கண்காட்சி

This entry is part [part not set] of 45 in the series 20030703_Issue

காஞ்சனா தாமோதரன்


பிரிட்டிஷ் அரும்பொருளகத்தின் எகிப்து பற்றிய விசேஷக் கண்காட்சி சிக்காகோ அரும்பொருளகத்தில் ஆகஸ்ட் 2003 வரை நடக்கப் போவதாய்த் தகவல் வந்திருந்தது.

பழங்காலத்தில் கட்டப்பட்ட அரும்பொருளகங்கள், பல்கலைக்கழகங்கள், நூலகங்கள் எல்லாம் பிரம்மாண்டமானவை. பிரமிக்க வைப்பவை. உங்களுக்கு வீடு இருக்கிறதோ இல்லையோ, அது சிறியதோ பெரியதோ, எதுவானாலும் நீங்கள் இந்தக் கட்டடத்தினுள் நுழையும்போது இதையும் இதனுள்ளிருப்பவற்றையும் உங்களை விடப் பெரியனவாய் — மிகப் பெரியனவாய் — உணருங்கள் என்று சொல்லுபவை. இந்தப் பிரமிப்பும் மதிப்பும் ஓரளவு தேவைதானென்றாலும், அரும்பொருள்களின் உள்ளடக்கத்தை அவற்றின் சூழல்களிலிருந்து பிரித்து, தத்தம் தனிப்பட்ட அனுபவங்களாய் மாற்றி உணர்ந்து கொள்வது அவசியம். பொதுமக்கள் பார்வைக்காக அரிய பொருள்களைத் திரட்டி வைப்பதில் ஒரு ஜனநாயகத் தன்மை உள்ளது. திரட்டியவற்றைப் பிரித்து, வகைப்படுத்தி, ஒழுங்குபடுத்தி, விமரிசித்து, கோர்வையாக அர்த்தப்படுத்துவதற்கான கடினமான உழைப்பும் திறமையும் மதிக்கப்பட வேண்டியவை. அதே சமயத்தில், நாங்கள் திரட்டித் தருவதை, நாங்கள் ஒழுங்குபடுத்தி அர்த்தப்படுத்தும் வகையில்தான் நீங்கள் பார்க்கிறீர்களென்ற தொனி இழைவதையும் மறுக்க முடியாது. விதிக்கப்பட்ட அர்த்தங்களை மீற முயலும் பார்வையாளரின் அனுபவம் முக்கியமானது.

ஃப்ரெஞ்சுக்காரர்களின் சரித்திரத்தை உதாரணமாய் வைத்துப் பார்த்தால் மேற்சொன்னதன் ஒரு பகுதி புரியும். ஃப்ரெஞ்சுப் புரட்சி வரை, அங்கே சரித்திரம் என்பது ஆளும் வர்க்கத்தினரின் தனி உரிமையாய் அங்கீகரிக்கப்பட்டது; மத்திய வர்க்கத்தினருக்கோ, கீழ்த்தட்டு மக்களுக்கோ உரிமை கிடையாது. பதினெட்டாம் நூற்றாண்டுச் சமூகமாற்றத்தின் ஒரு பகுதியாக, லூவர் அரண்மனை பொதுமக்களுக்கான அருங்காட்சியகமாய் மாற்றப்பட்டது. ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்த எழுத்தாளரான ஃப்ரான்ஸுவா-ரெனே டி ஷாட்டோப்ரியான்(ட்) லூவர் அரும்பொருளகத்தையும் அதன் உள்ளடக்கத்தையும் அப்போது நிராகரித்ததன் அடிப்படை: ‘நம் எல்லாருக்கும் ஒரு பொதுச் சரித்திரமா ? விளையாடுகிறீர்களா ? ‘ இத்தகைய பின்னணியில், ஒரு சமூகத்தின் சரித்திரத் தடங்கள் அச்சமூகத்தின் மக்கள் அனைவருக்கும் உரியனவாகும் ஒரு பொது இடத்தின் இருப்பும் அர்த்தமும் ஆழமானவை.

அடுத்த பெரும் மாற்றம் நிகழ்ந்தது இருபதாம் நூற்றாண்டின் முதற்பகுதியில். நிகழ்த்தியது சந்தைக் கலாச்சாரம். அமெரிக்கா உள்பட, உலகம் முழுதும் அரும்பொருளகங்கள் பெருகிய காலமாம் இது. சந்தையின் கடும்போட்டியினால், அரும்பொருள் மதிப்பீடுகளில் மாற்றங்கள் ஏற்பட்டன. அரும்பொருளகத்தில் கண்காட்சிக்கு வைப்பதாலேயே ஒரு பொருள் அதன் தன்மைக்கு மீறிய அந்தஸ்தைப் பெறும் சூழல்; தன் குறிக்கோளை மீறிய விமரிசக அந்தஸ்தைத் தனக்குத் தானே அரும்பொருளகம் வழங்கிக் கொள்ளும் சூழல். ஒரு வகை வர்க்கச் சுவர்களை உடைக்கப் பிறந்த அரும்பொருளகம் இன்னொரு வகை வர்க்க முறைமையை இங்கே உருவாக்கி விடுகிறது. ஒரு சிலருக்கு மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கே சரித்திரம் சொந்தமென்று ஆரம்பித்த அரும்பொருளகம், பன்முகமுள்ள சரித்திர வாசிப்பையும் கலாரசனையையும் கூட்டனுபவத்தின் ஒருமையாக மாற்றும் சாத்தியமும் உள்ளது. பார்வையாளர்கள் இந்த முரண்களையெல்லாம் மீறி, தனிமனிதர்களாய் அருங்காட்சியகங்களை அனுபவிப்பது அவசியம். அதுவே இயல்பானது. சாத்தியமானதா — முழுமையாகச் சாத்தியமானதா — என்பது கேள்வி.

சிக்காகோ அரும்பொருளகத்தில் எகிப்திய அரும்பொருள் கண்காட்சியைப் பார்வையிடும் போதும் இந்த நினைப்புகள் மீண்டும் மனதில் ஓடின.

பிரிட்டிஷ் அரும்பொருளகத்தார் தமது முழு எகிப்தியச் சேகரத்தையும் இங்கே அனுப்பவில்லை–அது இயலாது போலும். மிகவும் குறைவான அளவிலேயே பொருள்கள் இருந்தன. பழம்பெரும் எகிப்தின் 3200 ஆண்டுச் சரித்திரமும் (கி.மு. 2686-கி.பி. 642) ஆறு பிரிவுகளாக வகுக்கப்பட்டு, சரித்திரக் காலவரிசைப்படிப் பொருள்கள் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தன. ஒவ்வொரு பிரிவின் சுவரிலும் அந்தந்தக் காலகட்டத்தின் சரித்திரக் குறிப்புகள். ஒவ்வொரு பொருளுக்கு அடியிலும் அது பற்றிய விவரக்குறிப்புகள். பொருள்கள் மேல் பாய்ச்சிய ஒளிவட்டங்கள் தவிர மங்கிய ஒளியும், காலடிகள் பதியும் கம்பளத்தின் மெல்லிய பெருமூச்சுமாய், ஒவ்வொரு பொருளையும் நின்று நிதானமாய்ப் பார்ப்பதற்கு ஏதுவான சூழல். பண்டைய எகிப்தின் கலைவடிவங்கள் காலத்துடன் எப்படி மாறின என்பதை இந்தக் கண்காட்சி மூலம் புரிந்து கொள்ள முடிந்தது.

கலைவடிவங்களில் பலவும் அவர்களது இறப்புச் சடங்குகளுடன் தொடர்புள்ளவை. சாமானியரைப் புதைக்கும் பெட்டி, பதவியிலிருப்போரைப் புதைக்கும் பெட்டி, ‘மம்மி ‘ முகம் மேல் வைக்கப்படும் ஓவியம், ‘மம்மி ‘க்கு அருகே வைக்கப்படும் பொருள்கள், வர்ணம் பூசிய பொன்னகைகள், இனவிருத்தி வளத்தின் அடையாளமாய்ப் பெண்கள் அணியும் சோழி ஒட்டியாணம், இறந்தவருக்குக் கடவுளர் தீர்ப்புச் சொல்லும் ஓவியம், மெல்லிய வர்ணம் தீட்டிய ‘ஹியெரோக்ளிஃபிக் ‘ எழுத்துக்களும் நுணுக்கமான ஓவியங்களும் பொறித்த கல்லறைச் சுவர்ப்பகுதிகள்………பட்டியல் நீளும்.

பண்டைய எகிப்தின் தேசீயக் கலாச்சார அடையாளத்தை அழுந்தச் செதுக்கியது அம்மக்களின் வாழ்வு பற்றிய நம்பிக்கை. இறப்புக்குப் பின் வரும் வாழ்வு பற்றிய நம்பிக்கை. பிரம்மாண்ட அரச கல்லறைகளான பிரமிடுகளிலிருந்து சாமானியரின் வண்ணமயமான புதைவுப் பெட்டிகள் வரை எல்லாமே இறந்தவர்கள் மறுவாழ்வை அனுபவிக்க ஆயத்தம் செய்பவையே. ‘கடவுளின் ஏணிப்படியே, வந்தனம்……ஓஸிரிஸ் வானத்துக்கு ஏறிப் போவதற்காகக் கட்டிய ஹோரஸின் ஏணியே, எழுந்து நில்….கடவுளின் ஏணி இப்போது எனக்குக் கொடுக்கப்படட்டும்… ‘ — ‘பேப்பிரஸ் ‘ சுவடிகளில் பச்சை மையினால் எழுதப்பட்ட மந்திரங்களை மதகுருக்கள் ஓத, ‘இறந்தவர்களின் சுவரைக் ‘ கடந்து, அரசனின் உயிர் வானத்துக்கு எழுந்து, கடவுளருடன் கடவுளராய் வாழ்வதாய் ஐதீகம். முறையாகப் புதைக்கப்படுவது முடிவற்ற மறுவாழ்வுக்கு முக்கியமென்பது நம்பிக்கை; அரசருக்கு மட்டுமல்ல, சாமானியருக்கும் இது முக்கியமாய்க் கருதப்பட்டது. புதைவையே மையமாய்க் கொண்ட மதச்சடங்குகள், ஓவிய/கட்டட/சிற்பக் கலைகள் உள்பட்ட பெரும் கலாச்சாரம்.

(இங்கு இன்னொரு வகைப் புதைப்பை நினைக்காமலிருக்க முடியவில்லை. திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையோரம் உயர்ந்து நிற்கும் மண்திட்டுக்களில், பல ஆழமான குழிகள் நெருக்கித் தெரியும். அந்தச் சிறுவயதுக்குரிய ஆர்வத்துடன் அவை என்னவென்று கேட்ட போது கிடைத்த பதில்: பழங்காலத்தில், வயதான பெரியவர்களை இரண்டு நாளைக்கான உணவு, ஒரு சிறு கைவிளக்கு ஆகியவற்றுடன் தாழி( ?) எனப்படும் பெரிய பானைக்குள் அடைத்துப் புதைத்து விடுவார்களாம். அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் தாழிகளைத் தோண்டியெடுத்த இடங்களே அந்தக் குழிகளாம். சரித்திரபூர்வமான விவரங்கள் ஆதாரங்கள் எல்லாவற்றையும் கேட்காமல் போய்விட்டோமே என்றிருக்கிறது இப்போது. அந்த வயதில், தாழிகளின் சுவடுகள் கற்பனையின் இருண்மையையும் பயத்தையும் இரக்கத்தையும் உண்டுபண்ணி, உறக்கத்தைக் கெடுத்தன.)

முன்பு நினைத்தது போல் பிரமிடுகளைக் கட்டியது அடிமைகள் அல்ல என்கிறார்கள் அறிஞர்கள். மற்றும் சிலர் சொல்வது போல், தம் விண்கல நிலையங்களாக வேற்றுக்கிரகவாசிகளும் இவற்றைக் கட்டவில்லை. சாமானியக் குடிமக்களே இப்பெரும் கட்டுமானங்களைச் செய்திருப்பதாய் அகழ்வாராய்ச்சித் தடயங்கள் சொல்லுகின்றனவாம். தம் அரசன் மறுவாழ்வில் நிலைத்திருப்பதற்காகத் தம் சொந்த வாழ்வை அர்ப்பணிக்க வேண்டிய தலைவிதி ஏன் இம்மக்களுக்கு ? விசுவாசமா ? பயமா ? சம்பளமா ? இல்லை. அரசன் மூலமாகத் தம் தேசம் வெளிப்படுத்தும் தெய்வீகம்/ பக்தி என்று நம்பியே இந்தக் கட்டட அதிசயங்களை அம்மக்கள் நிர்மாணித்ததாய் அறிஞர்கள் கருதுகிறார்கள். தம் அரசனின் மறுமை, தமது மறுமை, தம் தேசத்தின் நீடித்த மறுபிறப்பு எல்லாமே தமது கட்டட வேலையால் உறுதிப்படுகிறது என்று நம்பிய மக்கள். மதநம்பிக்கையின் அடிப்படையில் தேசீய உணர்வு. அவ்வுணர்வின் அடிப்படையில் தனிமனிதத் தியாகம். தியாகங்களின் கூட்டுவெளிப்பாடாக, பிரமிடுகள். இம்மைக்குக் கனமான அர்த்தமும் குறிக்கோளும். மறுமை செழுமையாகும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை. பதில்கள் தெரிந்ததாய் நம்பும் நிலையில் இருத்தலியல் விசாரங்களுக்கு இடமில்லை போலும். (சரித்திர மறுவாசிப்புப் பார்வையில், இம்மக்களின் தனிமனித உரிமைகள் பற்றிய கேள்விகள் எழும்.)

எகிப்து பிரமிடுகளைக் கட்டவில்லை, பிரமிடுகள்தாம் எகிப்தை ஒன்றுபட்ட தேசமாகக் கட்டுமானம் செய்து வளர்த்தன என்று சொல்லுவோர் பலர். (முதல் பிரமிடு கட்ட ஆரம்பிக்கும் முன், சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து வாழ்ந்தவர்கள் இம்மக்கள்). பிரமிடுகள் கட்டுவது நின்ற பின், பெரும் கல்லறைக் கோயில்கள் கட்டுவது தொடர்ந்தன. ஆயிரக்கணக்கான வருடங்களாகப் பண்டைய எகிப்தின் மதமும், கலாச்சாரமும், இறப்பைச் சுற்றியிருந்த நம்பிக்கையும் சடங்குகளும் தொடர்ந்திருக்கின்றன. கி.மு. 332-இல், அலெக்ஸாண்டர் கிரேக்க ஆட்சியை நிறுவியதற்கு முன்னூறு வருடங்களுக்குப் பின் க்ளியோபாட்ராவை வீழ்த்தி ரோம ஆட்சி நிறுவப்பட்டது.

கிரேக்க-ரோம ஆட்சிக்காலங்களில் எகிப்தியக் கலாச்சாரத்தின் முகம் மாறவில்லை. ஆனால், ஓவிய முகங்கள் மாறுகின்றன. தைலமிட்டு மெல்லிய பருத்தியில் இறுக்கச் சுற்றப்பட்ட ‘மம்மி ‘ முகம் மேல் வைக்கப்படும் எகிப்தியரின் ஓவியம், கிரேக்கோ-ரோமன் சாயலில் தீட்டப்பட்டிருக்கிறது–முக அமைப்பு, கண், மூக்கு, உடைகள், நகைகள் எல்லாமே. தன் சந்ததியினருக்குத் தன் சொந்த முகங்காட்டுவதைத் தவிர்த்து அன்றைய ஆண்டோர் சாயலில் உறைந்து போன அந்த ஓவியப் பெண்ணை நினைத்துப் பார்க்கிறேன். அரசியல் இழப்புகளில் எத்தனை வகைகள்!

பண்டைய எகிப்திய நாகரீகம் மெல்லத் தளர்ந்து கிரேக்க, ரோமன், கிறித்தவ அடையாளங்களுக்கு மாறுவதைக் கண்காட்சிக் கலைவடிவங்களிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் படையெடுத்த அரேபியர் எகிப்தை வென்றார்கள். அரபு மொழியும் இஸ்லாம் மதமுமாய், எகிப்தின் கலாச்சாரமும் சரித்திரமும் ஒரு புதிய யுகத்தினுள் நுழைந்தன.

பல வருடங்களுக்கு முன் பார்த்த கைரோ நகரம் நினைவுக்கு வருகிறது. நகர்மையத்தின் நவீன அடுக்குமாடிக் கட்டடத்திலிருந்து தெரியும் மாஸ்க்குகளின் அலங்கார மினாரெட்டுகளையும், கொடியில் காயும் துணிகளின் நிழலில் திறந்தவெளிச் சமையல் நடக்கும் வீட்டு மொட்டைமாடிகளையும், மரச்செறிவுகளின் தலைகளையும், நைல் நதியையும், சுமார் ஐந்து மைல்களையும் கண்களால் தாண்டினால், மெல்லிய தூசிப் படலத்தினூடே தெரிவது ஒரு பெரிய பிரமிட். இனம் புரியாத அதிர்வு. சுற்றியிருக்கும் நவீனச் சூழலும் சுவர்களும் கரைவது போன்ற உணர்வு. ஐயாயிரத்திச் சொச்ச வருடங்களையும் பல்வேறு ஆட்சியாளரையும் பாதை மாறிய புதிய நைல் நதியையும் மனிதரின் இன்பதுன்பங்களையும் அறிந்து கடந்து நிற்கிறது அது.

பிற பிரமிடுகளையும் கல்லறைக் கோயில்களையும் பார்க்கப் பிரயாணம் தேவை. வழியில் சந்திக்கும் மக்கள் உற்சாகமானவர்கள். சூரிய ஒளியும் நிலவளமும் நீரும் உள்ள தேசம், அல்லாவின் ஆசீர்வாதம் பெற்றவர்கள் நாங்கள் என்கிறார்கள். நைல் நதியின் குறுக்கே அஸ்வான் அணை கட்டப்பட்டது பற்றிய விவாதங்கள் தொடருகின்றன; மண்வளம் குறைதல், மீன் கூட்டங்கள் அழிதல் என்று பல குறைகளும் கவலைகளும் இருக்கின்றன. பாசனத் தொழில்நுட்பம் மூலம் பாலைநிலத்தின் ஒரு பகுதி விளைநிலமாகியிருக்கிறது. பாசன நிலத்தின் பச்சை முடிந்து, பாலையின் வறட்சி திடாரென்று துவங்குவதைப் புரிந்து கொள்ளக் கண்களுக்குக் கொஞ்சம் நேரம் தேவைப்படுகிறது. இயற்கையும் மனிதரும் சந்திக்கும் கோடு அது.

கார்ணக்கின் பழம்பெரும் கல்லறைக் கோயில்கள் சுமார் அறுபது ஏக்கர்களுக்குப் பரந்து கிடப்பவை. கல்பாவிய தரையின் இருபுறமும் உயர்ந்து நிற்கும் கல்தூண் வரிசையினூடே, இரவொளியில் நடந்து போவது வினோதமான அனுபவம். முன்னால் பதிந்து போன கோடிக்கணக்கான காலடித் தடங்கள் பாதங்களில் உரசுகின்றன. புரியாத மொழிகளும் சிரிப்புகளும் அழுகைகளும் மந்திரங்களும் மெளனமாய்த் தூண்களில் மோதிச் சிதறுகின்றன. முந்தையோரின் கனவுப்பரப்பில் உலவும் உணர்வு. அப்பரப்பில், வெண்பருத்தி உடையும் வர்ணம் பூசிய பொன்னகைகளுமாய் என்றோ அவர்கள் தம் கடவுளருடன் சிரித்துப் பேசி உலவியிருக்கக் கூடும். சில நேரங்களில், அக்கடவுளரால் குற்றவாளியாய்த் தண்டிக்கப்பட்டு, ‘கடைசித் தீர்வு ‘ ஓவியத்திலிருக்கும் அந்த வினோத மிருகத்துக்கு இரையாகியிருக்கவும் கூடும்.

விடியாத இளங்காலையில், ஒரு கல்லறைக் கோவிலின் மேல்பக்கத்துப் பாறைகளின் மேல் உட்கார்ந்து கொண்டேன். பாலைநிலத்தின் மேல் சூரியக் கதிர்கள் மென்மையாய்ப் படிகின்றன. சேவல்கள் கூவுகின்றன. கழுதைகள் கனைக்கின்றன. பல்லாயிரம் வருடங்களாக உதித்த முந்தைய நாள்களிலிருந்தோ இனி வரப் போகும் நாள்களிலிருந்தோ இந்தப் புதிய நாள் அவ்வளவு வித்தியாசப்பட்டதா.

பின்னால் திரும்பிப் பார்க்கிறேன். பின்னால் திரும்பிப் பார்க்கிறேன். ‘அரசர்களின் பள்ளத்தாக்கு ‘. தம் முடிவற்ற காலப்பயணத்தில் அமைதியாக உடல்சாய்க்கும் இடமென்று பண்டைய எகிப்தின் அரசர்-கடவுளர் நம்பி, பிறரையும் நம்ப வைத்த இடம். அவர்களது அதிகாரத்துக்கும் புனிதத்துக்கும் அடையாளமாகும் கல்லறைப் பள்ளத்தாக்கு என் போன்ற சாமானியர் உலவும் சுற்றுலா பூமியாகுமென்று அப்போது அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் சாம்ராஜ்ஜியத்துக்குப் பின் பல சாம்ராஜ்ஜியங்கள் எழுந்ததும் வீழ்ந்ததும் அவர்களுக்குத் தெரியாது. அவர்களில் பலரின் பெயரைக் கூட அறியாமல், அவர்கள் காலத்தில் பிறந்திருக்காத மொழியில் அச்சடித்த விவரங்கள் வழியேதான் அவர்களைப் பற்றி என் போன்றோர் தெரிந்து கொள்வோம் என்பது அவர்களுக்குத் தெரியாது. தம் மறுமைக்காகக் கல்லறையில் வைத்த பொருள்கள் உலகெங்கும் சிதறி, வேற்றுத் தேசங்களில் கண்காட்சிக்கு வருமென்பது அவர்களுக்குத் தெரியாது. கண்ணுக்குத் தெரியாத காட்சிகள் பல.

(2003 மற்றும் 1990-களின் குறிப்புகளிலிருந்து.)

Kanchanat@aol.com

Series Navigation

காஞ்சனா தாமோதரன்

காஞ்சனா தாமோதரன்