கடிதம் – மார்ச் 4,2004 – இலக்கிய விவாதங்களும் எல்லைமீறல்களும் – இன்னும் சில சந்தேகங்கள்

This entry is part [part not set] of 47 in the series 20040304_Issue

பித்தன்.


நண்பர் ஜெயமோகனுக்கு,

வணக்கம். உங்களின் ‘இலக்கிய விவாதங்களும் எல்லைமீறல்களும் ‘ கட்டுரை படித்தேன். மிக அருமையான கட்டுரை.

மிக விளக்கமாகவும், அலசி ஆராய்ந்தும் எழுதியுள்ளீர்கள். இது தொடர்பாக நான் எழுதியிருந்த கடிதத்தை திண்ணை

முதலில் வெளியிடவில்லை. சில கேள்விகளுக்குப்பின், பல நீக்கங்களுடன் பின்னர் வெளிவந்தது. அவர்களுக்கு என் முதல் நன்றி. இல்லையேல் இப்படிப்பட்ட ஒரு கட்டுரை வெளிவந்திருக்காது. என் கடிதத்தின் நோக்கத்தை – இலக்கிய பூசல்கள் பற்றிய சாதாரண வாசகர்களின் வருத்தத்தை, கோப நிலையை – நீங்கள் புரிந்துகொண்டு பின் அதற்கேற்ப இக்கட்டுரையை எழுதியிருப்பதாகத் தெரிகிறது. உங்கள் புரிந்துகொள்ளலுக்கும், கட்டுரைக்கும் நன்றி.

உங்கள் கட்டுரையை 3 தடவைகள் படித்துவிட்டேன். அப்புறம்தான் என்னால் சிறிதாவது விளங்கிகொள்ள முடிந்தது. படித்தபின் என் கேள்விகளுக்கான பதில்கள் கிடைத்துவிடும் என்று எதிர்பார்த்து நடக்கவில்லை. சில அடிப்படைக் கேள்விகள் அப்படியே இருப்பதோடு, மேலும் சிலக்கேள்விகளும் தோன்றிவிட்டன. உங்களிடம் மீண்டும் விளக்கம் கேட்கும் முகமாகவோ அல்லது என் மனக்கேள்விகளை வெளியில் துப்புவதற்காகவோ மீண்டும் இங்கே எழுதிக்கொண்டிருக்கிறேன். உங்கள் கட்டுரையை போல கோர்வையாகவோ, ஆழ்ந்த விளக்கங்களுடனோ இந்தக் கட்டுரையை வடிவமைக்கவில்லை. ஒரு சாதாரணா வாசகனின் நிலையிலிருந்து தோன்றிய எதிர்வினைகளாகவே எழுதுகிறேன்.

மிக அருமையான உங்கள் கட்டுரை ஒரு பக்கத்து விளக்கமாகவே இருக்கிறது. ஒரு எழுத்தாளன் என்ற முறையில் இலக்கியவட்டத்தில் காணப்படும் அரசியல்கள், சண்டைகள், சச்சரவுகள், பூசல்கள், விவாதமீறல்கள், கீழ்த்தரமான வசைபாடுகள் மற்றும் பொறாமைகள் போன்றவற்றை விளக்கி, அது ஏற்படக்கூடிய சூழல்களை விவாதித்து, இந்தக் காரணங்களால் இவை நடைபெறுவதை தடுக்கமாட்டோம் என்று சப்பைக்கட்டு கட்டும் எழுத்தாளர் பார்வையாகவே இருக்கிறது. என் கேள்விகள் ஒரு சாதாரணா வாசகன்/விமர்சகன் என்ற நிலையிலிருந்து எழுப்பப்படுகிறது. ஒரு வாசகனின் பார்வையில் எழும் கேள்விகளையே முன்னால் வைத்திருந்தேன். அதுபோன்ற இன்னும் சில கேள்விகளையே இங்கும் வைக்கிறேன்.

இந்த கருத்தாக்கத்தை ஒரு விமர்சகன் என்ற நிலையிலிருந்து பார்த்திருந்தால் இன்னும் சில வேறுபாடுகளை நீங்கள் கண்டிருக்கலாம் என்று கருதுகிறேன்.

கம்பன் காலத்திய சண்டைகளும், பாரதி காலத்து பூசல்களும், இராமலிங்க அடிகளார் காலத்து சமய சண்டைகளும் விமர்சகர்கள் அறிந்ததே. உங்கள் கட்டுரையில் அதைக்கண்டவுடன் எனக்கு தோன்றிய முதல் கேள்வி, ‘நாம் இன்னும் கம்பன் காலத்திலேயே இருக்கிறோமா ? ‘ என்பதே. நாம் இன்னும் வளர்ச்சியடையவே இல்லையா ? (evolve). மனிதன் எவ்வளவோ வளர்ச்சிக்கண்டுவிட்டான். நாகரிகங்கள் வளர்ந்துவிட்டன, நாடுகளுக்கு இடையேயான இடைவெளியும் காலமும் குறைந்து, உலகம் முழுமையயும் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்துவிட்டோம். இலக்கியவாதிகள் மட்டும் இன்னும் மாறாமல் கற்காலத்திலேயே இருக்கிறார்களா ? நாகரிகமும் பண்பாடும் வளர்வதில் இலக்கியவாதிகளுக்கு ஒரு சம்பந்தமும் இல்லையா ? அவைகள் பற்றிய ஒரு மதிப்பீடும், மரியாதையும் இல்லையா ? மற்றொரு முக்கியமான கேள்வி, வரலாறுகளில் காணப்படும் பழைய சச்சரவுகள், உங்களின் (எழுத்தாளர்களின்) இப்பொதைய சண்டைகளுக்கு அங்கீகாரம் அளித்துவிட்டதாக நினைக்கிறீர்களா ? இந்த பழைய சச்சரவுகளைக் காரணங்காட்டி, உங்கள் சண்டைகளை நீங்கள் நியாயப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம் ?. அதைப்பற்றி வாசகர்கள் கேட்கக்கூடாது என்பதுபோல நீங்கள் எழுதியிருப்பது வியப்பாக இருக்கிறது. இருபது லட்சம் (2 மில்லியன்) யூதர்களைக் கொன்று குவித்த ஹிட்லரின் வரலாற்றைக் காரணங்காட்டி யாராவது இப்போது இனப்படுகொலைகளை செய்யலாகுமா ? அப்படி ஏதும் நடந்தாலும் கூட யாரும் கேட்கக்கூடாது என்கிறீர்களா ? வரலாறுகளில் இருந்து நாம் ஒன்றுமே கற்றுக்கொள்ளவில்லையா ? புதியதாக தவறு செய்வதற்கு பழைய வரலாறுகளைக் காரணங்காட்டுவது எந்த விதத்தில் நியாயம்.

மேற்கண்டவை ஒரு கருத்தோட்டமே. மற்றது, கம்பன் காலத்திய இலக்கிய கூறுகளை இந்த காலத்துக்கு ஒப்பிடமுடியுமா ? என்பது. அப்போது தமிழ்ப் புலமைக்கும், இலக்கணத்துக்கும், கருத்துக்களுக்கும்தான் முக்கியத்துவம் இருந்திருக்கிறது. நீங்கள் கூறும் மற்றக் காரணிகளையும்விட இதுதான் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறேன். வரிசையறியாமல் பரிசு வழங்குவது, சங்கப்பலகை கொண்டு மதிப்பீடுகள் கண்டது எல்லாம் தமிழை மையமாகக்கொண்டே எழுந்துள்ளது. இப்போது இலக்கியம் விரிந்துவிட்டது. வார்த்தைக்கு வார்த்தை வால்டேர், மார்க்ஸியம், இலத்தீன் அமெரிக்க இலக்கியம் என்று எழுத்தாளர்கள் பேச ஆரம்பித்துவிட்டார்கள். எனவே இருவேறு காலகட்ட இலக்கிய சூழல்களை ஒப்பிடுவது சரியாக இருக்காது என்பது என் கருத்து. இப்போது யார் வேண்டுமானாலும் எழுதலாம். வேற்று நாட்டுப் படைப்புக்களைப் படித்துவிட்டு, காப்பியடிப்பவர்கள் கூட தங்களை இலக்கியவாதிகள் என்று சொல்லிக்கொள்கிறார்கள்.

அப்போது அப்படியில்லை. தமிழ் புலமை வேண்டும் அப்புறம்தான் நீங்கள் எழுதியதையே படைப்பாக ஒத்துக்கொள்வார்கள்.

புலமைமையை மட்டும் கருதிய படைப்புகள்/படைப்பாளிகள், யார் அதிக புலமையுடையவர்கள் என்று கர்வம் சிந்தனையில் புகுந்துகொண்டதால், குழுக்களாக பிரிந்து சண்டையிட்டுக்கொண்டதும் நடந்திருக்கின்றன. இப்போது ஒரு புலமையும் தேவையில்லை. அப்பொதைய இலக்கியங்களும் இப்போது இலக்கியங்களாக கருதப்படுபவையும் முற்றிலுமாக வேறாக இருக்கின்றன. எனவே இந்த ஒப்பீடுகள் தேவையில்லாதது. அதேபோல சமயம் என்று வந்துவிட்டாலே கூடவே பூசல்களும் தோன்றிவிட்டன என்பதும் உண்மையே. தங்கள் கருத்துக்களின்பால் கொண்ட அதீத ஏடுபாடு பின்னர் வேறு கருத்துக்களை வெறுக்கவும் ஆரம்பித்துவிட்டது. இராமலிங்க அடிகள் முக்கியத்துவம் பெறாதது புரிந்துகொள்ளக் கூடியதுதான். நீங்கள் குறிப்பிட்டதுபோல அவர் சாதி அப்படி அமைந்துவிட்டது. ஒன்றுமில்லாத சங்கராச்சாரிகள் பெறும் முக்கியத்துவத்தைவிட உண்மையான துறவியாக, அறிஞராக, ஞானமுற்றவராக விளங்கிய இராமலிங்க அடிகள் முக்கியத்துவம் பெறவில்லை என்ற வருத்தமான உண்மையும் இன்றைய சாதி, சமய அரசியல்களில் புரிந்துகொள்ளக் கூடியதுதான்.

உங்கள் கட்டுரையின் மற்ற கூறுகளைப்பார்க்கும் முன், இன்னும் சில அடிப்படைக்கேள்விகளைக் கேட்கவேண்டியுள்ளது.

ஒரு எழுத்தாளனையும் அவன் படைப்புக்களையும் எப்படிப் பிரித்துப்பார்ப்பது ? எழுத்தைப்புரிந்துகொள்ள எழுத்தாளனையும் புரிந்துகொண்டிருக்கவேண்டுமா ? (தேவையில்லை, உண்டு என்பதாக ஒருவிவாதம் ‘மரத்தடி ‘யில் நடந்துகொண்டிருக்கிறது). ஒரு எழுத்தாளர் தன்னைப்பற்றிய விமர்சனத்துக்கு பதில் அளிக்கையில் ‘என் எழுத்து உங்களுக்கு பிடிக்கிறது ஆனால் என்னைப்பிடிக்கவில்லை என்று சொல்வது அபத்தமானது. என் எழுத்தும் நானும் வேறல்ல. என் எழுத்தை நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ளாததாலேயெ என்னைப்பற்றி மோசமாக கருதுகிறார்கள் ‘ என்கிறார். அதே எழுத்தாளர் வேறு ஒரு சந்தர்ப்பத்தில், உங்கள் எழுத்தில் இப்படி எழுதியிருக்கிறீர்களே இது சரியா என்று கேட்கும் போது, ‘அது அந்த பாத்திரப்படைப்புக் கூறுவது. அதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை. பாத்திரங்கள் கூறுவதை நான் கூறுவதாகக் கருதக்கூடாது. என் எழுத்தை நீங்கள் சரியாக புரிந்துகொள்ளவில்லை ‘ என்கிறார்!! இதில் எது உண்மை. இப்படி ஒருவரே எதிர்ப்பதமாக திரித்துக் கூறுவதை எப்படி எடுத்துக்கொள்வது ? இரண்டும் சரிதான் என்றால் அது அரசியல்வாதிகளின் பேச்சைவிட மோசமான சந்தர்ப்பவாதமாக இருக்கிறதே. உங்கள் கருத்தும், சண்டைகளும் பூசல்களுக்குமான காரணமும், எழுத்தாளனையும் எழுத்தையும் பிரித்துப்பார்ப்பதில் எழுத்தாளர்களுக்குள்ள தெளிவற்ற நிலையிலிருந்தே பிறப்பதாகத் தெரிகிறது.

அதாவது இப்படியும் சொல்லலாம். ‘ஒரு படைப்பு எவ்வளவு சிறியதாக இருந்தாலும், மற்றவற்றை நோக்கியே எழுதப்படுகிறது. எதிர்மறையாக ஒரு சொல் இல்லாவிட்டாலும் கூட அது மற்றவற்றை மறுக்கவே செய்கிறது ‘ என்ற உங்கள் கருத்து ஒப்புக்கொள்ளக்கூடியதே. அதுதான் ஒரு படைப்பின் வேலையே – ஒரு கருத்தை சொல்வதன் மூலம் மற்றக் கருத்துக்களை எதிர்த்துக்கொண்டிருப்பது. ஆனால் அது படைப்பாளியின் வேலையா ? என்பதே கேள்வி. ஒரு படைப்பு மற்ற படைப்புடன் மோதுவதை யாரும் தடை சொல்லவில்லை. ( சொல்லவும் முடியாது, கூடாது). ஒரு படைப்பின் வேலையை ஒரு படைப்பாளி ஏன் எடுத்துக்கொள்கிறான் என்பதே கேள்வி. சமயப் படைப்புக்களுக்கு மட்டுமே இதில் விதி விலக்களிக்கலாம். சமய கருத்துக்கள் இப்படி எடுத்துச்சொல்லி பரப்பியதாலேயே பரவி வந்திருக்கிறது. வள்ளலாரின் படைப்புக்களை மேடை தோறும் பேசியது புரிந்துகொள்ளக்கூடியதே. அனால் மற்ற படைப்புகளுக்கு இது தேவையா

என்று சிந்திக்கவேண்டியுள்ளது. உங்கள் கருத்து மற்றக்கருத்தோடு மோதமுடியாது அல்லது மோதி வெற்றிபெறமுடியாது என்ற நீங்கள் கருதும் நேரத்தில் தான் கருத்துக்களை மோதவிடுவதற்குபதில் நீங்களே மோதத்தொடங்குகிறீர்கள் என்றும் கூறலாம். உங்கள் கருத்துக்கள் போதிய பலத்தில் இல்லை என்பதே அதற்குக்காரணம். அதை ஒத்துக் கொள்ளமுடியாத போதுதான் நீங்கள் உங்கள் (சொந்த) மோதலை நியாயப்படுத்தவேண்டியிருக்கிறது.

ஒரு உதாரணத்திற்காக போனவாரம் திண்ணையில் வேறொருவருக்கு எழுதியிருந்ததையே தருகிறேன்.

‘பெரியாரின் சீர்திருத்தக் கருத்துக்கள் உங்களுக்கு பிடிக்காமலிருப்பது புரிகிறது. ஆனால் காரணம் விளங்கவில்லை!

இனவாதக் கருத்துக்கள் என்று நீங்கள் ஒதுக்குவதற்கான முகாந்திரம் உள்ளது. ஆனால் அது மேம்போக்காக பார்ப்பதினால் வருவது. பெரியாரின் வழிமுறைகள் அடாவடியாகத் தெரியும். ஆனால் அதன் அடிப்படையில் நியாயம் உள்ளது. ‘பாம்பையும் பார்ப்பனையும் பார்த்தால் பார்ப்பனை முதலில் அடி ‘ என்று சொல்வது தவறானதுதான். அனால் இவை வெறும் வார்த்தைகள் தான். அவர் ஒன்றும் அவ்வாறு செய்துவிடவில்லை. ராஜாஜியுடன் அவர் நட்போடுதான் இருந்திருக்கிறார். ஒரே மேடையில் இருவரும் தோன்றியிருக்கிறார்கள். அப்போது பெரியார் ஒன்றும் தடி கொண்டு இராஜாஜியை அடித்துவிடவில்லை! பெரியாரின் மோதல்கள் ராஜாஜியின் ஜாதிவெறிக் கருத்துக்களோடுதான்.

பெரியாரின் மோதல்கள் இந்துமததிலுள்ள மூட நம்பிக்கைகளோடு தான்; ஜாதியை நியாயப்படுத்தும் சமயக் கருத்துக்களோடுதான். இதைப் புரிந்து கொள்ள முடியாமல் நுனிப்புல் மேய்பவர்கள்தான் வெறும் வார்த்தைகளைப் பார்த்துவிட்டு, இனவாதப் பிரச்சாரம் என்று சொல்கிறார்கள். ‘

பெரியாரின் கருத்துக்கள்தான் சண்டை போடுகின்றன. பெரியாரே சண்டைபோடவில்லை. ஒரு இலக்கியவாதியும் அப்படித்தான் இருக்கவேண்டும் என்றுதான் வெகுஜன மக்கள் எதிர்பார்க்கிறோம். இதிலென்ன தவறு. பெரியாரின் கருத்துக்களோடு மோதக்கூடிய கருத்துக்களைத் தரமுடியாத இனவாதிகள் தான், பெரியார் மோசமானவர், இனவாதி என்று புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். உங்கள் கருத்து மற்றவர்களின் கருத்தோடு மோதட்டும். தவறில்லை. வரவேற்கப்படவேண்டியதே. உங்கள் கருத்துக்களின் வேலையை அதற்கு விட்டுவிடுங்கள். நீங்கள் செய்யவேண்டாம் என்பதே எழுத்தாளர்களுக்கு மக்கள் வைக்கும் வேண்டுகோள்.

‘ஒரு இலக்கியவாதி என்ன சொல்கிறான் ? சமூகம் இப்படி இருக்கவேண்டும் என்று சொல்கிறான், அதற்கேற்ப அனைத்தையும் மாற்ற முயல்கிறான். மதத்தை, நம்பிக்கைகளை, அமைப்புகளை, உணர்வுகளை. ‘ என்று எழுதியிருந்தீர்கள்.

இந்த வாக்கியங்களில் ஒரே ஒரு மாற்றத்தை செய்யுங்கள். அதாவது ‘இலக்கியவாதி ‘ என்பதை எடுத்துவிட்டு ‘இலக்கியம் ‘ என்று போட்டு வாக்கியத்தை மாற்றுங்கள். நான் சொல்வது உங்களுக்கு விளங்கிவிடும். ‘உன்படைப்பை நீ எழுது அவனதை அவன் எழுதட்டும். எதற்கு சண்டை ‘ என்பது இன்னும்கூட சரியானதாகவே படுகிறது. படைப்புக்கள் சண்டையிட்டுக்கொள்ளட்டும்.

‘எழுது, சும்மா இரு என்று எழுத்தாளனிடம் சொல்ல யாருக்கும் உரிமையில்லை. அவன் உங்களுக்கு ‘எழுதித் தரும் ‘ குத்தகையை எடுக்கவில்லை. ‘ என்று எழுதியிருக்கிறீர்கள். இது மக்களை வெறுப்பேற்றும் உப்பு, சப்பில்லாத வாதம்!

‘விமர்சனங்களுக்கு பதில் சொல்லிக்கொண்டிருப்பதுதான் எழுத்தாளனுக்கு வேலையா ? ‘ என்று சாரு நிவேதிதா கேட்கிறார். ‘பார்த்து, நீங்கள் எழுதிப்போடும் குப்பைகளைப் படிப்பதுதான் வேலையா என்று வாசகர்கள் கேட்டுவிடப் போகிறார்கள் ‘ என்று திண்ணையில் ஒருவர் பதிலடி கொடுக்கிறார். நீங்கள் சொல்வதும் இதே போன்றதே. எழுதித்தரும் குத்தகையை நீங்கள் எடுக்கவில்லை அதேபோல, உங்கள் எழுத்துக்களை ‘சும்மா ‘ படித்துக்கொண்டிருக்கும் வேலையை யாரும் குத்தகை எடுக்கவில்லை! எதிர்வினை தராமல், எழுத்தை, எழுத்தாளனை விமர்சிக்காமல் சும்மா படித்துக்கொண்டிருப்பது ஒன்றும் மற்றவர்கள் வேலையில்லை. எழுத்தாளன்/வாசகன் என்பது ஒரு உறவு போல. எவ்வளவு சிறப்பாக நீங்கள் எழுதியிருந்தாலும், உங்கள் வீட்டு பரணிலேயே வைத்திருந்தால் அவைகள் வெறும் குப்பைகள்தான். வாசகர்கள் படித்தால்தான் அது எழுத்து. வாசகர்களின் படிப்பு, விமர்சனம், மதிப்பீடுகள் இல்லாமல் அது எழுத்தேயில்லை. எனவே எழுத்தாளனைவிட வாசகனுக்கே மதிப்பு அதிகம் என்பதை எழுத்தாளர்கள் உணரவேண்டும்.

எழுத்தாளார்களிடம் உள்ள கர்வம் தான் இலக்கிய உலகிலுள்ள பிரச்சனைகளுக்கெல்லாம் முக்கிய காரணம். எழுத்தாளர்கள் ஏதோ தாங்கள் ஒரு மாபெரும் காரியத்தை செய்வதுபோல எண்ணிக்கொள்கிறார்கள். உங்களை யாரும் எழுதித்தாருங்கள் என்று கேட்கவில்லை. எழுதும் வேலையை நீங்களாகத்தான் தேர்ந்தெடுத்துக்கொள்கிறீர்கள். அது உங்கள் விருப்பம். அப்படி நீங்களாகவே தேர்ந்தெடுத்துக்கொண்ட வேலைக்கு சிறப்பு சலுகை (special previlege) கொடுக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள். எழுத்தாளர்கள் சமூகத்தை திருத்தக் கூடியவைகளை எழுதுவதும் அவர்கள் விருப்பப்படியே. அவர்கள் எதோ சமூகத்தையே தாங்குவதுபோல எண்ணிக்கொண்டு தங்களுக்கு மக்கள்/வாசகர்கள் மதிப்புக் கொடுக்கவேண்டும் என்று எதிர்பார்கிறார்கள். அதே கர்வத்தோடு, மக்களையும் வாசகர்களையும், சக எழுத்தாளர்களையும் மதிப்பதையும் மறந்துவிடுகிறார்கள். எழுத்தாளர்களுக்கு ஒன்றும் கொம்பு முளைக்கவில்லை. அவர்களும் சாதாரணா மனிதர்கள்தான் என்பதை அவர்கள் உணரவேண்டும். உங்கள் விருப்பத்திற்காக நீங்கள் எழுதுவதற்காக, உங்களை தலையில் வைத்துக்கொண்டு ஆடவேண்டிய கட்டாயம் ஒன்றும் மக்களுக்கு இல்லை. எழுத்தாளர்களுக்கு சமூகத்தை திருத்தவேண்டிய சமூகக்கடமை இருப்பதாகவே நானும் கருதுகிறேன். ஆனால் அது கடமைதான் அதற்காக அவர்கள் சிறப்பு சலுகைகளை எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது. அப்படி ஏன் நான் செய்யவேண்டும் என்று யாராவது நினைத்தால் செய்யவேண்டாம். யாரும் இங்கே கட்டாயப்படுத்தவில்லை. ஏதோ எழுதுவதை இவர்கள்மேல் யாரோ திணித்ததுபோல ‘வேறு வேலையே செய்யவில்லை. எழுத்தும் விற்கமாட்டேன் என்கிறது. கஷ்டப்படுகிறேன் ‘ என்பது போல எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்களைக் கண்டால் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. அவ்வளவு கஷ்டப்பட்டு யாரும் யாரையும் எழுத சொல்லவில்லை. வேறு வேலைக்குச் செல்வதையும் யாரும் தடுக்கவுமில்லை.

‘நான் பிரமீளின், தேவதேவனின், ஞானக்கூத்தனின், சுகுமாரனின், மனுஷ்யபுத்திரனின், பிரேமின், எம் யுவனின் கவிதையை ஏற்கிறேன். அதனாலேயே நான் வைரமுத்துவை, அப்துல் ரகுமானை, மு மேத்தாவை, தமிழன்பனை ஏற்கமுடியாது. ‘ என்று குறிப்பிட்டுள்ளீர்கள். உங்கள் எழுத்தாளன் என்ற முகமூடியைக் கழட்டி வைத்துவிட்டு வெளியே நின்று ஒரு சாதாரண வாசகனாக, பொதுமக்களில் ஒருவனாக மேற்கூறப்பட்டுள்ள உங்கள் வாக்கியத்தைப் படியுங்கள். இதில் இலக்கியம் என்பதாக எதாவது தெரிகிறதா ? ஒரு எழுத்தாளனின் கர்வமும், சக எழுத்தாளர்கள் மேல் கொண்டுள்ளா காழ்ப்புணர்ச்சியும் மட்டும்தான் எனக்கு தெரிகிறது. ஒரு எழுத்தாளனைப்பற்றிய, அவன் எழுத்துக்களைப் பற்றிய உங்கள் மதிப்பீடு அவன் எந்த குழுவில் இருக்கிறான் என்பதைப் பொறுத்தே இருக்கிறது என்று கூறுகிறீர்கள். அவன் எவ்வளவு நன்றாக எழுதியிருந்தாலும், அவன் திறமையையோ, அவன் படைப்பின் தரத்தையோ கண்டுகொள்ளாமல் நிராகரிப்பேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறீர்கள். இதை சொல்வதற்கு உங்களுக்கு ஒரு வெட்கமுமில்லை. இப்படி தரத்தையோ, திறனையோ பார்க்காமல் மற்றவர்களை மதிப்பீடு செய்யும் நீங்கள், உங்களை மட்டும் உங்கள் படைப்புக்களை முழுவதுமாகப் படித்துவிட்டு, முறையாக ஒப்பீடு செய்து பார்த்துவிட்டுத்தான் பின் விமர்சிக்கவே வரவேண்டும் என்று எதிர்பார்ப்பது வேடிக்கையானது. இது எந்த விதத்தில் நியாயம் ? அரசியல் வாதிகளைப்போலவே இலக்கியவாதிகளும் வெட்கம், மானம் எல்லாவற்றையும் உதறிவிட்டார்கள் என்பதாகத் தெரிகிறது. பண்பற்ற செயலை செய்யவும் அவர்கள் வெட்கபடுவதாகத் தெரியவில்லை. அரசியல் வாதிகளைவிட மோசமாக சண்டையிட்டுக் கொள்வதற்கான உரிமை தங்களுக்கு இருப்பதாகவே கருதிக்கொள்கிறார்கள். ஆனால் இப்படி கீழ்த்தரமாக ஏன் சண்டையிட்டுக்கொள்கிறீர்கள் என்று எழுத்தாளர்களைக் கேட்கும் உரிமை மட்டும் வாசகர்களுக்கு இல்லை என்று தைரியமாக சொல்கிறா(றீ)ர்கள்! காலம் மாறிவிட்டது. உங்களின் அதிகார சண்டைகளையும், நான் தான் பெரியவன் என்பது போன்ற ஆணவ சண்டைகளையும், எழுத்துக்களையும் பொறுத்துக்கொள்ள சூழ்நிலை இப்போது இல்லை. இந்தக் குப்பைகளையெல்லாம் ஏன் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று மக்கள் சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதுதான் நவீன இலக்கியவாதிகளுக்கு, எழுத்தாளர்களுக்கு மரியாதையில்லாத சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே மக்களிடமிருந்து மரியாதையைப் பெற நீங்கள் போராடவேண்டும். உங்கள் அரசியல்களை, ஆணவங்களை அழிப்பதுதான் அதற்கான ஒரே வழி என்பதை எழுத்தாளர்கள் உணர்ந்துகொள்ளவேண்டும்.

இலக்கியம் என்பது ஆன்மீகத்தேடல் மற்றும் கருத்தியல் செயல்பாடு என்பது உங்கள் கருத்து. ஆன்மீகத்தேடல் என்பதை ஒத்துக்கொண்டால் சமுதாயத்தில் அது ஏற்படுத்தும் தாக்கமும் அதன்பாற்பட்ட காரணிகளாக நீங்கள் கூறியவைகளும் அடிபட்டுப்போகும். ஏனெனில் ஆன்மீகம் என்பது தனிமனித தேடல். எனவே இலக்கியம் என்பது ஒரு கருத்தியல் செயல்பாடு என்ற நிலையிலேயே தொடரலாம். இலக்கிய படைப்புக்களை வணிகக்காரணம் காட்டி தனியாகப் பிரிப்பதன் நோக்கம் எனக்கு விளங்கவில்லை. திருவள்ளுவரையும் கம்பனையும் போல யாரும் மக்களுக்காக இப்போது எழுதுவதில்லை. இப்போதிருக்கும் இலக்கியவாதிகள்-உங்களையும் சேர்த்து- படைப்புக்களை விற்றுக்கொண்டுதானிருக்கிறீர்கள். இதில் மற்றவற்றை வணிகப் பத்திரிக்கைகள் என்று எப்படி ஒதுக்கமுடியும் ? வணிக பத்திரிக்கையில் வருவது எல்லாமே இலக்கியமில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் குமுதத்திலோ ஆனந்த விகடனிலோ வருகிறது என்பதற்காக ஒரு நல்ல கவிதையையொ, கதையையோ புறக்கணிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஒரு நல்ல படைப்பை அது வரும் ஊடகங்களைக் காரணங்காட்டி ஒதுக்குவது ஒத்துக்கொள்ளமுடியாதது.

ஒரு இலக்கியம் என்ன செய்கிறது ? சமூகம் இப்படி இருக்கவேண்டும் என்று சொல்கிறது, அதற்கேற்ப அனைத்தையும் மாற்ற முயல்கிறது. மதத்தை, நம்பிக்கைகளை, அமைப்புகளை, உணர்வுகளை. என்ற உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடே. பராசக்தி படத்தில் கலைஞர் எழுதியிருந்த வசனங்கள் இந்த சமூகத்தை மாற்ற எடுத்துகொண்டிருக்கும் விசை மிகப் பெரியது. 40 ஆண்டுகளுக்குப்பின்னும் ‘அது என்ன பெரிய வசனமா ‘ என்று கேட்டு அதை எதிர்ப்பவர்களே இன்னும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதிலிருந்தே இது விளங்கும். அந்த வசனங்களும், பட்டுக்கோட்டையார் போன்ற கவிஞர்களின் பாடல்களும் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கமும், நீட்சியும் (reach) நீங்கள் எழுதியுள்ள படைப்புக்களின் தாக்கத்தையும் நீட்சியையும்விட பல மடங்கு பெரியது. ஆனால் இவைகளை நீங்கள் இலக்கியங்களாக ஒத்துக்கொள்ள மறுக்கிறீர்கள். அதாவது இல்லகியம்/இலக்கியவாதி என்பதற்கான உங்கள் விளக்கங்களிலிருந்தே நீங்கள் வேறுபடுகிறீர்கள். ஏன் ? இவைகள் ‘சினிமா ‘ என்ற ஊடகத்தில் வந்தது என்ற காரணத்துக்காகவா ? எனில் அதை யாரும் ஒத்துக்கொள்ளமுடியாது. இவைதவிர, இவர்களை உங்களுக்குப் பிடிக்காது என்ற உங்கள் சொந்த வெறுப்புக் காரணங்கள்தான் மீதி இருக்கின்றன. அதற்கும் இலக்கியத்திற்கும் ஒரு சம்பந்தமுமில்லை என்பது தெளிவு.

எந்த ஒரு எழுத்தாவது சமூகத்தை மாற்றாமல் இருக்கிறதா என்று சொல்லுங்கள். எல்லா எழுத்துக்களும் அதனளவில் ஒரு சிறு மாற்றத்தையாவது ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கும். அதன் அளவுகள் வேண்டுமானால் வேறுபடலாம்.

உலக நடவுகள் எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புடையதுதான். எல்லா எழுத்துக்களும் எதையாவது நோக்கியே பயணப்படுகின்றன. எதையாவது ஆதரிக்கின்றன, எதிர்க்கின்றன, தங்கள் இருப்பை தெரிவித்துக்கொண்டுதானிருக்கின்றன. நாகரிகம் வளர்ந்து, எந்திரமயாமாய் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கையில் ஒரு சிரிப்புத் துணுக்கு ஏற்படுத்தும் சூழல் பாதிப்புக்கூட அதிகம்தான்! அது கூட நம் இருக்கமான வாழ்க்கை முறையை மாற்றி அமைக்கவே செய்கிறது!

எனவே சமுதாயத்தை மாற்றி அமைப்பவைகள்தான் இலக்கியம் என்றால் எல்லா எழுத்துக்களும் இலக்கியமே என்ற என்

கருத்து சரியே. (அளவுகள் மட்டுமே மாறுபடுகின்றன.)

இலக்கியம் ஒரு தொந்தரவை (rupture) ஏற்படுத்தத் தக்கதாக இருக்கும் என்ற உங்கள் வாதத்தை மறுக்கிறேன். இதன் ஒரு புறத்து வாதம் சரியானது. அதாவது நல்ல இலக்கியங்கள் எல்லாம் தொந்தரவு செய்யக்கூடும் என்பது. அனால் தொந்தரவு செய்பவைகள்தான் (மட்டும்தான்) இலக்கியம் என்பது தவறானது. ஒரு மோசமான கட்டுரை கூட உங்களை தொந்தரவு செய்யக்கூடும். தொலைக்காட்சியில் காட்டப்படும் தொடர்கள் எல்லாம் அதிகமாக மக்களை தொந்தரவு செய்பவையாக இருக்கின்றன. அவைகளனைத்தையும் இலக்கியமாக நீங்கள் ஒத்துக்கொள்ளவேண்டியிருக்கும்! இலக்கிய உலகில் தலைசிறந்த ஹாஸ்ய நாடகங்களும் இருக்கின்றன, அவைகளை இலக்கியமல்ல என்று ஒதுக்கவேண்டியிருக்கும்!

எனில் எது இலக்கியம் என்ற என் அடிப்படை கேள்வி அப்படியே இருக்கிறது.

‘என்ன இங்கே சிக்கல் என்றால் வைரமுத்துவையோ மு கருணாநிதியையோ ஏற்க ஒருவனுக்கு சுதந்திரம் உண்டு, மறுக்க சுதந்திரம் இல்லை என்ற மூர்க்கமே. ‘ என்ற உங்கள் வாக்கியத்திலுள்ள உண்மை புலப்படுகிறது. தமிழகத்திலுள்ள இலக்கியசூழலின் அரசியல்களும், குழுக்களின் வன்மங்களும், எழுத்தாளர்களுக்கு இடையேயான காழ்ப்புணார்ச்சியும் மிக வருந்தத்தக்க அளவிலேயே இருப்பதும் புலப்படுகிறது. ஆனால் இதற்கான காரணமாக நாம் ஒருவரையோ, சில குழுக்களையோ மட்டும் காரணங்காட்டிவிடமுடியாது. எல்லா எழுத்தாளர்களுக்கும் அதில் பங்குண்டு! எனவே அடுத்தவரை திருத்த முனையும் முன்னர், நாம் எப்படி இருக்கிறோம், நாம் எப்படி அடுத்த படைப்புக்களை ஏற்றுக்கொள்கிறோம், எப்படி சக இலக்கியவாதியை மதிக்கிறோம் என்று சுய பரிசோதனை செய்துகொள்வது அவசியமாகிறது. ‘அடுத்தவர்களின் படைப்புக்களை அவர்களின் குழுக்களை பார்த்துதான் மதிப்பேன், இலக்கியவாதியா இல்லையா என்று மதிப்பிடுவேன். ஆனால் என்னை மட்டும் என் எழுத்துக்களுக்காகவே இலக்கியவாதியாக ஒத்துக்கொள்ளவேண்டும் ‘ என்பது போன்ற சிந்தனை ஓட்டங்கள் மாறவேண்டும். அந்த ஒரு காரணாத்துக்காகவே – அந்த காலத்தில் இப்போது சொல்லப்படுவதுபோன்ற ‘பரந்த மனப்பான்மையில்லை ‘ என்ற குப்பைக்காரணங்களைக் காட்டாமல் – அனைவரும் இலக்கியவாதிகளே, அனைத்தும் இலக்கியங்களே என்று ஒத்துக்கொண்டு சண்டைகளை, பூசல்களை ஒழிக்க எழுத்தாளர்களாகிய நாம் பாடுபடவேண்டும் என்ற பொதுமக்களின் வேண்டுகோளுடன் முடிக்கிறேன். நான் முன்பே குறிப்பிட்டிருந்ததைப் போல படிப்புக்களை காலத்தினிடம் விட்டுவிடுவோம். (மறுப்பதை மட்டுமல்ல, ஏற்பதையும் தான்.) தரமானவை, திருக்குறள் போல நீடித்து நிற்கும்.

வணக்கங்களுடன்,

பித்தன்.

piththaa@yahoo.com

Series Navigation

பித்தன்

பித்தன்