கம்பனும் கட்டுத்தறியும்

This entry is part [part not set] of 42 in the series 20030802_Issue

அனந்த்


கம்பனைப் பற்றி எழுதுங்கள் கவிதை தானாய் வந்துவிடும்

நம்புதற் கரிய கற்பனைகள் நடனம் செய்தே நாடிவரும்

உம்பல மெல்லாம் ஓங்கிவரும் உவகை உள்ளே ஊறிவரும்

கும்ப நிறைதேன் குடித்ததுபோல் குதித்துத் தலையும் கிறுகிறுக்கும்

சொல்லுடன் அசையும் சீர்தளையும் தொடையும் அணியும் துணைபுரியும்

கல்லதுங் கனியும் கவிதைநயம் கதித்(து)உம் வசமாய்ப் பணிபுரியும்

புல்லரித் துலக முழுதுமிது புதுமை எனவே புகழ்ந்துரைக்கும்

நல்லவர் வாழ்த்தி ஆசிதரும் நலமும் உமக்கு வாய்த்துவிடும்

கற்பினுக் கணியாம் சானகியின் கதையை வரைந்த கம்பனது

சொற்களு மியல்பாய் உம்கவியில் சுகமாய் வாசம் புரியவரும்

உற்றிடும் உணர்வோர் எல்லையிலா உயரம் பறந்து சிறகடிக்கும்

கற்றிடக் கம்பன் படைப்பையன்றிக் கணமும் நினையா நிலைபிறக்கும்

அம்பலம் ஏறும் அருங்கவிதை அனைத்தும் படைக்கும் ஆற்றல்வரும்

எம்பெரு மானின் கருணையுட னினிதாய் அமைதி கூடிவரும்

உம்பரை விஞ்சும் உத்தமனின் உயர்வை உரைத்த கவியரசன்

கம்பனுக் கிணையா யிவ்வுலகில் கழறற் குளரோ கவியெவரும் ?

ananth@mcmaster.ca

Series Navigation