கடித இலக்கியம் – 46

This entry is part [part not set] of 35 in the series 20070222_Issue

வே.சபாநாயகம்கடிதம் – 46

திருப்பத்தூர்.வ.ஆ.
22 – 8 – 96

அன்புமிக்க சபா அவர்களுக்கு,

வணக்கம்.

பேத்தி பிறந்த செய்தி அறிந்து நண்பர்கள் அனைவரும் பெரு மகிழ்ச்சி அடைந்தோம். தண்டபாணியும் ஆறுமுகமும் கூட தங்களுக்கும் கடிதம் வந்துள்ளதைத் தெரிவித்தனர்.

உடனடியாகப் பதில் எழுதத்தான் உத்தேசித்தேன். வெண்பாவில் குழந்தையை வாழ்த்தலாம் என்று தோன்றியது. அந்த வேளைக்குக் காத்திருந்ததில் இவ்வளவு தாமதமாகி விட்டது. மன்னிக்க வேண்டுகிறேன்.

அகிலனுக்கும் வேதத்துக்கும் எங்கள் சந்தோஷத்தையும் ஆசீர்வாதத்தையும் கூறுங்கள்.

‘அகிலத்து வேதத்தின் ஆழ்ந்த உரையாய்
மகிழ்ந்திங் கவதரித்த மகளே! – புகழ்சேர்
மணியாம் உனக்குன் மரபே அமையும்
அணிபிறவும் நீயணி வாய்!’

‘குழந்தையர்க் கெல்லாம் குழந்தைகள் தோன்றும்
அழகிதின் உண்டோ அழகு? – குழந்தாய்!
கலக்கக் கலக்கக் கவின்பெறும் வண்ணத்(து)
இலக்கண மாய் நீ இரு!’

வைஷ்ணவிக்கு வரன் இன்னும் அமையவில்லை. சரசுதான் மிகவும் கவலைப் பட்டுக்கொண்டிருக்கிறாள்.

சிவகுமார் SPICல் இருந்து ஏப்ரல் 30ஆம் தேதி ராஜிநாமா செய்து விட்டான். SQUARE – D என்கிற நந்தனத்தில் உள்ள ஒரு பன்னாட்டுக் கம்பனியில் (Software consultancy) சேர்ந்துவிட்டான்.

ஜுன் 23ல் மருமகளின் வளைகாப்புக்கு நாங்கள் சென்னை சென்று திரும்பினோம். ஸெப்டம்பர் 6 அல்லது 7 தேதியில் பிரசவத்துக்கு நாள் குறித்திருக்கின்றனர்.

JK வை ஜூலை மாத ஆரம்பத்தில் திருச்சியில் சென்று பார்த்ததுதான். அடுத்த வாரம்தான் சென்னை சென்று பார்க்க வேண்டும். அல்லது அவரைத் திருப்பத்தூருக்கு அழைக்க வேண்டும்.

எல்லா விவரங்களையும் விளக்கமாக எழுதத்தான் ஆசை. கடிதம் எழுத இன்னும் தாமதமாகிவிடுமே என்கிற ஜாக்கிரதையினால் இவ்வளவோடு நிறுத்துகிறேன்.

– தங்கள்
பி.ச.குப்புசாமி.


v.sabanayagam@gmail.com

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்