அ.முத்துலிங்கம்
செந்நிறமான செவ்வாய் கிரகம் செப்டெம்பர் மாதம் வானத்தில் தோன்றும். கனடாவில் இருந்து இது மிகவும் துல்லியமாகத் தெரியும் என்று ஒரு பத்திரிகை செய்தி சொன்னது. அதே பத்திரிகையில் கீழே இன்னொரு செய்தியும் பிரசுரமாகியிருந்தது. கனடாவில் வருடா வருடம் நடக்கும் உலகத் திரைப்பட விழா ரொறொன்ரோவில் 2003, செப்டம்பர் 4 – 14 தேதிகளில் நடைபெறும். இது 28வது திரைப்பட விழா; 3000 விண்ணப்பங்களில் தேர்வுசெய்த 339 படங்கள். 55 நாடுகளிலிருந்து பெறப்பட்ட இவை 21 அரங்குகளில் திரையிடப்படும். பத்து நாட்களில் 30 படம் பார்ப்பவர்களும் உண்டு. முழு நாளையும் இதற்காக ஒதுக்கி வைத்து பின் மதியம் ஒன்று, பின்னேரம் ஒன்று, இரவு ஒன்று என்று ஆர்வமாக பார்த்து முடிப்பார்கள். நான் அப்படி செயல்படவில்லை.
ஒரு நாளைக்கு ஒன்று என்று 7 நாட்கள் தொடர்ச்சியாகப் பார்த்தேன். போக வர , கியூவில் நிற்க, படம் பார்க்க என்று நாளுக்கு ஐந்து மணி நேரத்தை செலவழித்தேன். போகும்போது படத்தை பற்றிய எதிர்பார்ப்பும், திரும்பும்போது அது பற்றிய சிந்தனையாகவும் இருந்தேன்.
நீண்ட நேரம் கியூவில் நின்றபிறகு முழங்கால்கள் தானாக மடிந்து நான் சொன்ன வேலையை செய்ய மறுத்துவிட்ட நிலையில் ஒரு பதின்பருவத்து பெண் ஊழியர் வந்தார். தலையிலே வட்டத் தொப்பியும், காதிலே அணிந்த ஒலி வாங்கியும், கையிலே ஏந்திய தாள் அட்டையுமாக என்னிடம் நெருங்கி ‘நீங்கள் ஏன் இந்த லைனில் நிற்கிறீர்கள் ? ‘ என்று கேட்டார். எங்கள் லைனைப்போல இன்னும் பல லைன்கள் இன்னும் பல திரைப்படங்களுக்கு அங்கே நீண்டு நெளிந்து நின்றன. ‘இது என்ன கேள்வி ? இந்த லைனின் நீளம் போதவில்லை. அதைக் கூட்டுவதற்காக நிற்கிறேன் ‘ என்றேன். மூன்று மாதம் முன்பாகவே ரிசர்வ் செய்து, இரண்டு நாள் ஆராய்ச்சிக்கு பிறகு தேர்வு செய்து, முழுக்காசையும் கட்டி டிக்கட்டுகள் எடுத்தபின்பும் இந்த தொந்திரவுகளா ?
இப்படி இரண்டு மணி நேரம் வரிசையில் நின்று பார்த்த முதல் படம் Mayor of the Sunset Strip. டிக்கட் கையில் இருப்பதால் உங்களுக்கு சீட் நிச்சயம். வரிசையில் நிற்பது நல்ல இருக்கை ஒன்று கிடைப்பதற்காத்தான். முன் சீட்டில் இருந்த பெண்மணி இப்படியான ஒரு விழாவுக்கே வளர்த்ததுபோல, தன் தலைமுடியை நீளமாகவும், பளபளப்பாகவும் வளர்த்து அதைக் காசு கொடுத்து தலைக்குமேலே அலங்காரமாக அமைத்திருந்தார். அது நீளமாகவும், அகலமாகவும் இருந்தது. 13 டொலர் கொடுத்து டிக்கட் வாங்கிய நான்அந்தப் பெண்மணியின் தலைக்கு பின்னால் அகப்பட்டுவிட்டேன். சினிமாவில் பாதியை மட்டுமே என்னால் பார்க்க முடிந்தது. என்னுடைய அளப்பரிய கற்பனை வளத்தால் மீதியை நிரப்பி சமாளித்துவிடலாம் என்று நினைத்தேன்.
Rodney Bingenheimer என்பவர் லாஸ் ஏஞ்சல்ஸ் ரேடியோவில் 30 வருடங்களாகப் பணியாற்றி புகழீட்டிய பாடல் தொகுப்பாளர். அவருடைய வாழ்க்கையை சொல்லும் விவரணப் படம் இது. அவர் சிறுவனாய் இருந்தபோது அவருடைய தாய் ஒரு வீட்டு வாசலில் அவரை காரிலிருந்து இறக்கி விடுகிறார். தன்னுடை டிவி ஆதர்ச நாயகர் வந்து புத்தகத்தில் கையொப்பமிடுவார் என்று சிறுவன் காத்து நிற்கிறான். அந்த நேரத்தில் தாயாரின் கார் விரைவாக ஸ்பீட் எடுத்து மறைந்துவிடுகிறது.
எத்தனையோ புகழ்பெற்ற பாப் இசைப் பாடகர்கள் இவரால் முன்னுக்கு வருகிறார்கள். வாசலில் போட்டிருக்கும் கால் துடைக்கும் பாய் போல எல்லோரும் இவரைத் தாண்டிப் போய்விடுகிறார்கள். அவருடைய சரிதத்தில் ஒரு சிறு சோகம். புகழின் நுழைவாயிலில் நின்றவாறு ஒரு முழு தலைமுறையை கழித்துவிட்டார் ஆனால் அந்தப் புகழ் என்பது இவருடைய தாயாரின் கார் சத்தம்போல இவருக்கு கிட்டாமல் தூரத்தில் போய் மறைந்துவிட்டது.
மிகச் சாதாரணமான இந்த விவரணப் படம் எப்படி சர்வதேச திரைப்பட விழாவில் இடம் பெற்றது. ஆனால் அதனிலும் ஆச்சரியம் திரையிடப்படும் 339 படங்களில் நான் எப்படி இந்த படத்தை தேர்வு செய்தேன் என்பதுதான். என்னைச் சுற்றி பார்த்தேன். ஒரு சீட்டும் காலியில்லாமல் தியேட்டர் நிரம்பியிருந்தது. மீண்டும் திரையைப் பார்த்தேன். எனக்குமுன் இருந்த சடாமுனி மிகவும்ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். திரையில் பாதியே எனக்கு தெரிந்தது. இன்னும் கொஞ்சம் முடியை வளர்த்து மீதி திரையையும் மறைத்திருக்கலாமே என்று எனக்கு தோன்றியது.
ஏழு படங்களில் ஒன்று போய்விட்டது, இனிமேல் வருவதாவது நல்லாக இருக்கவேண்டும் என்று மனது அடித்தது. அடுத்த தேர்வு Francis Ford Cuppola என்ற இயக்குனடையது. இவரை ஞாபகம் இருக்கலாம். முப்பது வருடங்களுக்கு முன்பு மூன்று ஒஸ்கார் விருதுகள் பெற்ற The Godfather படத்தை இயக்கி உலக பிரபல்யம் அடைந்தவர். இந்த வகையில் கப்போலா ஹொலிவுட்டில் ஒரு சிறு கடவுள்தான். இவர் அரங்கிலே தோன்றி பார்வையாளர்களுடைய கேள்விகளுக்கு பதிலளிப்பார் என்றார்கள். அன்றைய படத்தின் பெயர் One from the Heart.
1982 ல் எடுக்கப்பட்ட இந்தப் படத்தை தூசு தட்டி சில திருத்தங்களுடன் மீண்டும் வெளியிட்டிருக்கிறார்.
கதை என்று பார்த்தால் எளிமையானது. சூதாட்ட தலைநகரமான லாஸ்வேகாஸின் பின்னணியில் அமைந்தது. ஐந்து வருடமாக மணமுடித்த தம்பதியினருடைய ஐந்தாவது மண நாளில் அவர்களுக்கிடையில் பிணக்கு ஏற்படுகிறது. அவள் அவனைவிட்டு பிரிகிறாள். அவளுக்கு ஒரு காதலன் கிடைக்கிறான். அவனுக்கும் ஒரு காதலி கிடைக்கிறாள். ஆனால் படமுடிவில் கணவனும் மனைவியும் திரும்பவும் ஒன்று சேர்கிறார்கள்.
இது ஒரு இசை நாடகத்தன்மையுடன் எடுக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்தை இன்னொரு முறை பார்ப்பதாயிருந்தால் ஒரேயொரு சீனை மாத்திரம் நான் பார்ப்பேன். அது மிகவும் கலையம்சத்துடன் எடுக்கப்பட்ட ராங்கோ நடனம். ஆணின் உடம்பு வளைவுகளில் பெண்ணின் வளைவுகள் ஒட்டிக்கொண்டே வருவதுபோன்ற அற்புதமான நடனக் காட்சி. ஆங்கில சினிமாக்களில், சொல்லப்பட்ட அழகோடு ராங்கோ நடனம் இடம்பெறும் படங்கள் மூன்று. மார்லன் பிராண்டோ நடித்த Last Tango in Paris. இதில் வந்த நடனத்தில் ஆவேசமும், புதுமையும் இருக்கும். அடுத்தது The Scent of a Woman. இதில் ஒரு கண்பார்வையற்ற மனிதர் முன்பின் அறிமுகமில்லாத ஓர் இளம் பெண்ணுடன் ஆடுவார். இதில் அதிர்ச்சியும், அழகும் கலந்திருக்கும். இந்தப் படத்தில் வரும் நடனம் கேளிக்கையும், கலையம்சமும் நிறைந்தது. இதைப் பார்ப்பதற்காகவாவது இந்தப் படத்தை இன்னொருதடவை பார்க்கலாம்.
இதைத்தவிர இந்தப் படத்தின் அமைப்பில், இயக்கத்தில், வசனத்தில் கப்போலாவின் மேதமையை காட்டும் காட்சி ஒன்றுகூட இல்லை. ஒரு சாதாரணமான திரைப்படம்தான்.
படம் முடிந்ததும் கப்போலா மேடையில் தோன்றி கேள்விகளுக்கு பதில் அளித்தார். இந்தப் படத்தை தான் சொற்ப நாட்களில், குறைந்த பணச்செலவில் எடுத்து முடித்ததாக கூறினார். லாஸ்வேகஸ் காட்சிகள் முழுவதும் தத்ரூபமாக செயற்கையான செட்போட்டே எடுக்கப்பட்டனவாம். படம் எடுக்கும்போதே டிஜிடல் முறையில் எடிட்டிங் செய்யும் சாத்தியக்கூறுகளை தான் அப்போது, இருபது வருடங்களுக்கு முன்பாகவே, கண்டுபிடித்துவிட்டதாக கூறினார்.
அவரிடம் கேட்கப்பட்ட இரண்டு கேள்விகளும், பதில்களும்.
1) பிரிந்த தம்பதியினர் திரும்பவும் ஒன்று சேர்வதற்கு வலுவான காரணம் காட்டப்படவில்லையே, ஏன் ? காதல் என்பது மிகவும் சிக்கலானது. மனித மனம் காதலை விஞ்ஞானக் கூர்மையுடன் அணுகுவதில்லை. காதல் மனிதர்கள் எடுக்கும் தீர்மானங்களும் அப்படியே. மனித மனத்தின் காணமுடியாத மறுபக்கத்தின் ஒரு கூறை சொல்வதுதான் கதை.
2) நீங்கள் நீண்டகாலமாக வெற்றிப் படங்கள் தருகிறீர்கள். வெற்றியின் ரகஸ்யம் என்ன ? நீங்கள் வெற்றி பெறவேண்டுமானால் மணமுடித்திருப்பது அவசியம்.( சிரிப்பு) மணமுடித்தவர்கள் மனது வெகு சீக்கிரத்தில் சமநிலையை அடைகிறது. அவர்களால்தான் ஆழமான சிந்தனையை தூண்டும் கலைப்படைப்புகளை தரமுடியும். வெளியே வந்தபோது ஒரு நல்ல படம் பார்த்த அமைதி ஏற்படவில்லை. ஆனால் உலகத்தரமான ஓர் இயக்குனரைப் பார்த்த திருப்தி இருந்தது.
ஹ
அடுத்து Sofia Coppola வின் Lost In Translation படம்; அதாவது ‘மொழிபெயர்ப்பில் இழந்தது ‘ என்ற தலைப்பு. இந்த சோஃபியா மேலே சொன்ன கப்போலாவின் மகள்தான். இது நான் திட்டமிடாமல் தற்செயலாக நடந்த ஏற்பாடு. இன்னொரு விசேஷமும் உண்டு. இது முழுக்க முழுக்க யப்பானில் 27 நாட்களில் மிகக் குறைந்த செலவில் ( 4 மில்லியன் டொலர்) படமாக்கப் பட்டிருந்தது. கதாநாயகன் ஹரிஸ”க்கு 45 – 50 வயதிருக்கும்; மணமுடித்து 25 வருடங்கள், அமெரிக்காவின் பெரிய நடிகர். அவர் யப்பானுக்கு 2 மில்லியன் டொலர் சம்பளத்தில் ஒரு விஸ்கி விளம்பரப் படம் நடித்துக் கொடுப்பதற்காக வந்திருந்தார். இவருடைய நடிப்பு வாழ்க்கை சரிவுப் பாதையில் இறங்கிவிட்டது.
மனைவியுடனான உறவும் சுமுகமாக இல்லை. ஒரு யப்பானிய ஐந்து நட்சத்திர ஹொட்டலில் ஒருவித அலுப்புடனும், சோர்வுடனும் தங்கியிருப்பவரை யப்பானிய வழிபாட்டாளர்கள் அதீத மரியாதை கொடுத்து எரிச்சலூட்டுகிறார்கள். அதே ஹொட்டலில் கதாநாயகி சார்லட் தங்கியிருக்கிறாள். வயது இருபதுக்குள்ளேதான் இருக்கும். சமீபத்தில் ஒரு உலகப் புகழ் புகைப்படக்காரனை மணமுடித்து தொழில் நிமித்தமாக கணவன் அடிக்கடி வெளியே போய்விட ஹொட்டலிலேயே தனிமையில் இருந்து புழுங்குகிறாள். எதிர்காலம் பற்றி இருவருக்குமே ஐயம்; மணவாழ்க்கையில் நம்பிக்கையின்மை. இந்தச் சூழ்நிலையில் யதேச்சையாக இருவருக்குமிடையில் ஒரு சிறு பரிச்சயம் ஏற்பட்டு மெதுவாக நகர்ந்து நட்பாகிறது. அந்த நட்பு ஒரு பூவின் இதழ் ஒவ்வொன்றாக விரிவதுபோல விரிந்து காதலாக முகிழ்த்து ஒரு எல்லை வந்ததும் ஸ்தம்பித்து நிற்கிறது. இதை அழகாக சொல்வதுதான் கதை.
ஆரம்பத்திலேயே சுவாரஸ்யம் பிடித்துவிடுகிறது. விளம்பரப் படம் எடுக்கும் காட்சி. ஒருவர் ஹரிசுக்கு மொழிபெயர்க்கிறார். இயக்குநர் இரண்டு நிமிடமாக எப்படி திரும்பவேண்டும், எப்படி விஸ்கி கிளாஸை கையிலே பிடிக்கவேண்டும் என்று விளக்குகிறார். மொழிபெயர்ப்பாளினி ஒரு வரியிலே அதை சொல்கிறாள். இப்பொழுது ஹரிஸ் ஒரு சின்ன கேள்வி கேட்கிறான். எப்படி திரும்புவது, இடமிருந்து வலமா அல்லது வலமிருந்து இடமா. அந்தக் கேள்வியை மொழிபெயர்க்க அந்தப் பெண்ணுக்கு இரண்டு நிமிடம் எடுக்கிறது. யப்பானிய மொழியில் நிறுத்தாமல் பொழிந்து தள்ளுகிறாள். ஹரிஸின் புருவம் உயர்கிறது. சிரிப்பலை. இப்படி பல காட்சிகள். யப்பானியர்களை கேலி செய்யும் சீன்களுக்கும் குறைவில்லை. யப்பானியர் குள்ளர்கள் – உயரமான ஹரிஸ் லிப்டில் நிற்கும்போது மற்றவர்கள் அவர் தோள்மூட்டுக்கு கூட எட்டவில்லை. பாத்ரூமில் குளிப்பதற்கு உயரம் போதாமல் ஷவரில் குனிந்துகொண்டு ஹரிஸ் குளிக்கிறார். யப்பானியர்கள் L வார்த்தைகளையும், R வார்த்தைகளையும் மாறிப்போட்டு குழப்பியடிப்பது போன்ற வேடிக்கை காட்சிகள்.
யப்பானியர்களுடைய தொழில்நுட்ப முன்னேற்றத்தையும் காட்டத் தவறவில்லை. அதிகாலையில் படுக்கையறை யன்னல் திரைச்சீலைகள் தானாகவே நகர்ந்து வெளிச்சத்தை உள்ளே விடுகின்றன. அறையில் உள்ள தொலைநகல் மெசின் தவல்களை சுருள் சுருளாக பகலிலும் இரவிலும் கொண்டுவந்து சேர்க்கிறது.
டோக்கியோவின் தகதகக்கும் நியோன் விளக்கு இரவுகளில் ஹரிசும் சார்லட்டும் உல்லாசமாகத் திரிகிறார்கள். பல கேளிக்கை நடனங்கள். பல காட்சிகள் கிரிகொறி பெக்கும், ஓட்றி ஹெப்பெர்னும் நடித்த Roman Holiday படத்தை நினைவுக்கு கொண்டுவருகின்றன. அதைப்போல இவர்களிடையே ஒரு வரம்பு மீறாத நெருக்கமும் உண்டாகிறது. ஹரிஸிற்கு விரக்தியான முகம்; அதில் சிரிப்பு வருவது அபூர்வம். சார்லட் பேசும் முழு வசனங்களும் ஒரு பக்கத்துக்குள் அடங்கும். ஆனால் அவள் கண்கள் பத்து பக்க வசனங்களை பேசிவிடுகின்றன. அவள் முகமும், உடலும், அதன் கோணமும் அந்தக் காட்சிக்கு என்ன உணர்ச்சி தேவையோ அதை அசங்காமல் வெளியே விட்டபடியே இருந்தது. அலட்டல் இல்லாத நடிப்பு என்பார்கள், அது இதுதான்.
எப்படி நட்பு உண்டாகியதோ அதே மாதிரி கலை அழகுடன் பிரிவும் சொல்லப்படுகிறது. இருவர் மனதுக்குள்ளும் பூட்டி வைத்த ஏதோ ஒன்றை அவர்கள் பரிமாறிக்கொள்ளவில்லை; தங்களுடனேயே திருப்பி எடுத்துப் போகிறார்கள்.
இந்தப் படம் Sofia Coppola வுக்கு பணத்தையும் புகழையும் கொட்டிக் குவிக்கும். இந்த இளம் வயதில் உலகத்து சிறந்த இயக்குநர் வரிசையில் இடம் பிடித்துவிடுவார். ஒன்றிரண்டு ஒஸ்கார் பரிசுகளும் நிச்சயம். மொழிபெயர்ப்பில் எப்படி ஒரு பகுதியை இழந்து விடுகிறோமோ அதேபோல வாழ்க்கையிலும் ஒரு பகுதியை நாம் இழந்துவிடுகிறோம். அது முழுமை பெறுவதே இல்லை; அதைத்தேடி ஓடுவதுதான் விதிக்கப்பட்டது என்ற செய்தி துலக்கமாகவே கிடைக்கிறது. கலையம்சம் என்று பார்த்தால் இந்தப் படம் பூரணம் பெற்றுவிட்டதாகச் சொல்லமுடியாது; மொழிபெயர்ப்பில் இழந்ததுபோல அதிலும் ஏதோ ஒன்று இழந்துபோய்த்தான் தெரிந்தது.
Good Bye, Dragon Inn என்ற தாய்வான் படத்தை இயக்கியவரும் ஓர் இளைஞரே. பெயர் சோய் மிங்லியாங். இவருடைய பல படங்கள் உலக திரைப்பட விழாக்களில் விருதுகள் பெற்றிருக்கின்றன. இவருக்கு ஒரு பேர் இருக்கிறது. காமிராவை எடுத்து ஒரு கோணத்தில் வைத்தால் அதை அவசரப்பட்டு மீண்டும் தொடமாட்டார். மற்றவர்கள் குளோசப், தூரக் காட்சி, இடைக்காட்சி என்று ஒவ்வொரு நாலு செக்கண்டும் வெட்டி எடுக்கும்போது இவர் இரண்டு நிமிடக் காட்சிகளை விடாப்பிடியாக எடுப்பார். இவை மனிதர்களின் பொறுமையை சோதித்து எரிச்சல் ஊட்டக்கூடியன.
படம் தொடங்கமுன் இயக்குனர் மேடையில் தோன்றி பேசினார். ‘ இங்கே இப்பொழுது அரங்கம் நிறைந்திருக்கிறது. படம் முடியும்போது என்னுடைய நீண்ட காட்சிகளில் அலுத்துப்போய் பாதிப்பேர் ஓடிவிடுவீர்கள். அப்படி ஓடவேண்டாம். முக்கியமானது கடைசிக்காட்சி, அதையும் பார்த்துவிடுங்கள் ‘ என்று கூறினார். அரங்கம் சிரித்தது. அவருடைய பேச்சு சுருக்கமாக இருந்தது. அவருடைய ஒரு காட்சியின் நீளம்கூட இருக்கவில்லை. நீண்ட காட்சிகள் மட்டுமல்ல அவருடைய படத்தில் இன்னும் பல புதுமைகள் இருந்தன. இது மெளனப் படம்போல (ஒன்றிரண்டு வசனங்கள்தவிர) வசனம் இல்லாமலே ஓடியது.
ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த ஒரு தியேட்டரைப் பற்றியது படம். அந்த தியேட்டரில் ஓடும் படத்தைப் பார்க்க வரும் சனத்தொகை வரவர குறைகிறது. அந்த தியேட்டரையும், அதைப் பார்க்கவரும் ஒன்றிரண்டு பார்வையாளர்களையும், அதில் ஓடும் படத்தையும் காட்டுவதுதான் படம். அந்த தியேட்டர் படத்தில் வரும் பின்னணி இசையும், டயலக்கும், நிஜ படச் சம்பவங்களுக்கு பொருந்தும்படி அமைத்திருப்பதுதான் சிறப்பு. கதாநாயகி கால் ஊனமான ஓர் இளம்பெண். படம் முழுக்க இந்தப் பெண் பெரும் சத்தம் போடும் ஊனக்காலை நகர்த்திவைத்து போகும் ஒலி நிறைந்திருக்கும். நீண்ட காட்சிகள். இந்தப் பெண் கீழிருந்து மூன்று மாடிப்படிகளை ஏறி முடிக்கும்வரை காமிரா அசையாமல் தொடர்ந்து காட்டிக்கொண்டே இருக்கிறது.
பயங்கரமான டக் டக் ஒலிதான் பின்னணி. படத்தின் முடிவு வரை இந்தப்பெண் ஒரு வார்த்தை பேசவில்லை. படத்தின் தொடக்கத்தில் ஊனப்பெண்மணி நீண்ட படிக்கட்டுகளை கடந்துவந்து நீராவியில் ஏதோ உணவை வேகவைக்கிறார். பிறகு ஆற அமர உட்கார்ந்து அதைப் பாதியாக வெட்டி சாப்பிடுகிறார். பிறகு மீதியை மூடி பத்திரமாக வைக்கிறார். இந்தக் காட்சி ஒரு பத்து நிமிட நேரம் ஓடுகிறது.
தியேட்டரில் பல சம்பவங்கள் நடக்கின்றன. ஒருபால் புணர்ச்சியாளர்கள் ஒருவரை ஒருவர் தேடுவது. விலைமாது வாடிக்கையாளரை பிடிக்கும் நோக்கத்தில் தியேட்டருக்கு வருவது. மிகப் பெரிய சத்தத்துடன் தியேட்டரில் வத்தகப்பழவிதைகளை உடைத்து உண்பது. அடுத்து ஏதோ முக்கியமான காட்சி வரப்போகிறது என்பதுபோல பல எதிர்பார்ப்புகள்.
கதாநாயகியின் நடமாட்டம்தான் படம் முழுக்க வியாபித்திருக்கிறது. நடு இரவு நேரங்களில் பல மாடிகள் கொண்ட அந்த ஆளரவம் இல்லாத தியேட்டரில் அவள் தோன்றுமுன்னரே கடூரமான காலடிச்சத்தங்கள் ஒலிக்கத் தொடங்கும். பிறகு அவள் தோன்றுவாள். அவளே டிக்கட் கொடுப்பவள். அவளே தியேட்டரின் பாதுகாப்புக்கு பொறுப்பானவள்.அவளே இருக்கைகளை சுத்தமாக வைக்க கடமைப்பட்டவள். அவளே ஆண்கள், பெண்கள் கழிப்பறைகளையும் சுத்தம் செய்பவள். தனியாக அந்தப் பிரம்மாண்டமான தியேட்டரின் முழு அலுவல்களையும் வெறுப்பில்லாமல் செய்கிறாள். அவள் முகத்தில் பார்க்கக்கூடிய ஒரே உணர்ச்சி ஏக்கம்தான். படம் முடிவதற்கு இரண்டு நிமிடம் வரைக்கும் சம்பவக் கோர்வையில் ஒரு கதையும் தென்படவில்லை. எல்லாமே போக்கு காட்டும், கதைக்கு தொடர்பில்லாத காட்சிகள்தான். திடாரென்று ஒரு நாள் அந்த தியேட்டரை மூடிவிட முடிவு எடுக்கிறார்கள். அப்பொழுதுதான் படத்தின் கதாநாயகன் முதன்முறையாக தோன்றுகிறான். இவன்தான் தியேட்டரில் படம் ஓட்டி. இவன்கூட அவனுக்கு கொடுத்த அந்த ஐந்து நிமிடங்களில் ஒரு வார்த்தைதானும் பேசவில்லை.
கடைசி நாள். இந்தப் பெண் மிகப் பொறுப்பாக எல்லா கதவுகளையும் மூடுகிறாள். தியேட்டரின் இருக்கைகளை சரி பார்க்கிறாள். ஆண்களின் நீண்ட கழிவறைக்கு போய் அங்கே ஒவ்வொரு கழிவறையாக தண்இர் ஊற்றி கழுவி சுத்தம் செய்து அவற்றை சரிவர மூடுகிறாள். தன்னுடைய சொந்தப் பொருட்களை பையிலே வைத்துமூடி சரி பார்க்கிறாள். அப்பொழுதும் அவளுக்கு திருப்தியில்லை. பையை தூக்கிக்கொண்டு திரும்பி திரும்பி பார்த்தவாறே தியேட்டரை விட்டு வெளியேறுகிறாள்.
கதாநாயகனும் புறப்படுவதற்கு ஆயத்தங்கள் செய்கிறான். திடாரென்று ஏதோ ஞாபகம் வந்து இவளுடைய அறைக்கு போகிறான். அங்கே அவள் மீதம்விட்ட பாதி உணவு இருக்கிறது. அதைக்கண்டு திடுக்கிடுகிறான். அதை பாதுகாப்பாக எடுத்துக்கொண்டு போய் அவளிடம் கொடுக்கவேண்டும் என்பதுபோல விரைந்து ஹெல்மட்டை மாட்டி மோட்டார்சைக்கிளில் ஏறி சீறிக்கொண்டு பறக்கிறான்.
அவன்போன பிறகு மறைவிடத்தில் இருந்து நொண்டியபடியே பெண் வெளிப்படுகிறாள். அவன் போவதை நம்பமுடியாமல் வெறித்துப் பார்த்தபடி நிற்கிறாள். அவள் முகத்திலே வழக்கமான உணர்ச்சி ஏக்கம்தான்; ஆனால் இப்போது ஆசை, ஏக்கம், ஏமாற்றம். அவளைத் தேடித்தான் அவன் போவது அவளுக்கு தெரியாது. அப்படியே படம் முடிகிறது.
கடைசி இரண்டு நிமிடங்கள் தவிர மீதி நேரம் எல்லாம் பார்வையாளர்களுக்கு போக்கு காட்டும் வேலைதான் நடக்கிறது. கதை நடப்பது கடைசி இரண்டு நிமிட நேரத்தில்தான். மீதி நேரம் இந்த உச்சக் கட்டத்துக்கு தயார் செய்யும் முயற்சிதான். பத்து செக்கண்ட் நடக்கும் சுமோ மல்யுத்தத்திற்கு பத்து நிமிட நேரம் தயார்செய்வதுபோலத்தான் இதுவும். ஆனால் இந்தப் படத்தில் ஏதோஇருக்கிறது. இரண்டு நாட்களாக இது மனதைப்போட்டு அலைக்கழித்தது. பல இடங்களில் எரிச்சல்கூட வந்தது. ஆனாலும் இது முடிந்தபோது ஆழ்மனதில் போய் எதையோ கலக்கிவிட்டது. அந்தக் காலடி ஓசைகள் இன்னும் என்னை துரத்திக்கொண்டே இருக்கின்றன.
Since Otar Left ஒரு பிரெஞ்சு திரைப்படமாக இருந்தாலும், அது ஜோர்ஜியா நாட்டின் பின்னணியில் எடுக்கப்பட்டது. மூன்று தலைமுறைப் பெண்களின் கதை – 90 வயதான ஏக்கா, 55 வயதான விதவை மகள் மரீனா, ஏக்காவின் பேத்தி 16 வயது அடா – இவர்கள்தான் நாயகிகள். ஜோர்ஜியாவின் ஒரு நகரத்தின் சின்ன வீட்டிலே இவர்கள் வசிக்கிறார்கள். இரண்டொரு காட்சிகளில் இவர்களுடை வறுமை நிலை சொல்லப்பட்டுவிடுகிறது. மூன்று பெண்கள் வாழும் ஒரு வீடு எப்படி இருக்கும். எப்போதும் பிக்கல், பிடுங்கல், சச்சரவுகள்தான். ஆனால் அது வெளித்தோற்றத்திற்கு. அதை ஊடுருவி ஆழமான அன்பும், தியாகமும், சேவையும் நிறைந்திருக்கிறது.
ஒட்டார் திரையிலே தோன்றாத கதாநாயகன். அவனச் சுற்றித்தான் கதை நகர்கிறது. பாரிஸ் நகரத்தில் வசதிகள் மறுக்கப்பட்ட ஒரு மலிவு அறையில் அவன் வாழ்கிறான். அங்கேதான் அவனுடைய பிழைப்பு. ஏக்காதான் குடும்பத்தலைவி. அவள் சொல்லுக்கு மறுப்பு கிடையாது. இருப்பினும் சிறு சிறு பிணக்குகள் அவ்வப்போது ஏற்படும். ஆனாலும் முக்கியமான விடயங்களில் அவள் சொல்லுக்கு மதிப்பு இருக்கிறது. ஒரு முறை நடு இரவில் அவளை மருத்துவமனை அவசரப்பிரிவுக்கு இட்டுச் செல்கிறார்கள். அப்பொழுது அவளிடம் குடும்பத்தினர் காட்டும் பரிவும் அன்பும் வெளிப்படுகிறது. ஏக்காவுக்கும் அவள் பேத்தி அடாவுக்கும் இடையில் மெல்லிய ஒரு பாசம் இறுக்கமாக உருவாகிறது.
ஏக்கா தன் மகன் ஒட்டாரின் கடிதங்களுக்கும், டெலிபோன் அழைப்புகளுக்கும் காத்திருப்பதுதான் படத்தில் பிரதானமான காட்சி. கடிதம் வந்தால் அதைத் திருப்பி திருப்பி படிப்பாள். டெலிபோன் என்றால் மாறிமாறி பேசுவார்கள். அவன் குரலைக் கேட்கும்போது ஏக்காவின் சுருங்கிய முகம் ஒரு பூ மலர்வதுபோல விரிவது மறக்கமுடியாதது. அன்று மிகவும் சந்தோஷமான நாள். குதூகலம் ஓடி வழியும். இவர்கள் வாழ்வது அந்த தொலைபேசி மணி அடிப்பதற்காக. அது அடித்து முடிந்தபின் அடுத்த மணி அடிப்பதற்காக.
இளம் பெண் அடாவின் பாத்திரம் அருமையாக அமைந்தது. ஓர் இளம்பெண்ணுக்குரிய ஒன்றையும் அவள் சய்வதில்லை. காதலன் இல்லை. நடனங்களுக்கும் போவதில்லை. எதிர்காலம் பற்றிய அக்கறை இல்லை. வேலை இல்லை. இந்தப் பெண்கள் மத்தியில் அவள் வாழ்நாள் கரைந்துகொண்டு போகிறது. அவளைப்பற்றிய கவலை இப்போது கிழவிக்கும் பிடித்துவிடுகிறது. ஒரு நாள் இடிபோல செய்தி வருகிறது. ஒட்டார் ஒரு விபத்தில் இறந்துவிடுகிறான். இதைக் கிழவியிடம் யார் சொல்வது. அவள் உயிரைப் பிடித்துக்கொண்டிருப்பது ஒட்டாருக்காகத்தான். அவள் இறந்தாலும் இறந்துபோவாள். அந்தச் செய்தியை அப்படியே மறைத்துவிடுகிறார்கள். டெலிபோனும், கடிதமும் இப்போது இல்லை. கிழவி வருத்தம் அடைகிறாள். பிடிவாதமாக பாரிஸ் போகவேண்டும் என்று சொல்கிறாள். வேறு வழியில்லாமல் சம்மதிக்கிறார்கள்.
ஆனால் அங்கே போனதும் நாம் எதிர்பார்க்காத ஒரு விஷயம் நடந்துவிடுகிறது. தன்னுடைய மகன் இறந்துபோன விஷயத்தை கிழவி தானாகவே கண்டுபிடித்து விடுகிறாள். அந்த இடத்தில் அவள் அதிர்ந்துபோய் அலறவில்லை. மிக அமைதியான திடசித்தத்துடன் அந்த மரணத்தை ஏற்றுக்கொள்கிறாள். அது மாத்திரமல்ல, மற்றவர்களிடம் இருந்து இதை மறைத்து விடுகிறாள். ஒட்டார் திடாரென்று அமெரிக்கா போய்விட்டான் என்று பொய் சொல்கிறாள். ஒட்டார் இறந்துவிட்டது தெரிந்திருந்தாலும் கிழவி சொன்ன பொய்யை நம்புவதுபோல மற்றவர்களும் நடிக்கிறார்கள்.
படம் முடிவதற்கு இன்னும் சில நிமிடங்களே இருக்கின்றன. மூன்று பெண்களும் பாரிஸ் விமான நிலையத்தில் ஜோர்ஜியா விமானத்துக்காக காத்திருக்கிறார்கள். விமானத்தில் ஏறுவதற்கான கடைசி அழைப்பு. திடாரென்று இளம் பெண் அடா காணாமல் போய்விடுகிறாள். கண்ணாடி தடுப்புக்கு அப்பால் நின்று கைகாட்டுகிறாள்.
பாரிஸ’ல் நின்றுவிட அவள் தீர்மானித்துவிட்டாள். தாய் திடுக்கிட்டுப் போய் அழுகிறாள். ஆனால் ஏக்கா அதே திடசித்தத்துடன் இதை ஏற்கனவே எதிர்பார்த்ததுபோல தாயாரை அணைத்து தேற்றிக்கொண்டு விமானத்தை நோக்கி புறப்படுகிறாள்.
மூன்று பெண்களை மட்டும் வைத்து எடுத்த, மூன்று தலைமுறைகளை காட்டும், ஆடம்பரமில்லாத, அலட்டல் இல்லாத படம். காமிரா படம் எடுப்பதே தெரியவில்லை. ஒரு குடும்பத்தினுள்ளே அவர்களுக்கு தெரியாமல் நுழைந்து விட்டதுபோன்ற ஓர் உணர்வுதான். நாம் பார்வையாளர் என்பதே அடிக்கடி மறந்துபோய்விடுகிறது. மூன்று பெண்கள் வாழ்ந்த வீட்டில் இப்பொழுது இரு பெண்கள் வாழ்வார்கள். அவர்கள் குடும்பத்தில் ஒருவர் சம்பாதிக்கத் தொடங்கிவிட்டார். அவர்கள் இப்போது அடாவின் டெலிபோன் அழைப்புக்காக காத்திருப்பார்கள்.
படம் முடிந்த பிறகுதான் அவ்வளவும் நடிப்பு என்ற திடுக்கிடல் ஏற்படுகிறது. மிகத் தூரத்தில் இருந்து வரும் ஒரு டெலிபோன் அழைப்புக்காக மூன்று பெண்கள் காத்திருப்பது அடிக்கடி படத்திலே வரும் ஒரு காட்சி. அந்தப் பெண்கள் காத்திருப்பதுபோல படம் முடிந்த பிற்பாடும் மனம் ஏதோ ஒன்றுக்காக காத்திருந்தது. தியேட்டரை விட்டு வெளியே வர நேரம் எடுக்கிறது.
The Matchstick Men என்ற படத்தில் நடித்தவர் அடிக்கடி சினிமா போகிறவர்களுக்கு பரிச்சயமான நிக்கலஸ் கேஜ் என்ற தேர்ந்த நடிகர். இதை இயக்கியவர் Gladiator படத்தை தந்த அதே ஸ்கொட் என்பவர்தான்.
ரோய் ( Nicolas Cage) ஒரு கம்பனி நடத்துகிறார். அதிலே அவருடைய பார்ட்னராகவும், அவரிடம் தொழில் பழகுபவராகவும் ப்ராங் என்ற இளைஞர் வேலை பார்க்கிறார். இவர்களுடைய தொழில் ஆட்களை ஏமாற்றுவதுதான். பெரிய தர ஏமாற்றாக இல்லாமல் மிகக்கவனமாக, பொலீஸ’ல் பிடிபடாமல் சிறு சிறு தொகைகளாக ஏமாற்றிப் பறிப்பார்கள். அவர்களுக்கு பலியாவது தனியாக வசிக்கும் பெண்கள், ஓய்வு பெற்று வாழ்பவர்கள், இப்படி. இதில் கிடைக்கும் பணத்தை அவர்கள் பங்குபோட்டுக்கொள்வார்கள். ரோய் தன் பணத்தை வங்கி லொக்கரில் கட்டுக் கட்டாக அடுக்கிவைத்து பாதுகாக்கிறான். ரோயுக்கு ஒரு அபூர்வமான நரம்பு வியாதி. அவனால் வெளியே அதிக நேரம் இருக்கமுடியாது.
சூரியனைப் பார்க்க இயலாது. வீட்டிலே தூசு துரும்பு இருக்கக்கூடாது. அதுவும் கார்ப்பெட் எப்பவும் அப்பழுக்கில்லாமல் பளிச்சென்று இருக்கவேண்டும். மனநல மருத்துவரிடம் கிரமமாக போய் அவர் கொடுக்கும் மாத்திரையை தினமும் எடுப்பான். அல்லாவிடில் வாய் கோணி, கண் வெட்டி இழுக்கத்தொடங்கிவிடும்.
ரோயினுடைய புது மனநல மருத்துவர்,மனைவியுடன் பிரிந்துபோன அவனுடைய மகளை சந்திக்கச் சொல்கிறார். அவளுக்கு இப்ப வயது பதினாலு. அந்த சந்திப்பு பெரிய மருந்தாக இருக்கும் என்ற நம்பிக்கை அவருக்கு.
பதினாலு வயது அஞ்சலா சில்லுப்பலகையை வேகமாக உருட்டியபடி ஒரு வெளிச்ச தேவதைபோல வந்து இறங்குகிறாள். அந்த வயது பெண் குழந்தைக்கு உரிய சிரிப்பு, சினம், துணிச்சல் எல்லாம் அவளிடம் இருக்கிறது. ஒரு நாள் தாயுடன் கோபித்துக்கொண்டு இவனுடைய வீட்டுக்கு வந்துவிடுகிறாள். ஆடம்பரமான வீட்டைப் பார்த்து அப்படியே அசந்துபோய் நிற்கிறாள். தகப்பன் உதாவாக்கரை என்று அவள் தாய் போதித்திருக்கிறாள்.
அஞ்சலா வந்த இரண்டு நிமிடங்களில் வீடு தலைகீழாகிறது. ரோய் ஒழுங்காக ஒரு வித வெறித்தன்மையுடன் அடுக்கிவைத்த பொருள்கள் எல்லாம் சிதறிப்போய் காட்சியளிக்கின்றன. பசியில்லை என்று சொல்வாள்; அடுத்த நிமிடம் பெட்டி பெட்டியாக பீட்ஸா ஓடர் பண்ணி, பளபளக்கும் விலை உயர்ந்த வெள்ளை கார்ப்பட்டில் சிந்தியபடியே சாப்பிடுவாள். அவளுடைய உற்சாகம், அலட்சியம் எல்லாம் இவனுக்கும் தொற்றிவிடுகிறது. முன்பின் அறிந்திராத ஒரு தகப்பன் மகள் உறவு சிறிது சிறிதாக நெருக்கமாகிறது. ரோய் இப்பொழுது மருந்துகள்கூட எடுப்பதில்லை. மகளைப்போல அவனும் சப்பாத்துகளை கழற்றி, கழற்றிய இடத்திலேயே எறிந்துவிட்டு, வாழ்க்கையை சுதந்திரமாக அனுபவிக்க கற்றுக்கொள்கிறான்.
அஞ்சலா வரும் காட்சிகள் எல்லாம் ஒளி வெள்ளம் பாய்ந்து மற்றவர்களுடைய நடிப்பை அமுக்கிவிடுகிறது. அவள் சிரிக்கும்போது நாமும் சிரிக்கிறோம்; துள்ளும்போது எமக்கும் துள்ளத் தோன்றுகிறது. அவள் அழும்போது எமக்கும் அழுகை வருகிறது. அப்படியான பிரசன்னம்.
ஒரு நாள் அஞ்சலா தகப்பனுடைய உண்மையான தொழிலை கண்டுபிடித்து விடுகிறாள். அதுமட்டும் அவன் நேர்மையானவன் என்று அவள் நம்பியிருந்தாள்.
‘எதற்காக இந்த தொழிலைச் செய்கிறாய்ஹ ‘ அதற்கு அவன் சொல்கிறான். ‘இதில் நான் திறமையுள்ளவனாக இருக்கிறேன். ‘
அவன் பணத்திற்காக என்று சொல்லவில்லை. தனக்கு பிடித்த தொழில் என்றும் கூறவில்லை. தனக்கு திறமை இருப்பதால் செய்வதாக சொல்கிறான். மிகவும் நேர்மையான பதில்.
ரோயும், பிராங்கும் அவர்கள் வழக்கத்திற்கு மாறாக பெரிய ஏமாற்று வேலை ஒன்றை செய்வதற்கு திட்டமிடுகிறார்கள். ரோய் ஒவ்வொரு சிறு விபரத்தையும் சேகரித்து அணு பிசகாமல், நுணுக்கமாக பிளான் பண்ணுகிறான். அவன் இதுவரை பொலீஸ’ல் பிடிபட்டது கிடையாது. பிராங்கும் அப்படியே. கடைசி நிமிடத்தில் சந்தர்ப்பவசத்தால் அஞ்சலாவையும் சேர்த்துக்கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அஞ்சலா துணிச்சல்காரி.
விமானக்கூடத்தில் ஒரு கட்டத்தில் கவனத்தை திருப்புவது அவள் வேலை. சனங்கள் நிரம்பிய ஒரு பாரிலே வசை சங்கிலியை அவிழவிட்டு எல்லோரையும் அதிர வைக்கிறாள்.
ஆனால் ஒரு சின்ன தவறு நடந்துவிடுகிறது. அஞ்சலா எற்கனவே பொலீஸில் பிடிபட்டவள். அவள் பதிவு பொலீஸில் இருக்கிறது. தகப்பனுடைய தியாகத்தில் மகள் தப்புகிறாள். கதையின் சிதிலமான நுனிகள் எல்லாம் முடியப்பட்டு படம் முடிகிறது.
சரியாக இரண்டு மணிநேரம் ஓடும் இந்தப் படத்தில் இருக்கையின் கைப்பிடிகளை இறுக்கிப் பிடிக்கவைக்கும் காட்சிகள் அதிகம். அஞ்சலாவாக வரும் அலிஸன் லோஃமனின் நடிப்பு பிரமாதம். ஒரு இடத்தில் கூட தொய்வு வராமல் இயக்குநர் žன்களை நெருக்கமாக அமைத்திருக்கிறார்.
தகப்பனும் மகளும் சந்திக்கும் இறுதிக்காட்சி எதிர்பார்த்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை. முக்கியமான இந்தக் காட்சி மட்டும் சரியாக அமைந்திருந்தால் இந்தப் படம் அடுத்த லெவலுக்கு போயிருக்கும். இதைப் பார்த்தபோது ஒஸ்கார் பரிசு பெற்ற ரெயின்மான் ( Rainman ) படக்காட்சிகள் அடிக்கடி ஞாபகத்துக்கு வந்தன. The Matchstick Men இந்தப் படம் அளவுக்கு உயர்ந்திருக்கவேண்டியது; எங்கோ கதையிலோ, இயக்கத்திலோ, நடிப்பிலோ ஏற்பட்ட யோக்கித்தன்மையின் சறுக்கலில் அதை தவறவிட்டிருக்கிறது. தியேட்டரைவிட்டு வெளியே வரும்போது ‘அட, மிக உன்னதமாக வந்திருக்கவேண்டிய படம் ‘ என்ற எண்ணமே வலுத்திருந்தது.
At Five In The Afternoon ( பின் மதியம் ஐந்து மணியானபோது) என்று ஓர் ஈரானியப் படம்.
இதை இயக்கியவர் ஸமீரா மக்மல்பவ் என்ற 23 வயது ஈரானியப் பெண்மணி. கான் திரைப்படவிழாவில் காட்டப்பெற்ற இரண்டு படங்களில் இதுவும் ஒன்று. இரண்டுமே ஜூரி பரிசு பெற்றவை. இவருடைய தகப்பனார் சமீபத்தில் கண்டஹார் படத்தை இயக்கியவர். இந்தப் படம் அதன் தொடர்ச்சி என்றுகூட ஒருவகையில் சொல்லலாம்.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் வீழ்ச்சிக்கு பிறகு பெண்கள் பள்ளிக்கூடங்களில் அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் நோக்ரே என்ற இளம் பெண்ணின் வண்டியோட்டும் தகப்பனுக்கு இந்த மாற்றங்கள் பிடிக்கவில்லை. முகம் மூடாத பெண்ணைக் கண்டால் கண்ணை மூடி பிரார்த்திக்கிறார். நோக்ரே கறுப்பு முழு பர்தா அணியவேண்டும் என்று நிர்ப்பந்திக்கிறார். அந்நியருடன் பேசும்போது பெண்கள் வாயிலே விரலை விட்டு குரலை மாற்றவேண்டும் என்று உத்தரவிடுகிறார். இறை நிந்தனை பெருகிவிட்டது என்று வருந்துகிறார்.
ஆனால் நோக்ரேயை குர்ரான் வகுப்புக்கு அனுப்ப சம்மதிக்கிறார். குர்ரான் வகுப்பில் இருந்து நோக்ரே தப்பி பின்வழியால் பெண்கள் பள்ளிக்கூடத்துக்கு செல்கிறாள். வழியிலே பர்தாவைக் கழற்றிவிடுகிறாள். அதேபோல பழைய காலணியையும் நீக்கிவிட்டு புதிய குதிச்சப்பாத்தை அணிந்துகொள்கிறாள். வகுப்பிலே காரசாரமான விவாதங்கள் நடக்கின்றன. ஆசிரியை மாணவிகளின் எதிர்கால லட்சியத்தை கேட்கிறார். நோக்ரே துணிச்சலாக தான் எதிர்கால ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதியாக வர விரும்புவதாக சொல்கிறாள். எல்லோரும் சிரிக்கிறார்கள்.
ஒரு மாணவி எழும்பி ‘நீ ஒரு இஸ்லாமியப் பெண் மறந்துவிடாதே. உன் கடமை வீட்டில் பிள்ளைகளைப் பார்ப்பதும், கணவருக்கு அடங்கி நடப்பதுவும்தான். ‘ அவள் ‘அது எப்படி. பாகிஸ்தான் ஒரு முஸ்லிம் நாடு. நான் பெனாசிர் பூட்டோ போல வருவேன் ‘ என்று ஆவேசத்தோடு சொல்கிறாள்.
வண்டியோட்டி, நோக்ரே, அவளுடைய அக்கா, அவள் கைக்குழந்தை எல்லோரும் ஓர் உடைந்து போன பிளேனில் வசிக்கிறார்கள். நோக்ரேயின் அக்கா தினமும் பஸ் தரிப்பிடத்துக்கு சென்று பாகிஸ்தானில் இருந்துவரும் அகதிகளிடம் தொலைந்துபோன தன் கணவனைப் பற்றி தகவல் விசாரிப்பாள். வறுமை அவர்களைப் பிடுங்கியது. குழந்தை எப்பொழுது பார்த்தாலும் பாலுக்காக அழுதது. தினம் தினம் தண்இரைத் தேடுவது நோக்ரேக்கு இன்னொரு பிரச்சினை.
நோக்ரே ஒரு கவிஞனை சந்திக்கிறாள். அவனிடம் கேட்கிறாள் பெனாசிர் பூட்டோ கூட்டங்களில் என்ன பேசினார் என்று. சனங்கள் அவருக்கு எப்படி வோட்டுப் போட்டார்கள். அவருடைய பேச்சின் நகல் தனக்கு வேண்டும் என்று கேட்கிறார். அவர்களுக்கிடையில் ஒரு மெல்லிய காதல் வளர்கிறது. அவன் ஒரு கவிதையை அவளுக்கு சொல்லித் தருகிறான். பழைய ஸ்பானியக் கவிதை அது. இக்னாஸியா என்ற இளைஞன் காளைச் சண்டையில் பலியாகிறான். அவனுடைய நண்பர், பெரும் கவிஞர், இறந்த இளைஞனுக்கு அஞ்சலி செய்து ஒரு கவிதை படைக்கிறார். அந்தக் கவிதை ‘பின் மதியம் ஐந்து மணி ‘ என்று தொடங்கும். அதை நோக்ரே பாடமாக்குகிறாள்.
ஒரு நாள் நோக்ரே தண்ணீர் தேடி அலைந்தபோது காவல் நிற்கும் ஒரு பிரெஞ்சு படைவீரனை தற்செயலாக சந்திக்கிறாள். அவனிடம் அவள் கேட்கும் முதல் கேள்வி ‘உங்கள் நாட்டு ஜனாதிபதி யார் ? ‘ என்பதுதான்.
அவன் சொல்கிறான். அடுத்து அவள் கேட்கிறாள், ‘உங்கள் ஜனாதிபதி தேர்தலில் என்ன பேசினார் ? ‘ அவன் தனக்கு தெரியாது என்று சொல்கிறான்.
‘நீ அவருக்கு வாக்கு போட்டாயல்லவா ? அவர் என்ன சொன்னார். எனக்கு அது தெரியவேண்டும் ‘ என்று பிடிவாதமாகக் கேட்கிறாள்.
‘என்னுடைய ஜனாதிபதியின் பேச்சு உனக்கு எதற்கு ? ‘
அவள் சொன்னாள். ‘நான் என் நாட்டுக்கு ஜனாதிபதியாகப் போகிறேன். ‘
உடனே போர்வீரன் பயந்து ஒடுங்கி சல்யூட் செய்கிறான். இந்தக் காட்சி மிக ஆழமாகவும், நகைச்சுவை ததும்பவும் படமாக்கப்பட்டிருக்கிறது.
நோக்ரே அடிக்கடி தனிமையில் தன் குதிச் சப்பாத்துகளைபோட்டு ஒரு ஜனாதிபதிக்குரிய கம்பீரத்தோடு நடைபோட்டு பழகுகிறாள். கவிஞன் அவளுடைய படத்தை போஸ்டர்களாக தயாரித்து அவளைச்சுற்றி சுவர்களில் ஒட்டிவைக்கிறான். நோக்ரே தனிமையில் பெரும் பேச்சுக்களை தயார் செய்கிறாள்.
நோக்ரேயின் தமக்கையின் கணவன் இறந்துவிட்டதாக செய்தி வருகிறது. வண்டியோட்டி இந்த தகவலை மகளிடமிருந்து மறைத்துவிடுகிறார். அவருக்கு மேலும் அங்கே இருக்கப் பிடிக்கவில்லை. அகதிகள் புது நாகரிகத்தை கொண்டு வருகிறார்கள். பெண்கள் பர்தா அணிவதில்லை. ரேடியோவில் இசை கேட்கிறார்கள். எங்கும் இறை நிந்தனை பெருகிவிட்டது என்று வெறுக்கிறார். எல்லோரையும் கூட்டிக்கொண்டு பாலைவனத்தைக் கடந்து கண்டஹார் போக முடிவு செய்கிறார். பாதி வழியிலேயே குதிரை இறந்துவிட நடந்து கடக்க முடிவு செய்கிறார்கள். மாலை நேரம். தங்குவதற்கு இடம் தேடி அலைகிறார்கள். அப்போது ஒரு வழிப்போக்கன் இறந்துபோன தன் கழுதைக்கு பக்கத்தில் குந்திக்கொண்டு இருக்கிறான். வண்டியோட்டி குழந்தையை தலைப்பா துணியில் சுற்றி எடுத்துக்கொண்டு இரு மகள்களையும் பார்த்து ‘போங்கள், போய் தண்ணீர் கொண்டுவாருங்கள் ‘ என்று கட்டளையிடுகிறார். அவர்கள் மறுப்பு கூறாமல் மாலை சூரியனை நோக்கி நடக்கிறார்கள்.
வண்டியோட்டிக்கும், வழிப்போக்கருக்கும் இடையில் சம்பாஷணை நடக்கிறது. வண்டியோட்டி ஒரு கூரான கல்லை எடுத்து ஆவேசமாக மணலிலே குழி பறித்தபடி பேசுகிறான்.
‘எல்லாம் இறை நிந்தனை. எங்கும் இறை நிந்தனை. உலகம் எங்கே போகிறது. இங்கே இனி வாழமுடியாது. அல்லாவை நிம்மதியாக தொழும் இடம் ஒன்று எனக்கு வேண்டும். ‘
குழி பறித்து முடிந்ததும் தலைப்பா துணியில் சுற்றப்பட்டு இறந்துபோன குழந்தையை அப்படியே மண்போட்டு மூடி புதைத்துவிடுகிறான்.
இது ஒன்றும் தெரியாமல் நோக்ரே தன் அக்காவுடன் முடிவில்லாத பாலைவனத்தில் தண்ணீர் தேடி அலைகிறாள், தன் காதலன் சொல்லித் தந்த பாடலைப் பாடியபடி.
பின் மதியம் ஒரு நாள்
ஐந்து மணி
மிகச் சரியாக
ஐந்து மணி
எல்லா மணிக்கூடுகளிலும்
ஐந்து மணி
வெய்யிலிலே
ஐந்து மணி
நிழலிலே
ஐந்து மணி
….
….
இந்தக் காட்சியோடு படம் முடிகிறது. இசையின் கூர்மையான கதிர்கள் வனாந்திர எல்லைகளை தாண்டிச் செல்கின்றன.
பச்சைக் குழந்தையை அந்த தாயின் அனுமதிகூட இல்லாமல் புதைக்கும் ஒரு நாட்டில் நோக்ரேயின் கனவுகளும் புதைக்கப்படுகின்றன. ‘காளை மட்டுமே நிற்கிறது, வெற்றிக் களிப்பில் ‘ என்று கவிதை முடியும்போது காளையின் வெற்றியை மட்டும் அது கூறவில்லை.
திரைப்பட விழாவின் ஆரம்பம் மோசமாக இருந்தாலும் பல படங்கள் மன நிறைவைத் தந்தன. ஏழு படங்களில் ஐந்து படங்களை இளம் இயக்குனர்கள் இயக்கியிருக்கிறார்கள். அதிலும் மூன்றுபேர் இளம் பெண்கள். பெருமைப்பட வேண்டிய விஷயம். வழக்கமாக நண்பர்களுடன்தான் படங்களைப் பார்க்கச் செல்வேன். இம்முறை முழுக் கவனமும் இருக்கவேண்டும் என்பதற்காக தனிமையில் அவற்றை பார்த்தேன். அது ஒரு துக்கம்.
என்றாலும் இந்த ஏழு நாட்களும் படம் முடிந்து நான் வெளியே வந்தபோது கடந்த 60,000 வருடங்களில் பூமிக்கு மிக அண்மித்து வந்துவிட்ட சிவப்பு ஒளி வீசும் செவ்வாய் கிரகம் வானத்தின் தென் மேற்கு மூலையில் எனக்காக பெரும் பொறுமையோடு காத்துக் கொண்டிருந்தது. நான் வீடு வந்து சேரும் வரைக்கும் என்னுடனேயே வந்தது.
முற்றும்
amuttu@rogers.com
- கடிதம் ஜூன் 24, 2004
- நாகூர் ரூமியின் இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் : வெளியீட்டு விழா
- மனத்துக்கண் மாசிலனாதல் – ‘நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று ‘ நாஞ்சில் நாடன் கட்டுரை நூல் அறிமுகம்
- புலம் பெயர் சூழலில் ஒரு புதிய வரவு ஊசிஇலை
- மெய்மையின் மயக்கம்: தொடர்ச்சி 5
- நெடுஞ்சாலை புத்தரின் நுாறு முகங்கள் – நூல் அறிமுகம்
- Terminal (2004)
- கனடா திரைப்பட விழாவில் செவ்வாய் கிரகம்
- சேலை கட்டும் பெண்ணுக்கு…
- இந்துத்துவம் ஏற்றம் பெற, அகண்டபாரதம் அரண்டு எழ சங்கியே சங்கூதிப் புறப்படு
- ஆட்டோகிராஃப் ‘காதல் சிறகை காற்றினில் விரித்து ‘
- உடன்பிறப்பே
- திரைகடலில் மின்சக்தி திரட்டும் உலகின் பலவித மாதிரி நிலையங்கள் [Various Types of World ‘s Ocean Power Stations]
- கடிதம் -ஜூன் 24, 2004
- கல்கியின் பார்த்திபன் கனவு இணையத்தில்
- கடிதம் ஜூன் 24, 2004
- கலைஞன் நிரப்பும் வெளி : சுந்தர ராமசாமி புகைப்படக் கண்காட்சி :ஜூன் 25 முதல் 27 வரை
- காலம் கடந்த காதல் கவிதைகள்
- குழந்தை…
- இல்லம்…
- காகித வீடு…
- கவிக்கட்டு 12 – கொஞ்சம் ஆசை
- சொர்க்கம்
- கவிதைகள்
- ஆறுதலில்லா சுகம்
- பட்டமரம்
- மஸ்னவி கதை — 10.1 : அறிவான அரபியும் ஆசை மனைவியும்
- பெண்கள்: நான் கணிக்கின்றேன்
- பொன்னாச்சிம்மா
- தென்கிழக்கு ஆசியா: அச்சுறுத்தும் பெண்கள் குழந்தைகள் கடத்தல்
- வாரபலன் – ஏமாளித் தமிழ் எழுத்தாளா , கிளிண்டன் கொஞ்சிய கிளி , ரொபீந்திர சங்கீத் ஜார்கள், வாய்க்கால் கடக்காத ஜெயபாரதி
- நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா ?
- இரசியாவை மிரட்டும் கதிர்வீச்சு ஆபத்து-ஒரு இரசிய விஞ்ஞானியின் பேட்டி
- ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 8)
- தமிழ்நாட்டுக்குப் பொருத்தமான விகிதாச்சார தேர்தல் முறை – என் கருத்துக்கள்
- கோபம்
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம்-25
- சூத்திரம்
- அன்புடன் இதயம் – 22 – தமிழை மறப்பதோ தமிழா
- தமிழவன் கவிதைகள்-பதினொன்று
- கவிதை
- இறைவனின் காதுகள்
- அப்பாவின் காத்திருப்பு…!!!
- இப்பொழுதெல்லாம் ….
- ஏ.சிி. யில் இருக்கும் கரையான்கள்
- செல்பேசிகளைத் தெரிந்துகொள்வோம்
- நல்லகாலம், ஒரே ஒரு சமாரியன்