால் அவருக்கு உறுதியாகச் சொல்லிக் கொள்கிறேன்.

எதிர்காலத்தில் கர்நாடகத்திலே எப்படி கன்னட மொழி கட்டாயமாக ஆக்கப்பட்டிருக்கிறதோ, அதற்கு என்ன வழி வகைகளை அவர்கள் இன்றைக்குக் கடைப்பிடிக் கிறார்களோ, அதே வழிவகைகளைக் கடைப் பிடித்து தமிழ் நாட்டிலும் தமிழ் மொழியைக் கட்டாயமாக ஆக்குவதற்கு (பலத்த கைதட்டல்) வந்தால், பணியாற்றுவோம். வருவோம், பணியாற்றுவோம். (பலத்த கைதட்டல்)

இவ்வாறு தலைவர் கலைஞர் அவர்கள் உரையாற்றினார்.

—-

செய்தி முடிவுற்றது.

பாருங்கள் புறநானூற்று வீரம் மேடைப்பேச்சாளர்களின் தொண்டைக்குழிக்குள் பத்திரமாய் இருக்கிறது. கூரை ஏறி கோழி பிடிக்கத் தெரியாதவன், வானம் ஏறி வைகுந்தம் போன கதையாய், தமிழ் நாட்டில் 37 வருடங்களாய் மாறி மாறி ஆட்சி செய்யும் திராவிட இயக்கங்கள் தமிழ் பயிற்றுமொழிக் கொள்கையைக்குழிதோண்டிப் புதைத்து விட்டு, இன்று வீராவேசம் பேசுகிறார்கள்.

கலைஞர் சொன்னது இது :

‘ஆர்.எம்.வீ. அவர்கள் ஒன்றைச் சொன்னார்கள். அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கும் சொன்னார்கள். தமிழ், தமிழ்நாட்டிலே கட்டாய மொழியாக ஆக இயலவில்லை, அதற்குள்ள காரணத்தை கலைஞர் அறிவார் என்று குறிப்பிட்டார்கள். அவரும் அறிவார், நானும் அறிவேன். ஆனால் அதை இன்னும் வெளிப்படையாக விளக்க நான் முன்வரவில்லை. ஆனால் அவருக்கு உறுதியாகச் சொல்லிக் கொள்கிறேன்.

எதிர்காலத்தில் கர்நாடகத்திலே எப்படி கன்னட மொழி கட்டாயமாக ஆக்கப்பட்டிருக்கிறதோ, அதற்கு என்ன வழி வகைகளை அவர்கள் இன்றைக்குக் கடைப்பிடிக் கிறார்களோ, அதே வழிவகைகளைக் கடைப் பிடித்து தமிழ் நாட்டிலும் தமிழ் மொழியைக் கட்டாயமாக ஆக்குவதற்கு (பலத்த கைதட்டல்) வந்தால், பணியாற்றுவோம். வருவோம், பணியாற்றுவோம். (பலத்த கைதட்டல்) ‘

நேர்மையும் , நெஞ்சுக்கு நீதியும் இருந்திருந்தால் கலைஞர் அந்தக் காரணத்தை வெளிப்படையாய்ச் சொல்லியிருக்க வேண்டும், ஏன் சொல்லவில்லை. அதைச் சொன்னால், எந்தப் பொய்யைச் சொல்லி ஆட்சியைப் பிடித்து 37 வருடங்களாய் தமிழர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்களோ அந்தப் பொய் அம்பலமாகிவிடும். இந்தப் பொய்யைக் குறித்துப் பேசியதற்காக தமிழண்ணலைத் துரத்தி அடித்தவர்கள் அல்லவா இவர்கள் ?

அந்த உண்மை இது தான். இந்தியினால் தமிழுக்கு எந்த ஆபத்தும், எப்போதும் இருந்ததில்லை. மும்மொழித் திட்டத்தை ஒப்புக் கொண்டு இருக்கும் , தமிழ்நாடு தவிர்த்த எல்ல மானிலங்களிலும் பயிற்று மொழியாகவும், பயிற்று மொழியாய் இல்லாதபோது பாட மொழியாகவும் மானில மொழி சிறப்புப் பெற்று வருகிறது. மும்மொழித் திட்டத்தை ஏற்காததால் தான் தமிழ்நாட்டிலே தமிழுக்குச் சிறப்பு இல்லை.

ஆனால், கன்னடர்களுக்கு கன்னடம் மீது இல்லாத நேசம், வங்காளிகளுக்கு வங்காள மொழி மீது இல்லாத நேசம், மலையாளிகளுக்கு மலையாளம் மீது இல்லாத நேசம் , எங்களுக்கு தமிழ் மீது இருக்கிறது என்று தமிழ்ப் பற்றை இந்தி எதிர்ப்பு வெறியாய் மாற்றி பொய்யின் மீதேறி ஆட்சிக்கு வந்த இவர்கள் இப்போதாவது உண்மையைச் சொல்லுகிறார்களா என்றால் இல்லை. கடமை , கண்ணியம் கட்டுப்பாடு என்று தானே அண்ணா சொல்லியிருக்கிறார். உண்மை என்று எங்கே சொன்னார் என்று இவர்கள் கேட்டாலும் கேட்கக் கூடும்.

இப்போதேனும் கலைரின் ஐம்பது ஆண்டுக்காலப் பொய்யை ஒப்புக் கொண்டு, மக்களிடம் மன்னிப்புக் கேட்க கலைஞர் முன்வரவேண்டும். மும்மொழித் திட்டம் அமல் படுத்த உடனடியாய் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆறு கோடி மக்களின் நல்வாழ்வுடன் விளையாடியது மட்டுமல்லாமல், இந்தியால் தமிழ் அழிந்துவிடும் என்று பொய்ப்பிரசாரம் செய்து தமிழை இழிவு படுத்தியதற்காக கலைஞர் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். என்றுமே எனக்கு தன்முனைப்பு இருந்ததில்லை என்று பொய் சொல்லுவதற்காக தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். இசைத்தமிழை , வசைத்தமிழாக்கி மேடைகள் தோறும் மலினப் படுத்தியதற்காக தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். சன் டி வியில் (பெயரில் கூடத்தமிழ் இல்லை) குடும்பநலனை முன்னிறுத்தி கருணாநிதி விளம்பரம் பெற வேண்டும் என்பதற்காக சகிக்க முடியாத தமிழ்க் கொலைகளை நிகழ்த்திக் கொண்டிருப்பதற்காக தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும். நாளும் பிராமணரைத்தூற்றிவிட்டு, பச்சைத்தமிழர் காமராஜரை அவதூறு செய்து பதவியிறக்கம் செய்வதற்காக காமராஜரின் அரசியல் எதிரி ராஜாஜியுடன் கூட்டுச் சேர்ந்ததற்காக தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். காமராஜரின் தமிழர் நல ஆட்சியைக் கவிழ்த்ததற்காக தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். ராஜராஜசோழனும், பல்லவ மன்னர்களும் தமிழை வளர்க்கவில்லை என்று பொய்யுரைத்ததற்காக தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். சி சுப்பிரமணியம் தமிழ்வழிக்கல்விக்குச் செய்த சிறப்பைக் கூட திராவிட இயக்கங்களின் ஆட்சி தமிழ்வழிக் கல்விக்குச் செய்யவில்லை என்ற உண்மையை ஒப்புக் கொண்டு தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும்.

செய்வாரா கலைஞர் ?

—-

manjulanavaneedhan@yahoo.com

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்