கடிதம் – பிப்ரவரி 26,2004

This entry is part [part not set] of 50 in the series 20040226_Issue

சூர்யா


ஆசிரியருக்கு,

மத்தளராயனுக்கு அவரதுகட்டுரைகளை யாருமே படிக்கவில்லை என்ற மனக்குறை இப்போது நீங்கியிருக்குமென எண்ணுகின்றேன். ஆகவே அரவிந்தனும் மகுடேஸ்வரனும் பாராட்டுக்குரியவர்கள். ஆனால் மகுடேஸ்வரன் எழுதிய அவரது கவிதைகளைவிட நீளமான விவரணை ஏன் எதற்கு எப்படி என்றுதான் தெரியவில்லை. மகுடேஸ்வரனை புத்தகசந்தையிலே சிலர் பெருங்கவிஞராக கொண்டாடியிருக்கிறார்கள் என்று தெரிகிறது [ குறும்ம்ம்பு !] தமிழரங்கு 2004 லில் சில அரங்குகளில் நானும் பங்கு பெற்றேன். குழுவாதத்துக்கு எதிரான அதி பயங்கரக் குழுச்சண்டை அங்கே தூள் கிளப்பியதாகவே எனக்கு பட்டது. பெரும்பாலும் ரிட்டயர் ஆன எழுத்தாளர்கள் வல்லிக்கண்ணன் , மாலன், தி க சி , இந்திரா பார்த்தசாரதி ஆகியோர் கூடி எழுதிக் கொண்டிருக்கும் இலக்கியவாதிகளையும் புதிய இலக்கியப்போக்குகலையும் தலையும் புரியாமல் காலும் புரியாமல் புகைமூட்டமாக திட்டி வயிற்றுப்பொருமலைத் தீர்த்துக் கொண்டார்கள். வல்லிக்கண்னனும் தி. க.சியும் ஏன் கெளரவிக்கப்பட்டார்கள் என்று தெரியவில்லை . ஒருவேளை நாற்பது ஐம்பது வருடங்களாக எழுதியும் நினைவில் நிற்கும் ஒருவரிகூட எழுதாத சாதனைக்காக் இருக்கலாம். ஆனால் அப்படிப்பட்ட எத்தனையோபேர் இருக்கிறார்கள் . இவர்களுடைய சிறப்பு என்னவென்றால் தாங்கள் உருப்படியாக ஒன்றுமே எழுதாதபோதுகூட எழுதியவர்களைப்பற்றி இடைவிடாத கடுப்பை கொட்டிக்கொண்டிருந்ததுதான். அதிலும் தி க சிவசங்கரன் பாணி வசைகள் [புழுத்த மூளை, நாப்பிளக்கும்பொய் இத்யாதி ] தமிழில் தனிச்சிறப்பு கொண்டவை. அந்த காலக்கடமையை அன்றும் மேடையிலே செவ்வனே செய்தார்கள். போகட்டும் அதற்கும் தமிழிலே சிலபெர் தேவைதானே ?

மத்தளராயன் அரவிந்தனைப்பற்றி எழுதியது கண்டிக்கத்தக்கது. கிண்டல் சரிதான், ஆனால் ஒருவரின் பிழைப்பில் மண்ணைப்போட யாருக்குமே உரிமை இல்லை. சந்தடிசாக்கிலே அரவிந்தன் தன் தரப்பு தறியை ஓடவிட்டிருப்பது சுவாரசியம். புத்தகச்சந்தையிலே காடு மற்றும் ஜெயமோகன் நூல்கள் மிகச்சிறப்பாக விற்றன என்பது செய்தி. இவர் ஏழெட்டுபெயர்களை கூடச்சேர்க்கிறார். இதுதான் இவர்கள் நடத்திய விஷ்ணுபுரம் கூட்டத்திலும் நடந்தது. அன்று விஷ்ணுபுரம் மிக பரபரப்பாக பேசப்பட்ட ஓர் வருகை . அந்த பரபரப்பை பயன்படுத்திக் கொள்ளவே காலச்சுவடு அவர்கள் நடத்திய கூட்டத்தில் , அவர்களுடைய நூல்களுடன் சேர்த்து விஷ்ணுபுரத்தையும் வைத்தார்கள். அந்தக்கூட்டத்தில் நான் பங்கெடுத்தேன். பாவண்ணன், அரவிந்தன் ஆகியோர் ‘விஷ்ணுபுரம் நல்ல நாவல்தான் ஆனால் ‘ என்ற மாதிரி பேசினர். அது ஒரே தர்க்கம் என்றார் பாவண்ணன். அது அரசியல் சர்ச்சை என்றார் அரவிந்தன். எம் வேதசகாயகுமாரும் எஸ் ராமகிருஷ்ணனும் நாவலை கடுமையாகத்

தாக்கிப் பேசினர். அன்று எஸ் ராமகிருஷ்ணனை தூக்கிப்பிடிக்க காலச்சுவடு மும்முரமாக இருந்தகாலகட்டம். பேட்டி ,கதைஎன்று வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள். நான் சுந்தரராமசாமி வீட்டில் காலச்சுவடு அலுவலத்திலேயே இருமுறை எஸ் ராமகிருஷ்ணனை பார்த்தேன். வேதசகாயகுமார் அன்று காலச்சுவடு அருகில். இருவரும் சொல்லிவைத்தது போல விஷ்ணுபுரத்தை வசைபாடினார்கள். ஜெயமோகனுக்கு இலக்கிய நுண்ணுணர்வே இல்லை என்றார் வேதசகாயகுமார் . எஸ் ராமகிருஷ்ணன் அதை ஓர் ஆர். எஸ் எஸ் பிரச்சாரம், அது ஒரு ஸ்தலபுராணத்தின் உல்டா என்றெல்லாம் சொன்னார். மலைமீது விஷ்ணுவுக்கு கோயிலே இருக்காது, யானைக்கு மதம்பிடிக்காது, அதென்ன நாயா மதம் பிடிக்க இம்மாதிரி கேள்விகளைகேட்டார். அவர் கீழே இறங்கியதுமே க.பஞ்சாங்கம் அவர் சொன்ன தகவல்கள் எல்லாமே பிழை என்று சொன்னார். திருப்பதி மலைமீதுதானே என்றும் ஐம்பெருங்காவியங்களிலும் யானை மதம் கொள்ளும் காட்சி உண்டு என்றும் விளக்கினார். . ராமகிருஷ்ணன் சொன்னதை ஒட்டித்தான் நாவலை படிக்காத பலர் நான்குவருடம் அது ஓர் ஆர் எஸ் எஸ் நூல் என்று சொல்லி திரிந்தார்கள். எம் வேதசகாயகுமாரும் ராமகிருஷ்ணனும் இன்று அந்த விமரிசனங்களை சொல்ல துணியமாட்டார்கள். அந்த தாக்குதல்கள் காலச்சுவடு அலுவலத்திலேயே திட்டமிடப்பட்டவை என்பது இன்று வெளிப்படையாகிவிட்டது . அன்று விஷ்ணுபுரம் குப்பை என்று சொல்லப்பட்டு தூக்கிபிடிக்கபப்ட்ட படைப்புகள் என்னென்ன ? ராமகிருஷ்ணனின் ஒரு சிறுகதை தொகுதி மற்றும் சுரா கட்டுரைகள். அவை எங்கே விஷ்ணுபுரம் இன்று அடைந்துள்ள இடம் எங்கே ?

அங்கே தேவதேவன் மட்டுமே விஷ்ணுபுரத்தின் காவியத்தன்மையை சுட்டிக்காட்டி பாராட்டிபேசினார். அப்பேச்சு எவராலும் கவனிக்கப்படவில்லை, முழுமையாக பேசும் முன் துண்டு கொடுத்தார்கள். அவரது கட்டுரையை மட்டுமே காலச்சுவடு வெளியிடவில்லை. இத்தனைக்கும் இருபக்க கட்டுரை அது. அக்கட்டுரை பிறகு விருட்சத்தில் வெளியானது.

காலம் கொஞ்சம் பாரபட்சமற்றது. இன்றைக்கு சில ஆயிரம்பேர் படித்து அதன் முக்கியத்துவம் உணரப்பட்டுவிட்டது. இன்று இவர்கள் மாற்றிப்பேசியகவேண்டும். ஆனால் வரலாறு அவ்வப்போது துண்டு துணுக்காக பதிவாகிவிடுகிறதே…

சூர்யா

(நீக்கங்கள் உண்டு- திண்ணை குழு)

suurayaa@rediffmail.com


Series Navigation