கனவுகள் பலிக்கவேண்டும்

This entry is part [part not set] of 31 in the series 20100319_Issue

குரும்பையூர் பொன் சிவராசா


ஊரின் நினைவுகள்
சுகமாய் சுமையாய் இருப்பதனால்
என் இதயம் கனக்கும் பல வேளைகளில்
எம் ஊரின் ஒவ்வோர் நிகழ்வுகழும்
அழியாத நினைவுகளாய்
புத்தகமாய் மனதில் பதிந்திருக்கும்
நாளும் புரட்டுகின்றேன்
அப் புத்தகத்தை
புரியாத மகிழ்வொன்று
புன்சிரிப்பாய் தவழும் என் முகத்தினிலே
இப் புத்தகத்தை புரட்டியதில்
தட்டுப்பட்டதுதான் இந்த வாழை வெட்டு
மறக்க முடியா நிகழ்வுகளில்
இன்றும் மனதில் உயிர்ப்பாய் இருக்கிறது

அம்மன் கோவிலிலே
அடியார்கள் கூட்டம் அலை மோதும்
அயல் ஊரார் எல்லாம் வந்திருப்பார்
அர்ச்சனைத் தட்டுடனே
மாணிக்க ஐயாவின் பூசை
மணி ஓசையுடன்
மறக்கமுடியா நிகழ்வாய்
பார்ப்போரை மெய்மறந்து நிற்கவைக்கும்
இளைஞரெல்லாம் இளசுகளைப் பார்த்து
தம்மை மறந்தே லயித்திருப்பர்
அங்கே ஐம்புலனும் ஒடுக்கி
ஆண்டவனைக் காண்பார் பெண்களிலே
பகட்டான நகைகளும் பளபளக்கும் சாறிகளும்
தமக்குள்ளே குசு குசுப்பார் பெண்கள் எல்லாம்
வயிறெரியும் சில பேருக்கு
ஆண்டவனும் பார்த்துச் சிரித்திருப்பார்

முதல் நாள் சூரன்போரினிலே
மூர்க்கமாய் போரிட்டு
வெற்றி கொண்ட அம்மன் அவள்
திடமான எட்டுப் பேர் சுமந்து வர
இறுமாப்பாய் சென்றிடுவாள் புளியடி கோவிலுக்கே

ஒவ்வோர் சந்தியிலும்
அம்மனுக்கு ஆராதனை பூசை
அமக்களமாய் நடந்தேறும்
அங்கே படைத்திருக்கும்
அவல் சுண்டல் மோதகம் மாத்திரமே
எமை ஆட்கொள்ளும்
ஒலிம்பிக்கில் ஓடி வெற்றிகொள்ளும்
வீறுடனே நாமெல்லாம்
அவற்றிற்காய் ஏங்கி நிற்போம்
அடிபட்டு நெரிபட்டு
வளைந்து நுழைந்து வேண்டிவிட்டால்
வெற்றியின் பெருமிதம்
எமை ஆட்கொள்ளும்
ஆணவச் சிரிப்பொன்று
எம்மில் எதிரொலிக்கும்

கடகத்தில் மோதகத்தை
கொண்டு வந்தார் ஓர் கனவான்
பெரியவர்கள் பெற்றார்கள் முதலாக
உயரமானவர்கள் உசாரானார்கள்
தள்ளுப்பட்டோம் நாம் ஓர் சயிட்டாக
முட்டி மோதியது கூட்டம் அவர் மீது
அடிபட்டோம் கத்தினோம் நாமெல்லாம்
ஆண்டவனே இது என்ன சோதனை
கொட்டினார் மோதகத்தை
கோபமாய் நிலத்தினிலே
அன்றே வெறுத்தேன் நான் ஆண்டவனை

புளியடி கோவிலிலே
கம்பீரமாய் வாழை மரம்
அடிபட்டுப் போய் நிற்போம்
முன் வரிசையிலே
ஐயா வருவார் மூர்க்கமாய் வாளுடனே
வெட்டுவாரோ எம்மையுமே
நடுநடுங்கும் நமக்கெல்லாம்
இரண்டு வெட்டு வெட்டிடுவார்
மூன்று துண்டாகும் அந்த வாழையுமே
சந்தோசத்தில் மகிழ்ந்திருப்போம் நாம் எல்லாம்
அம்மனும் அமைதியடைவார் அத்துடனே

ஒற்றுமையாய் எம் ஊரார்
கொண்டாடும் வாழை வெட்டு
காத்திருப்பேன் இந்த விழாவிற்காய்
நானும் உங்களில் ஒருவனாய்
கனவுகள் பலிக்கவேண்டும்
நாமெல்லாம் மகிழவேண்டும்!

அன்புடன்
குரும்பையூர் பொன் சிவராசா

Series Navigation