கனவுகள், காட்டாறுகள்..!-‘சதாரா’ மாலதியின் கவிதைகள்

This entry is part [part not set] of 35 in the series 20061102_Issue

லதா ராமகிருஷ்ணன்


‘எல்லாத் தகுதிகளும் இருந்தும் அதிகம் அங்கீகரிக்கப்படாத மரமல்லிகைகளை எப்போது பார்க்க நேர்ந்தாலும் மிகவும் வேதனைப்படுவேன். மில்லிங்டோனியா என்ற பெயர் கொண்ட மரமல்லிகை மணம் மிக்க கொத்துமல்லிகைகளை மிக உயரத்தில் வைத்துக் கொண்டு காத்திருக்கும்’

_ ‘வரிக்குதிரை(1999), தணல் கொடிப் பூக்கள்(2001) ஆகிய இரண்டு தொகுப்புகளுக்குப் பிறகு 2003ல் வெளியான ‘மரமல்லிகைகள்’ ‘சதாரா’ மாலதியின் மூன்றாவது தொகுப்பு அதன் முன்னுரையில் மேற்கண்டவாறு கவிஞர் குறிப்பிட்டுள்ளார். சதாரா மாலதி தனது எழுத்துக்கள் மூலம் திண்ணை வாசகர்களுக்கும், வேறு பல இணைய இதழ்களின் வாசகர்களுக்கும் நன்கு அறிமுகமானவரே. 1950ல் பிறந்த இவர் மாநிலக் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றவர். திருநெல்வேலியிலுள்ள கிராமமொன்றில் பிறந்த சதாரா மாலதி மத்திய அரசுப் பணியில் உயர் பதவியில் இருந்து சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்றிருக்கிறார். 90 கள் வரை வெகுஜனப் பத்திரிகைகளில் எழுதி வந்த இவர் 90களின் இறுதிப் பகுதியில் தான் தமிழ்ச் சிற்றிதழ்களில் எழுதத் தொடங்கினார் என்றாலும் ஏறத்தாழ பத்து வருடங்களில் கவிதைகள், சிறுகதைகள், திறனாய்வுக் கட்டுரைகள் என்று சிறுபத்திரிகைகளில் அவருடைய எழுத்துக்கள் கணிசமான அளவு வெளியாகியிருக்கின்றன; வெளியாகி வருகின்றன. மேற்குறிப்பிட்ட கவிதைத் தொகுப்புக்களோடு கூட ‘அனாமதேயக் கரைகள்’ என்ற தலைப்பில் ஒரு சிறுகதைத் தொகுப்பும், ‘உயர்பாவை’ என்ற தலைப்பில் ‘ஆண்டாள் திருப்பாவை’ குறித்த ஆழ்ந்த ஆய்வலசல் கட்டுரைகளும் ( இவை திண்ணை இதழ்களில் தொடராக வெளிவந்தன) இவருடைய படைப்புக்களாக இதுகாறும் வெளியாகியுள்ளன. இவருடைய தாயார் திருமதி லலிதா நாராயணன் இதுகாறும் எழுதிவந்திருக்கும் சிறுகதைகளில் சில சமீபத்தில் இரண்டு தொகுப்புக்களாக வெளியாகியுள்ளதும் இத்தருணத்தில் குறிப்பிடத் தக்கது.

காத்திருப்பு என்பதன் மறுபக்கத்தில் இருப்பது தேடலும், காதலும். இந்தத் தேடலும், காதலுமே, காத்திருப்புமே ‘சதாரா’ மாலதியினுடைய கவிதைவெளியின் பிரதான நீரோட்டங்களாகப் புரிபடுகின்றன. ஒருவகையில் எல்லாக் கவிதைகளின் இயங்குதளங்களும், இயக்குவிசைகளும் தேடலும், காத்திருப்புமே என்று கூடச் சொல்லலாம். ஆனால், சில கவிதைகளில் இந்தத் தேடலும், காத்திருப்பும் தம்மைத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும். அல்லது, தம்மைப் பற்றிக் குற்றவுணர்வு கொள்ளும். சதாரா மலதியின் கவிதைகளில் அவை ஆற்றொழுக்காக வெளிப்படுகின்றன எனலாம்.

நகம் மேல் விரல் விரல் மடங்கும் அங்கை
முன்கை வியக்கும் முழங்கை முழங்கை முழங்கை முதல் தோளிணை
தோளில் மாலை மாலையில் என் மணம்
என் குறவன் விருப்பிற்கு நான்
செஞ்சாந்தாய் ஆவேன்.’

விறலி என்று தலைப்பிட்ட இந்த குறுங்கவிதையில் காதலும், சந்தோஷமும் எத்தனை குதூகலமாய் வெளிப்படுகின்றன! இத்தகைய கவிதைகளின் உத்வேகத்தையும், உணர்வெழுச்சியையும் உள்வாங்கிக் கொள்ள இயலாதவர்களாய், அல்லது, உள்வாங்கிக் கொள்ள மறுப்பவர்களாய் இதை ஆணாதிக்கத்தைப் பேணும் கவிதையாய் மேம்போக்காய் பகுப்பவர்களைப் பற்றி என்ன சொல்வது? சதாரா மாலதியின் கவிதைகள் அத்தகைய எதிர் விமரிசனங்களைப் பற்றிய கவலையோ, கிலேசமோ இல்லாமல், அந்த குறிப்பிட்ட கணத்தை ஆழ்ந்து அனுபவிக்கும் ஒரே முனைப்பாய் கிளர்ந்தெழுகின்றன! இந்த உணர்வெழுச்சி சதாரா மாலதியின் பெரும்பாலான கவிதைகளில் அவருடைய பலமாகவும், ஒரு சில கவிதைகளில் அவருடைய பலவீனமாகவும் அமைவதைக் காண முடிகிறது.

மொழிக் கல்லில்
முட்டி முட்டி
என் துயர் சொன்னேன்.
மொழி சும்மாயிருந்தது.
பனிப்போர்
அது என் நெஞ்சில்
மோதி மோதி
கவிதையாய் இறங்கியது.’

‘மோதல்’ என்ற சிறுகவிதையில் மோதல் என்ற ஒரு வார்த்தை contact, confrontation ஆகிய இரண்டு விஷயங்களையும் குறிப்பாலுணர்த்துவதன் மூலம் கவிதைக்கு கனம் சேர்க்கிறது. வார்த்தைகளின் கச்சிதமான தேர்வு, அவற்றின் கச்சிதமான இடப் பொருத்தம் இரண்டுமே ஒருசேர அமைந்தால் தான் கவிதையின் ‘சிற்பச் செதுக்கல்’ பூரணமாகும். ஒன்று மட்டும் இருந்து ஒன்று இல்லாமல் போய்விடும் போது அந்த இன்மையின் அளவு கவிதையும் கூர்மழுங்கியதாகி விடுகிறது.அப்படியான சில கவிதைகளையும் சதாரா மாலதியின் தொகுப்புகளில் காண முடிகிறது. இத்தகைய பூரணமற்ற கவிதைகள் இடம்பெறாத கவிதைத் தொகுப்புகளே இருக்க முடியாது என்றும் சொல்லலாம். சில கவிஞர்களின் விஷயத்தில் அவர்களுடைய ஆகச் சிறந்த கவிதைகளே ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாய் வெற்றிகரமாய் காண்பிக்கப்படுகின்றன; அவ்விதமாய் அவர் மேலான கவிஞராக நிலைநிறுத்தப்படுகிறார். வேறு சிலர் விஷயத்தில் நேர் எதிராக விஷயம் நடந்தேறி அவர் கவிதைகள் எளிதாக ஒரம் கட்டப்பட்டு விடுகின்றன.

எனக்கு மட்டும் ஏனிப்படி/ தேன் மெழுகுக் கூடு’ என்பது போன்ற வளமான வார்த்தைப் பிரயோகங்கள் சதாரா மாலதியின் கவிதைகளில் கணிசமாகக் கிடைக்கின்றன.

‘சோரம் புனிதமானது
ஏனெனில் பணம் பத்திரங்கள்
துச்சம் அதில்
பிறிதும் கண்மூடிக் காதல்
அதில் தான்

என்ற கவிதையை ‘தட்டுக்கெட்டத்தனத்தை’ப் பரிந்துரைக்கிறது என்று பொருளுரைப்பவர்களைப் பார்த்து பரிதாபப் படத்தான் வேண்டும். ‘நகை மேல் ஆணை’ என்ற கவிதை பல்வேறு அணிகலன்கள் மேல் உள்ள ஈர்ப்பையும், அவற்றை ஒதுக்கி விட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதன் விளைவாய் மனம் உணரும் இழப்பையும் பதிவு செய்கிறது. நகையை விரும்புதல் பெண்ணடிமைத்தனம் என்ற முன்நிபந்தனையோடு இந்தக் கவிதையை வாசிக்கப் புகுந்தால் இதன் கவித்துவமும், லயம் ததும்பும் மொழிப் பிரயோகமும் நம்மை எட்டாமல் போய்விடும்.
மாதிரிக்குச் சில வரிகள்:-

சூடகமும் பாடகமும் தோடும்
அபரஞ்சித் தொங்கல்களும்
ஏந்தி நிறுத்திய பதக்கமும்
சரப்பளியும் காலால் அழகணிந்த
கவிதையூறும் உலோகச் சிரிப்புகளும் களைந்தேன்.’

கொலுசு என்ற கவிதையில் கொலுசைப் பறிகொடுத்த துக்கம் ஒரு பெண்ணின் ‘சுதந்திரமான இயக்கமும், அதிலுள்ள சந்தோஷமும் பறிபோகும் இழப்பைக் குறிப்பாலுணர்த்துவதாகிறது.

ரசிக்காத பயணத்தில்
களைப்போடு இழப்பு
எனக்குப் பழக்கம் தான் என்றாலும்
இந்த முறை
ரொம்ப ரொம்பவே வலித்தது.
சொன்னேனே அதைத் தாந்
என் கொலுசு தொலைந்து போயிற்று’.

பழந்தமிழ்ப் பரிச்சயம் நிறைய வாய்க்கப் பெற்ற சதாரா மாலதியின் கவிதைகளில் புராண, இதிகாசக் குறிப்புகளும், குறியீடுகளும் அநாயாசமாக வந்து விழுகின்றன!

‘இவை தாண்டி வடவாக்கினியில்
நுழைந்து மீளவும் பச்சைப் புண்ணிடை
பதிகம் தேறவும் பேச்சுக் காதுகளின்
ஊசி கோர்த்த மௌனத் துளை வழி
நெடிய வானம் காணவும்
நீ தான் நீ தான் உடன் வேண்டும்
பால் மறந்து நோயகன்றேக வேண்டும்

(போர் நீங்கிய தேசத்தின்)

‘தெள் நினைவு அறும் தொலைவில்
மனம் போக அஞ்சினேன்
சகுந்தலை விரலணியும்-
தொலைந்தது நுரை மடிப்பில்

(எதுவுமில்லை)

சுய-அலசல், சுய-விமரிசனம் செய்து கொள்ள இவர் கவிதைகள் தயங்குவதேயில்லை! அங்கீகாரத்திற்காய் ‘தான்’ அல்லாத ஒரு பிம்பத்தை தன்னுடையதாக வாசகர் மனதில் பதிய வைக்க இவர் கவிதைகள் முயற்சி செய்வதில்லை. ‘அன்புண்டு ஆண்டவன் தானில்லையென/ அநியாயப் புளுகுக்கு பயிற்சியெடுக்கவில்லை’, முதலிய பல வரிகளை உதாரணங் காட்டலாம்.

பெண்கள் உடல்களாய்
ஆண்கள் வெறும் கண்களாய்
பார்வையும் மனதும்
சதுப்புகளில் அறைபட்டு
இருட்டறை இலக்கியங்களின்
மிகும் வாழ்க்கை
வயிறுகளில்!

-என்று முடியும் கவிதை ஒரு விலகிய தொனியில் வெடிகுண்டுகளின் மத்தியிலும், இருட்டறை இலக்கியங்களின் மிகும் வாழ்க்கை வயிறுகளிலும் அறைபட்டுக் கிடக்கப் போகும் இனியான வாழ்க்கையை நமக்கு கவனப்படுத்துகிறது. அதேபோல், ‘வாழ்க்கை’ என்ற கவிதையும் நிறைவான வாசிப்பனுபவம் தருவது.

வலிகளால் பாறையைச் சமைக்க முனைந்த
சிற்பிகள் நாம். நம் வீடுகள் எல்லாம் சிறகு முளைத்துப் பறந்து
இங்குமங்கும் சுவர்களாய்
வழித்தடங்களாய், சத்திரத்துத் திண்ணைகளாய்
காத்திருப்பு இருக்கைகளாய் அமர்ந்து கொண்டன’

-என்று ஆரம்ப வரிகளிலிருந்து முடிவு வரி வரை ‘இறுக்கமே’ அதன் சிறப்பான நிகிழ்தன்மையாய் கட்டமைக்கப்பட்ட கவிதையிது. சில வரிகள் அதிகமாகத் தென்பட்டாலும் கூட, ஒவ்வொரு வாக்கியமும் தனித்தனி கவிதையாக வாசிப்பிற்கு உகந்ததாகிறது.

‘இது பதிலில்லை’ என்ற கவிதை ‘என் தோல்வி எதுவென்றால் நான் செத்தே பிறந்தது’, என்று வாழ்வின் ஆற்றாமைகளைப் பேசுகிறதென்றால் ‘உன்னிடம்’ என்ற கவிதை ‘ இழந்த உலகங்களை/ ஈடுகட்டிச் சிரிக்குமிடம்/ அந்தப் புல்லிடம் சிலிர்க்கும்/கண்ணிடம் கொள்ளூம்/ தூக்கம் போல்’ என்று இழந்த உலகங்களை மீட்டெடுத்துக் கொள்ளும் இதமான உணர்வு குறித்துப் பேசுகிறது!

எங்கோ ஒரு மனத்தின் ஒற்றை ஏரிக்குள்
இரட்டையாய் பிரிந்திருக்கும் நீர்ப்பரப்பில்
அமுதோ நஞ்சோ
ஒன்றை ஆய்ந்தெடுத்து
குளுமை தேடித் துவண்டு வீழவென்று
பறக்கும், தொடர் பறக்கும், அதுவரை
சுமை தவிர்க்க, தலை மேல் அழுத்துகின்ற
ஆணானதையெல்லாம்
அகற்றிவிடல் கூடுமேல்’

-என்ற ஆணாதிக்க எதிர்ப்பு வரிகள், ‘பறத்தல் இதன் வலி’ என்ற கவிதையில் இடம்பெறுவது. ‘பிசாசின் தன் வரலாறு’ என்ற நீள்கவிதை அதன் மொழிப் பிரயோகத்திற்கும், உள்ளடக்கத்திற்கும் குறிப்பிடத்தக்கது. சிறந்த பெண்ணியக் கவிதை,பெண்மொழிக் கவிதை எனக் கூறத்தக்கது; எனில், அப்படி யாரும் இதுவரை பொருட்படுத்திக் கூறியதாகத் தெரியவில்லை. மேலும், நவீனத் தமிழ்க் கவிதையில் நீள்கவிதை எழுதியவர்கள் குறைவு. பெண்களில் எனக்குத் தெரிந்து இவரும், திலகபாமாவும் தான் எழுதியிருக்கிறார்கள்.

‘நெடுநாளைய சேமிப்பு நிறைய கனவு
பொய்களின் அழகை வடிவை
பைக்குள் அமுக்கி விட’ (பொய்க்கடை)

இல்லாதவர் பூசின
சொல்லாத வர்ணமே
நெஞ்சில் எப்போதும்
குங்குமமாய் அப்பி (ஹோலி)

சொல்லுக்குள் கர்ப்பம் உறா உணர்வை
ஞாபகங்களில் சிறைப்படாத நரம்பை (தாண்டவம்)

படிகளில் ஏறி விட
வடிகால் அமைத்துத் தர
சேக்காளி குழு துருப்புச் சீட்டு
கோட்டைப் பொய் சேராமலே
எனக்கும் அடையாளமுண்டு
அது என் தனிக்கவிதை’ (உறுப்பிலக்கணம்)

நிறமிழந்து வானவில்
வந்து போன நெடுகிலே
தாமரை பூத்தது நெருப்புச் சட்டிகளில் (தாமதம்)

சுறாக்கள் தின்னும் மேனி
நக்கிக் கடல் புகும் (சுறாக்கள் தின்னும்)

பித்தளை அடைப்பானை ஒருவன்
கவர்ந்து செல்ல
பெரிய்ய நீர்த்தொட்டி
துளைப்பட்டது நாட்டில்
நான் நீர்த்தொட்டிக்கோ அடைப்பானுக்கோ
சொந்தக்காரியில்லை (அசட்டையாய்)

என பலப்பல வரிகளை ‘சதாரா’ மாலதியின் கவித்துவத்திற்கு எடுத்துக்காட்டுகளாகத் தரலாம். சதாரா மாலதியின் கவிதைகளில் முக்கியமான கவித்துவ அம்சமாகக் குறிப்பிட வேண்டியவை அவற்றின் பாசாங்கற்ற உணர்வெழுச்சி, அமுதனைய தமிழ், தாளகதி, மற்றும் வாழ்வின் நுட்பமும், விரிவும். எல்லாத் தொகுப்புகளையும் போலவே இவருடைய கவிதைகளிலும் ( இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு எனக்குப் படிக்கக் கிடைத்ததில்லை) நீர்த்துப் போன, உரைநடைத் தன்மை அதிகமான கவிதைகளும் காணக் கிடைக்கின்றன என்றாலும் ஒப்புநோக்க அவை அதிகமில்லை. கவிதைகளின் தொனியில், கட்டமைப்பில், மொழிவழக்கில் சதாரா மாலதி வெவ்வேறு வகைமைகளைக் கையாண்டு பார்த்திருக்கிறார். அவர் கவிதைகளில் விரவித் தெரியும் காதலும், வாழ்வீர்ப்பும் மிகுந்த கவனம் கோருபவை. காதலை முதிர்ச்சியோடு கையாளுதல் என்பதாய் முன்வைக்கப்படும் வாதத்தை போலியாக்குவதாய் காதலை அதற்குரிய அத்தனை பரவசத்தோடும், குழந்தைத்தனத்தோடும் வடித்துக் காட்டுகின்றன சதாரா மாலதியின் கவிதைகள்!

நவீன தமிழ்க் கவிதை குறித்த கருத்தரங்குகளில் தனது கருத்துக்களைத் தெளிவாக முன்வைக்கும் சதாரா மாலதியின் கட்டுரைகளில் அவருடைய வாசிப்பின் வீச்சும், அவற்றின் வழியான ‘கவிதை பற்றிய பார்வையின் நுட்பமும் குறிப்பிடத் தக்கது.


ramakrishnanlatha@yahoo.com

Series Navigation

லதா ராமகிருஷ்ணன்

லதா ராமகிருஷ்ணன்