கடித இலக்கியம் -43

This entry is part [part not set] of 29 in the series 20070201_Issue

வே.சபாநாயகம்


(‘சந்திரமௌலி’ என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)
கடிதம் – 43

திருப்பத்தூர்.வ.ஆ.
13-10-92
அன்புமிக்க சபா அவர்களுக்கு,

வணக்கம்.

வந்ததிலிருந்து பலமுறை எழுத நினைத்தேன். ஒவ்வொரு முறையும், அத்தகைய உயர்ந்த காரியத்துக்கு உகந்த மனநிலை இப்பொழுது இல்லையே என்று ஒரு நொண்டிச்சாக்குக் கிடைக்க, அம்முயற்சி தவிர்ந்து போயிற்று.

இன்று திருப்பத்தூரில் அடைமழையின் காரணமாக, ஊரும் இந்த வீடும் இரவு எட்டு மணிக்கெல்லாம் அடங்கிப் போய்விட்டது. நான் ஓர் அறையுள் தனியாக அகப்பட்டுக் கொண்டு விட்டேன். உறக்கம் வரமாட்டேனென்கிறது. தஙகளுக்கு நம் பழைய நாட்கள் போல, எழுதுவதற்கு இது உகந்த சூழ்நிலை என்று தைரியங் கொண்டுவிட்டேன்.

தங்களிடம் அதிகம் பேச முடியவில்லையே தவிர, அகிலனின் கல்யாணத்தை நாங்கள் நன்கு அனுபவித்தோம். கால யந்திரம் ஒன்று கிடைக்கப் பெற்று நமது முன்னோரின் சமேதராய் நாங்கள் அங்கு – நான் அங்கு, சஞ்சரித்தேன். என்னோடு இருந்தவர்களும் என்னோடு அங்கெல்லாம் வந்தார்கள். எங்கள் மனநிலைகள் அகிலனுக்கு மகத்தான ஆசிகள் ஆகுக என்று நான் கோயிலில் போய்ப் பிரார்த்தித்துக் கொண்டேன்.

ஒரு மாபெரும் கடமையை முடித்த ஓய்வில் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

-திருமணத்திற்கு வருகிறபோது, வழியில் நான் ஆறுமுகம் கொண்டு வந்த ‘ஏரெழுபது’ படித்துக் கொண்டு வந்தேன். இத்தகைய பாடல்கள் பெற வேளாளர் குடி எத்தகைய பாக்கியம் செய்தது என்று வியந்தேன். திருப்பத்தூரில் பஸ் புறப்பட்ட உடனேயே நான் படிக்க ஆரம்பித்தேன். அது திருமண ஊர்வலம் கிளம்பு முன் நாதஸ்வர ஓசை கிளம்பியது போல் தொனித்தது.

வாழ்க. புறப்பொருள்கள் கொண்டும், புற நிகழ்ச்சிகள் இயற்றியும் எங்கள் ஆசீர்வாதத்தைப் பூரணமாகத் தெரிவிக்க இயலவில்லை. சோழர் படை நடந்த மண்ணில், கம்பன் வாழ்ந்த காலம் முதலாய், தங்கள் முன்னோர் இயற்றிய பெருமைகளை எல்லாம் நேருறக் கண்டவர் போல் நாங்கள் நெஞ்சு நிரம்பினோம். புதுமணத் தம்பதியர்க்குப் பல்லாண்டு கூறுகிறோம்.

தாங்கள் எப்பொழுதும் போல் இளமையாய் இருக்கிறீர்கள். பரபரவென்று செயலும், படபட வென்று பேச்சும், வாயிலே வந்து வெளியிலே விழுகின்ற மனமுமாக எப்பொழுதும் போல் திகழ்ந்தீர்கள்.

– தாங்கள் எங்களுக்கு அமர்த்திக் கொடுத்த அறை! சோழமண்டலத்தின் சமவெளிக் காற்று அலைஅலையாகப் பரவிவந்த அந்த மொட்டை மாடி, ஆண்டுகளின் இடைவெளியிலேனும் அவ்வப்பொழுது ஒரு ஞாபகார்த்தம் போல் அங்கு வந்து தங்க
வேண்டும் என்கிற ஆசையைத் தோற்றுவித்தன. ஆறுமுகமும் அதை அங்கீகரித்தார். அது ஒரு சாதாரண லாட்ஜ் வாசம் போல் எங்களுக்குத் தோன்றவில்லை.

-அந்த அனுபவத்திற்கு மரியாதை செலுத்தும் வண்ணம், நாங்கள் மறுநாள் இரவு, வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து திரும்பி வந்து, மறுபடியும் அதே லாட்ஜில் அடுத்த அறையில் தங்கினோம். அறை தான் வித்தியாசப் பட்டது. ஆகாயமும், அடித்த காற்றும், ஆட்களின் மனோபாவமும் அகிலனின் திருமணத்துக்கான ஆசிகளும், நானும் ஆறுமுகமும் பேசின பேச்சுக்களின் பொருளும், ஓர் உற்சாகமான பொழுதின் உள்ளடக்கங்கள். பூராவும், தங்களால் என்கிற அடிப்படை இழையும் மாறாமல் அப்படியே இருந்தன.

எங்கள் சந்தோஷங்கள் பூராவும் ஆசிகளாக உருமாறி அகிலனுக்குப் போய்ச் சேரக் கடவது என்று நான் அப்பொழுதே நினைத்துக் கொண்டேன்.

கடிதம் என்பது ஒரு தகவல் பரிமாற்றுச் சாதனம் என்பதை மறந்து, அதை நாம் எழுதும் கதை அல்லது கட்டுரை அல்லது புத்தகம் என்று கருதுகிற காரணத்தால்தான் அதை நாம் இப்போதெல்லாம் எளிதில் எழுத முடிவதில்லையோ
என்று நான் யோசிக்க ஆரம்பித்திருக்கிறேன். அதிலும், கடிதம் எழுதாக் கொடுமையைத் தங்களுக்கு எவ்வளவு இழைத்து விட்டேன் என்கிற குற்ற உணர்ச்சியும் பெருகுகிறது. சில நேரங்களில், நீளமாக ஒரு கடிதம் எழுதுவதைவிட, நேரில் ஒரு visit செய்து விடுவது சுலபமாகவும் தெரிகிறது. எல்லாவற்றின் காரணமாகவும், தாங்களும் விரைவில் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறப் போவதாலும், நமது கடிதங்களையும் நேருறக் காணல்களையும் அதிகப் படுத்திக் கொள்வதற்குக் கடவுள் நம்மை அனுமதிக்கப் பிரார்த்திக்கிறேன்.

– தங்கள்
பி.ச.குப்புசாமி.


v.sabanayagam@gmail.com

Series Navigation