கண்ணீர்த்துளிகளும் கவிதைகளும்

This entry is part [part not set] of 55 in the series 20031211_Issue

விக்ரமாதித்யன் நம்பி


ஒரு பட்டாசு வெடிப்பது
போலில்லை மைனா வளர்ப்பது
ஒரு சினிமாவுக்குப் போவது
மாதிரி அல்ல முயல் வளர்ப்பது
நாய்வளர்ப்பது ஒரு சர்க்கஸ்
பார்ப்பதொப்ப கிடையாது நிச்சயம்
பசுவளர்ப்பதென்ன ஒரு டிராமா
காண்பது அன்னவா என்ன

இதிகாச நாயகர்கள் யாரும்
எதையும் வளர்த்ததாகத் தெரியவில்லை

மாதவி
கிளி வளர்த்திருப்பாளாய் இருக்கும்

கண்ணகி
என்ன வளர்த்திருக்கக் கூடும்

பாடிக்கொண்டே போன
ஒளவை கவிதைதான் வளர்த்தியிருக்கிறாள்

பாண்டியர்கள்
தமிழும் சைவமும் வளர்த்தார்கள்

தேவாரம் பாடிய மூவர்
திருமூலர் மணிவாசகர்
எல்லோரும் வளர்த்தெடுத்தது
சைவமும் தமிழும்தாம்

சிலம்பில்
வளர்ந்த தமிழ்
சிந்தாமணியில்
வளர்ந்த தமிழ்
ஆதிசங்கத்தில்
திமிர்ந்துநின்ற தமிழ்

ஆண்டாளிடம்
பூத்துப் பொலிந்த தமிழ்

பாரதியிடம்
பொங்கி வந்த தமிழ்
கண்ணதாசனிடம்
களைகட்டி நின்ற தமிழ்

மலைகள் வளர்கின்றன
மான்கள் வளர்கின்றன
முலைகள் வளர்கின்றன
முத்தங்கள் வளர்கின்றன
பிள்ளைகள் வளர்கிறார்கள்
பெண்கள் வளர்கிறார்கள்
கவிஞர்கள் வளர்கிறார்கள்
கலைஞர்கள் வளர்த்தெடுக்கிறார்கள்

கண்ணீர்த்துளிகளுக்கும் கவிதைகளுக்கும்
கொஞ்ச சம்பந்தமா பாப்பா

ஒரே ஒரு சாட்சி
பிரமிள்

******************************************************

Series Navigation

கண்ணீர்த்துளிகளும் கவிதைகளும்

This entry is part [part not set] of 42 in the series 20031030_Issue

விக்ரமாதித்யன் நம்பி


ஒரு பட்டாசு வெடிப்பது
போலில்லை மைனா வளர்ப்பது
ஒரு சினிமாவுக்குப் போவது
மாதிரி அல்ல முயல் வளர்ப்பது
நாய்வளர்ப்பது ஒரு சர்க்கஸ்
பார்ப்பதொப்ப கிடையாது நிச்சயம்
பசுவளர்ப்பதென்ன ஒரு டிராமா
காண்பது அன்னவா என்ன

இதிகாச நாயகர்கள் யாரும்
எதையும் வளர்த்ததாகத் தெரியவில்லை

மாதவி
கிளி வளர்த்திருப்பாளாய் இருக்கும்

கண்ணகி
என்ன வளர்த்திருக்கக் கூடும்

பாடிக்கொண்டே போன
ஒளவை கவிதைதான் வளர்த்தியிருக்கிறாள்

பாண்டியர்கள்
தமிழும் சைவமும் வளர்த்தார்கள்

தேவாரம் பாடிய மூவர்
திருமூலர் மணிவாசகர்
எல்லோரும் வளர்த்தெடுத்தது
சைவமும் தமிழும்தாம்

சிலம்பில்
வளர்ந்த தமிழ்
சிந்தாமணியில்
வளர்ந்த தமிழ்
ஆதிசங்கத்தில்
திமிர்ந்துநின்ற தமிழ்

ஆண்டாளிடம்
பூத்துப் பொலிந்த தமிழ்

பாரதியிடம்
பொங்கி வந்த தமிழ்
கண்ணதாசனிடம்
களைகட்டி நின்ற தமிழ்

மலைகள் வளர்கின்றன
மான்கள் வளர்கின்றன
முலைகள் வளர்கின்றன
முத்தங்கள் வளர்கின்றன
பிள்ளைகள் வளர்கிறார்கள்
பெண்கள் வளர்கிறார்கள்
கவிஞர்கள் வளர்கிறார்கள்
கலைஞர்கள் வளர்த்தெடுக்கிறார்கள்

கண்ணீர்த்துளிகளுக்கும் கவிதைகளுக்கும்
கொஞ்ச சம்பந்தமா பாப்பா

ஒரே ஒரு சாட்சி
பிரமிள்

******************************************************
கொஞ்சம் தள்ளிப்போனால்

விக்ரமாதித்யன் நம்பி

சிட்டுக்குருவிகள் புணர்வதை
பார்த்திருக்கக்கூடும் நீங்கள்
அணில்கள் போகம் செய்வதும்
கண்ணில் பட்டிருக்கலாம் எப்பொழுதாவது
பூனைகள் கூடுவது
கொஞ்சம் பகிரங்கமானது
ஜீவராசிகள் சேர்வது
சாலவும் இயல்பானது
பின்னே எப்படி
நவீனகவிதையில் இல்லாமல் போயிற்று

கடைதிறப்பு படிக்காது
கவிதை எழுதுகிறார்கள்
ஆண்டாள் பாசுரம் அறியாது
பாலியல் பேசுகிறார்கள்
சங்கம் தெரியாது
இலக்கியம் செய்கிறார்கள்

என்னேடா என்னேடா
இலண்டனும் பாரிஸ்உமா
தமிழ்க்கலைஞன் லட்சியம்
மானஸரோவர் இருக்கிறது
தேக்கடி இருக்கிறது
மைசூர் காடுகள்
முக்கடல் சங்கமம்
இன்னும் நிறையவே

இவைதெரியாது
என்ன எழுதுவாய்

கண்டதும் கொஞ்சம்
கேட்டதும் குறைவு
கற்றதும் சிறிது
கவனிப்பதும் அபூர்வம்
பின்னே எப்படி
எழுத வரும்

ஸ்தலபுராணக்கதைகள் அளவுக்குக்கூட
சொல்லமுடியாது நவீன இலக்கியத்தை
சொலவடைகளின் கவித்துவத்துக்கு
கிட்டேவராது இன்றைய கவிதை
தென்னாட்டுப் பழங்கதைகளே தேவலை
நவீன சிறுகதைகளைக் காட்டிலும்
தினத்தந்தியில் காணும் தமிழ்வாழ்வுகூட
சமகால எழுத்தில் இல்லாமல் போனதேன்

கொஞ்சமாய் விளைந்து
கொட்டாரம் நிறையாது
கணிசமாய் இருப்பதுதான்
கருவூலம்
சித்தத்தைக் கடந்தவன்தான்
சித்தன்
எழுத்தை ஆள்பவனே
எழுத்தாளன்

சும்மாசும்மா பிலுக்காமல் சீரியதாய்
செய்யப் பாருங்கள் நண்பர்களே

****************************************************

தேர் நிலைக்கு வரும் நாள்

விக்ரமாதித்யன் நம்பி

தெருவில் நிற்கிறது தேர்
நிலையத்திலிருந்து வெளிக்கிளப்பி
வடம்பிடித்து இழுத்து வந்து
இரதவீதிகளில் வலம் வரவைத்து
பக்தர்களுக்குக் காட்சி தரச்செய்து
எல்லாம் முடிந்து இன்னமும்
நிலைக்குக் கொண்டுவந்து சேர்க்காது
நிற்கிறது தேர் நடுத்தெருவில்

புறப்பட்டு வந்த அன்று இருந்த
உற்சாகம் இன்று இல்லை ஜனங்களுக்கு
என்று நிலைக்கு வந்து சேருமென்று
யாராலும் சொல்ல முடியவில்லை
தேர் தெருவில் நிற்கிறது

தேரை இழுத்துத் தெருவில்
விட்டுவிட்டுப் போய்விட்டன குடிபடைகள்

நிலையத்திலேயே நின்றிருந்தாலும் நிம்மதியாக
நின்றுகொண்டிருக்கும் தன்பாட்டுக்கு

அயர்வு
வந்துவிட்டது ஐயருக்கே
குழம்பித் தவிக்கிறார்
நிர்வாக அதிகாரி
குதித்து ஓடிப்போய்க் கோயிலடைந்து விடலாமாவென
யோசித்துக் கொண்டிருக்கிறார்கள் சுவாமியும் அம்பாளும்

திருவிழா தொடங்கிய நாளில்
திரண்டுவந்திருந்த கூட்டம் இப்பொழுதில்லை

வடம்பிடித்துக்கொடுத்த சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சியாளர்
காவல்துறை உயர் அதிகாரி எவரும் கண்டுகொள்ளவேயில்லை

தேருக்கு ஒரு கேடுமில்லை
தெய்வக்குற்றம் எதுவும் இல்லை

வடம்பிடிக்கத்தான் ஆளில்லை
வந்துசேரத்தான் வழியில்லை

தெருவிலேயே நிற்கிறது
தேர்

நிலைக்கு வந்துசேரும்
நாள் என்று

பெருமூச்சு விட்டபடி நிற்கிறது
தேர் தெருவிலேயே

சொல்லவும் முடியவில்லை
மெல்லவும் முடியவில்லை

நிற்கிறது தேர்
நடுத்தெருவிலேயே இன்னமும்.

*******************************************************************
தேர்க்கவிதை

விக்ரமாதித்யன் நம்பி

வீதி
விசாலமாய் இருந்தால்தான்
வரும் தேர்
எட்டிக்கூடப் பாராது
முட்டுச் சந்தை

தேர் அருமை
தெரிந்த ஜனங்கள்
அருகி
வருகிறார்கள் தோழா

தேரோட்டிமகன் என்றால்
கேவலம்
பார்த்தசாரதி எனில்
பெருமை

சூரியபுத்திரனுக்கு நேர்ந்தது
சோகம்
பரமாத்மாவாகிவிட்டான்
மாயக்கிருஷ்ணன்

தெருவில் நிற்கலாகாது
தேர் ஒரு நாளேனும்
நிலையத்துக்குக் கொண்டுவந்து
நிறுத்துங்கள் ஊர்மக்களே

‘தேருக்கு முன்னால மாலகட்டி
தெருத்தெருவாக அலையவிட்டா
இந்த சின்னஞ்சிறு மனசுகள்
என்னவாகும் ‘
திராவிடக்கவிஞனின்
திரை இசைப்பாடல் வரிகள்

தேர்பற்றி
என்னவாவது சொல்லியிருக்கிறாரா பிரமிள்
ஏது
சொல்லப் போகிறார் பசுவய்யா

யாது
சொல்வார்கள் பிரேம் – ரமேஷ்
ஓஹோ நவீனகவிதை வீதிக்குள்
வராதா தேர்
நல்லவேளை
ஞானக்கூத்தன் கொண்டுவந்திருக்கிறார்
விக்ரமாதித்யன்
வருவான் தேரில்

தேராலே
யாருக்கென்ன லாபம்
தெரியாமல்கூட கேட்டதில்லை
திராவிடர்கள்
தீராதது
தேர்க்கவிதை
புரிந்துகொள்வார்கள்
புத்தியுள்ளவர்கள்

*****************************************************************

பாம்புபற்றிய என் ஆறாவது கவிதை

விக்ரமாதித்யன் நம்பி

பாம்பின் கால்
பாம்பறியும் சரி
பாம்பறியுமா
போகும் பக்கம்

பாலியலின் குறியீடு
பாம்புகள்
எப்பொழுது
வருகிறது தமிழில்

விடம் தீர்ந்த பதிகம்
பாடியிருக்கிறார் நாவுக்கரசர்
விஷம் தீண்டிய பதிகம்
பாடவேண்டும் விக்ரமாதித்யன்

வாசுகியா
ஆதிசேஷனா
வாசுகியை கொண்டுதான்
திருப்பாற்கடல் கடைந்தது
ஆதிசேஷன் அவதாரம்தான்
ஸ்ரீ ராமானுஜர்

சிவலிங்கத்துக்கு
குடைபிடிக்கிறது ஐந்தலைநாகம்
அரவணையில்
பள்ளிகொண்டிருக்கிறான் திருமால்
பாம்புகளைக் காட்டியே
பயமுறுத்துகிறார்கள்

பாம்புகள்
பேரழகி
பாம்புகளைக் கட்டியாள்பவன்
பேரழகன்

எல்லாப் பெண்களுமே
பாம்புகள்தாம்
எந்த நேரத்தில்
எங்கே கொத்துமோ

ஒரு நல்ல பாம்பு
யாரையும் தீண்டாது
ஒரு நல்லமனுஷன்
பாம்புகடித்துச் சாவதில்லை

கொடுத்துக் கெடுப்பதைவிட
கெடுத்துக் கொடுப்பதே தாழ்விலை
பாம்புகள் கைதான் ஓங்கும்
கலிகாலத்தில்

*******************************************************************

கங்கைகொண்டசோழபுரம்

விக்ரமாதித்யன் நம்பி

இதோ இங்கே இருக்கிற
கங்கைகொண்ட சோழபுரத்துக்கு
இன்னும் போகமுடியவில்லை
திருநாளைப் போவார் கதைபோல
தொடர்கிறது இவன் போவது
இராஜராஜன் கட்டியபிறகு
இராஜேந்திரன் கட்டவேண்டிய அவசியமென்ன
ஐயா சொல்லிக்கொடுத்த வழியா
ஐயாவைத் தாண்டி நிற்க வேண்டுமென்ற வெறியா
அப்படியெல்லாம் இருக்காதுதான்
அதுபோல இருந்தால்
அப்பாவை மாதிரியே கட்டியிருக்குமா பிள்ளை
அப்பன் மகன் உறவு
ஆதியிலிருந்தே சிக்கல்தான்
அப்பாக்கள் பிள்ளைகள்மீது
எந்நாளும் ஒரு கண்ணாகவே இருக்கிறார்கள்
பிள்ளைகளோ அப்பாவின் ஆவியை
ஆவாஹனம் செய்துவைத்துக் கொள்கிறார்கள்
பிருகதீஸ்வரரை வந்து வழிபட நாளும்
ஒரு நானூறு பேராவது தேறுவார்கள்
நாதியற்றுப் போய்க் கிடக்கிறதாம்
இராஜேந்திரன் எழுப்பிய கோயில்
படையெடுத்து வெற்றிகொண்ட பின்னே வந்த
பவிகில் நிர்மாணித்த கோயிலது
ஒரு காலத்திய வெற்றிகள்
இன்னொரு காலத்தில் இப்படியாகுமோ

*********************************************************************

புதசுக்கிரயோகம்

ஹர்ஷவர்த்தனன்

நேரத்துக்குச் சாப்பிடுகிறவர்கள்
காலத்தில் தூங்குகிறார்கள்
தோன்றினால் கூடிக்கொள்கிறார்கள்
நல்ல கால்சராய் சட்டைதான் போடுகிறார்கள்
ஒழுங்காக அலுவலகம் சென்றுவருகிறார்கள்
எப்படியோ வீடு கட்டுகிறார்கள்
மகனைப் பொறியியல் கல்லூரிக்கும்
மகளை மருத்துவக்கல்லூரிக்கும் அனுப்பிவிடுகிறார்கள்
ஓய்வுநாளில் உயர்தர ஓட்டல்களில் குடிக்கிறார்கள்
சேமிப்பு நிறைய இருந்தாக்கால்
சிநேகிதர்களுக்கும் கொஞ்சம் செலவழிக்கிறார்கள்
நடுநடுவே எழுதவும் செய்கிறார்கள்
உண்மையான கவிஞனைக் கண்டதும்
பதைபதைத்துப் போகிறார்கள் குற்றவுணர்வோடே
தருமனையும் துரியோதனனையும் சகுனியையும்
பீஷ்மரையும் விதுரையும் துரோணரையும்
மாயக்கண்ணனே முழுசாய் அறிவான்

**********************************************************************
விக்ரமாதித்யன் கவிதைகள்

இருந்து
செய்யவேண்டிய வேலை
ஓடிக்
கொண்டிருக்க நேர்கிறது
ஓடியாடிப்
பண்ணக்கூடிய காரியம்
இருந்த
இடத்திலேயே இருக்கும்படியாகிவிடுகிறது

கஷ்டப்படுகிறவர்களைப் பார்க்கையில்
கஷ்டமாகவே இருக்கிறது
சந்தோஷமாய் இருக்கிறவர்களைக் கண்டால்
சந்தோஷம்தான்

மழை கொட்டக்கொட்ட
பச்சை போர்த்தும்
மரம் செடிகொடிகள்
நதி நிறைய நிறைய
மேனி காணும்
நஞ்சை பூமி
காசு பணம் சேரச் சேர
கொண்டாட்டம்தான்
ஜனங்களுக்கு

********************************************************

விக்ரமாதித்யன் கவிதை

பாதங்களுக்குக் கீழ்
பூமி
ஏறிட்டுப் பார்த்தால்
வானம்
காற்று
வீசுகிறது
உலைத்தீ
எரிகிறது
கொண்டல்கள்
கொட்டுகின்றன
பூமி
தந்துகொண்டேயிருக்கிறது
சூரியனோ சந்திரனோ
வானத்தில்
நட்சத்திரங்கள் சுடர்விட்டதும்
சாப்பிட்டுவிட்டுத் தூங்கலாமே பாப்பா
நமக்கென்ன
பிரச்னை வேறே

***********************************************************************

விக்ரமாதித்யன் கவிதை

மலை வளரும் என்கிறார்கள்
நம்ப முடியவில்லை
கடல்கொண்டது என்கிறார்கள்
நம்ப முடியவில்லை
வெள்ளம் வந்து அழித்தது என்பார்கள்
நம்பத்தான் வேண்டியிருக்கிறது
தீ அழித்தது எத்தனையோ என்பார்கள்
சூறாவளி இழப்பு என்பார்கள்
தெரியும்

பூமி தருகிறது
தெரியும்

வானம் பொழிகிறது
தெரியும்

தெரியவேயில்லை
தெரியவேயில்லை
தெரியவேயில்லை

எளிய தமிழ்
எப்படி கைகூடிவருகிறது

கவிதை
எப்படி தோன்றுகிறது

பாரதி
எப்படி வாழ்ந்தான்

ஒவ்வொரு காலத்திலும்
ஒரு பாரதி

*********************************************************

விக்ரமாதித்யன் நம்பி கவிதை

பைய பைய
என்கிறாள் பெற்றவள்
தத்தித்தத்தி நடந்துவரும்
குழந்தையைப் பார்த்து

பைய பைய
என்கிறான் கணவன்
சூலிப் பெண்டாட்டி
மாடியிலிருந்து இறங்குகையில்

பைய பைய
என்கிறான் யாரோ ஒருவன்
தடுமாறி நடந்துபோகும்
குடிகாரனைப் பார்த்து

பைய பைய
என்கிறார்கள்
சுமை
இறக்கிவைக்கும்போது

பைய பைய
என்கிறார்கள்
சப்பரத்தை
தூக்குகையில்

தடுக்கி
விழும்போது
பைய பைய என்கிறார்கள்

இறங்குகையில்
தடுமாறினால்
பைய பைய என்கிறார்கள்

காதலில்
பைய பைய இல்லை

காமத்தில்
பைய பைய இல்லவேயில்லை

பைய பைய என்பது
பற்று
பைய பைய என்றால்
பரிவு

வாழ்க்கை பூராவும்
எவ்வளவோ பைய பைய.

************************************************************

விக்ரமாதித்யன் நம்பி கவிதை

காற்றாடி
எப்படி சுற்றுகிறது
எனக்குத் தெரியாது

மின்சாரம்
எப்படி வெளிச்சம் தருகிறது
எனக்குத் தெரியாது

தண்ணீரிலிருந்து
எப்படி மின்சாரம் எடுக்கிறார்கள்
எனக்குத் தெரியாது

பேருந்து
எப்படி ஓடுகிறது
எனக்குத் தெரியாது

விமானம்
எப்படி பறக்கிறது
எனக்குத் தெரியாது

பாலியஸ்டர்
எப்படி நெய்கிறார்கள்
எனக்குத் தெரியாது

வீரிய வித்துகள்
எப்படி கண்டுபிடித்தார்கள்
எனக்குத் தெரியாது

ஃப்ளாட்கள்
எப்படி தோன்றியிருக்கும்
எனக்குத் தெரியாது

போட்டோ
எப்படி எடுக்கிறார்கள்
எனக்குத் தெரியாது

ஓவர் ப்ரிட்ஜ்
எவன் மூளையில் தோன்றியிருக்கும்
எனக்குத் தெரியாது

என்னதான் தெரியும்

வார்த்தைகளைக் கோத்து
வக்கனையாய் வடிவாய்
கவிதை எழுதமட்டுமே தெரியும்

*****************************************************************************

அறிந்தது
அறியாதது

விக்ரமாதித்யன் நம்பி

எங்கள் ஊரில்
இருக்கையில்தான்
இயல்பாய் இருக்க முடிகிறது

அதுவும் எங்கள் தெருவில்தான்
இன்னும்
தன்மையாய் இருக்கிறேன்

அதிலும் எங்கள் வீட்டில்
இருக்கும் பொழுதுதான்
சகஜமாய் இருப்பதே

இலக்கிய கூட்டங்களில்
காண்கிற விக்ரமாதித்யன் வேறு
இங்கே இருக்கும்
இவன் தனி

உளரில் வீட்டில்
பார்க்க வரும் நண்பர்களுக்குத் தெரியும்

குறிப்பாக
வித்யாஷங்கர்
திருமேனி
மகரந்தன்
ஆதவன்

லக்ஷ்மி மணிவண்ணன்
சங்கர ராம சுப்ரமண்யன்
பாலை நிலவன்
அனைவருமே அறிவார்கள்

வீட்டுக்கே வராதவர்களுக்கு
விளங்கிக் கொள்ள முடியாது

போதையிலேயே பார்த்த பிம்பம்
படிந்துவிட்டதற்கு என்ன செய்ய
சாதாரணமாய் இருக்கும் கவியை
சாதாரணமாய் காண ஒரு முறை
வந்து செல்லுங்களேன் நண்பர்களே

சிங்கத்தை அதன் குகையிலேயே சென்று
சந்திக்க வேண்டும் தோழர்களே

இவன்
அப்படி சந்தித்திருக்கிறான்

ஜெயகாந்தன்
கண்ணதாசன்
லா.ச. ராமாமிர்தம்
கி. ராஜநாராயணன்
கி.சு. செல்லப்பா
க. நா. சு.
சுந்தர ராமசாமி
அசோகமித்திரன்
நகுலன்
இப்படி
நிறைய சிங்கங்களை.

*********************************************************************

திருப்புன்கூர் நந்தி

விக்ரமாதித்யன் நம்பி

எந்தப் பக்கமாய் விலகியிருக்கும்
இடதுபுறமா வலதுபுறமா எப்படி
இருந்த இடத்திலிருந்து எழுந்து
இன்னோரிட்டத்தில் அமர்வது மெனக்கிடவில்லையோ
நந்தனிடமிருந்து சிவனை மறைத்துக்கொண்டிருந்த
குற்றவுணர்வு தோன்றியிருக்கக் கூடுமோ அப்பொழுது

ஆதிதிராவிடர்களைக் கோயிலுக்குள் விடாததுகுறித்து
நந்தியெம்பிரான் என்ன கருதியிருப்பார் அன்று

ஆதிநாயகன்தான் அடிமனசில்
ஏது நினைத்திருப்பான்

தீண்டாமை கொடிதென்றே எண்ணியிருப்பார்
திருநாளைப் போவார்தான் தீர்மானமாய்

கட்டளைக்குக் கீழ்ப்படிந்து சட்டென்று எழும்பி நகர்ந்து வலதுபுறமாய்
உட்கார்ந்திருக்கிறது பெரியஉருவம் பிரயாசைப்பட்ட வருத்தத்தில் நாக்குத்துருத்தி

திருப்புன்கூரில் மட்டுமல்ல
தேசமெங்கும் நந்தன் சிவன் நந்தி

***************************************************************************
***************************************************************************

Series Navigation