கற்பு என்கின்ற காட்டுமிராண்டித்தனம்

This entry is part [part not set] of 50 in the series 20040408_Issue

தந்தை பெரியார்


பிள்ளைப்பேறு தடுப்பு என்பது பிள்ளைகள் பிறக்கவேகூடாது என்பது அல்ல. ஏராளமான பிள்ளை பெறுவதைக் குறைப்பது என்பதாகும். அதாவது ஓர் ஆண் பெண் கொண்ட குடும்பத்திற்கு இரண்டு குழந்தைகள் இருக்கலாம். அதிகமானால் மூன்று இருக்கலாம். அதற்கு மேல் 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 என்பதான அதிக எண்ணிக்கை கொண்ட பிள்ளைகள் இருக்கக் கூடாது என்பதுதான் அதன் கருத்து. இதைத்தான் கர்ப்ப ஆட்சி (Birth Control) அதாவது பிள்ளைப் பேற்றை ஓர் அளவுக்குக் கொண்டு வருவது என்று சொல்லப்படுவது.

இந்தக் கர்ப்ப ஆட்சி என்பது பற்றி 1928-29-30 ஆம் ஆண்டுகளில் குடியரசுப் பத்திரிகையில் தாராளமாய் எழுதி இருக்கின்றேன். கர்ப்ப ஆட்சி என்று ஒரு புத்தகமும் போட்டிருக்கிறேன். அதில உலக அறிவாளிகளின் கருத்து, பெரிய நீதிபதிகளின் கருத்து, மேல் நாட்டுப் பெண்களின் கருத்து, ஏராளமான மாணவிகளின் கருத்து எல்லாவற்றையும் திரட்டி வெளியிட்டு இருக்கிறேன்.

அதை அனுசரித்தே தொடர்ந்து பிரச்சாரமும் செய்து வந்திருக்கிறேன்.

சுயமரியாதைக் கட்சி மந்திரி சபை என்னும் டாக்டர் ப. சுப்பராயன், முத்தையா முதலியார் ஆகியவர்கள் கொண்ட மந்திரிசபையில் அந்தப் பிரச்சாரத்திற்கு ஆக்கமும் தேடினேன்.

அப்பொழுது சில பாதிரிமார்களின் எதிர்ப்பு எனக்கு அதிகமாக இருந்தது. அதற்குப் பதில் சொல்லும் முறையில், ‘கன்னிகா மாடத்தின் வண்டவாளம் ‘ என்கின்ற கருத்தில் அதாவது ‘பாதிரிகளும் பாவமன்னிப்பும் ‘ என்கின்ற பேரால் ஒரு புத்தகம் வெளியிட்டேன். அந்தப் புத்தகம் பறிமுதல் செய்யப்பட்டு விட்டது என்றாலும், பாதிரிகளின் – எதிரிகளின் எதிர்ப்பு மறைந்து விட்டது.

அன்று முதல் இன்றுவரை நடந்துவந்த பிரச்சாரமும், காலப்போக்கும் மக்களிடையே கர்ப்ப ஆட்சிக் கருத்துக்கு நல்ல ஆதரவு ஏற்படுத்திவிட்டதுடன், அரசாங்கமும் ஓர் அளவுக்கு அதை ஆதரிக்கத் தொடங்கிவிட்டது. இப்பொழுது – பெண்களும் சர்வ சாதாரணமாய் கர்ப்பத் தடைமுறையை கையாளத் துணிந்து விட்டார்கள்.

இந்த நிலையில் நமது நாட்டின் வைதிகத்துறைத் தலைவராகிய பழைமை விரும்பியான நண்பர் இராஜாஜி அவர்கள் கர்ப்ப ஆட்சி முறையை முழு மூச்சுடன் எதிர்க்கின்றார். அதோடு கூட ஏராளமாக வெளியாகி மக்கள் கையில் அமரும் ‘தினத்தந்தி ‘யின் பத்திராதிபராகிய என் நண்பர் திரு. ஆதித்தனார் அவர்களும் எதிர்க்கின்றார்! திரு. ஆதித்தனார் அவர்களோடு ‘சுதந்தரத் தமிழ்நாடு ‘ கிளர்ச்சிக் காரியங்களில், நான் கலந்து கொண்டு ஈடுபட்டு, ஒத்துழைத்து வருவதனால், கருத்து வேறுபாடு உள்ள காரியங்களை முழு வேகத்தோடு விளக்க முடியாது இருக்கின்றேன்.

ஆச்சாரியார் அவர்கள் இதை எதிர்ப்பதில் அர்த்தம் உண்டு. அவர் உண்மையில் ‘வேதப் பிராமணர் ‘ அதிலும் மனுதர்மப் பார்ப்பனர்! அவர் எதிர்த்துத்தான் தீருவார். மக்கள் ஏராளமாகப் பிறக்காமலும், நோய்கொள்ளாமலும், வைதிகப் புரோகித வாழ்க்கை நடத்தாமலும், சாகாமலும், சாவு சடங்கு, சிரார்த்தம், திதி நடைபெறாமலும் இருக்குமானால், பார்ப்பனச் சமுதாயம் என்பது, படக் (சப்பாத்திக்) கள்ளிக்கு பூச்சி விழுந்து மறைந்ததுபோல், மறைந்தே போகும். நோய் இல்லாவிட்டால் எப்படி வைத்தியர்கள் வாழ்வு குன்றிப் போகுமோ, அப்படியே பார்ப்பனர் வாழ்வு குன்றிப்போகும்.

சாதாரணமாக இராஜாஜி மாத்திரம் அல்ல; 100க்கு 99 பார்ப்பனர்கள் கர்ப்ப ஆட்சியை ஒப்புக்கொள்ளமாட்டார்கள்! ஆச்சாரியார் போன்றவர்கள் புதிய தீவுகளைக் கண்டுபிடித்து வனாந்தரங்களை மக்கள் வாழ்விடமாக்கி, அந்த இடங்களில் பிள்ளைப்பேறு பிரச்சாரம் செய்து, மக்கள் பண்ணை வைத்துப் பெருக்கி வளர்க்க வகைசெய்தால், ஓர் அளவுக்கு ஏதோ ஒப்புக்கொள்ளத்தக்க காரியமாகலாம்.

நமது மக்கள் 100க்கு 80 பேர் தற்குறிகள். நம் பெண்கள் 100க்கு 90 பேர் தற்குறிகள். இந்தப் பெண்களுக்கு உள்ள ‘கற்பு ‘ என்கின்ற ஒரு காட்டுமிராண்டித்தனமான விலங்கு 100க்கு 90 பெண்களை மிருகக் கன்றுகளாகவே ஆக்கிவிட்டன. சாதி என்கின்ற பேய் 100க்கு 97 மக்களை மானங்கெட்டவர்களாகவும், பிழைக்கவும், பதவி பெறவும், பணம் சம்பாதிக்கவுமான மக்களாக ஆக்கிவிட்டது. இந்த நிலையில் கர்ப்ப ஆட்சி இல்லாமல் குழி முயல்போல் ஏராளமான பிள்ளைகள் பிறக்கும்படி கர்ப்ப உரிமைக் கதவைத் திறந்துவிட்டால், அதன் பயன் சூத்திரர்களையும் அவர்களுக்குள் வண்ணார், நாவிதர், குயவர், குறவர், வேடர், செம்படவர், வலையர், சாணார், படையாட்சி, பள்ளர், சக்கிலி, பறையர் என்பது போன்ற ஆயிரக்கணக்கான சாதிகளைப் பிரிவுகளைப் பிரிவுகள் பேரால் மக்கள் பெருகி, சோம்பேறிப் பசங்களைச் சாமி என்றும் எஜமானே என்றும், தம்பிரானே என்றும், முதலாளியே என்றும், பண்ணாடியே என்றும் கைகூப்பி, பல்லைக் காட்டி கெஞ்சி வயிறு வளர்ப்பதைத் தவிர வேறு என்ன காரியத்திற்குப் பயன்படும் ? இது ஆச்சாரியாருக்குப் புரியாது என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆதித்தனாருக்குப் புரியாது என்பது அதிசயத்தின் மேல் அதிசயமாகும்! இவர்கள் காமராசரை வைவதில் எனக்குக் கவலை இல்லை. அவரால் நான் எந்த ஒரு துரும்பையும் எதிர்பார்க்கவில்லை. பொதுவாகத் தமிழர் குறைதீர்ப்பதை முன்னிட்டு ஏதாவது ஒரு வழியில் நானாக ஆதரிப்பேனே தவிர என்னை அவர் ஆதரிக்கவேண்டுமென ஒரு நாளும் விரும்பமாட்டேன். ஆகவே, ஆச்சாரியாரும், ஆதித்தனாரும் கர்ப்பக் கட்டுப்பாட்டை எதிர்ப்பது மனித சமுதாயத்திற்கு நோய்கொண்டு வருவது போன்றதாகும்.

மற்றது மாநாட்டுக்குப் பிறகு.

– ஆகஸ்டு 11, 1959 விடுதலை நாளிதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம். ‘பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம், 50 ஈ.வெ.கி. சம்பத் சாலை, சென்னை – 600007 ‘ வெளியிட்டுள்ள ‘பெரியார் களஞ்சியம் ‘ நூல் வரிசையின் ஆறாம் தொகுதியில் (குறைந்த அளவு நன்கொடை ரூ.70) வெளிவந்துள்ள கட்டுரை இது.

(தட்டச்சு உதவி: ஆசாரகீனன் aacharakeen@yahoo.com)

பெரியாரின் பிற பெண் விடுதலை சிந்தனைகள்:

கோஷா முறை

கண்ணகி கதை இலக்கியமா ?

திருவள்ளுவரின் பெண்ணுரிமை

எல்லாப் பெண்களும் கற்பில்லாதவர்களா ?

ஆண்களுக்கு உத்தியோகம் கொடுக்கக்கூடாது

பெண்கள் விடுதலை அடைய ஆண்மை அழிய வேண்டும்

கர்ப்பத்தடையும் கத்தோலிக்கரும்

Series Navigation

தந்தை பெரியார்

தந்தை பெரியார்