கணிதம்

This entry is part [part not set] of 25 in the series 20020106_Issue

கே ஆர் விஜய்


ஏனென்று தெரியவில்லை ?
அப்படியொரு பற்று
கணிதம் மேல்.

சின்ன வயசிலே
பாட்டி சொல்லுவா….
‘தினமும் உனக்கு 10 பைசா தரேன்னு.. ‘
உடனே 20 நாளைக்கு எவ்வளவுன்னு
கணக்குப்போடுவேன்.

கிரிக்கெட் ஆடும் போது கூட
எப்போதும்
ஸ்கோர் போர்ட் அருகே நான் தான்…
‘அவனை விடுடா வேகமாக கூட்டுவாண்டா ‘
என நண்பர்கள் சொன்னால்
வாயெல்லாம் பல்…
ரன்களைக் கூட்டித்தான்
கணிதமே கற்றுக் கொண்டேனோ ?

சின்ன வயசில பலகையில் அம்மா வைக்கும்
காசைத் திருடி திருடி சேமிக்கும் போது
காலை ஒரு முறை மாலை ஒருமுறை என்று
எண்ணி எண்ணி என் கணிதம் சீரானதோ ?

பள்ளியில் கூட கணக்கில் முதல் மதிப்பெண்.
தனிமைக்கு இரையாகும் போதெல்லாம்…
தனியாக சைக்கிள் ஓட்டும் போதெல்லாம்..
மனதுக்குள் சூத்திரங்கள் மட்டும் சொல்லிப் பார்ப்பதுண்டு

பத்தாம் வகுப்பில் மாவட்ட இரண்டாம் மதிப்பெண்
என அறிந்த போது கூட
கணக்கில் எவ்வளவு என்று தான்
முதலில் கேட்டதாய் ஞாபகம்.
சதம் என்று தெரிந்த பின் தான்
சந்தோஷமானேன்…

கல்லூரியில் கூட
மற்ற பாடங்களில் மதிப்பெண் குறைந்தாலும்
கணிதத்தைத் தவறவிட்டதில்லை.

‘கணக்கிலே அவன் புலிடா ‘
என்று கேட்டால் மட்டும்
உள்ளூர ஆயிரம் பறவைகள் பறந்துவிடும்..

இந்த வேலை…கூட…
கணிதத்தின் நன்கொடையே…
கணிப்பொறி தெரியாவிட்டாலும்…
கணிதம் தெரிந்ததால் தான் இந்த வேலை…

இப்படி கணக்கிலே புலியாக இருந்த நான்
இன்று இவளுடன்
வாழ்க்கைக் கணக்குத் தெரியாமல்
தவித்துக் கொண்டிருக்கிறேன்….

***
vijay_r@infy.com
02/01/2002

Series Navigation