கண்ணகியும் ஐயப்பனும்

This entry is part [part not set] of 33 in the series 20060714_Issue

என்னார்


‘சாத்தன்’, அல்லது ‘சாத்தனார்’ என்னும் பெயர் ‘சாஸ்தா’ என்னும் வடமொழிப் பெயரின் திரிபு. ‘சாஸ்தா’ என்பது புத்தருக்குரியபெயர்களுள் ஒன்று என்பது ‘அமரகோசம்’, ‘நாமலிங்கானுசாசனம்’ முதலிய வடமொழி நிகண்டுகளால் அறியப்படும். எனவே, ‘சாஸ்தா’ என்னும் சொல்லின் திரிபாகிய ‘சாத்தன்’ என்னும் பெயர் புத்தரைக் குறிக்கும் பெயராகப் பண்டைக் காலத்தில் வழங்கப்பட்டுவந்தது. இந்தப் பெயரைப் பௌத்த மதத்தினர் பெரும்பான்மையும் தத்தம் சிறுவருக்குச் சூட்டினர். பண்டைக் காலத்தில், அதாவது கடைச்சங்க காலத்தில், தமிழ் நாட்டிலிருந்த பௌத்தர்கள் ‘சாத்தன்’ என்னும் பெயரைப் பெரும்பாலும் மேற்கொண்டிருந்தனர் என்பது சங்க நூல்களினின்றும் தெரியவருகின்றது. பௌத்த நூலாகிய ‘மணிமேகலை’யை இயற்றியவர் பௌத்த மதத்தினர் என்பதும், அவரது பெயர் ‘சாத்தனார்’ என்பதும் ஈண்டுக் கருதத்தக்கது. கோவலன் என்னும் ‘சிலப்பதிகார’க் கதைத் தலைவனுடைய தந்தை ‘மாசாத்துவன்’ என்னும் பௌத்தன் என்பதும், கோவலன் கொலையுண்டபின், மாசாத்துவன் பௌத்த பிக்ஷ¨வாகித் துறவுபூண்டான் என்பதும் ஈண்டு நோக்கற்பாலன. மற்றும், ‘பெருந்தலைச் சாத்தனார்’, ‘மோசி சாத்தனார்’, ‘வடமவண்ணக்கன் பெருஞ்சாத்தனார்’, ‘ஒக்கூர்மா சாத்தனார்’, ‘கருவூர்க் கந்தப்பிள்ளை சாத்தனார்’ முதலான சங்ககாலத்துப் புலவர்களும் பௌத்தர்களாக இருந்திருக்கக்கூடும் என்று, அவர்கள் கொண்டிருந்த ‘சாத்தன்’ என்னும் பெயரைக்கொண்டு கருதலாகும்.

http://www.tamilvu.org/slet/a0713/a07135/a07135t3.jsp

ஐயனார் என்பவர் யார்? மேலே கண்ட இணை தளத்தில் மேற்கண்ட படி உள்ளது
தாங்கள் ஒன்று சொல்கிறீர்கள்.
ஆனால் இந்த அந்த ஐயனார் நஞ்சை நிலங்களின் குளக்கரைகளில் மற்ற சாமிகளுடம் தான் உள்ளார்.


தங்களது
என்னார்
www.ennar.blogspot.com

Series Navigation

கண்ணகியும் ஐயப்பனும்

This entry is part [part not set] of 30 in the series 20060707_Issue

செல்வன்


ஐயப்பன் சிலையும் கண்ணகி சிலையும் மீண்டும் தலைப்பு செய்திகளில் அடிபடுகின்றன.வழக்கம் போல் இதிலும் இருதரப்பு அரசியல் புகுந்து விளையாடுகிறது.ஐயப்பன் ஒரு தரப்புக்கு மட்டுமே சொந்தமானவராகவும்,கண்ணகி இன்னொரு தரப்புக்கு சொந்தமானவராகவும் கருதப்பட்டு சொல்லம்புகள் ஏவப்படுகின்றன.

கண்ணகியும் ஐயப்பனும் நம்மவர்கள் என்பதை முதலில் அனைவரும் உணரவேண்டும்.ஐயப்பன்/ஐயனாரப்பன் என்பவர் ஐயனார் என்ற பெயரில் அனைத்து கிராமங்களுக்கும் காவல் தெய்வமாக நிற்பவர்.ஆதி தமிழரின் குல தெய்வம் அவர்.சாஸ்தா,சாத்தான் என பல பெயர்களில் அழைக்கப்படுபவர்.சாத்தான் குளம் என்பதும் அவர் பெயரில் அமைந்த ஊர்தான்.கேரளர்கள் ஆதிதமிழர்கள் தான்.கேரளாவில் அவர் விஷேஷமாக வழிபடப்படுவதால் அவர் தமிழரின் தாத்தா இல்லை என்றாகிவிடாது.

அதேபோல் கண்ணகி சிலை விவகாரத்தில் அது ஏதோ ஒரு தரப்புக்கு மட்டுமே சொந்தமான சிலை என்பது போல் வாதங்கள் எழுகின்றன.கண்ணகி நம்மவள்.அவள் தமிழ்நாட்டின் அனைத்து மக்களுக்கும் தாய் போன்றவள்.நம் மூதாதை.அவள் திமுகவுக்கு மட்டும் சொந்தமானவள் அல்ல. நளாயினி,சீதை போன்ற எந்த புராணப்பெண்களுக்கும் சற்றும் மாற்று குறைந்தவளல்ல கண்ணகி.சொல்லப்போனால் அவர்களை விட ஒரு படி உயர்வாகத்தான் கண்ணகியை கருத வேண்டி வரும்.பாரதநாட்டின்,தமிழ் பண்பாட்டின் சின்னம் அவள்.அவளை ஒரு அரசியல் இயக்கத்துக்கு மட்டும் சொந்தமானவள் என்று கருதும் மனப்போக்கு மிகதவறானது.

அவள் சிலையை அனியாயமாக உடைத்தவுடன் முதலில் பொங்கி எழுந்திருக்க வேண்டியது இறைநம்பிக்கை உடைய ஆத்திகர்தான்.அதை ஏதோ திமுக,அதிமுக விவகாரம் என ஒதுக்கி விட்டது மகா,மகா தவறு.வலது,இடது,ஆத்திகர்,நாத்திகர் என தமிழ்நாட்டின் மக்கள் அனைவருக்கும் தாய் அவள்.

சரி.இப்போது ஐயப்பன் சிலை விவகாரத்துக்கு போகலாம்.

ஐயனாரப்பன் எனும் ஐயப்பன் ஆதிதமிழரின் தெய்வம்,குல மூதாதை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஐயப்பனின் வரலாறு பற்றி முத்தமிழ் கூகிள் குழுமத்தின்(http://groups.google.com/group/muththamiz ) மூத்த உறுப்பினர் முனைவர் இரவா கபிலன் பின்வரும் வரலாற்றை தெரிவிக்கிறார்.

“ஐ என்னுஞ் சொல் தலைவனைக் குறிக்கும்.

ஐ + அ = ஐய.
ஐ + அன் = ஐயன்
ஐ + அப்பன் = ஐய்யப்பன்
ஐ + அன் + ஆர் + ஐயனார்

போர்க்களத்தில் மாவீரன் அணியிலுள்ள வீரன் தன் தலைவனைப் பற்றிப் பகை அணி வீரனிடன் உரைக்கும் செய்தியாகத் திருக்குறள் கூறும்.

” என் ஐ முன் நில்லன்மின் தெவ்விர் பலர் என் ஐ
முன் நின்று கல் நின்றவர்”

இதில் வரிம் ஐ தலைவனையும், மன்னனையும் குறிக்கும்.

“ஐயர் யாத்தனர் கரணம் என்ப” என்கிறது தொல்காப்பியம்.

இந்த ஐ ஊர்த் தலைவர், அல்லது சான்றோரைக் குறிக்குஞ் சொல்லாகப் பயன் பட்டுள்ளது.

ஐயப்பனும் அவ்வாறே! ஒரு இளவரசன் தான் விரும்பிய பெண்ணை மணஞ்செய்ய பெற்றோர்கள் தடையிட்டதால், அரச நிலையைத் துறந்து, உண்ணாநோன்பிற்காக, மலைக்குச் சென்று விட்டான். அவன் மீது அன்பு கொண்ட குடிமக்களும் உண்ணாநோன்பிருந்து, தினந்தோறும் உணவையும் உணவுப் பொருளையும் மலைக்குக் கொண்டு சென்று உணவளித்து உணவுண்ணுமாறு வேண்டுகின்றனர்! அவ்வாறு, வேண்டியழைத்தும் நாட்டிற்கு வராத ஐய்யப்பனை அழைக்க, ஐய்யப்பனின் அரச குடும்பமே அரச உடையுடன் வந்து ஆடை அணிவித்து அழைத்துச் செல்லுகிறது! என்றொரு கதை ஆங்குண்டு. அதன் பின்னணியைக் கொண்டு உருவான உருமுடி, விரதம் என்பதெல்லாம் உருக் கொண்டன!ஆக, ஒரு மலையேற்றம்! நல்ல உடற்பயிற்சி! அது, பெண்களால் இயலாது! என்பதால், அய்யப்பன் கோயிலுக்குச் செல்ல தடுக்கப்பட்டனர்.”

மூதாதை வழிபாடு என்பது வேறூன்றிய தமிழகத்தில் போற்றத்தகுந்த வாழ்வு வாழ்ந்த இந்தப்பெரியார் அதன்பின் கடவுளாக வழிபடப்படுகிறார்.

ஐயனாராக அவர் வழிபடப்படும் ஆலயங்களுக்கு பெண்கள் தான் அதிக அளவில் சென்று பொங்கல் வைத்து வழிபடுகின்றனர்.அவர் தமிழக கிராமங்கள் அனைத்துக்கும் கிராம தேவதை.நிலைமை இப்படி இருக்க அவர் பெண்களை பார்க்க மாட்டார்,கன்னி சாமி என்றெல்லாம் சொல்லுவது சுத்தமாக நன்றாக இல்லை.

ஐயப்பன் கோயிலில் எப்படி இப்படி ஒரு சம்பிரதாயம் வந்தது என தெரியவில்லை.12 முதல் 50 வயதான பெண்களை அங்கு அனுமதிக்காதிருப்பது என்ன காரணங்களுக்காக என யோசித்து பார்த்தால் தோன்றுவது கீழ்க்கண்ட காரணம் மட்டுமே

1.மாதவிலக்கு வரும் பருவத்தில் உள்ள பெண்கள் அங்கு வரக்கூடாது.
சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படாதது ஏன் என கேட்டதற்கு சிறந்த ஆன்மிகவாதியும்,தமிழறிஞருமான டாக்டர் சங்கர் குமார்( http://www.blogger.com/profile/20047444) அவர்கள் கீழ்கண்ட விளக்கத்தை அளிக்கிறார்.

“சபரிமலை யாத்திரை என்பது அந்தக் காலத்து 40 நாள் பயணமோ அல்லது இந்தக் காலத்து இருநாள் பயணமோ மட்டும் அல்ல!என்று விரதம் இருக்கத்தொடங்குவதாக வேண்டிக்கொண்டு[சங்கல்பம்]”மாலை” போட்டுக்கொள்கிறோமோ, அன்றே ஆரம்பிக்கிறது இந்தப் பயணம்.மாதவிலக்கு என்னும் முக்கியமான காரணம் அது நிகழும் பெண்களால் தவிர்க்க முடியாத ஒன்று என்பதாலேயே, அவர்களால் மாலை அணிந்து விரதம் தொடர்ந்து 40 நாட்கள் இருக்க முடியாத நிலை.மேலும் வன்மிருகங்கள் இரத்தவாடையைத் தெரிந்து கொள்ளும் சக்தி படைத்தவையாயிருத்தலினால், பெண்களால், அவ்வழியே போவது ஆபத்தாய் முடியும், அவர்களுக்கோ, அல்லது, காட்டு வழியே செல்லும் மற்ற பக்தர்களுக்கோ!

ஐயப்பனுக்கு கன்னித்தீட்டு ஆகாது என்பது சம்பிரதாயம்.
நம்புபவர்கள் இதற்கு மதிப்பளித்துச் செல்கிறார்கள், அண்களும் சரி; பெண்களும் சரி.!!.

இந்த மேற்கூறிய கட்டுப்பாடுகள் அனைத்தும், பெருவழியில் செல்ல நினைக்கும், விரதம் இருக்க நினைக்கும், பதினெட்டாம்படி ஏற நினைக்கும்/துடிக்கும் பெண்களுக்கு மட்டுமே!! மாதாமாதம் நடை திறக்கும் நாட்களில், பின்படி வழியாக விரதமின்றி, ஐயப்பனை தரிசித்துச் செல்லும் அனைத்து வயதினையும் சேர்ந்த பெண் பக்தைகள் ஏராளம்!இவர்கள் அனைவரும் ஐயப்ப பக்தைகள் என்பதால், சம்பிரதாயத்துக்கு மதிப்பளித்து, முக்கிய நாட்களைத் தவிர்த்து விடுவர். அன்னதானம் , மருத்துவ முகாம் போன்றவைகள் இன்றும் ஐயப்ப சேவா சங்கத்தாரால் நடத்தப் பட்டு வருகிறது.ஆனால் இன்னும் நிறையச் செய்ய முடியும், வேண்டும்!” என்கிறார் டாக்டர் சங்கர்குமார்.

கணிப்பொறி வல்லுனரான செல்வி பொன்ஸ்(http://www.blogger.com/profile/650829) ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் அனுமதிக்கபடவேண்டும் எனும் கருத்து உடையவர்.இந்த கட்டுப்பாடு குறித்து கருத்து தெரிவிக்கும் செல்வி பொன்ஸ் “கட்டுப்பாட்டுக்கு எனக்குத் தெரிந்த காரணம், அந்தக் காலத்தில் இந்தப் பெரிய பாதைப் பயணம் ஒரு மாதப் பயணம்.. பெண்களால் அந்தப் புனித பூமியில் ஒரு மாதம் வர முடியாது.. ஆனால், இப்போது தான் எல்லாம் நான்கு நாள் பயணமாகிவிட்டதே, ஏன் நான் இரு நாள் பயணமாகக் கூடச் செல்ல முடியும்” என்கிறார்.

பெண்கள் வரக்கூடாது எனும் இந்த சம்பிரதாயம் தோன்ற வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா?பெண்கள் வரக்கூடாது என்பது கடவுளுக்கு பிடிக்காது என்பதாலா?அல்ல.அங்கு விரதம் இருந்து வரும் பக்தர்கள் மனதில் தவறான எண்னங்கள் வரக்கூடாது என்ற காரணம் மட்டுமே இருக்க முடியும்.ஆனால் சற்று யோசித்து பார்த்தால் அந்த பக்தர்கள் 40 நாட்கள் வெளியுலகத்தில் தான் இருக்கின்றனர்.வீட்டில் தம் மனைவி,அலுவலகத்தில் என பெண்களோடு மாலை போட்ட சமயத்திலும் பார்க்காமல் இருப்பதில்லை.37 நாட்கள் பெண்கள் இருக்கும் உலகில் இருந்துவிட்டு 3 நாட்கள் மட்டும் அவர்களை ஒதுக்குவது சரியான வாதமாக தோன்றவில்லை.

மேலும் மாதவிலக்கு எனும் ஊசிப்போன காரணத்தை இன்னும் எத்தனை நாட்கள் சொல்லி பெண்களை தள்ளி வைக்கப்போகிறோம்?பெண்ணின் கருப்பையை அவளுக்கே எதிராக திருப்புவது தவறுதானே?.இது இனியும் செல்லுபடியாககூடிய வாதமா என்பதை யோசித்து பார்க்க வேண்டும்.

ஆத்திகர்கள் சற்று மனம் புண்படாமல் யோசித்து பார்த்தால் வழி வழியாக வந்த சம்பிரதாயம் என்பதை தவிர பெண்களை ஐயப்பன் கோயிலில் அனுமதிக்காதிருக்க எந்த காரணமும் இல்லை என்பது புலப்படும்.அவர்கள் நம்மவர்கள்.உரிமையோடு என் சாமியை நான் பார்க்க வேண்டும் என கேட்பவர்களை தடுப்பது நிச்சயம் முறையாகாது.அப்படி கேட்பவர்கள் சொற்பமே எனினும் அவர்கள் உரிமைக்கு நாம் தலை வணங்குதல் தான் முறை.

சம்பிரதாயங்களை உடைத்தால் இந்து மதம் பலவீனப்படும் என்பதை ஏற்க முடியாது.சில சம்பிரதாயங்களை உடைத்தால் இந்து மதம் மேலும் வலுவடையவே செய்யும்.வலைபதிவர் திரு சிரில் அலெக்ஸ்( http://www.blogger.com/profile/16326566) குறிப்பிடுவதுபோல் “காலத்துக்கேற்ப மாறிக்கொள்வதே கலாச்சாரம், மொழி,மதம் போன்றவை அழியாமல் காத்துக்கொள்ளும் வழி. மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது.”

பெண்கள் ஐயப்பன் கோயிலுக்கு வரலாம் என சட்டம் போட்டால் உடனே பெண்கள் படை எடுத்து வரப்போவதில்லை.சட்டம் என்பதையும் தாண்டி தெய்வ குத்தம் என்ற பயம் பெரும்பாலான பெண்களுக்கு இருக்கும்.அதை போக்குதல் இந்து மத துறவிகளின் ஒரு பணியாக இருக்க வேண்டும்.அவர்கள் வருகிறார்களோ இல்லையோ சட்டப்படி அதை காரணம் காட்டி அவர்களை தடுத்தல் வேண்டாம்.

இதனால் ஐயப்பன் சாமிகளின் விரதத்துக்கு எந்த பங்கமும் நேராது.மேலும் அவர்கள் நம்பிக்கை வலுவடையவே இது உதவும் என தோன்றுகிறது.கோயிலுக்கு அதிகம் பேர் வருவது எப்படி பார்த்தாலும் நல்லதுதானே?பெண்களும் கோயிலுக்கு வரலாம் என்றால் ஐயப்பன் யாத்திரை இனிய ஒரு குடும்ப ஆன்மிக சுற்றுலாவாக மாறும்.அதை விட பெரிய சந்தோஷம் ஐயப்பனுக்கு இருக்க முடியாது.குடும்பத்தோடு வந்து ஐயனை தரிசிப்பது எத்தனை இனிய அனுபவம்?

ஐயனாரப்பனின் தொன்மை பற்றியும் கண்ணகியை இன வேறுபாடு இன்றி இந்துக்கள் அனைவரும் வழிபடவேண்டியதன் அவசியத்தையும் வலைபதிவரும் வேத விற்பன்னருமான திரு ஜயராமன்( http://www.blogger.com/profile/7701548 ) பின்வரும் கருத்தை முன்வைக்கிறார்.

“பாகவதம் போன்ற பெருமை வாய்ந்த புராணங்களில் கூட சாஸ்தாவின் பிறப்பு பேசப்படுகிறது.சபரிமலையில் திருப்பதி போன்று அன்னதானம் செய்யலாம். ஒரு தோசை 30 ரூபாய் போன்ற பக்தர்களிடம் சுரண்டல் நிற்கம். சபரிமலைக்கு 80 கோடி ரூபாய் வருமானம் என்றும் அதனால், கேரளாவில் ஆயிரக்கணக்கான கோயிலுக்காக அறநிலையத்துறை பணம் எடுத்துக்கொண்டு விடுவதாகவும் பேப்பரில் படித்தேன். சபரிமலை வருமானம் அந்த புனித கோவிலை மேம்படுத்த செலவழித்தால் பக்தர்கள் சந்தோஷப்படுவார்கள்

கண்ணகி ஒரு தெய்வப்பெண். இதில் யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் இருக்க முடியாது.அவள் இந்து மத்த்தின் சிறந்த பதிவிரதைகளுல் ஒன்றாக பூஜிக்கப்படுபவள், பூஜிக்கப்பட வேண்டியவள்.கண்ணகியை எதிர்ப்பவர்கள் கற்பை எதிர்க்கும் சில திடீர் பகுத்தறிவு பகலவன்கள். இவர்கள் கற்பையும் அறிந்தார் இல்லை, கண்ணகியையும் அறிந்தார் இல்லை. சில ‘புரட்சி’ பெண்ணியவாதிகளும் இவர்களுக்கு ஒத்து ஊதுகிறார்கள்.கண்ணகி வேத வழி நடந்த ஒரு உத்தமி. அதில் சாதி, இனம் பிறிப்பது அநாகரீகம்.”என்கிறார் ஜயராமன்.

ஐயப்பன் சாமிகளை பற்றி தவறான சில வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன.ஐயப்பன் சாமிகள் தண்ணி அடிக்கிறார்கள்,மாமிசம் அருந்துகிறார்கள் என சில வாதிடுகிறார்கள்.ஆனால் ஐயப்பன் சாமிகள் சிலர் தப்பு செய்தாலும் பெரும்பாலானோர் அந்த 40 நாட்களும் ஒழுக்கமாக இருக்கிறார்கள் என்பது உண்மைதான்.தப்பு செய்யும் சிலரும் குற்ற உணர்ச்சியோடு தான் அதை செய்வார்கள்.

ஐயப்பன் பிறப்பை கிண்டலடித்தும் பேசுகிறார்கள்.”ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்தவன் ஐயப்பன்” என சில கழக தோழர்கள் கிண்டலடிப்பது உண்டு.ஆனால் ஹோமோசெக்ஸ் என்பது பாவம் என்பது முட்டாள்தனமான ஒரு கோட்பாடு.இந்த மடிசஞ்சி கலாச்சாரம் இந்து மதத்தில் எப்போதும் இருந்தது கிடையாது.அரவாணிகள், ஹோமோசெக்ஸுவல்கள், பலதாரமணம் செய்யும் பெண்கள்,களவுமணம்,நிர்வாணம்(public nudity) என காமத்தின் எந்த வகையையும் பாவம் என இந்து மதம் கருதியதில்லை.அரவான் கதை,திரவுபதி,ஐயப்பன்,குந்தி என ஒவ்வொருவருக்கும் அங்கிகாரம் தந்து மாற்றின சேர்க்கையாளருக்கு(hetro sexuals) சமமான அங்கீகாரத்தை இவர்களுக்கும் தந்து தான் வந்துள்ளது.விக்டோரியா காலத்திய இங்கிலாந்தின் நெறிமுறைகளை இந்து மதத்தை அளவிட பயன்படுத்துவது சரியல்ல.

தமிழ்ப் பண்பாட்டின்,பாரதக்கலாச்சாரத்தின் சின்னங்களாக கண்ணகியும்,ஐயப்பனும் இன வேறுபாடு இன்றி போற்றப்படவேண்டும் என்பதே என் தாழ்மையான கருத்து.

(கட்டுரையில் மற்றவர்கள் தெரிவித்த கருத்துக்கள் அவர்கள் கண்ணோட்டத்தை பிரதிபலிப்பதாக எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.அக்கருத்துக்கள் கட்டுரை ஆசிரியரனான என் கண்ணோட்டத்தை பிரதிபலிப்பதாக பொருள் அல்ல.அவர்களின் கருத்துக்களுக்கு எதிர்வினைகள் ஏதும் இருந்தால் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள வலைதளங்களில் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்)

www.holyox.blogspot.com

www.holyape.blogspot.com

http://groups.google.com/group/muththamiz

Series Navigation