கடித இலக்கியம் – 37

This entry is part [part not set] of 33 in the series 20061221_Issue

வே.சபாநாயகம்கடிதம் – 37
திருப்பத்தூர்,
23-10-89
அன்புமிக்க சபா அவர்களுக்கு,

வணக்கம்.

சமீபத்தில் ஒருமுறை JK ”இங்கே இருப்பவர்களில் யாருக்கும் இல்லாத அதீத ராமகிருஷ்ண பக்தி உனக்கு இருக்குமேயானால் அது ஒழிக!” என்றார்.

நான் சற்றுத் திடுக்கிட்டேன். ‘இங்கே இருப்பவர்களில் யாருக்கும் இல்லாத எந்த பக்தி எனக்கு இருக்கிறது? அப்படி எதுவும் இல்லை. எல்லாரிடமும் இருக்கும் எல்லா பக்தியிலும் கலந்து பிசைந்த ஏகப் பேருண்டையின் ஒரு விள்ளல் என்னிடம் இருக்கிறது. அவ்வளவுதான். எனது பக்தி பூராவும் எனக்குப் பிறர் கொடுத்தது. நான் சம்பாதித்ததை நான் இழக்கத் துணிவேன். பிறர் எனக்குத் தந்ததைப் பறிகொடுக்க மாட்டேன்…………..எனக்கும் எந்த பக்தியும் இவர்களுக்கு இருக்கும் மாபெரும் பக்தி
யின் சாயல்தான்……………’ என்றெல்லாம் சமாதானம் செய்து கொண்டேன்.

கடந்த 1510-89 ஈரோடில், JK வின் ‘புதுச் செருப்பு கடிக்கும்’ விசேஷப் படக் காட்சியும், அன்று மாலை நேரு நூற்றாண்டு விழாப் பொதுக்கூட்டமும்.

இந்தச் சந்திப்பில் JK சொன்னார்:

அவரது மனைவியிடம் ‘வாழ்க்கை அழைக்கிறது’ என்னும் அவரது நாவலை மட்டும் படிக்க வேண்டாம் என்று சொல்லியிருந்தாராம். (பக்குவப் படாத பருவத்தில் எழுதியது என்று அவருக்கு நாணம்). ஆனாலும் அவர்கள் அதைப் படித்து விட்டார்
களாம். “நான் படிக்க வேண்டாம் என்று சொல்லியும் ஏன் படித்தாய்?” என்று JK கேட்டாராம். “ஏன் என்றால் என்ன பதில் சொல்வது? கடவுளை எனக்குக் காட்ட முடியுமா என்று எல்லாரையும் கேட்க விவேகாநந்தருக்கு ஏன் தோன்றியது?” என்று அவர்கள் மறுமொழி சொல்ல, விஷயம் நமது ஆர்வத்துக்குகந்த இடத்தைத் தொட்டி ருக்கிறது. JK அவர்களின் மனைவியார் சொன்னாராம்: “உங்களுக்கும் ராமக்¢ருஷ்ணருக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது!”

– இதைச் சொல்லி JK, “குப்பா, அப்போது உன்னை நான் நினைத்துக் கொண்டேன்” என்றார். எனக்கு எத்தகைய அற்புத உணர்ச்சி உண்டாகியிருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. ஆனாலும், நாம் பெரிய ராமகிருஷ்ண பக்தர் என்று
நாம் பிலுக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லதே. அவரை நாம் உயிர் வாழும் காலம் தோறும் நினையாதிருக்க யாரால் இயலும்? நாம் எல்லாரும் தயக்கமின்றி ஸ்ரீராமகிருஷ்ணர் புகழ் ஓதுவோமாக. அவரது க்யாதியே எஞ்ஞான்றும் பரவுவதாக.

இந்தமுறை அப்புறம் நான் JKவுக்குச் சொன்னேன்:

“உங்களை நாங்கள் பருவந்தோறும் வெவேறு பாத்திரமாகப் பார்த்திருக்கிறோம். பாரதியாகப் பார்த்தோம். ஏன், பரமசிவனாகக் கூடப் பார்த்துவிட்டோம். அவ்வாறு இப்போது ராமகிருஷ்ணராகப் பார்க்கிறோம். இவ்வளவு தானே தவிர…….(இதன் நடுவில் அவர் ஏன் ராமகிருஷ்ணராகத் தெரிகிறார் என்ற விஷயத்தையும் சொன்னேன் – அந்த அதியற்புத சம்பாஷணை………. .பேச்சொழுங்கு, கிளைபடரும் சுவை மிக்க கதைகள் …….பேசப்பேசக் convince ஆக்கும் அந்த அதிசயக்கலை ……)
உங்களை ஒரு சிமிழுக்குள் அடைத்து விடவேண்டும் என்பதற்காக ராமகிருஷ்ணர் என்று கூறவில்லை” என்று நயமாகத் தெரிவித்துக் கொண்டேன்.

“நீங்க அடைச்சிடுவீங்க என்று இல்லை அப்பா, நான் அடைஞ்சிடக்கூடாது என்பதற்காக……..” என்று JK சொன்னார்.

இந்த இடத்துச் சம்பாஷணையில் எனக்கு ஒரு தேவரகசியத்தின் குரல் கேட்டது.

(JK வோடு நிகழ்ந்த சில அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிற போது, அவற்றை விளம்பரப் படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற நோக்கில் அவை பகிர்ந்து கொள்ளப்படவில்லை என்று நம்புகிற முதல் ஆளாகத் தாங்கள் இருக்க வேண்டும் என்பது என் விருப்பம்.)

இவரை ராமகிருஷ்ணரோடு ஒப்புமைப் படுத்துகிற எங்கள் நேர்மையான துணிச்சலை நன்பர்கள் சிலர் நாங்கள் தனியே பேசிக் கொண்டோம். உலகை ஏமாற்றுவதற்காக ராமகிருஷ்ணரோடு ஒரு மனிதரை ஒப்பிடவேண்டுமென்றால்,அதற்கு JK வினுடையது போன்ற ஒரு personality யையும் அதன் வாழ்முறையையும் தேர்ந்தெடுக்கிற ஓர் அஞ்ஞானியைக் கற்பனை செய்ய இயலுமோ? (contrast முறையிலும் சௌந்தர்யம் உதயமாவதைக் கவனம் கொள்க)

வீட்டில் தற்போது நானும் சரசுவும் பாப்பாவும் மட்டும்தான் இருக்கிறோம்.போக, ஏஞ்சல் நாயும் இரண்டு பூனைக்குட்டிகளும் உள்ளன. வீட்டை விட்டு வருவதே பெரிய கஷ்டம். இல்லையேல், நாங்கள் வந்து அங்கே பாப்பாவைப்
பார்ப்போம்.

சில விஷயங்களை நினைத்துச் சும்மா விடுவது, சும்மா விடுவது ஆகாது! அவற்றை அமரத்வத்தின் வர்ணத்தில் தோய்த்து எழுதுவதற்கு நிகராகும் அவ்வாறு நினைப்பது.

தாங்கள் இனி எந்நேரத்திலும் வரலாம். இதுதான் சுருக்கமான பதில். தங்கள் வருகையைக் கொண்டாடுவதற்கு சில கனவுகள் வைத்திருக்கிறேன். நடுவில் ராமகிருஷ்ணர் பற்றியும் பேசலாம்.

தங்கள்,
பி.ச.குப்புசாமி.


Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்