கண்ணகி சிலை, திருவள்ளுவர் சிலை, சங்கராசாரியார் சிலை , தமிழன்னை சிலை

This entry is part [part not set] of 21 in the series 20011229_Issue

மஞ்சுளா நவநீதன்


ஏதோ ஒரு விதத்தில் ஒரு கலாசாரம் தன் கடந்த காலத்துடன் ஓர் உறவை ஸ்தாபித்துக் கொள்ளவே விரும்புகிறது. பழமை என்ற ஓர் அம்சம் தன் இருப்புக்குக் கூடுதல் நியாயம் கற்பிப்பதாகவும், தான் இருக்கும் இடத்தில் தன்னுடைய உரிமையை நிலை நாட்டுவதாகவும் அமைகிறது. எல்லாக் கலாசாரங்களும் தன்னுடைய பழமையை முற்றுமாகத் துறந்துவிட முடிவதில்லை. புதிது என்று தன்னை இனங்காணுகிற கலாசாரமும் கூட, பழங்காலத்தில் தன்னுடைய வேர்கள் இருந்தன என்று நிறுவவே முயல்கிறது. ‘எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா ‘ என்கிறார் பாரதியார். பழமையைப் போற்றுவது என்பது ஒரு கலாசாரத்தின் வேர்களைப் பற்றிக்கொண்டு , தொடர்ச்சியை நிறுவுகிற கண்ணி. பாரம்பரியத்தினை இனங்கண்டு தன்னை அடையாளம் கண்டுகொள்ளவும், தொடர்ந்து தன் அடையாளத்தை எதிர்காலத்திற்குள் கொண்டு செல்லவுமான ஒரு நெறியாக சமூகங்கள் கடந்தகால வரலாற்றையும், அதனைத் தற்காலத்தில் கெளரவப் படுத்துவதையும் செய்கின்றன.

சிலை வடிப்பது ஏதோ ஒரு வடிவில் எல்லாக் கலாசாரங்களிலும் இருந்து வருகிறது. முன் சொன்னபடி இறந்த காலத்தின் உன்னதம் என்று தாம் கருதிக்கொள்ளும் சில விஷயங்களுடன் தன்னை இனங்கண்டு கொள்ளும் வழி இது. சிலை வழிபாடு எதிர்ப்பு என்பதைத் தம் மதக் கோட்பாட்டின் ஒரு முக்கிய அங்கமாய்க் கொண்ட மதங்களும் கூட , சிலைக்குப் பதிலியாக ஒரு புத்தகம், அல்லது ஒரு குறியீடு, அல்லது ஒரு திசை, அல்லது ஒரு பெயர் என்று ஏதோ ஒரு விதத்தில் சிலைத் தன்மையைக் கொண்ட ஒரு கருதுகோளில் தம்மை இனங்காணுகின்றனர். எனவே முழுக்க முழுக்க சிலை எதிர்ப்புக் கலாசாரம் என்று ஒன்று இல்லை.

இதனால் தான் கண்ணகி சிலைக்கு எதிர்ப்பு, வள்ளுவர் சிலைக்கு எதிர்ப்பு எழுப்புகிற சிலர், உள்ளார்ந்த ஒரு அங்கீகாரத்தை விவேகானந்தர் சிலைக்கு அளிக்கத் தயாராய் ஒருக்கின்றனர். அண்ணாவின் சிலைக்கு – இவர் என்ன செய்து விட்டார் என்ற கேள்வியுடன் – கண்டனம் தெரிவிக்கும் ஒரு சிலர், காஞ்சிபுரம் சென்று சங்கராசாரியார் சிலையை வழிபடத் தயாராய் ஒருக்கிறார்கள். எனவே , நம்மிடையே எழுகிற சிலை எதிர்ப்பு என்பது, ஒரு கருத்துச் சார்ந்த , ஒரு கருத்துக்கு எதிரான எதிர்ப்பே தவிர எல்லாச் சிலைகளையும், உருவங்களையும் , குறியீடுகளையும் எதிர்ப்பதல்ல. இந்த நிலையில் கண்ணகி சிலைக்கு எதிர்ப்பு , வள்ளுவர் சிலைக்கு எதிர்ப்பு என்பதெல்லாம் – இந்த எதிர்ப்பு குறிப்பிட்ட சிலைக்கு எதிர்ப்பு என்பதாலேயே – தனிமனித விருப்பு , வெறுப்புகளைச் சார்ந்த போலித்தனம் தான் என்று சொல்லலாம்.

எனவே கண்ணகி சிலை நிறுவுவதிலோ, வள்ளுவர் சிலை நிறுவுவதிலோ, சங்கராசாரியார் சிலை நிறுவுவதிலோ எந்தத் தவறும் இல்லை. ஒரு மனிதக் குழுவின் வரலாற்றில் தீவிரமான அம்சங்களை இவை நினைவுபடுத்துகின்றன. தம்முடைய அடையாளத்தை பகிரங்கப் படுத்தவும், அந்த அடையாளத்தினை ஏற்படுத்தித் தந்த பெரியவர்களை நினைவுபடுத்தி, அந்த வழியில் செல்லுமாறு எதிர்காலச் சந்ததிகளை நெறிப்படுத்தவும் இவை உதவலாம்.

கண்ணகி , கோவலன் பிறமகளிர் நாடுவது பற்றிச் சினம் கொண்டு அவனை உதறித் தள்ளியிருக்க வேண்டும் என்பது இன்றைய பார்வையில் அன்றைய சிலப்பதிகாரத்தைக் காண்பதாகும். 20-ம் நூற்றாண்டின் இறுதியில் கூட இது இன்னும் சாத்தியப் படவில்லை. ஒருவனுக்கு ஒருத்தி என்பது தான் தமிழ்ப் பண்பாடு என்ற பொய்யைப் பரப்ப என்னதான் முயற்சி செய்தாலும், பெண்கள் மத்தியில், ஆண்களின் இந்தத் தவறுக:ள் இயல்பாகவே மன்னிக்கப் படுகின்றன. சிலப்பதிகாரக் காலத்தில் இது வழமுறையான விஷயம். எனவே சிலப்பதிகாரம் மையப் படுத்தாத ஒரு கருப்பொருளைக் கையில் எடுத்துக் கொண்டு கண்ணகி என்ற கதாபாத்திரத்தை அணுகுவது சரியல்ல. கண்ணகியின் அறச் சீற்றம், அரசனுக்கு எதிராகக் கிளர்ந்தெழுவதும், இந்தத் தவறு சுட்டிக் காட்டப் பட்டு அதன் பலன் எப்படி ஒரு சமூகத்தினையே பாதிக்கிறது என்பதான பார்வை தான் சரியானதாய் இருக்க முடியும். ‘அறம் பிழைத்தோர்ர்கு அறம் கூற்றாவது ‘ என்பது இது தானே ? ‘தேரா மன்னா ‘ என்று இரண்டு வார்த்தைகளில் உள்ள சிறப்பான நாடகத்தன்மை பேசப்பட வேண்டும். மொழிச் சிறப்பும், கதைச் சிறப்பும் , தமிழ்வாழ்க்கைப் பதிவுச் சிறப்பும் கொண்ட இந்தக் காவியம் தமிழில் மிகச் சிறப்பான கொடை. தன் காலத்தில் , காவியத்தின் எல்லா இலக்கணங்களையும் உதறிய ஒரு சோதனை முயற்சி. கற்புக்கரசி என்றெல்லாம் பார்த்து கண்ணகியைச் சிறப்புச் செய்யாவிட்டாலும் கூட, ஒரு சாதாரண பெண் தவறினைத் தட்டிக் கேட்டு எப்படி ஒரு காவியத் தலைவியாய்ப் பரிணாமம் கொள்கிறாள் என்பது இதன் சிறப்பு.

வள்ளுவர் சிலை கருணாநிதியின் – ஆள்வோரின் – அகங்காரத்தின் வெளியீடு என்பதும் உடன்பட முடியாத ஒரு விஷயம். மதுரையில் உலகத் தமிழ் மாநாடு நடந்த போது அண்ணா சொன்னதுண்டு : தமிழ் மாநாடு என்பது தம் மீது பெருமிதம் கொள்ள தமிழர்களுக்கு ஒரு வாய்ப்பு. இப்படிப் பட்ட பெருமிதங்கள் ஒரு ஜன சமூகத்திற்குத் தேவையான விஷயம். பிராமணரல்லாதாருக்குப் பெருமிதமும், தம் மதிப்புப் பற்றிய சுய உணர்வும் தந்த பெரியாரின் இயக்கம் போன்றதே, வள்ளுவர் கோட்டம், வள்ளுவர் சிலை, கண்ணகி சிலை , சங்கராசாரியார் சிலை போன்ற விஷயங்கள்.

சங்கராசாரியார் சிலையும் இத்தகையதே. சனாதன தர்மத்தை ஒப்புக் கொள்கிறோமோ இல்லையோ, அதனைத் தூக்கி நிறுத்தப் பாடுபட்டவர் என்ற முறையில் அவர் பலருக்குத் தொழுகைக்கு உரியவராய் ஆகியிருக்கிறார். அது சரியா தவறா என்ற விவாதம் வேறு. அவரின் சேவையினை அங்கீகரிப்பவர்கள் சிலை எடுப்பது எந்த விதத்திலும் தவறு என்று சொல்ல முடியாது.

தம்முடைய கடந்த காலம் பற்றிய பெருமிதம் கொள்ளவும், அந்தப் பெருமிதத்தினால் எதிர்வரும் தலைமுறைகள் தம்மை இனங்காணவும் இப்படிப்பட்ட சிலையமைப்புகள் உதவும்.

இந்தப் பணத்தை மலம் அள்ளப் பயன் படுத்தலாம், சிறு பத்திரிகைக்குத் தரலாம் என்பது, யார் யாருக்கு, எந்தக் கருத்தாக்கத்தால், எது முதன்மை பெறுகிறது என்ற உணர்வில்லாமல் எழுகிற வாதம். சிறு பத்திரிகை நடத்த வேண்டியது அரசின் வேலை அல்ல. மலம் அள்ளுவது அரசின் வேலை தான் என்றாலும், அதைச் செய்து முடித்து விட்டுத்தான் வள்ளுவர் சிலை அமைக்க வேண்டும் என்பதும் சரியல்ல. வள்ளுவர் சிலை அமைக்காவிட்டால் மலம் சரியாக அள்ளப்பட்டிருக்குமா என்ன ?

ஆனால் தமிழன்னை சிலை விவகாரம் மேற்சொன்ன இந்தச் சிலைகள் விவகாரத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. பல சமூகவியல், உளவியல் சிக்கல்களை மையப்படுத்தியது.

பொதுவாக சிலை அமைப்புகளை மூன்று விதமாய்ப் பிரிக்கலாம். ஒன்று முழுக்க முழுக்கக் கலையுணர்வு கொண்ட கலைப் படைப்புகள். மைக்கேலாஞ்சலோவின் டேவிட் சிலைக்கோ, வீனஸ் சிலைக்கோ , ஹென்றி மூரின் அம்மாவும் பிள்ளையும் சிலைக்கோ யாரும் வழிபாடுகள் செய்வதில்லை. இரண்டாவது ஆட்களுக்கு எழுப்பப் படும் சிலைகள் . இவை வழிபாட்டுக்கும் ஆளாகலாம் – அந்தந்தக் கலாசாரத்தின் பண்பாட்டுப் பின்னணியையும், வரலாறையும் பொறுத்த விஷயம் இது. ஆனால் பொதுவாக இது ‘நீத்தார் பெருமை ‘ தான். கண்ணகியும் ஒரு விதத்தில் நீத்தார் பெருமையின் கீழ்தான் காணப்படவேண்டும் – கண்ணகி உண்மையாய் வாழ்ந்தவளா இல்லையா என்று தெரிந்து கொள்ள வழி இல்லாவிடினும்.

மூன்றாவது பிரதானமாக வழிபாட்டுக்கான சிலை என்று சொல்ல வேண்டும். சிதம்பரத்தின் நடராஜர் சிலையும், மைக்கேலாஞ்சலோவின் ‘இறந்த ஏசுநாதரை மடியில் கிடத்திய மேரி ‘ சிலையும் வழிபாட்டுக்கும் மீறிக் கலைப் படைப்புகளாய்க் காணப் படுகின்றன எனினும், அவை முதன்மையாய் வழிபாட்டுச் சிலைகளே.

இந்த மூன்று பிரிவிலும் அடங்காதது தமிழன்னை சிலை எடுப்பு.

தமிழ் என்பது ஒரு மொழி. தொடர்புச் சாதனம்,. அதில் எழுதப் படுவது எல்லாம் தெய்வீகமும் இல்லை. அதன் சொற்கள் கெட்டதைப் பேசக்கூடாது என்று அபத்தமாய் யாரும் தடையுத்தரவு போடவும் இல்லை – குறைந்தபட்சம் இப்போதைக்கு. அதற்குச் சிலை எடுக்கும் போது – அம்பாள் வடிவில் அதை நிறுவும் போது அது மொழி என்ற ஒரு நிலையைத் தாண்டி தெய்வீக நிலையை அடைகிறது. இது கடந்த 100 வருடங்களாக தமிழ் நாட்டில் நடத்தப் பட்டிருக்கும் தமிழ் ஆராதனையின் உச்சகட்டம் என்று தோன்றுகிறது. தமிழ் மதம் என்று சொல்வதிலும் தவறில்லை. இஸ்லாமிற்கு மாறிய மாரியப்பன் அப்துல்லா ஆவது போலவே, நாராயணசாமி தமிழ் மதத்தில் சேர்ந்தவுடன் நெடுஞ்செழியன் ஆகிறார். இது சில பிரசினைகளை எழுப்புகிறது. தமிழ் மதம் ஒரு cult சிறுகுழு வழிபாட்டு முறையிலோ, அல்லது மதமாகவோ ஸ்தாபிக்கப் படவில்லை. இந்த ஈடுபாடு கொண்டவர்கள் பெரும்பாலோர் மதத்திற்கும் , கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவர்கள். தம்மைப் பகுத்தறிவு வாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள். இந்த முரண்பாட்டை ஏதோ ஒரு விதத்தில் இவர்கள் தம்முள் சமாதானம் செய்து கொண்டு விடுகிறார்கள்.

சமஸ்கிருதம் தேவபாஷை என்று சொல்லப்படுவதாய்ப் பார்த்து, அத்ற்கிணையானது அதனை விஞ்சியது எம்முடைய தமிழ் மொழி என்று நிறுவுவதற்காக ஏற்பட்ட விதந்தோதுதல், எல்லை மீறி வழிபாட்டுச் சின்னமாக ஆகியிருக்க வாய்ப்பு உண்டு.

இந்தச் சந்தர்ப்பத்தில் இன்னொன்று என் நினைவிற்கு வருகிறது. அமெரிக்காவில் உள்ள என் சினேகிதி தன்னுடைய ஒரு நண்பர் பற்றி என்னிடம் சொன்னாள், இவர் தன் வீட்டின் அடிவாரத்தில் ஒரு சிறு கோவில் நிறுவியிருக்கிறார். இது தமிழன்னைக்கு நிறுவப்பட்ட கோவில். இவர் மிகுந்த பக்தி உடையவர். தமிழன்னை மீது போற்றிப் பாடல்கள் புனைந்துள்ளார். இங்கு தமிழம்மைக்குப் பூசையும் புனஸ்காரமும், போற்றிப் பாடல்கள் பாடப்படுவதும் நிகழ்கின்றன. நண்பர்களை அழைத்து நைவேத்தியமும் செய்கிறார். தமிழ் தவிர்த்த வேறு மொழிகளை இவர் , நியாயமாகவே , அனுமதிப்பதில்லை. நான் stereotype செய்துவிடுவேன் என்று பயந்தோ என்னவோ , இவர் பிராமணர் என்பதையும், கலப்புத் திருமணம் செய்துகொள்ளப் பிடிவாதமாய் இருந்து , கலப்புத் திருமணத்தில் பிறந்த ஒரு பெண்ணை மணந்து கொண்டவர் என்பதையும், மிகச் சிறந்த படிப்பாளி, கவிஞர் என்பதையும் ஞாபகமாய் என் சினேகிதி என்னிடம் சொன்னாள். இதனை எப்படிப் புரிந்து கொள்வது ?

தம்முடைய உன்னதமான ஒரு பழமையின் பிரிக்கமுடியாத அங்கமாய் தமிழ் நிற்கிறது என்பதால் கண்ணகி போல், வள்ளுவர் போல் இது ஓர் உருவம் பெறுகிறதா ? தமிழ் என்ற சூட்சுமமான, பருப்பொருளாய்க் காணமுடியாத ஒன்று ஸ்தூல உருவம் பெறுவது என்னவிதமான உருமாற்றம் ? இதிலும் தமிழ் கன்னியாகவும் , தாயாகவும் உருப்பெற்று , பெண்ணின் மற்ற பரிமாணங்கள் -அக்கா, தங்கை, நண்பி , அத்தை – துடைத்தெறியப்படுவது, தமிழ் பற்றிய நோக்கா ? அல்லது பெண்கள் பற்றிய தமிழ்ப் பண்பாட்டுக் காவலர்களின் நோக்கா ?

தமிழன்னை வழிபாடு, சிலை நிறுவுதல் என்பது ஆங்கிலத்தில் fetishism என்று சொல்லப் படும் மனநிலைக் கோளாறுடன் தொடர்பு கொண்டது என்று எண்ணுகிறேன். Fetish என்ற ஆங்கில வார்த்தைக்கு அகராதி தரும் பொருளை அப்படியே இங்கு தந்திருக்கிறேன்.

1. magical object: something, especially an inanimate object, that some people revere or worship because they believe it has magical powers or is animated by a spirit

மந்திர வஸ்து. உயிரில்லாத ஒரு வஸ்து, மந்திர சக்தி அல்லது ஒரு தனித்த உயிர்ப்பு இருக்கிறது என்று நம்பப்படுவதால் தொழுகைக்கு உரியதாய் ஏற்றுக் கொள்ளப் படும் ஒரு உயிரற்ற பொருள்.

2. object of obsession: an object, idea, or activity that somebody is irrationally obsessed with or attached to make a fetish of neatness

அறிவு பூர்வமற்ற முறையில் ஒரு பொருள், அல்லது ஒரு கருத்து அல்லது ஒரு செயல்பாட்டில் ஈடுபாடு கொள்வது.

இந்த அர்த்தத்தில் இந்த ஈடுபாட்டைப் பார்க்கும் போது, தமிழன்னை வழிபாடு என்பது ஒரு fetish என்பது புலனாகும். ஒரு ஜனக்கூட்டமே இந்த ஈடுபாட்டிற்கு ஆளாவதும், இந்த வழிபாட்டை சிறந்த பண்பாட்டின் அடையாளம் என்று தூக்கி நிறுத்துவதும் ஆபத்தானது. ஏனென்றால் மொழியின் இயல்பான வளர்ச்சியினை இது குறுக்கிவிடக் கூடிய சாத்தியம் உள்ளது. தனித்தமிழ் இயக்கத்தையும் இந்தப் பார்வையில் காணலாம். இந்தியில் உள்ள ‘ஹ ‘ , ‘ஜ ‘ போன்ற வார்த்தைகளைப் புழங்குவது ஆயுளைக் குறைத்து விடும் என்று ‘ அறிவியல் ‘ ரீதியாக எழுதிய ‘அறிஞர்களும் ‘ உள்ளனர்.

ஆங்கிலேயர்கள் யாரும் ஆராய்ச்சிக் கட்டுரையின் இறுதியில் ஆங்கிலம் வாழ்க, ஆங்கிலம் வளர்க என்று முடிப்பதில்லை. தமிழ் மொழியில் இந்த நான்கு வார்த்தைகள் வெகுவாக எல்லா கட்டுரைகளிலும் — தீவிரமான ஆய்வுக் கட்டுரைகளிலும், சிறுகதைத் தொகுப்பிலும் கூட — புழங்கக் காண்கிறேன்.

ஒரு காரணம் சாத்தியம் : இந்தியாலும், சமஸ்கிருதத்தாலும் தமிழ் அழிந்து விடுகிற அபாயம் இருக்கிறது என்று உணர்ந்த தமிழ் அறிவாளிகள் இந்தியை அரக்கியாகவும், தமிழைத் தாயாகவும் உருவகிப்பதன் மூலம் வெகுஜன ஆழ்மனதில் தமிழ் பற்றிய ஒரு பிம்பத்தை உருவாக்க முயன்றிருக்கலாம். (அம்மாவுக்கு ஆபத்து !!) தேவ- அசுர யுத்தம் என்ற புராணக் கதையை தமிழ்-இந்தி யுத்தம் என்ற வடிவில், சமூக தளத்தில் மறு ஆக்கம் செய்ய இந்தச் சிலை வடிப்பு உதவியிருக்கலாம். ( நாம் நம் நிகழ்காலத்திலிருந்து தப்பி விடலாம் – ஆனால் புராணிகத்திலிருந்து தப்பிக்க முடியாது.)

தமிழ்நாட்டின் அரசும் தமிழ்த்தாய் வாழ்த்தை மேற்கொண்டுள்ளதே தவிர தமிழ் நாடு அல்லது தமிழ் மக்கள் வாழ்த்தைக் கொண்டுவிடவில்லை. (தமிழ்த்தாய் வாழ்த்தில் எத்தனை வார்த்தைகள் தனித் தமிழ் அல்ல என்று ஆய்வு செய்யலாம். வேறு எங்காவது மொழி வாழ்த்து பாடப் படுகிறதா ?)

வங்காளிகள் தம்முடைய வங்காளி மொழி மீது கொண்டுள்ள ஆர்வம் , சொல்லப் போனால், நாம் தமிழ் மீது கொண்டுள்ள ஆர்வத்தைவிடவும் பன்மடங்கு ஆழமானது என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். இவர்களிடையே ஆங்கில மோகம் இல்லை – இந்தி மீது வெறுப்பும் இல்லை. இந்தி பள்ளிக்கூடங்களில் கற்பிக்க எதிர்ப்பும் இல்லை. இது தம் மொழியின் மீதும், மொழி பேசும் மக்கள் மீதும் அவர்களுக்கு இருக்கும் அசாத்திய தன்னம்பிக்கையைக் காட்டுகிறது என்று புரிந்து கொள்ள வேண்டும். இவர்கள் வங்காளித்தாயென்று வங்காள மொழிக்குச் சிலை எடுப்பதில்லை. இந்த மொழித்தாய் வணக்கம், மொழிச்சிலையெடுப்பு போன்ற பழக்கம் வேறு எந்த நாட்டினராவது கொண்டுள்ளனரா என்பது பற்றி அறிந்தவர்கள் சொல்லக் கேட்க ஆர்வமாய் இருக்கிறேன்.

********

Series Navigation