கடைசி கிலோ பைட்ஸ் – 6 [ Last Kilo bytes -4 ]

This entry is part [part not set] of 40 in the series 20080124_Issue

கே. ஆர். மணி


சுஜாதா – ‘பாய்ஸின்’ குஞ்சப்பன்

ரொம்ப நாளைக்குபிறகு சுஜாதாவின் பாய்ஸ், டிவியில் பார்க்கநேர்ந்தது.
ரிவர்ஸ் ஸ்விங் போல விக்கெட் எடுக்கும் வசன பந்துகள். நாயகன் ஆடையின்றி வீதியில் ஓடிய வழக்கு நீதிமன்றம் வருகிறது. நீதிபதி சொல்கிறார்.
“குஞ்சப்பன் – இந்தக்கேசுக்கு ரொம்ப பொருந்தமான பேருதான்..”
சைக்கிள் கேப்பில் நக்கல் வசனங்கள் எழுத சுஜாதாவை விட்டால் ஆளில்லை.

ஆள் மாறாட்டங்களும், அங்க சேஸ்டைகளுமின்றி கிரேசியின் வசனங்கள் எடுபடுவதில்லை, பாலகுமாரனோ ரொமாண்டிக் அளவு நகைச்சுவை காட்சிகளில் எடுபடுவதில்லை என்பது என் கணிப்பு. இருக்கின்ற கதாபாத்திரங்களை வைத்தே எவருக்குமே சின்ன வசனம் மூலம் நகைச்சுவை வரவழைப்பது என்பது இலகுவான விசயமன்று. இவரின் மையில் (ரொம்ப பழசே..)இவரது
இண்டெல் சிப்பில் காமெடிக்கென அதிகமாய் RAM போட்டிருப்பாரோ..

இந்தப்படத்துக்கு இதைவிட பொருத்தமாய் வசனம் எழுதியிருக்கமுடியாது என்பது என் காலம்கடந்த எண்ணம். படம் வந்த நேரத்தில், சில ஞானியர் கூட்டம் கும்மாங்குத்து குத்தி படத்தை தலைகுப்புற கவிழ்த்தியது வெறும் வசனத்தை, வக்கிரத்தை மட்டும்
அடிப்படையாக கொண்டதன்று என்பது என் கணிப்பு. மார்க்சிஸ்ட்- லெனிஸ்ட் புரட்சியாளர்களை தவறாக மட்டமாக காட்டியதால் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. விமர்சனம், நடுநிலை எழுத்து, நல்ல சினிமா, மாற்று சினிமா என்கிற பேரில் திட்டமிட்ட கருத்துவன்முறையது. ஹ¥ரோயிசம் எவ்வளவு மோசமானதோ, அதைப்போல இந்த கருத்துக்கொலைகளும் கையாளப்படவேண்டும்.

Freedom of expression – யாருக்கு ?

********************************************************

புலி – முறம் – சந்தர்ப்பம்

புலியை முறத்தால் விரட்டிய தமிழ் தாயை நீங்கள் படித்திருக்கலாம். நம்பியிருக்கலாம். நம்பாமலிருக்கலாம். ஆனால் இந்த செய்தியை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.

மும்பாயில் தனது மகளை அடிக்கவந்த புலியை முறமின்றி அடித்து துரத்தியிருக்கிறாள் அந்த பெண். For a Change, தமிழ்த்தாயல்ல. மராத்தியதாய். பிரதிக்ஸா என்கிற 7 வயது மகளை காப்பாற்றிய துருப்தா என்கிறா வீரமராத்தியதாய். மகள் மீது பாய்ந்த புலிமீது பாய்ந்த்திருக்கிறார். தாங்கள் மட்டுமே தாக்குதல் நடத்தமுடியும் என்று நினைத்துக்கொண்டிருந்த புலிகள் மீது நடந்த தாக்குதலால்
புலிகளுக்கு சேதம். சஞ்சய்காந்தி தேசிய பூங்காவிலிருந்து இப்படியான புலி வெளிவரத்துகள் செய்திகளாகி விடுகின்றன. காடுகளில் மட்டுமே வாழவேண்டிய அவற்றிற்கு நாடுகளும், மனிதர்களும் எதற்கு ? இல்லை மனிதர்களுக்குத்தான் காடுகள் எதற்கு ?

அதுசரி, புலிவிரட்டிய மங்கைக்கு வருவோம். அவள் கண்டிப்பாய் பழைய தமிழ்ப்பாட்டு படித்திருக்க வாய்ப்பில்லையாதலால், பழைய தமிழ் பாட்டுபடித்து வீரம் பெற்றிருப்பாள் என்று எண்ணுவதற்கும் வாய்ப்பில்லையென்பதால், எந்த தமிழ்ச்சங்கத்திலும் அவளுக்கு பாராட்டு கூட்டம் நடத்தமுடியாது. இதுவரைக்கும் தன்னை யாவரும் அடிக்கதுணியாதபோது தீடீரென வந்ததாக்குதலால் புலி பயந்து ஓடிப்போனதாக சொல்கிறது செய்திகள்.

இந்த நிகழ்ச்சி எங்கள் அலுவலகத்தில் பேசப்படும்போது,

‘அடித்து எதிர்க்க எந்த புலியும் ஓடும்’ என்று பொருள்பட சொன்னான் அம்பேத்கார் கட்சியிலிருக்கும் ஜெய் பீம் காம்ளே.
‘அதெல்லாம் ஒரு புலி.. ஒரு அம்மா.. காம்ளே..மொத்தமாய் தாதர்ல அவுத்துவிட்டுச்சுனா அவ்வளவுதான்..’ என்றான் சுமேத்தாக்கரே.

[தாதர்.. தாக்கரேயின் தலைமையிடம்] இருவரும் வார்த்தைகளில் கடித்துகொண்டு இறுகிக்கொண்டார்கள். தொடரும் புகைச்சல், எத்தனை காலமோ. நிலமையை சகஜமாக்க, நான் பழைய தமிழினிச்சியின் கதையை நகைச்சுவையாய் கூறினேன். இரண்டுபேரும் சிரிக்கவேண்டுமேயென சிரித்துக்கொண்டார்கள்.

‘சால மதராஸி .. பாஸ்.’ என்று போனவருடத்தில் திட்டும்போது மட்டும் இருவரும் மனதார இணைந்து கொண்டார்கள். மாய்ந்து மாய்ந்து என் பாஸிஸத்தை(Bossism) எதிர்த்து பக்கம், பக்கமாய் இமெயிலில் அனுப்பினார்கள். அதற்காக இரவு நீண்ட நேரம் கண்விழித்து, தொலைபேசியில் பேசி, இணைந்து குற்றப்பத்திரிக்கைகான கணைகளை பூமி புத்ர – மராத்தி எனும் பேனரில் அவர்களால் தயாரிக்கமுடிந்தது.

யார் சொன்னது, சந்தர்ப்பவாத கூட்டணிகள் அரசியல் மட்டுமென்று. மனிதனின் பிரச்சனைகள், ஆசைகள், பயங்கள் ஒரேயொரு அடையாளத்தாலோ, தத்துவத்தாலோ மட்டும் தீர்க்கமுடியாதவை.

*********************************************************

கண்ணாடித்திரைகள் உடைகின்றன.

விக்ரம் பண்டிட் – சிட்டிபாங்கின் தலைமைப்பொறுப்பையும், நியோகி பெப்ஸியின் தலைமைப்பொறுப்பை எடுத்துக்கொண்டதை முதலாளித்துவ உலகத்தின் நிறுவனத்தளத்தில் ஏற்பட்டிருக்கிற மிகப்பெரிய மாறுதல்களாக பார்க்கிறேன். 80களில் அமெரிக்க நிறுவனங்களில் புலம்பெயர்ந்து மிகப்பிரமாதமாக சாதனை செய்துகொண்டிருந்த இந்தியர்களுக்கு தெளிவாய் தெரிந்தது அந்த கண்ணாடித்திரை. என்னதான் வேலைசெய்தாலும் ஒரு உயரத்திற்குப்பிறகு தலைமைக்கான பதவி தங்களுக்கு தரப்படப்போவதில்லை என்று. தொழில்நுட்ப துறையில் சிறந்து விளங்கிய அவர்கள் மேலாண்மை(Management) என்றுவரும்போது சத்தமின்றி மெளனமாய்
வெளியே தெரியாமல் காயடிக்கப்பட்டு உட்கார்த்தி வைக்கப்பட்டார்கள் என்பது இப்போது பழைய கதை. அதற்கான காரணங்களும் இருந்தது. அப்போதைக்கான நுகர்வோர் சந்தை பெரும்பாலும் வளர்ந்த நாடுகளாகவேயிருந்தன. ஆகவே அந்த சந்தைகளின்
நுட்பங்களை, நுண்ணிய சந்தை கூட்டங்களை (Segment), நுகர்வோரின் மாறும் அலைவரிசைகளை படிக்க, பிடிக்க அந்த
சந்தைகளிருந்து வருவோர்களே தகுதியானவர்கள் என்பது இலகுவான தீர்வாகக்கருதப்பட்டது.

என்னதான் பணம் சம்பாதித்தாலும் தங்களது தோலினால், தாங்கள் வளர்ந்து வருகிற ஆசியப்பகுதியிலிருந்து வந்ததால் மட்டுமே
புறக்கணிக்கப்படுகிறோம் என்பதை தெரிந்துகொண்டே வாழும்போது ஏற்படுகிற நமைச்சலோடு ஒரு சில பத்தாண்டுகள்
அவர்களுக்கு கழிந்தது. வாமன அவதார வலிமைகொண்டிருந்தும் கூர்மா அவதாரத்தின் அளவு மட்டுமே வளரமுடியும் என்கின்றது
அந்த மாயக்கண்ணாடித்திரை. பாவம், கீதையையும், கர்மயோகத்தையும் படித்துவிட்டு ஒரளவு சமாதானத்தோடு வாழ்ந்துவிட்டு
போயினர் அந்த 70, 80களின் புலம்பெயர்ந்த தொழில்நுட்ப மேலாளர்கள்.

மாறின சூத்திரங்கள். புதிய சமன்பாடுகளின் ஜனனம். சுற்றின நிறுவன சக்கிரங்கள். சந்தைகள் பெருத்தன. தோல்களின் நிறங்கள் தாண்டி, திறமை நரம்புகள் புடைத்தன. ஆகாவென எந்த புரட்சியும் எழவில்லையெனினும், கட்டாயமோ, நிர்பந்தமோ, தேவையோ – தெரியவில்லை, விரிந்த நிலத்தில் பரந்த மாற்றங்கள். உடைந்தன கண்ணாடித்திரைகள். வர்க்கக்கோடுகளை வலியின்றி உடைக்கமுடிவதில்லை.

வாழ்த்துகள் விக்ரம், நியோகி மற்றும் பெயர் வெளிவராத பாரதபுத்திரர்களே.. மற்றவர்களின் உலக நிறுவனங்களை ஆளுவது முதல்படி. இந்தியாவை தலையகமாக கொண்டு வளர்ந்து உலகச்சந்தைக்கு சேவை செய்கிற நிறுவனங்களை ஏற்படுத்துவது அடுத்தபடி.
We Shall Overcome, We shall Over.. பாடுவது யார் ?

******************************************************


கம்பெனி வாங்கலையோ, கம்பெனி

ஏணோ அந்த நிறுவன Merger and Acquisation எனக்கு ரொம்ப கவலை தந்தது. எதையோ நமக்கு நெருங்கிய பெண்ணை அதிகமாக பிடிக்காத பணக்கார வீட்டில் கட்டிக்கொடுத்த கசப்பு உணர்வு, பயம், இன்னுமே ஒண்ணுமில்லை என்கிற வெறுமை எல்லாம் கலந்த உணர்வு.

கிங்பிஸர் விமான நிறுவனம், ஏர்டெக்கனை வாங்கியது.

ஏன் கிங்பிஸர், யூபி மல்லையாவை எனக்கு பிடிக்கவில்லை தெரியவில்லை. அவர் வருடாவருடம் வெளியிடும் நீச்சலுடை கன்னிகள் பிடித்தருக்கிறது. ‘தண்ணி’ வியாபாரத்தில் இருந்துவிட்டு போகட்டுமே, ஏன் ஏர்டெக்கனில் கைவைக்கவேண்டும். சகாராவை வாங்கித்தொலைக்கட்டுமே. ஏன் ஏர்டெக்கனில் கைவைக்கவேண்டும். நான் ஏன் இப்படி நினைக்கிறேன் .

ஏர்டெக்கனும் கிங்பிஸரும் ஒருவாரத்திற்கு இல்லை, உண்டு எனப்பேசி அயல்நாட்டு ஸ்டைலில் அவர்களின் திருமணம்
நடைபெற்றது. கிங்பிஸர் என்ற பெரிய மீன், சின்ன மீனை விழுங்கியது. இதெல்லாம் கார்ப்பெரெட்டில சகஸமப்பா.. என்கிற குரல் கேட்கிறது. ‘வாளாமீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் ‘ மெல்ல இந்தியாவில் இந்த விழுங்கல்கள் ஏற்பட்டுக்கொண்டுருக்கிறது, இது ரொம்ப சின்ன ஆரம்பமே என்கிறது கார்ப்பரேட் தவளைகள், தகவல்கள்.

இதற்கு பிறகு ஏர்டெக்கனின் பயணச்சீட்டு விலைகள் ஏறலாம். ஏறியிருக்கிறது. சாதாரண மனிதனுக்கான Simplifly காற்றில் கலகலத்துபோகலாம். கேப்டன் கோபிநாத்தின் கனவு, உழைப்பு எல்லாம் எவ்வளவு தூரத்திற்கு மதிக்கப்படும் என்பது தெரியவில்லை. சீக்கிர லாபமும், அதீத வளர்ச்சியும் மட்டும் மல்லையாவின் கண்களுக்கு தெரியும் நிலையில், அவர் கழன்றுகொள்ளலாம், கழட்டிவிடப்படலாம். யதார்த்தம், காலத்தின் தேவை என்கிற இனிப்பு மருந்து தடவிய ஆலகால விடமாகத்தான் எனக்கு M & A தெரிகிறது. ஹ¥ம். பெரிய நிறுவன இயந்திரங்களுக்கு பயணச்சீட்டின் பணம் மட்டும்தான் தேவை. பயணிப்பவர்களின் ஆழ்மன விருப்பமோ, அபிலாசைகளோயில்லை.

இந்த நூற்றாண்டில் நம்மூர் டாடாவும் வெளி மண்ணில் மிகப்பெரிய விழுங்கல்கள் ஆரம்பித்துவைத்தது. ஏற்கனவே தகவல்
தொழில்நுட்பக்கம்பெனிகள், டிசிஸ், இன்போசிஸ், விப்ரோ ஆகியவை இங்கொன்றும், அங்கொன்றுமாய் சின்ன மீன்களையோ,
அது வளர்வதற்கு தேவையான சந்தை, தொழில்நுட்பம், வாடிக்கையாளர் கொண்ட நிறுவனங்களை தத்தெடுத்து/விழுங்கி/
சாப்பிட்டு/இணைத்து மேலும் வளம்பெறுதல் முதலாளித்துவத்தில் ஒன்றும் புதிதல்ல. Fittest and biggest will survive. பலமானதும்,
பெரியதுமே உயிர்வாழத்தகுதிபெற்றவை என்பது மேற்கத்திய சிந்தனை முதலாளித்துவ நிறுவனங்களின் அடிப்படை DNA. அதற்கு
ஆர்கானிக்/இன் ஆர்கானிக் (Organic/ Inorganic) என்று பல தத்துவமூலாம் பூசும் மேலாணமைத்தத்துவங்கள்.

நிறுவனங்களின் அதீதிவரமான வளர்ச்சி வேகத்திற்கு முன்னால், அது தேவையா, இல்லையா என்கிற குரல் வலுவிழந்து போகின்றன.

*************

மாறாதது என்று ஒன்று ஸேர் மார்க்கெட்டில் உண்டு. அது என்ன ?

மும்பை பங்குச் சந்தை, ச்சை ஸேர் பஸார், மார்க்கெட் விழுந்தது. எழவும் செய்யலாம். P – Note எனப்படுகிற பார்ட்டிசிபேட்டரி நோட் அதன் மூலம் அதிகமாய் வருகிற, வந்த FIIக்களின் பணம், ஜப்பான் மார்க்கெட் சரிந்தது, கீழே நலிந்து விழுகிற
அமெரிக்க பொருளாதாரம் என்று பல காரணங்கள் – பல குருவிகள் உட்கார்ந்தன மரத்தின் மேலே.

எனக்கு தெரிந்து நாலைந்து அதீத விழ்ச்சி, எழுச்சி பார்த்தாயிற்று. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணங்கள். இந்த முறை டிவிக்களின் காரணத்தால் சாண்ட்விச் காரர்களும், பேல்பூரி காரர்களும் கூட பங்குச்சந்தை வீழ்ச்சிக்கான காரணம் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

வாழ்க்கை பயத்தின், பேராசையின், நிச்சயமற்ற தன்மையின் குறியீடு பங்குச்சந்தைத்தெரு. அறிவும், உணர்ச்சியும், அறியாமையும், பயமும், வெறுப்பும் கலந்து கட்டிய மனிதமுகங்கள்.

சூடாக கிடைக்கிற இரண்டு ரூபாய் கடலையும், சாண்ட்விச்சிற்குபிறகான ஓசி உருளைக்கிழங்கும், பொறித்த சிந்தி, ராஜஸ்தான் அப்பளமும் அதன் மீது தடவப்படுகிற பட்டரும், லேசான சூட்டில் அது உருகி ஓடும்போது தொட்டுக்கொள்ள காரமான பச்சை சட்னியும் மாறாதவை. தொடைத்து கொள்ள எந்த கம்பெனியின் பாலன்ஸ் சீட்டோ, ஐபிஓ காகிதமோயிருக்கலாம். பான் மடித்துகொடுக்கிற அந்த காக்காவிற்கு அந்த மார்க்கெட்டை பற்றி ஒன்றும் தெரியாதென்றாலும் கிட்டத்தட்ட ஐம்பது லகரங்களுக்கு மேலே முதலீடு உண்டு. யாரோ சொல்லி, யாரோ எழுதிக்கொடுத்து இவர் எப்போதோ போட்டது. ஆனாலும் அவர் வாழ்க்கை அதே பான், அதே மசாலா, அதே கால் மடிப்பு, சிவப்பு துண்டு, முறுக்கிய மீசை. இந்த எழுச்சியில் போர்வில்லியில் ஒரு வீடு வாங்கிவிட்டதாய்
கேள்வி. ஆனாலும் அதை வாடகை விட்டுவிட்டு அவர் தங்கிய ஒற்றை ரூம் சாலில்தான் அவரது வாழ்க்கை.

அந்த உப்புமாக்காரன் எங்கே போய்விட்டான் என்றுதான் தெரியவில்லை. சின்ன தட்டில் உப்புமா, டால் என்கிற பெயரோடு தண்ணியாய் சூடாய் ஒன்று, பச்சையாய் சட்னி அனைத்தும் கலந்து அது போக மஞ்சளாவும் ஒரு சட்னி. திங்கிற பக்குவம் பெயர் கேட்டுத்தெரிந்து கொள்கிறதில் இல்லை. இப்போது அவனுமில்லை. எங்கே போயிருப்பான்.

“காவ் கயாயே” [ ஊருக்குபோயிட்டான்] எவ்வளவு நாளாய் போயிருப்பான். யாராவது துரத்திவிட்டார்களா..? பங்கு சந்தை நதியில் அவன் என் ஞாபக ருசியில் அருமையான மொட்டு.

உலகம் நிற்பதில்லை. ‘நீர் தோசா’ என்கிற பெயரோடு ஒரு கடைவந்தது. அதிலும் புதுசு புதுசாய் தோசைகள். அதில் ஷெட்டிகள். தோசைகளின் உலகம் ஷெட்டிகளாலானது. அதற்கு வெளியே கடை வத்திருந்த அண்ணாச்சி என்ன ஆனார். அவரின் தோசையைவிட வடை ஆஞ்சநேயர் கோவிலை ஞாபகப்படுத்தும். நல்ல முறுக்கு. ஆர்டர் சொன்னபிறகு அதை இலேசாய் சுடவைத்து தரும் பக்குவம் மெச்சத்தகுதியானது. சாண்ட்விச்சும் அதை பவிசாய் நறுக்கி தருவதில் மும்பாய் மிஞ்ச அந்த கொம்பனுமில்லை.

அந்த ‘ஷா’வை எனக்குத்தெரியும். பிறவி புரோக்கர். அவன் சம்பாதிக்காததும் இல்லை, இழக்காததுமில்லை. மொத்தத்தில் அவன் அதீதமாய் வளர்ந்திருந்தான். சாதாரண சம்பளக்காரன்களின் கனவுகளில் கூட வரமுடியாத வளர்ச்சி, வீழ்ச்சியும்தான். சந்தை மந்தி(வீழ்ச்சி)யாயிருந்தபோது அவன் சம்பாதித்தது வெறும் 18 ரூபாய்தான் ஒருநாளைக்கு. அவன் தின்பது மட்டும் கிட்டத்தட்ட அறுபது ரூபாயிக்கு மேலேயிருக்கும். இந்த தடவை எழுச்சியில் அவன் கிட்டத்தட்ட நாலு வீடுகள் வாங்கி, மூணு கார்கள் வாங்கிவிட்டான். புதுசாய் ஒரு அலுவலகமும் வாங்கிவிட்டான். போன தடவை எழுச்சிபோல அவன் அதிகமாய் ஆடவில்லை. ஆறு மணிக்குமேல் அலைபேசியை அணைத்துவிடுகிறான். சனி, ஞாயிறுகளில் கண்டிப்பாய் குடும்பத்திற்கும், கோவிலுக்கு மட்டும். ஆர்ட் ஆப் லிவிங்கில்
சுதர்சன் கிரியா செய்துவந்தான். அமைதியான சந்தோசத்தில் அவனிருந்ததாக எனக்கு தெரிந்தது.

அவனுக்கு தெரியும் இதெல்லாம் ஒடும்வரையிலும் ஒடும். அதுவரை அனுபவி ராசா அனுபவி.

வெள்ளிக்கிழமை நீண்ட இரவுகளின் அவன் முழு உடல் மஜாஜ் செய்யமட்டும் மூவாயிரம் கொடுத்தான். அவனும் அவளுக்கு
மஜாஜ் செய்து கொள்ளலாம். அந்த கொலாபா திலோத்தமைக்கு அவ்வளவு கொடுத்தது ஒன்றும் அதிகமில்லை. நான் வெளியில் உட்கார்ந்து லாசாராவின் சிந்தாநதியில் படித்துகொண்டிருந்தேன். விலை நூறுரூபாய்தானிருக்கும். ஒருமணி நேரத்தில் அவன் முடித்துவிட்டு வந்தான். களைப்பாய் மகிழ்ச்சியாயிருந்தான். எனக்கும் புத்தகம் பிடித்திருந்தது. இருவருக்கும் பசித்தது. வெளியில் இரண்டு ரூபாய்க்கு காதுவளையம் மாட்டிய மார்வாடியின் கட்டிங் சாய் குடித்தோம்.

அவனுக்கு தெரியும் இதெல்லாம் ஒடும்வரையிலும் ஒடும். அதுவரை அனுபவி ராசா அனுபவி.

NSE வந்ததற்குபிறகும், demat வந்ததற்குப்பிறகும் சந்தையில் மாற்றங்கள் அற்புதமானவை. அதன் தொழில்நுட்பத்தோடு கொஞ்சம் தொடர்பு கொண்டதால், அந்த பங்குச்சந்தை தெருவே பெரியமாற்றத்தை கண்டு அமைதியான ஞானியாய் உட்கார்ந்திருப்பது போலபடும். அங்கு மாறாதது எதுவுமில்லை. கணிப்பொறி டெர்மினலாய் வந்தது, சத்தமான அதன் வியாபாரத்தளங்கள் தொலைந்துபோயின, பேப்பர் கையெழுத்து, போலி சான்றிதழ் என்கிற மிகப்பெரிய வளர்தடை சாத்தன்கள் கரைந்துபோயின சிலிக்கான் காற்றில். BSE எனப்படுகிற மும்பை பங்குச்சந்தையும் காலத்திற்கேற்ப அதன் சட்டையை மாற்றிகொண்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்திகொண்டது. SEBI என்கிற ரிங்மாஸ்டரின் கையிலுள்ள சாட்டையை கொஞ்சம் சட்டைசெய்யத்தான் வேண்டியிருந்தது.

ஊர் உலகத்தில் பங்குச்சந்தை பற்றி பக்கம் பக்கமாய் பேசித்தள்ளுகிறார்கள். வைத்துக்கொள், விற்றுவிடு, இன்னும் வாங்கு,
மியூச்சல்பண்டில் போடு, காத்திரு, கொஞ்சம் வைத்திருந்து மற்றதை வாங்கு, மேலே போகும், இதற்குமேல் கீழே போகுது,
இப்படி நம்பிக்கைகள், அவ நம்பிக்கைகள். காரணங்கள், காரியங்கள். அமைதியாரு என்பார் நிதியமைச்சர், பயப்படத்தேவையில்லை
என்பார் பிரதமமந்திரி. மின்சார வண்டிகளில், பஸ்களில், கடைகளில் அதைப்பற்றிய சதா பேச்சுக்கள்.

அந்த அபிப்பிராயம் எல்லோரையும் அதிசியக்கவைத்தது. BSEயின் முகக்கதவு(Front door) திறந்துவைக்கும்போதெல்லாம்
பங்குச்சந்தை விழுகிறது, அப்போதுதான் அதுவெடிவைத்து தகர்க்க முயற்சிசெய்யப்பட்டது, ஆகவே அந்தக்கதவை
மூடி பக்கவாட்டு கதவை திறந்து வைத்தால் சந்தை மேலேபோகும் என்றார் ஒருவர். இது பரவலாக ஆமோதிக்கப்பட்டு
அதிகமாய் வெளியில் பேசமுடியாத ஒன்று. இரண்டுவாரத்திற்கு முன்னால்வைக்கப்பட்ட Bull – எழுச்சியின் சின்னமாய் காளைதான்
காரணமென்றனர். ஆக மொத்தத்தில் வாஸ்துவும் ஒரு காரணமாயிற்று. எப்போது முகப்புகதவை மூடப்போகிறார்களோ, காளாயை
கழட்டப்போகிறார்களோ தெரியவில்லை. மனிதர்களை போல கம்பெனிகளுக்கும் நல்ல நாள், கெட்டநாள் பார்த்து அதனை வாங்கி,விற்கும் பழக்கமும் கொஞ்சநாளாய் பழக்கத்திலிருக்கிறது. எம்பிஏ படித்துவிட்டு கம்பெனியின் அடிப்படை காரணிகளை ஆராந்து அதை வாங்க, விற்க டெக்னிகல் அனாலிசிஸ் செய்யும் என் நண்பன் வேலை பார்த்த நிறுவனம் அவனுக்கு சின்ன கேபினை கொடுத்துவிட்டு அவர்களது ஜோசியருக்கு அவனது கேபினை கொடுத்தது. முதலில் கஸ்டப்பட்டு புலம்பிக்கொண்டிருந்த அவன், இப்போது கம்பெனியின் எல்லா ஆராய்ச்சியும் முடித்தபிறகு ஜோசியர் தத்தாத்ரேயருக்கு போன்பண்ணி கேட்டபின் தான் எந்த பெரிய ஆர்டரே செய்கிறான். மார்க்கெட் விழுந்த இரண்டு நாட்களுக்கு அவனது நம்பரும், தத்தாத்ரேயர் நம்பரும் கிடைக்கவேயில்லை.

இந்த பங்குக்காரத்தெருவில் மாறாதது ஒன்றுதான் மனிதனின் மனம். அறவுணர்வு, பேராசை, பயம், நிலைத்தன்மையின்மை,
யதார்த்தவாதம், பின் நவினத்துவம் என்று எல்லா பஜனைகளும் இந்த பங்குச்சந்தை தெருவில் இருப்பதாக படுகிறது.
உங்களுக்கு ? ..


mani@techopt.com

Series Navigation