கணினியில் ஆவணங்களை வடிவமைத்தல்

This entry is part [part not set] of 18 in the series 20010211_Issue

முனைவர் இரா விஜயராகவன், பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி


நண்பர்க்கும் உறவினர்க்கும் கடிதம் எழுதுதல், வேலைக்கு விண்ணப்பம் செய்தல், கட்டுரை/ சிறுகதை/புதினம்/கவிதை எழுதுதல், தொழிற்சாலை மற்றும் பல நிறுவனங்களில் அறிக்கைகள் தயாரித்து வெளியிடுதல், இவை போன்ற இன்னும் பலவற்றில் எதேனும் ஒன்றையோ சிலவற்றையோ நம் வாழ்க்கையில் நாம் கட்டாயம் மேற்கொள்ளுகிறோம். மேற்கூறிய அனைத்தையும் ஆவணங்கள் (documents) என்ற தலைப்பில் அடக்கலாம். முன்பெல்லாம் இத்தகைய ஆவணம் ஒன்றைத் தயாரிக்கவேண்டுமெனில் முதலில் கையால் எழுதி, பின்னர் அதைத் தட்டச்சு செய்து வந்தோம்; இந்த நிலை இன்னும் பல இடங்களில் நடைமுறையில் இருந்து வருவதும் உண்மை. தட்டச்சு செய்யப்பட்ட ஆவணம் தெளிவாக இருப்பினும் அச்சடிக்கப்பட்ட ஆவணத்தைப்போன்று கவர்ச்சியாகவும் நேர்த்தியாகவும் இருப்பதில்லை; ஏனென்றால் தட்டச்சு எந்திரத்தில் ஒன்று அல்லது இரண்டு எழுத்துருக்களும் (fonts), ஓரிரு வண்ணங்களும் (colours) தான் கிடைக்கும். தனிநபர் கணினி (personal computer-pc) புழக்கத்திற்கு வந்தபின் இத்துறையில் வியத்தகு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. வீதிக்கு வீதி கணினிநிலையங்கள் வந்துவிட்டன; அவற்றில் சொல்தொகுப்பு (word processing) மற்றும் மேசைப்பதிப்பு (Desk top Publishing –DTP) வசதிகளும் குறைந்த செலவில் கிடைக்கின்றன. ஒருவர் சொந்தமாகத் தனிநபர் கணினி வைத்துக் கொண்டிருப்பாரேயானால், அதில் சொல்தொகுப்பு/மேசைப்பதிப்பு மென்பொருட்களை நிறுவி பல்வேறு ஆவணங்களை விரும்பிய வடிவத்தில்/வண்ணத்தில் உருவாக்கிக்கொள்ள முடிகிறது; தேவையான வரைபடங்கள், அட்டவணைகள், படங்கள் ஆகியவற்றை இணைத்து பல வண்ண ஆவணங்களை எளிதாகவும், விரைந்தும், சிறப்பாகவும் தயாரித்துக் கொள்ளலாம்.

தனிநபர் கணினி பரவலாகப் பயன்படுவதற்கு, சொல்தொகுப்பிகள் (word processors) என்ற பயன்பாட்டு மென்பொருட்களே (application softwares) முக்கிய காரணம் எனலாம். பெரும்பாலானவர்கள் தனி நபர் கணினியை இந்த ஒரு பயன்பாட்டுக்காகவே விலைக்கு வாங்குகின்றனர். சொல் தொகுப்பிகளே கணினியில் மிக அதிகமாகப் பயன்படும் மென்பொருள் எனில் அது மிகையன்று. முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட வேர்ட்ஸ்டார் (word star) என்ற சொல்தொகுப்பி, ஆவணங்களைக் கணினியில் அச்சிடவும், சீரமைக்கவும் (edit) மின்னணு தட்டச்சு (electronic typewriter) எந்திரம் போலத்தான் பயன்படுத்தப்பட்டது. அப்போது சொல்தொகுப்பி மென்பொருட்களைக் கணினி வட்டில் (disk) நிறுவ சில நூறு கிலோபைட்களே (kilobytes) போதுமானதாக இருந்தது. ஆனால் தற்போதைய மைக்ரோசாஃப்ட் வேர்ட் என்ற சொல் தொகுப்பியினை வட்டில் நிறுவ குறைந்தது பல நூறு மெகாபைட்கள் (Mega Bytes-MB) தேவைப்படும். ஒரு மெகாபைட் என்பது ஆயிரம் கிலோபைட்களுக்குச் சமம் என்பதை நீங்கள் அறிவீர்கள். மேலும் தனிநபர் கணினியில் குறைந்தது 16 MB நேரணுகு நினைவகமும் (Random Access Memory – RAM) தேவை; அப்போதுதான் ஆவணத்தைக் கணினியில் எளிதாக உருவாக்கி வடிவமைக்க இயலும்.

பயன்பாட்டு மென்பொருளான சொல்தொகுப்பியைக் கணினியில் நிறுவியபின் அதன் குறும்படத்தின் (icon) மீது சுண்டெலியைக் (mouse) கொண்டு சொடுக்கி ஆணையிட்டவுடன், ஒரு வெற்று வெள்ளைத்தாளைப் போன்ற அமைப்பு கணினித்திரையில் தோன்றும்; இதனை வரைகலைப் பயனர் இடைமுகப்பு (Graphical User Interface – GUI) என்பர். சாவிப்பலகையில் (key board) ஓர் எழுத்தை/எண்ணை/உருவை (Character) அழுத்தினால், அது உடனே மேற்கூறிய முகப்புத்திரையில்

பதியும். இதற்காகத் தட்டச்சு அனுபவமோ, பயிற்சியோ தேவையில்லை; ஒரு வாரத்திற்குள்ளாகவே எளிதாகத் தட்டச்சு செய்யும் பயிற்சி வந்துவிடும். எழுத்துப் பிழைகளைப் பற்றியும் கவலை கொள்ளத் தேவையில்லை; மிக எளிதாகத் தவறுகளைத் திருத்திச் சரி செய்துவிட முடியும். ஏதேனும் ஓர் எழுத்தையோ, சொல்லையோ, சொற்றொடரையோ நீக்க வேண்டுமெனில் சுட்டியை (cursor) கடைசியில் நிலைப்படுத்தி பின் நகர்வுச் சாவியை (back space key) அழுத்த அழுத்த, ஒவ்வொரு உருவாக, வலமிருந்து இடமாக நீக்கப்பட்டுக் கொண்டே வரும். நீக்கு (delete) என்னும் சாவியைக் கொண்டும் இதே பணியைச் செய்யலாம்; உருக்கள் இடமிருந்து வலமாக நீக்கப்படும்.எழுத்துருக்களை நீக்கும் செயலை வேறு சில வழிகளிலும் கூடச் செய்யலாம். நீக்கப்பட வேண்டிய பகுதியை சுண்டெலி அல்லது விசைப் பலகைச் சாவிகளைக் கொண்டு தெரிவு (select) செய்து நீக்கு என்னும் சாவியை அழுத்தினால் அப்பகுதி முழுதும் நீக்கப்பட்டு விடும். சுட்டியைத் திரையின் எப்பகுதியில் வேண்டுமானாலும் நிலைப்படுத்த இயலும். மேலும் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட உரைப் பகுதியின் (text area) எவ்விடத்தில் வேண்டுமானாலும் புதிய உரையை இணைக்கவும் கூடும். எனவே சொல்தொகுப்பி மென்பொருளைக் கொண்டு உரைப் பகுதியில் எத்தகைய மாற்றங்களை வேண்டுமானாலும் செயற்படுத்த முடியும். ஆவணத்தின் எந்தவொரு பகுதியையும் நகலெடுத்து (copy) வேறோரிடத்தில் ஒட்டவும் (paste) செய்யலாம். ஆவணம் முழுவதிலும் ஒரு குறிப்பிட்ட சொல்லையோ/தொடரையோ தெரிவு செய்து விரும்பிய சொற்களை/தொடர்களைக் கொண்டு மாற்றியமைக்கலாம். இறுதியாக முழு ஆவணத்தையும் வன்வட்டில் (hard disk) அல்லது நெகிழ் வட்டில் (floppy disk) சேமித்து வைத்து எத்தனை முறை வேண்டுமாலும் பார்வையிட்டு மாற்றம் செய்யலாம்.

தனிநபர் கணினிகள் புழக்கத்திற்கு வந்த காலந்தொட்டே மேற்கூறிய உரைபதிப்பு (text editing) முறை பயன்பாட்டில் இருந்து வந்தது உண்மை. பெரும்பாலும் உரைப் பதிப்பிகள் (text editors) தனி நபர் கணினியின் இயக்க அமைப்புகளுடன் (Operating Systems) வழங்கப்பட்டு வந்தன. பழைய தனிநபர் கணினியில் வட்டியக்க அமைப்பு (Disk Operating System – DOS) அதிகமாகப் பயன் படுத்தப்பட்டு வந்தது. கணினிப் பயனர்கள் ‘பதிப்பி ‘ (edit) என்ற ஆணையைத் தட்டச்சு செய்தவுடன் பயன்பாட்டு மென்பொருளில் ஆவணம் திறக்கப்பட்டு பதிப்பிக்கப்படுவதற்குத் தயாராகக் காட்சி அளிக்கும். தற்போதும் கூட ‘பதிப்பி ‘ வசதி இயக்க அமைப்புடன் தரப்படுகிறது. எடுத்துக் காட்டாக விண்டோஸ் 9x இல் உள்ள ‘நோட்பேட் ‘ (Note pad) என்பது ஓர் உரைப் பதிப்பிதான். சொல் தொகுப்பு, மேசைப் பதிப்பு மென்பொருட்களுடன் ஒப்பிடுகையில், உரை பதிப்பியில் உருவாக்கப்படும் கோப்புகள் (files) மிகக் குறைந்த அளவு இடத்தையே பிடித்துக் கொள்ளும். இக்கோப்புகளை ASCII (American National Standard Code for Information Interchange) கோப்புகள் என்பர். உரைப் பகுதியை உருவாக்க இவை மிகவும் எளிமையானவை; சிக்கனமானவையும் கூட..

தனிநபர் கணினிகளின் பயன்பாட்டை அதிகரிக்க, பல கூடுதல் பண்புக் கூறுகள் உரைப் பதிப்பிகளில் இணைக்கப்பெற்று, அதன் விளைவாக சொல்தொகுப்பிகள் பயன்பாட்டுக்கு வரத் துவங்கின. இவை ஆவணத் தயாரிப்பை எளிமைப் படுத்துவதுடன், கவர்ச்சியான சில செயற்பாடுகளையும் மேற் கொள்ளத் துணை புரியும் வகையில் அமைந்துள்ளன. மைக்ரோசாஃப்ட் விண்டோஸ், மேக் இயக்க அமைப்பு போன்ற நவீன சொல் தொகுப்பிகளில் ஒரே நேரத்தில் பல ஆவணங்களில் பணி புரிய முடிவதுடன், ஓர் ஆவணத்தின் பகுதிகளை வேறோர் ஆவணத்தில் எளிதாகச் சேர்த்திடவும் இயலுகிறது. சி-டாக் (C – DAC) நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஐ-லீப் (i – Leap) போன்ற சொல் தொகுப்பிகள் ஒரே நேரத்தில் ஆங்கிலத்திலும், இந்திய மொழிகளிலும் ஆவணங்களைத் தயாரிக்கும் வகையில் அமைந்துள்ளன. இத்தகைய மென் பொருளில் எந்த ஒரு இந்திய மொழியிலும் அம்மொழியின் தட்டச்சு முறையே தெரியாமல் ஆவணங்களைத் தயாரிக்க இயலும். எடுத்துக் காட்டாக, murugan என்ற ஆங்கில எழுத்துக்களைத் தட்டச்சு செய்தால் திரையில் ‘முருகன் ‘ என்ற தமிழ் வடிவம் தோன்றக் காணலாம். மேலும் தமிழ் ஆவணம் தயாரித்துக் கொண்டிருக்கும்போது இடையில் ஆங்கிலச் சொற்களையும் சேர்க்க இயலும்; அது மட்டுமல்ல; வேறு மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி, கிரேக்கம் போன்ற மொழிச் சொற்களையும் கூட அம்மொழிகளின் வரிவடிவத்திலேயே சேர்த்திட முடியும். அறிவியல் தொடர்பான கட்டுரைகளைத் தயாரிக்கும்போது கிரேக்க மொழி எழுத்துக்களின் பயன்பாடு இன்றியமையாதது. சொல் தொகுப்பியில் கிடைக்கும் இவ்வசதிகள் சாதாரணத் தட்டச்சு முறையில் நினைத்துப் பார்க்கவும் இயலாதவை.

பல்வேறு நிறுவனங்கள் தயாரித்துள்ள சொல் தொகுப்பு மென்பொருட்கள் கணினி அங்காடிகளில் கிடைக்கின்றன. மைக்ரோசாஃப்ட் வேர்ட் (Microsoft Word – MSWord), நோவெல் வேர்ட் – பெர்ஃபெக்ட் (Novell Word Perfect), லோட்டஸ் வேர்ட் – ப்ரோ (Lotus Word – Pro) ஆகியன அவற்றுள் அடங்கும். அலுவலகங்களிலும், இல்லங்களிலும் கணினிப் பயனர்களைக் கவரும் பொருட்டு மேற்கூறிய சொல் தொகுப்புகளில் பல புதுப்புது வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன. சாதாரணமாக சொல் தொகுப்பு மென்பொருட்களின் விலை பல ஆயிரம் ரூபாய் வரை செல்லும். ஆனால் கணினிப் பயனர்கள் திருட்டுத் தனமாக நகலெடுக்கப்பட்ட மென்பொருட்களையே பயன்படுத்துவதால் ஆயிரக் கணக்கில் செலவழிக்காமல் சில நூறு ரூபாய்களில், இன்னும் சொல்லப் போனால் இலவசமாகவே மென்பொருட்களைக் கணினியில் நிறுவிக்கொள்ள முடிகிறது. பல கணினி விற்பனையாளர்கள் கணினி வாங்குவோர்க்கு பல்வேறு மென்பொருட்களையும் இலவசமாகவே தருகின்றனர். மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் 9x உடன் வேர்ட் பேட் போன்ற சொல் தொகுப்பியும் தரப்படுகின்றது. இத்தகைய சொல் தொகுப்பியைப் பயன்படுத்தி பல்வேறு எழுத்துருக்களிலும், வண்ணங்களிலும் படங்கள், அட்டவணைகள் ஆகியவற்றுடன் கூடிய ஆவணங்களை உருவாக்க முடியும். மைக்ரோசாஃப்ட் வேர்டின் பழைய பதிப்புகளில் தயாரிக்கப்பட்ட ஆவணங்களைத் திறந்து சீரமைக்கவும், பதிப்பிக்கவும் கூட இயலும்.

மைக்ரோசாஃப்ட் வேர்ட், லோட்டஸ் வேர்ட்ப்ரோ போன்ற தொழில் முறையான சொல் தொகுப்பிகளில் பல்வேறு பண்புக்கூறுகள் அடங்கியுள்ளன. அவற்றுள் முக்கியமான சிலவற்றைப் பற்றி இவண் அறிய முயல்வோம்.

1. நெடுவரிசைகள் மற்றும் அட்டவணைகள் (Columns and Tables) : தேவையான எண்ணிக்கையில் நெடு வரிசைகள் (columns), குறுக்கு வரிசைகள் (rows) இவையிரண்டும் இணைந்த அட்டவணைகள் (tables) ஆகியவற்றை உருவாக்க முடியும். உரையைத் (text) தட்டச்சு செய்வதற்கு முன்பும், செய்த பின்னரும், உரைக்கு இடையிலும் கூட இவற்றைச் செருகிக் கொள்ளலாம். ஏற்கனவே தயாரிக்கப்பட்ட உரையையும் கூட அட்டவணை வடிவத்தில் மாற்றிக் கொள்ள முடியும். தேவையான தடிமனில் அட்டவணையின் எல்லைக்கோட்டையும் (border lines) வடிவமைத்துக் கொள்ளலாம்.

2. எழுத்துப்பிழை மற்றும் இலக்கணப்பிழைகளைச் சரிப்படுத்தல் : உயரளவிலான நேரணுகல் நினைவகமும் (Random Access Memory – RAM) விரைந்து செயற்படும் மையச் செயலகமும் (Central proceesing Unit – CPU) கொண்ட தனி நபர் கணினிகள் தற்போது கிடைக்கின்றன. கணினி நினைவகத்தில் ஓர் அகராதியையே சேமிக்க முடிகிறது. ஒரு சொல்லைத் தட்டச்சு செய்தவுடனே, அதனை ஒத்த சொல் நினைவகத்தில் உள்ள அகராதியில் இல்லாவிடில், தட்டச்சு செய்யப்பட்ட அச்சொல் பிழையானது என்பதைத் தெரிவிக்கும் வகையில் அடிக்கோடிடப்படுகிறது; பல்வேறு சொற்கள் நம் விருப்பத் தேர்வுக்குத் தரப்படுகின்றன; தகுதியான சொல்லைத் தேர்ந்தெடுத்தால் அச்சொல்லால் பிழையான சொல் நீக்கப்படுகிறது. இதைப் போன்றே இலக்கணப் பிழைகளும் நமக்குச் சுட்டிக்காட்டப்பெற்று களையப்படுகின்றன.

3. தேடி மாற்றுதல் (Find and Replace) : ஒரு ஆவணத்தைப் பதிப்பிக்கும்போது ஒரே சொல் அல்லது தொடரைப் பல இடங்களில் மாற்றவேண்டி இருக்கலாம். சாதாரண நிலையில் ஆவணம் முழுவதையும் மிகக் கவனமாகப் படித்து மாற்றவேண்டிய சொல் அல்லது தொடரை ஒவ்வொன்றாகக் கண்டுபிடித்து மீண்டும் தட்டச்சு செய்து மாற்றவேண்டும். ஆனால் கணினியில் ‘தேடி மாற்றுக ‘ (Find and Replace) என்னும் சாளரத்தைத் திறந்து எத்தகைய மாற்றத்தைச் செய்யவேண்டுமோ அதற்கான ஆணையைப் பிறப்பித்து ஆவணம் முழுவதிலும் ஒரு சில நொடியில் மாற்றங்களைக் கொண்டு வரலாம். மேலும் ஆவணத்தில் எந்தப் பகுதியாவது தடிமனான எழுத்துக்களால்/சாய்வு எழுத்துக்களால்/அடிக் கோடிடப்பட்ட எழுத்துக்களால் அமைய வேண்டுமா ? கண்ணிமைக்கும் நேரத்தில் அவற்றையும் நடைமுறைப்படுத்தலாம்.

4. ஆவணத்தில் பொட்டுக்குறியிடல் (Bulleted Text) : ஆவணத்தின் சில பகுதிகளை அல்லது வாக்கியங்களை, அவற்றின் முக்கியத்துவம் கருதி, தனிமைப்படுத்திக் காட்டவேண்டியிருக்கலாம். இதற்குப் பல வழிகளிருப்பினும் பொட்டுக்குறியிட்டுக் காண்பிப்பதும் ஒரு வழி. கருவிச் சட்டத்தில் (Tool Bar) இதற்காக அமைந்துள்ள பொத்தானை (button) அம்புக்குறி கொண்டு, அழுத்தி பொட்டுக் குறிகள் தாமாகவே வரும்படிச் செய்யலாம்.

5. படிம அச்சுக்கள் மற்றும் பாணிகள் (Templates and Styles) : அலுவலகக் கடிதங்கள், சுற்றறிக்கைகள் ஆகிய ஆவணங்களில் நிறுவனத்தின் பெயர், முகவரி, தொலைபேசி எண், மின்மடல் முகவரி போன்றவை எல்லாம் மாற்றமின்றி இருக்கும். சொல் தொகுப்பியில் இவற்றை எல்லாம் திரும்பத் திரும்பத் தட்டச்சு செய்ய வேண்டியதில்லை. ஒரு முறை தட்டச்சு செய்து வன்வட்டில் படிம அச்சாகச் (template) சேமித்து வைத்துக் கொள்ளலாம். ஆவணம் ஒன்றைத் தயார் செய்யும் போதெல்லாம் இப்படிம அச்சைப் பயன்படுத்தி உரையை மட்டும் தட்டச்சு செய்து பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும் அறிக்கைகள் தயார் செய்யும்போது தலைப்புகள்/துணைத் தலைப்புகள்/செய்தி உரை ஆகியவற்றை குறிப்பிட்ட எழுத்துவகை/அளவுகளில் அடிக்கடி பயன் படுத்த வேண்டியிருக்கும். இப்படிப்பட்ட நிலையில் பாணித்தாள் (style sheet) ஒன்றைத் தயார் செய்து வைத்துக்கொண்டு சுண்டெலி கொண்டு சொடுக்கி அதனை வரவழைத்து அறிக்கையைத் தயாரிக்கலாம். இப்பாணித் தாளில் ஆவணத்தின் அட்டவணைகளையும், செய்திகளையும் மிக விரைவாக உருவாக்கலாம்.

6. வரைவியல் உருவங்களும் சிறப்பு உருக்களும் (Graphical Images and Special Characters) : தமக்குத் தேவையான படங்களை வருடியின் (scanner) துணைகொண்டோ அல்லது தனி நபர் கணினியில் நிறுவப்பட்டுள்ள பயன்பாட்டு மென்பொருளின் உதவியுடனோ ஆவணத்தின் எந்தப் பகுதியிலும் இணைத்துக் கொள்ளலாம். மேலும் ஒலி/ஒளி ஆவணங்களைக்கூட உரையுடன் இணைத்துக் கொள்ள இயலும். கணினியில் உரையைப் படிக்கும்போதே இவ் ஒலி/ஒளி ஆவணங்களைக் கேட்கவும்/பார்க்கவும் கூடும்.

7. நிரல்வழிப்பட்ட செயல்கள் (Programmed Actions) : பல சொல் தொகுப்பி பயன்பாட்டு மென்பொருள்களில் தன்னியக்க (automatic) செயல்பாடுகளை மேற்கொள்ளுவதற்கான நிரல்கள் (programmes) உருவாக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக மைக்ரோசாஃப்ட் வேர்டில் தன்னியக்க உரை (auto text) என்னும் ஆணைத் தொகுப்பு, அஞ்சல் இணைப்பு (mail merge) ஆகியவற்றிற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. தன்னியக்க உரையின் மூலம் மிக அதிகமாகப் பயன்படும் சில சொற்கள்/தொடர்கள் ஆகியவற்றை எளிதாகக் கொண்டுவர இயலும். ஒரு சொல் அல்லது தொடரின் முதல் சில எழுத்துகளைத் தட்டச்சு செய்தவுடன் முழு சொல்லும்/தொடரும் திரையில் உடனே தோன்றும். அதேபோல் ஒரு குறிப்பிட்ட கடிதத்தை பல பேருக்கு அனுப்ப வேண்டுமெனில் அஞ்சல் இணைப்பு வசதியைப் பயன்படுத்திடலாம். ஒரே ஆவணத்தில் இடம்பெறவேண்டிய ஒவ்வொரு முகவரியையும் தரவு மூலம் (data source) என்பர். முகவரிகளுக்குப் பதிலாக அட்டவணைகள், ஒப்பந்தப் பத்திகள், பொருட்களைப் பற்றிய விளக்க உரைகள் ஆகியனவும் கூட தரவு மூலங்களாக இருக்கலாம். அஞ்சல் இணைப்பைத் தேர்ந்தெடுத்தபின், தேவையான உரையை அதனுடன் இணைக்கலாம். இத்தேவையான உரையை முதன்மை ஆவணம் (main document) என்பர். இவையிரண்டும் இணைந்து உருவாவதை இணைப்பு அச்சு ஆவணங்கள் (merge printed documents) என்பர். இதன் மூலம் ஒவ்வொருவருக்கும் உரிய தனிப்பட்ட ஆவணங்களை எளிதாக உருவாக்கிட இயலும்.

8. மீள்பார்வைக் குறியும், ஆவணங்களை ஒப்பிடலும் (Revision Mark and Document Compare) :

ஒரு ஆவணத்தை இருவர் அல்லது மூவர் சேர்ந்து வடிவமைக்கும்போது, சேர்க்க வேண்டிய மற்றும் நீக்க வேண்டிய பகுதிகளைப் பற்றிய விவரங்கள் ஆவணத்துடன் சுற்றறிக்கையாகத் தரப்பட வேண்டும். ‘வேர்ட்ப்ரோ ‘ போன்ற சொல் தொகுப்பிகளில் மீள்பார்வை செய்ய வேண்டிய பகுதி களைக் குறிப்பதற்கான வசதி உள்ளது. தேவையானபோது வேண்டியவற்றைச் சேர்க்கவோ, நீக்கவோ இயலுவதுடன் மாற்றங்களை உடனடியாகச் செயற்படுத்தவும் முடியும். இதே போன்று ‘ஆவணங்களை ஒப்பீடு ‘ செய்யும் வசதியின் மூலம் ஓர் ஆவணத்தின் இரு வேறு வடிவங்களை ஒப்பிட்டு அவற்றிற்கிடையேயுள்ள வேறுபாடுகளை அறிந்திட இயலும்.

9. மாற்றம் செய்தல் (Conversion) : ஒரு குறிப்பிட்ட சொல் தொகுப்பியில் வடிவமைக்கப்பட்ட ஆவணத்தை வேறொரு நிறுவனம் வெளியிட்டுள்ள சொல் தொகுப்பியில் பார்க்கவோ அல்லது பதிப்பிக்கவோ இயலும் என்று சொல்ல முடியாது. ஏனெனில் ஒரு குறிப்பிட்ட சொல் தொகுப்பியில் உருவாக்கப்பட்ட கோப்பு (file), உரையைத் தவிர்த்து வேறு பல கூடுதல் தகவல்களையும் கொண்டிருக்கும். எடுத்துக்காட்டாக ‘உரை பதிப்பி ‘ (text editor)யில் செலுத்தப்படும் உரை அனைத்தும் .txt என்ற கோப்பில் சேமிக்கப்படுகிறது. இதே உரையை MSWord 6 என்ற சொல் தொகுப்பியில் செருகும் (insert) போது, .doc என்ற கோப்பில் சேமிக்கப்படும். ஒரே அளவுள்ள உரைக்கு இரண்டு சொல் தொகுப்பியிலும் தேவைப்படும் வட்டிடம் (disk space) மிகவும் வேறுபட்டது.

MSWord 97 இல் இதே உரையைச் சேமிக்க இன்னும் கூடுதலான வட்டிடம் தேவைப்படும். மேலும் MSWord 97 இல் உருவாக்கப்பட்ட கோப்பை MSWord 6 இல் பதிப்பிக்க இயலாது. ஆனால் MSWord 6 இல் உருவாக்கப்பட்ட கோப்பை MSWord 97 இல் பதிப்பிக்க முடியும். காரணம் MSWord 97 இல் இதற்கான பயன்பாட்டு நிரல் அமைந்துள்ளது. இவ்வாறு சில சொல் தொகுப்பி பயன்பாட்டு மென்பொருள்களில் வேறோர் நிறுவனம் வெளியிட்டுள்ள சொல் தொகுப்பியில் உருவாக்கப்படும் ஆவணங்களை திறந்து மாற்றுவதற்கும், பதிப்பிபதற்கும்மான மாறுதல் செய்யும் பயன்பாட்டு நிரல் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சொல் தொகுப்பியைப் பயன்படுத்துவது ஒரு சிறந்த திறமையாகக் கருதப்படுகிறது. எனவேதான் கணினிக் கல்வியறிவைப் பரப்புவதில் சொல் தொகுப்பியைக் கற்றுத் தருவது முதலிடம் வகிக்கிறது. ஆனால் இதுவே முழுமையான கணினிக் கல்வியைத் தந்துவிடும் எனக் கூற இயலாது. முன்னரே குறிப்பிட்டது போல் மற்றொரு பயன்பாட்டு மென்பொருளான மேசைப் பதிப்பும் (DTP) மிக முக்கிய பங்கை வகிக்கிறது; வலைப் பக்க (web page) வடிவமைப்பும் மற்றொரு முக்கியமான கணினிப் பயன்பாடாகும்.

***

முனைவர் இரா விஜயராகவன் Dr R Vijayaraghavan

பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி BTech MIE MA MEd PhD

மொழிக் கல்வித் துறை (தமிழ்) Dept. of Language Education (Tamil)

மண்டலக் கல்வியியல் நிறுவனம் Regional Institute of Education (NCERT)

மைசூர் 570006 Mysore 570006.

Series Navigation