கண்ணீரின் குரல்கள்

This entry is part [part not set] of 33 in the series 20090212_Issue

சித்தாந்தன்


கருணையைக் கோரி நிற்கின்றன

எல்லா வாயில்களும் மூடப்பட்டுவிட்டன

இறுதிப் போர் என அச்சிடப்பட்ட

கடதாசிகளில் சதைக்குவியலாய் மனித உடல்கள்

தம் குழந்தைகளின் பிஞ்சு விரல்களை

கண்களில் ஒற்றி அழும் தாய்மாரின் குரல்கள்

எரிகிறது நெடுநிலம்

பதுங்கு குழிகளுக்குள்

பகல்களும் இரவுகளும் முடங்கிக்கிடக்கின்றன

கைவிடப்பட்ட மனிதர்களின் விதி

காலத்தின் கண்களில் ஊனமாய் வழிகிறது

ஓங்கியெழும் அவலத்தின் குரல்கள்

அடவிகளில் மேவியெழுகையில்

விமானங்கள் வீசிச்செல்கின்றன குண்டுகளை

இறுதிப்போர்

சனங்களைத் தின்று புன்னகைக்கிறது

தெருக்களில் சிதறிக்கிடக்கும் சடலங்களை

புதைக்க மனிதர்கள் தெருக்களுக்கு வரவில்லை

இறுதிப்போர்

யார் யாருக்காக நிகழ்த்தும் போர்

வற்றாத பெருங்கோடையின் தகிக்கும் முகத்தில்

கேலிச் சித்திரமாய் ஒட்டிக்கிடக்கிறது

இறுதிப்போர்ப் பிரகடனம்

தளிர்களும் புலுண்டி மணக்க

போரின் மிதப்புடன்

மாமிசங்களை மோகிப்பவனின் கண்களில்

குரூரம் தெறிக்கிறது

வார்த்தைகளால் அழுது தீர்க்க முடியாப்

பெருந்துயர் படர்ந்திருக்கிறது பெருநிலமெங்கும்

டாங்கிகள் உழுது செல்லும்

பசுந்தரைகளில்

உருக்குலைந்திருக்கிறது வாழ்வு

யாரின் கண்ணீரை யார் துடைப்பது

எவரின் சடலத்தை எவர் புதைப்பது

எவருடைய கருணையும் கண்டுகொள்ளப்படவில்லை

வெற்றிகளின் மாயையில்

மூடுண்டுகிடக்கிறது மனித அவலம்

பசித்த வயிறுகள்

பாலுக்காக கதறும் குழந்தைகள்

உறவுகளை காவுகொடுத்து விட்டு

அழுது புலம்பும் மனிதர்கள்

யாருமே கண்டுகொள்ளப்படவில்லை

தொடர்கிறது போர்

சனங்களைக் கொன்று

நிலங்களை மீட்கும் போர்

கருணையைக் கோரி நிற்கின்றன
கண்ணீரின் குரல்கள்


Series Navigation

சித்தாந்தன்

சித்தாந்தன்