This entry is in the series 20040429_Issue

நாகூர் ரூமி


பார்த்திருக்கிறேன்
சிலர் உதைத்துத் திறந்தார்கள்
சிலர் உடைத்துத் திறந்தார்கள்
ஆனால் நானோ
அமைதியாக
தட்டிக்கொண்டே இருந்தேன்
ஒவ்வொரு கதவாக
முட்டிக்கொண்டே இருந்த்தேன்
ஒவ்வொரு சுவராக

திறக்கவில்லை
எந்தக் கதவும்
பிறக்கவில்லை எந்த வழியும்
கதவுகளுக்குப் பின்னால்
உறங்குகிறார்கள்
என்றுதான் நினைத்தேன்
பின்னால்தான் புரிந்தது
இறந்துவிட்டார்கள் என்று.

எனினும்
தட்டுவதும் முட்டுவதும்
தொடர்ந்துகொண்டேதானிருக்கும்
முக்கியமல்ல பின்புறம்
உள்ளார்களா இல்லையா என்பது.

கதவுகளின் அழகு
மூடியிருப்பதும் தட்டப்படுவதும்தான்
சுவர்களின் அழகு
மறைத்துக்கொண்டிருப்பதும் முட்டப்படுவதும்தான்
காயங்கள் பெரிதல்ல
தட்டுவதே தர்மம்
முட்டுவதே முயற்சி

என்றுதான் எண்ணியிருந்தேன்
கதவுகளும் சுவர்களும் இல்லாத
விசாலமான இந்த
வீட்டுக்கு வரும்வரை.

வந்தபிறகுதான் தெரிந்தது
கதவுகளோ சுவர்களோ
எப்போதுமே இருந்ததில்லை என.

எனினும் உண்மைதான்
தட்டியதும் முட்டியதும்
கூடவே காயங்களும்.

— ஏழாவதுசுவை கவிதைகள் தொடரும்…

Series Navigation