கனடாவில் ஜெயமோகன் நாவல்கள் பற்றிய கருத்தரங்கு!

This entry is part [part not set] of 16 in the series 20010602_Issue

ஊர்க்குருவி


ஜெயமோகனின் நாவல்கள் பற்றிய கருத்தரங்கு எதிர்பார்த்த படியே ‘அகவி ‘யின் ஏற்பாட்டில் கடந்த சனிக்கிழமையன்று (மே 19, 2001) Scarborough Village Community centerஇல் நடைபெற்றது. ஜெயமோகனின் விரிவான நாவல்களை விவாதிப்பதற்கு ஒரு நாளாவாது குறைந்தது வேண்டும். அதனை மூன்று மணித்தியாலங்களிற்குள் செய்தாலெப்படி ? அதற்கான விளைவினை அமர்வினில் அவதானிக்க முடிந்தது. முதலில் ‘பூரணி ‘ மகாலிங்கம் ஜெயமோகனின் விஷ்ணுபுரம் பற்றி மிகவும் விரிவானதொரு உரையினை நிகழ்த்தினார். நாவல்களின் மூன்று பாகங்களையும் விரிவாக விளக்கினார். ஜெயமோகனின் மொழிநடை, அறிவுத் தேடல் மிக்க அவரது ஞானம், நாவல் கூறும் பொருள் பற்றியெல்லாம் விரிவாக விளக்குமொரு உரையாக அவரது உரை அமைந்திருந்தது. பாத்திரங்களிற்கு முக்கியமற்று நாவல் படைக்கப் பட்டிருப்பதாலோ என்னவோ பலரால் நாவலைப் முழுமையாகப் படிக்க முடியவில்லையோ எனக் குறிப்பிட்டார்.

அமர்வில் பங்கு பற்றிய அன்பரொருவர் தான் தனது நண்பரொருவரிடம், நண்பர் தமிழில் B.A வாம், நாவலைக் கொடுத்த போது இரு வாரங்களாகப் படித்த பின்பே முதலாவது பாத்திரத்தைக் கண்டு பிடித்த விடயத்தை மகிழ்ச்சியுடன் கூறிய கூத்தினைக் குறிப்பிட்டார். வ.ந.கிரிதரன் நாவல் பற்றிக் குறிப்பிடும் போது தன்னால் நாவலில் ஜெயமோகனின் தேடல் மிக்க நெஞ்சினையும், புலமையையும் நாவல் முழுக்க உணர முடிந்த அதே வேளை தகழியின் ‘தோட்டியின் மகன் ‘ அல்லது அதீன் பந்த்யோபாத்யாயவின் ‘நீல கண்ட பறவை ‘, சிவராம் காரந்தின் ‘மண்ணும் மனிதரும் ‘ டால்ஸ்டாயின் ‘புத்துயிர்ப்பு ‘ போன்ற நாவல்களைப் படிக்கும் போது ஏற்பட்ட நாவலுடனான பிணைப்பு இந் நாவலில் ஏற்படவில்லை ‘ என்று குறிப்பிட்டார். கவிஞர் திருமாவளவனும் இதே பே ‘ன்ற கருத்தினைக் கூறினார். பெண் எழுத்தாளரான வசந்தி ராஜா நாவலைப் படிக்கும் போது அம்புலிமாமாக் கதைகளைப் போல் நாவலில் விரியும் பல்வேறு சூழல்களிற்குள் மெய்மறக்க முடிந்தததாகவும் ஆனால் தனக்கு சுந்தர ராமாசுவாமியின் ‘ஜே.ஜே.சில குறிப்புகள் ‘ போன்ற நாவல்களையே பிடிக்குமெனத் தெரிவித்தார்.

‘காலம் ‘ செல்வம் இது போன்ற குற்றச்சாட்டுகள் பொதுவாக இத்தகைய படைப்புகளிற்கு எழுவது வழக்கம்தான். சு.ரா.வின் ஜே.ஜே.குறிப்புகளிற்கும் நடந்தது தானென்றார். இதன் பின்னர் எழுத்தாளர் ரதன் ஜெயமோகனின் ‘கன்னியாகுமரி ‘ நாவலைப் பற்றிய தனது உரையினை ஆற்றினார். இது பூரணி மகாலிங்கத்தின் உரையினைப் போல் மிகவும் விரிவாக அல்லாது சுருக்கமாக அமைந்திருந்தது. ரதன் தனதுரையில் இந் நாவலில் விஷ்ணுபுரத்திற்கு மாறாகப் பாத்திரங்கள் அதிகமாக உள்ளதைக் குறிப்பிட்டு பாத்திரங்கள் மூலம் நாவல் ஒழுக்க நெறிகளைக் கேள்விக்குறியாக்குவதாகக் குறிப்பிட்டார். இது பற்றிக் கருத்துத் தெரிவித்த நாடகக் கலைஞர் ஞானம் லம்பேட் பாத்திரங்கள் மூலம் கதையினை நகர்த்திச் செல்வதும் கூட ஒருவகை யுக்தியேயென்றார். பின்னர் சுமதி ரூபன் ‘ரப்பர் ‘ நாவலைப் பற்றிச் சுருக்கமான உரையினை நிகழ்த்தியதைத் தொடர்ந்து ‘மனிதன் ‘ சிவம் ஜெயமோகனின் ‘பின்தொடரும் நிழலின் குரல் ‘ நாவல் பற்றி தனது உரையினை நிகழ்த்தினார். இந் நாவல் சமகால நிகழ்வுகளைச் சித்திரிப்பதால் பல காரசாரமான விவாதங்களை எழுப்பியது.

சிவம் தனதுரையில் நாவலில் வரும் சம்பவங்களை எவ்வளவு இயல்பாக ஜெயமோகன் படைத்திருகின்றார் என்ப்தை விளக்கினார். ஆனால் முடிவில் ஜெயமோகன் தனது தீர்வினைத் திணிப்பதைத் தன்னால் ஏற்க முடியவில்லையென்ற ‘ர். இது பற்றிக் கருத்துக் கூறிய வ.ந.கிரிதரன் ‘டால்ஸ்டாய் ‘ தனது புத்துயிர்ப்பில் இறுதியில் தனது மதம் பற்றிய கருத்தினைத் தீர்வாகத் தருகின்றார். ‘ததாவ்ஸ்கி ‘யும் இது போலவே தனது ‘குற்றமும் தண்டனையும் ‘ நாவலின் முடிவில் மதத்தையே தீர்வாகத் தருகின்றார். அதற்காக அப்படைப்புகளின் சிறப்பினை ஒதுக்க முடியாதென்றார்.அதே சமயம் தான் ஜெயமோகனின் மேற்படி நாவலை இன்னும் படிக்கவில்லையென்றும் ஆனால் முடிவு ஒன்றை மட்டும் வைத்து நாவலை மதிப்பிடுவது சரியல்லவென்றார். ‘காந்தியம் ‘ சண்முகலிங்கம் தனது கருத்தில் நாவலின் பெரும்பாலான சம்பவங்கள் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் படைக்கப் பட்டிருக்கின்ற விடயம் தனக்குத் தெரியாதென்றார். ஏனென்றால் அவை மிகைப்படுத்தப் பட்டுப் படைக்கப் பட்டிருக்கின்றனவென்றார். தான் மீண்டுமொருமுறை வாசிக்கவேண்டுமென்றார்.

விமரிசனத்தின் கூர்மையினைத் தாங்க மாட்டாத சுமதி ரூபன் ‘இவ்வளவு நிறைய எழுதியிருக்கும் ஜெயமோகனின் ‘ படைப்புகளை இங்கிருந்து கொண்டு ஒரு சில சிறுகதைகளை மட்டுமே எழுதிக் கொண்டுள்ள சிலர் இவ்விதம் காரமாக விமர்சிப்பதாவென்று முட்டாளதனமாக ஆவேசப்பட்டார். அவலை நினைத்துக் கொண்டு உரலை இடிப்பதென்பது இதனைத்தான். விமரிசனமென்றால் இப்படித்தானிருக்கும்.இதனை இவ்விதம் கொச்சைப்படுத்தக் கூடாது. இவ்விதம் பலர் விமரிசனம் என்னவென்று புரியாமலே விமரிசனம் செய்ய வந்து விடுகின்றார்கள். இறுதியாக ஜெயமோகனின் ‘நாவல் ‘ பற்றி உரையாற்றவிருந்த ‘காலம் ‘ செல்வம் தவிர்க்க முடியாத் காரணங்களினால் நேரத்துடனேயே சென்று விட்டதால் அந்நிகழ்வு நடைபெறவில்லை. அமர்வில் கவிஞர் செழியன், ‘தேடல் ‘ தேவன், அ.முத்துலிங்கம் போன்றவர்களையும் காண முடிந்தது.

மொத்தத்தில் பயனுள்ள அமர்வாக , ஜெயமோகனின், ஜெயமோகனின் நாவல்களின் பல்வேறு பக்கங்களை அறியுமொரு நிகழ்வாக அமர்வு அமைந்திருந்தது.

Series Navigation