மு.பழனியப்பன்
சா.கணேசன் என்ற இயர்ப்பெயர் கொண்ட கம்பன் அடிப்பொடி அவர்கள் சா.க என முதல் எழுத்துக்கள் கொண்டும் அழைக்கப்பெற்றார். சா.க. சாகா வரம் பெற்று கம்பனின் பெருமை நினைவு கூரப் பெறும் இடமெல்லாம் இன்று நினைக்கப்படுகிறார். கம்பனின் விழாவை நடத்துவதற்கு அவர் ஏற்படுத்திய சிறு பொறி இன்று பெருந்தீபமாய் ஒளிவீசிக் கொண்டிருக்கிறது.
ஒரு காலத்தில் தமிழகத்தில் கம்பனுக்கும், இராமயணத்திற்கும் எதிர்ப்புகள் பல தோன்றியபோதும் அதே காலத்தில் கம்பனையும், இராமாயணத்தையும் ஒப்பற்ற இலக்கியமாக மக்களிடம் கலைவடிவில் சென்று சேரச் செய்த பெரும்பணி இவரைச் சேரும். கம்பனை எதிர்த்த, இராமாயணத்தை எதிர்த்த கூட்டத்தாரை எல்லாம் எண்ணி அழைத்து வந்து அவர்கள் வாயினாலேயே கம்பனைப் பேசவைத்துக் கம்பனை நிலைநாட்ட வைத்த இவரின் பெரும்புகழ் என்றும் நினைக்கத்தக்கது.
பெயரளவில் நடத்தப்படும் விழாக்களைக் கண்டு சோர்ந்து போயிருக்கும் இக்காலச்சூழலில் காரைக்குடி கம்பன் விழாவின் செய்நேர்த்தித் தன்மை இன்றளவும் நம்பமுடியாததாகவே இருக்கிறது. பெரும்விழாவை முன்நின்று நடத்த என்ன என்ன தேவையோ அத்தனையையும் அரும்பாடுபட்டுச்சேர்த்து கம்பன் அடிப்பொடி அவர்கள் தனி ஒரு மனிதராகவே கம்பன் விழாவை நடத்தி வந்திருக்கிறார் என்ற பின்னணியில் எண்ணிப் பார்த்தால் மட்டுமே அவர் ஒரு இயக்கமாய் இருந்திருக்கிறார் என்பது புரிய வரும்.
சட்டை தரிக்காமல், கொள்கைத் தெரிப்போடு அவர் நடத்திய கம்பன் விழாக்கள் இன்றைய விழா அமைப்பாளர்கள் அறிந்து கொள்ள வேண்டிய அதிசயங்கள். நேரந்தவறாமல் “கம்பன் வாழ்கவாழ்க, வாழ்க, கன்னித்தமிழ் வாழ்க வாழ்க, வாழ்க” என்ற அவரின் தொடக்க முழக்கம் அவர் கொள்கையின் பதாகையாகவும் இருந்தது. நேரத்தினைத் திருத்திக்கொள்ளவும் உதவியது.
மேடைகளில் ஒழுங்கு கண்ட அவர் மேடைப்பேச்சாளர்களிடம் நெறிமை, பொருண்மை, நாகரீகம் முதலானவற்றை எதிர்பார்த்தார். சற்றும் குறைந்தவர்களைத் தள்ளி ஒதுக்கி வைத்தார். இவரது தாய் மேடையான காரைக்குடி கம்பன் கழக மேடைகளில் வலம் வந்ததவர்களே கம்பனைப் பேசத் தகுதி பெற்றவர்கள் ஆனார்கள். இங்கு சாதி, மதம், வேறு பாகுபாடுகள் எதுவும் இல்லை. கம்பன் மட்டுமே கருப்பொருள்.
இத்தகைய கம்ப இயக்கம் தோன்றுவதற்கு அவருக்குள் இருந்த கம்ப ஈடுபாடு காரணம். இளமைக்காலம் தொட்டே இவரது இல்லத்தில் இராமாயணம் படித்தல் என்ற முறைமை இருந்துள்ளது. அந்த விழாவே கம்பனை அறிமுகம் செய்து இவருக்குக் கம்பன் விழாவை எடுக்கத் தக்கக் கருவைத் தந்துள்ளது.
இவர் காரைக்குடி சாமிநாதன் செட்டியார், நாச்சம்மை ஆச்சி ஆகியோர்க்குப் புதல்வராக ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எட்டாம் ஆண்டில் பிறந்தார். இன்றைக்கு நாம் மகிழ்வோடு அவரின் நூற்றாண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
இளமையில் செல்வம் சேர்க்கும் நோக்கோடு இவர் பர்மா சென்றார். இருப்பினும் இந்திய நாட்டின் விடுதலை, காந்தியின் மேல் கொண்ட ஈடுபாடு போன்றவற்றால் கவரப் பெற்று பொருளாசையைப் பின்தள்ளி, கொள்கைப்பிடிப்பினை ஏற்று இவர் இந்தியா திரும்பினார். இதன்பின் இவர் காந்தியக் கொள்கைகள் மீது ஈடுபாடு கொண்டு அதன்வழி நடப்பதை இலக்காகக் கொண்டார். காந்தியடிகளின் காரைக்குடி சார்ந்த பயணங்களுக்கு இவரே வழிகாட்டி. நேரங்காப்பாளர். காந்தியடிகளும் ஜீவாவும் சிறாவயலில் சந்தித்து உரையாடியபோது உரையாடலில் உடன் பங்கு பெற்றவர் இவர்.
விடுதலைப்போரில் சிறை சென்று தாய்நாட்டின் விடுதலைக்காக தன் வாழ்நாட்களை ஈந்த பெருமகனார் இவர். அலிபுரம் சிறையில் இவர் சில மாதங்கள் சிறைவாசம் பெற்றுள்ளார். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்து இரண்டாம் ஆண்டு வாக்கில் பதினெட்டு மாதங்கள் சிறையில் இருந்துள்ளார். விடுதலை பெறுவதற்கு முன்பேயே பல இலக்கிய அமைப்புகளை இவர் தொடங்கியுள்ளார். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பத்தெட்டில் இவர் தொடங்கிய கம்பன் கழகம் ஏறக்குறைய இன்றைக்கு எழுபது ஆண்டுகளை நோக்கி வெற்றி நடைபோட்டு வருகின்றது. விடுதலை பெற்ற இந்தியாவின் அரசியலிலும் இவர் செல்வாக்குப் பெற்றிருந்தார். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பத்து ஒன்பதில் ராஜாஜி சுந்திரா கட்சியை நிறுவியபோது இவர் முக்கிய பொறுப்புகளை மாநில அளவில் வகித்தார். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்து இரண்டாம் ஆண்டில் இவர் சட்டமன்றப் பேரவை உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் அரசியல் பணியும் இவ்வகையில் சிறப்புற்றது. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்தெட்டாம் ஆண்டு முதல் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்து நான்காம் ஆண்டு வரை இவர் தமிழகச் சட்டப் பேரவையின் மேலவை உறுப்பினராக இருந்துத் தொண்டாற்றினார்.
இவருடன் இணைந்து கம்பன் கழகம் உருவாகக் காரணமானவர்கள் இருவர். ஒருவர் சீர்திருத்தச் செம்மல் சொ. முருகப்பா. மற்றொருவர் தமிழ்க்கடல் ராய. சொக்கலிங்கனார்.
இவர் ஏற்றி வைத்த கம்பதீபம் இன்றளவும் பல்கிப் பெருகி சுடர் பெருக்கி வருகின்றது. இன்றைய நல்ல பேச்சாளர்கள், சென்ற தலைமுறையின் தமிழறிஞர்கள் இந்தக் களத்தில் விளைந்தவர்களே ஆவர்.
அக்காலத்தில் காரைக்குடிக் கம்பன் கழகத்தின் முத்திரைப் பேச்சாளர்களாக விளங்கியவர்கள் பலர் ஆவர். அவர்களுள் குறிக்கத்தக்கவர்கள் நீதிபதி மகராசன், நீதிபதி மு. மு. இஸ்மாயில், தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான், ஏ.சி. பால்நாடார், க. கு கோதண்டராமன்,எஸ். ராமகிருஷ்ணன், அ.ச. ஞானசம்பந்தம், ஜீவா போன்றோர் ஆவர்.
திருச்சி பெரும்புலவர் இராதா கிருஷ்ணன், கம்பராசன், கண்ணதாசன், புலவர் கீரன், புதுவைக் கம்பன் கழகச் செயலர் அருணகிரி போன்றோர் எனக்கு நினைவில் இருக்கும் சென்ற காலச் சான்றோர் ஆவர்.
இன்றைக்குக் களத்தில் விளங்குகிற திருவாளர்கள் சுகி. சிவம், அறிவொளி, சத்தியசீலன், சாலமன் பாப்பையா, அ.வ. இராசகோபால், பழ. முத்தப்பன், இலங்கை ஜெயராஜ், மாது போன்றோர் நினைவிற்குவரும் தற்காலப் பேச்சாளர்கள் ஆவர்.
முனைவர் சரசுவதி இராமநாதன், இளம்பிறை மணிமாறன், சாரதா நம்பியாருரன், சுதா சேஷய்யன் ஆகியோர் கம்ப மேடைகள் தந்த வாய்ப்புகளால் வளர்ந்தவர்கள் என்பதில் அவர்களுக்கும் பெருமை. கம்பன் கழகத்திற்கும் பெருமை.
சென்னை, திருப்பத்தூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, மதுரை, ராஜபாளையம், தேரெழுந்தூர், வேலூர், கோயம்புத்தூர், ராசிபுரம், சேலம், விழுப்புரம் போன்ற பல தமிழக ஊர்களின் தற்போது கம்பன் கழகங்கள் விழாக்களை நடத்தி வருகின்றன. புதுச்சேரி என்ற யூனியன் பிரதேசத்தில் கம்பன் பெயரால் உள்ள கலையரங்கில் கம்பன் விழா ஆண்டுதோறும் அரசு சார் விழாவாக நடைபெற்று வருகின்றது. இதுதவிர இலங்கை, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து போன்ற அயல் நாடுகளிலும் கம்பன் கழகம் காலூன்றி வெற்றிநடை போட்டு வருகின்றது.
கம்பன் கழகம் புதிதாக ஓரிடத்தில் ஆரம்பிக்கப் பெற்றால் அவ்விடத்திற்குக் காரைக்குடிக் கம்பன் கழகத்தின் தாய்ச் சீர்வரிசை இன்றளவும் சென்று வருகின்றது. இது தாய்க்கழகத்தின் பெருமை. சேய்க்கழகத்திற்குக் கிடைக்கும் கௌரவம். படிக்கின்ற ஒவ்வொருவர் ஊரிலும் கம்பன் கழகம் இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். இருந்தால் அதில் உறுப்பினராவோம். கம்பனடிப்பொடியை நாம் நேசிப்போம். கழகம் இல்லை எனில் உடனே தொடங்குவோம்.
கம்பன் அடிப்பொடி நல்ல சுவைஞர். மேடைப்பேச்சாளருக்கு அவர் ஒரு நக்கீரர். மேடைப்பேச்சாளர் நெறிமை தவறுகையில் இவரின் நக்கீர விளையாட்டு அரங்கேறும். பேச்சாளர்கள் இது கருதியே உழைத்து கம்பன் கழக களங்களுக்குப் பேச வந்தனர்.
கம்பன் அடிப்பொடி நல்ல ஆய்வாளர். இவரின் பிள்ளையார்பட்டி தலவரலாறு அடிப்படையில் ஒருகல்வெட்டு ஆராய்ச்சி நூல். பிள்ளையார்பட்டியில் உள்ள பிள்ளையாரைச் செதுக்கிய சிற்பியை வெளிக்கொணர்ந்த ஆராய்ச்சியாளர் இவர். இதனடிப்படையில் இக்கோயில் தோற்றுவிக்கப் பெற்ற ஆண்டினை வரையறுத்து இவர் அளித்துள்ளார். இவரின் மற்றொரு ஆராய்ச்சி கம்பனின் இறுதிநாள்கள் பற்றியது. இது குறித்து இவர் பல ஆய்வுகள் மேற்கொண்டு நாட்டரசன் கோட்டையை கம்பனின் இறுதி இடமாகக் காட்டினார். அது ஏற்கப் பெற்று இன்றளவும் ஒருநாள் கம்பன் விழா அங்கு நடைபெற்று வருகிறது. அதுபோல துல்லியமாக கம்பன் அரங்கேற்றிய கம்பராமாயண நாளை வெளிவுலகிற்கு அளித்த பெருமானும் இவரே ஆவார். இராசராசன் கல்வெட்டு ஆராய்ச்சி, சிற்பச் செந்நூல், கல்சொல்லும் கதை, தமிழ்த்திருமணம் ஆகியன இவரின் பிற நூல்களாகும்.
இதுதவிர அவ்வப்போது எழுதிய கட்டுரைகள் பல ஒன்று சேர்க்கப்பட வேண்டிய நிலையில் இருக்கிறது. தொகுக்கப்படும் அக்காலம் வரும். கம்பனடிப்பொடியின் எழுத்துக்கோவைகள் ஒரே நூலாக நம் கைகளில் தவழும் நாள் வெகு விரைவில் வரவேண்டும்.
இவரைப் பாராட்டி ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதாம் ஆண்டில் நீதிபதி மகாராசன் அவர்கள் “கம்பன் அடிப்பொடி ” என்ற பட்டத்தை வழங்கினார்.
இவர் 28.7.1982 ஆம் நாளில் இயற்கையோடு இணைந்தார்.
கம்பன் வாழ்க, கம்பன் புகழ் வாழ்க… கன்னித்தமிழ் வாழ்க. கம்பன் அடிப்பொடி வாழ்க.
கட்டுரை எழுத உதவிய நூல்கள்
1. டாக்டர் சே. குமரப்பன், சிவகங்கை மாவட்டத் தகவல்களஞ்சியம், மல்லிகை பதிப்பகம், தேவகோட்டை
2. வெற்றியூர் அரு. சுந்தரம், நகரத்தார் பெருமை, மணிமேகலை பிரசுரம், சென்னை, 2007
—
M.Palaniappan
manidal.blogspot.com
puduvayalpalaniappan.blogspot.com
- பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! செவ்வாய்க் கோளில் உப்புநீர்க் குளம் பெர்குலரேட் உப்பு & மீதேன் வாயு கண்டுபிடிப்பு !
- என் மகள் N. மாலதி – (19-ஜூன் 1950—27 மார்ச் 2007) – 1
- சுப்ரபாரதிமணியனின் ” திரைவெளி “
- கம்ப இயக்கம் கம்பனடிப்பொடி (நூறாண்டு காணும் தமிழறிஞர்)
- காரைக்குடி கம்பன் அடிப்பொடி நூற்றாண்டு விழாவும் கம்பன் திருநாள் விழாக்களும் (ஏப்ரல் 5 முதல் 9 வரை)
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -29 << காயப் படுத்தாதே ! >>
- கலில் கிப்ரான் கவிதைகள் << மரணமே கவிஞன் வாழ்வு >> கவிதை -4
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -5 பாகம் -2
- தலை குனியும் சமூகத்தில் சில நிமிர்ந்த தலைகள் – (3)
- இன்னொரு சைக்கிள் ஒட்டியும் பின்னொரு சிறுவனும்…
- நேசத்துடன் காதலுக்கு
- சங்கச் சுரங்கம் — 7 : மையணல் காளை
- வறுமை தின்ற கவிஞன் – சாரணபாஸ்கரன்
- மரணத்தை மையமாகக் கொண்ட வாழ்வின் வட்டப்பாதை மலர்ச்செல்வனின் “தனித்துத் திரிதல்”
- தேர்தல் வாக்குறுதிகளுக்காக உதவுவோம். (எந்தத் தேர்தலாயிருந்தால் என்ன?)
- தமிழ் கற்பித்தல் திட்டம்
- புதுமைப்பித்தனை முன்வைத்து வெ.சா.வின் வில்லங்கம்
- சுயமில்லாதவன்
- விடிவைத்தேடி இரவெல்லாம் ஓடி …
- அந்த இரவு
- நட்சத்திரங்களை பொறுக்கிக் கொள்ளும் தவம்
- வேத வனம் விருட்சம் 29
- மனதின் கையில்… .. ..
- நிலவற்ற மழை இரவில்
- உலகத் தீரே! உலகத் தீரே!
- வார்த்தை மார்ச் 2009 இதழில்
- மறுசிந்தனையில் இஸ்லாமிய கருத்தாடல்கள்
- காங்கிரசின் பிரதமர் வேட்பாளருக்கு ஒரு கடிதம்
- சேன் நதி – 2
- சேன் நதி – 1
- “ மனித நகர்வும் இரண்டாவது பிளவும் ”
- விஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்தெட்டு
- திரிசங்கு சொர்க்கம்
- மன்னிப்பு