கனகமணி!

This entry is part [part not set] of 34 in the series 20070621_Issue

சுரேஷ் , சென்னை


(கனகமணி என்ற பார்வையற்ற எனது தோழி கடந்த 30 ஆம் தேதி விபத்தொன்றில் இறந்து போன செய்தி கேட்ட பதற்றத்தில் எனது உணர்வுகள்….)

கனகமணி!
கனக இதயமும்
மணியான் சொல்லும்
இணைந்த பெண்மணி
எங்கள் கனகமணி!

ஒவ்வொரு சிந்தனையிலும்
புதுப்பார்வைகளைப் பொழிந்த
தைரியத் திருமகள் உனக்கு ஏனோ
பார்வை தரவில்லையே இயற்கை!

அக்கா! தோழி!
என்று
எனைப் பார்த்த கனகமணி
என்றோ இறந்து போனதை
இன்றே நானறிய
நானுமின்று
குருடனாகிவிட்டேனே!
கடைசியில்
எங்கள்
கனகத்தை
மணியை
கனகமணியை
இந்த உலகம்
தகனம் செய்து விட்டதே!

மனமுருகும் மனமுடையோள் – நீ
எரிந்துருக
நெருப்பும் உருகியிருக்குமே!

அழுதேன்!
அழுத கண்ணீரில்
அதிசயமாய் – நீ
அவதரிக்க மாட்டாயா
என்று
இன்றெல்லாம்
அழுதேனே!
அழுது ஓயாத என்
இதயத்தின் கண்ணீர்
மௌனமென்று
இன்றுதானே
நானுணர்ந்தேன்!
மனசில் மெல்லிய
பிரதேசங்களெங்கும்
நிறைந்த
நினைவுகள் மறக்குமா
உந்தன்
சிரிக்கும் சத்தம்!
காதுகள் மறந்து விடுமோ
உந்தன்
கர்ஜிக்கும் உரிமைக்குரல்!

மணிக்கணக்காய்
என்னிடம் நீ
தொலைபேசியில்
ஒரு வருடமாய் பேசினபோது
என்னையுந்தன்
குறிப்பேடாய் மாற்றுகிறாய்
என்பதை
நான் உணரவில்லையே!

உன் வாழ்க்கை
முடிந்து விட்டது
என் வாழ்க்கையில்
நான் உன்னை
ஒரு முறை கூட
காணாமல்!
நீ
சொன்ன எதையும்
கேட்க – அதற்கு
நேரம் ஒதுக்க
உன்னோடு அழ
சிரிக்க
தைரியம் தர
சமாதானம் செய்ய
இதற்கு தான்
எந்தன் பிறப்போ!

அப்படியென்றால்
எனக்கெதற்கு
இனி வாழ்க்கை!
உன்னை இடித்த அந்த
ஓட்டுனர் தான் குருடன்
எங்கள் மெல்லிய பூவின் மீது
மலையை வீழ்த்தின மூடன்!

எப்படியெல்லாம்
துடி துடித்தாயோ
அழுதாயோ – எங்கள்
தங்கமே!

ஓர் ஆயுள் முழுதும்
பேசவேண்டியதை
தொலைபேசியிலேயே
ஒரு வருடமாய்
என்னிடமே பேசின நீ
எனை விட்டுத் தொலைந்து போனாயே!

இறுதியாக நீ பயணித்த போது
உன் தம்பி என்னை
உன் தோழன் என்னை
தேடியிருப்பாயே!

நீ
உயிரோடிருந்தபோது
உன் இல்லத்திற்கு
எத்த்னையோ முறை
நீ அழைத்தும்
உனைக்காண
வரவில்லையே
ஒரு நாளும் நான்!

நீ
உயிரிழந்த செய்தி
அறியாததால்
உந்தன்
இறுதிப் பயணத்திற்கு
மௌனமாய்
அழுது வழியனுப்பவும்
வரவில்லையே நான்!
என்னை மன்னித்து விடு
என்னை மன்னித்து விடு…

இன்று
என்னிடமே
நான்
முடிவாய்
ஒரு பொய் சொன்னேன்
“கனகமணி இன்றும் உயிரோடு தான் இருக்கிறாள்”!

(கனகமணி என்ற பார்வையற்ற எனது தோழி கடந்த 30 ஆம் தேதி விபத்தொன்றில் இறந்து போன செய்தி கேட்ட பதற்றத்தில் எனது உணர்வுகள்….)


nsureshchennai@gmail.com

Series Navigation

சுரேஷ் , சென்னை

சுரேஷ் , சென்னை