கடித இலக்கியம் – 36

This entry is part [part not set] of 31 in the series 20061214_Issue

வே.சபாநாயகம்


கடிதம் – 36
திருப்பத்தூர்.வ.ஆ.
8-4-88
அன்புமிக்க சபா அவர்களுக்கு,

வணக்கம்.

வாழ்வில் நிகழ்ந்து கொண்டிருக்கும் புதிய விஷயம் – ஆனால் ஒரு புராதன விஷயமும் கூட – ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் தான். ராமகிருஷ்ணர் ஒரு வரி கூட எழுதி எதையும் உலகுக்கறிவித்தவர் அல்லர். தன்னைச் சூழ்ந்திருந்தவர்களிடம் அவர்
பேசியதே பெரியதோர் உலகச் செய்தி ஆயிற்று.

ஆனால், அன்பு செலுத்துவதில் தான் அவர் ரகஸ்யம் பூராவும் அடங்கியிருந்தது. நான் இதுகாறும் கண்ட உலக மாந்தர் இடத்தே, எவர் இடத்தும் அன்பு அமுதப் பிரவாகமாகப் பொங்கி வழிந்ததெனில், அது ஸ்ரீராமகிருஷ்ணரிடத்தே தான்!

அந்த அன்பின் சுவையை நான் மாந்த ஆரம்பித்து விட்டேன். உங்கள் தோட்டத்தில் நின்று, ” எண்ணற்ற எனது முன்னோர்களையும் இனி வரப்போகும் ஏராளமான சந்தததிகளையும் ஒருங்கே சேர்ந்து கண்டு உடன் நிற்பது போல” உணர்ந்தேனே அப்போதே நான் இறையருளால் அன்பு பற்றிய இந்த மாபெரும் போதத்துக்கு ஆட்பட்டிருந்தேன் என்பது நன்கு புரிகிறது. அப்புறம், இந்த இடைக்காலத்தில், எனது ஆற்றல், அறிவு, உணர்ச்சி, கற்பனை, ஞானம், தெளிவு என
எல்லாமே இந்த அன்பு கலந்து இருமடங்கு மும்மடங்கு வளர்ச்சி பெற்றன ஸ்ரீராமகிருஷ்ணரால்!

போகப்போகப் புறச்செயல்கள் ஒடுங்குகின்றன. அகத்தினுள் ஆழ்ந்த குழப்பங்கள் ஆரம்பமாகின்றன.

உங்களோடு உடனே ஒருபொழுது பேசி மகிழ்ந்தால்தானே, வந்த மங்கலச் சேதிக்குச் சரியான மறுமொழியாகும்? அ·தின்றி, எழுதுதில் என்ன உயிரிருக்க முடியும் என்று எண்ணினேன் போலும்! தங்களது அதீத – அநியாய – ஏக்கம்,
எழுத்துக்கும் உயிருண்டு என்கிற உண்மையை எனக்குச் செவிட்டில் அறைந்து கற்பித்தது. அதனால்தான் துணிந்து கிறுக்குகிறேன்.

நெடுநாள் அடைத்து நிற்கும்! அப்புறம் அதன் உச்சத்தில் புழுங்கும்! பிறகு சிறிது கசிந்து போக்குக் காட்டும். அப்புறம் பிரவாகமாக அடித்துப் பெய்யும். உங்கள் ஊரில் இப்படி ஒரு மழையைப் பற்றி உங்கள் பழைய கடிதமொன்றில் ஒருமுறை எழுதி, அதை என் கடிதத்துக்கே உவமையாக்கி இருந்தீர்கள்.

தகிக்கும் உலகுக்கு அப்படி ஒரு பெருமழை வரும் பொருட்டு, ஒரு கடித மழை பொழிந்து பூஜிப்பது என்று தீர்மானித்துவிட்டேன்.

சந்தித்துக் கொண்டாலும் – அதுவன்றி நினைத்துக் கொண்டாலும் மகிழ்கிற பேறுடைய மாந்தர், அவர் அவ்வாறு குழுமியதே அவர் பாக்கியமும் பாக்கியத்தின் பயனும் அன்றோ? நாமெல்லாம் சேர்ந்தது சந்தித்தது அறிந்தது பிரிந்தது எல்லாம் தெய்வீகமான விஷயங்களே!

எழுதுகிறபோது – சில பொழுது நான் பிதற்றுகிறேனோ என்ற சங்கை வந்து விடுவதுண்டு. அப்படி நின்ற கடிதங்கள் ஐந்தாறு தேடினால் கிடைக்கும். எனவே, எழுதுவது எழுதாதிருப்பதின் வித்தியாசத் திரை கிழிந்து கீழே வீழட்டும்.

மனம் புண்படுவதா? அந்த இதயத் துர்ப்பலம் யாருக்குண்டு? “நைதத் த்வய் உபபத்யதே:” என்று கீதை சொல்வதைக் கற்றுக் கொண்டு, மனம் புண்படுவது என்கிற இதய பலவீனத்துக்கு நான் எப்பொழுதும் ஆட்படுவதே இல்லை! நான் பலவீனன்,
நான் பாவி, நான் துக்கிக்கிறேன் என்று சொல்வதே பெரிய பலவீனம், பெரிய பாவம், பெரிய துக்கம் – இதனினும் பெரிய கொடிய பலவீனமும் பாவமும் துக்கமும் வேறில்லை.

இதை அறிந்து கடந்துவிட்டதாக நான் ஒரு தெய்வீக அகம்பாவம் கொண்டிருக்கிறேன்.

நான் கண்ட ருசிகளில் மனம் இனி சலிப்பதென்பதும் களைப்பதென்பதும் தெவிட்டலென்பதும் இல்லை. ஓர் உன்னத உறவை ஒரு மனப்புண்ணின் மூலஸ்தானமாக்கும் மடமை, என்னுள் இருக்க இடமில்லை. இது இனி எஞ்ஞான்றுக்கும் சேர்த்து அறிவிக்கப்பட்டது.

தங்கள் – பி.ச.குப்புசாமி.

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்