கடிதம் – எஸ். இராமச்சந்திரன் ” இந்தியாவின் பாரம்பரியத் தொழில்நுட்பக் கல்வி முறை பற்றி… “

This entry is part [part not set] of 41 in the series 20060616_Issue

கற்பக விநாயகம்


1) வெடிமருந்தைச் சீனி எனப்பழம் பாடல் குறிப்பிட்டதனால், அவை சீனிக்கற்களைத் தான் குறிப்பிடுவதாய் ராமச்சந்திரன் கருதுகிறார்.
வெள்ளைச் சருக்கரையை அப்பகுதி மக்கள் சீனி என்றே வழங்குகின்றனர்.

நாட்டார் பாடல் ஒன்று, “தென்னையிலே ஓலை வெட்டிக் குருத்தோலைப் பெட்டி செய்து,சீனி போட்டு நீ தின்ன” என்கின்றது.

வெள்ளறம் பறம்பில் காணப்படும் பாறைகள் சீனியைப் போன்று பளபளப்பதால் அப்பெயர் பெற்றது. எங்கள் ஊரின் (வெள்ளறம்) கட்டிடங்கள் பெரும்பாலும் அந்தச் சீனிக்கற்களால் கட்டப்பட்டனவே. செங்கல்லின் பயன்பாடு சமீபத்தில்தான் அதிகரித்துள்ளது. சீனி எனும் வார்த்தை சீன நாட்டையே குறிப்பிடும் சொல். வெடிமருந்து, அந்நாட்டில் இருந்து வந்ததால் அப்பெயர் பெற்றிருக்கக் கூடும். சீனி வெடி, சீனிக் காரம், சீனாக் கல்கண்டு ஆகிய வட்டார வழக்குச் சொற்கள் வெள்ளறம் பகுதியில் மக்களிடையே வழங்குவது கண்கூடு. அம்மாவட்டத்தில் அயலில் இருந்து வந்த புதுப்பொருள்களோ, தின்னக் கூடியவைகளோ, எவ்வூரில் இருந்து வந்ததோ அவ்வூரின் பெயர் தாங்கியே வழங்கப்படுகின்றது. சென்னையில் ‘ரஸ்தாளி’ எனப்படும் பழம், அப்பகுதியில் ‘கோழிக்கூட்டுப் பழம்’ எனப்படும். (கோழிக்கோட்டில் இருந்து வந்ததால்)
பச்சைப் பழத்தில் ஒரு வகையை “மோரீஸ் பழம்” என்பர். (மொரீசியஸில் இருந்து வந்ததால்). வெங்காயத்தையும் ‘ஈராய்ங்கம்’ என்றே அழைப்பர் (ஈரானில் இருந்து வந்ததால் இருக்கலாம்) கத்தரிக்காயில் ஊதா நிறக்காயை வெள்ளறம் பகுதி மக்கள் ‘பொள்ளாச்சிக் காய்’ என்பர். கொத்தவரங்காயை, ‘சீனி அவரக்காய்’ என்பர். சருக்கரை வள்ளிக் கிழங்கை,’சீனிக் கிழங்கு’ என்பர்.

வெள்ளறத்தில் ஜமீன் தாரின் மாளிகைக்கு (வெள்ளறத்தில் இக்கட்டிடத்தினை மாளிகை எனக் குறிப்பிடாமல் கோட்டை என்றும் கிட்டங்கி என்றும் மக்கள் குறிப்பிடுகின்றனர்) மேலைச்சுவரில் இருந்து தொடங்கி தெற்கே ஓட்டப்பிடாரம் கம்மாய் வரை தொடர்ச்சியாகவும், பின்னர் பரும்பூரிலும், முப்புலிவெட்டியிலும் விட்டு விட்டும், தட்டப்பாறை வரையிலும் நெடுக நீண்டு செல்லும் பறம்பில் குறும் செடிகளைத் தவிர மரங்கள் அவ்வளவாய் வேர் பிடிப்பதில்லை. பல கிலோ மீட்டர் வரை அவ்வளவும் சீனிக்கல் பாறைதான். இவை அபூர்வமான பொருளொன்றும் இல்லை. எனவே சீனி வெள்ளாளர் எனும் பட்டம் வேறு பொருளுடையதாய் இருக்கும் என்பது என் கருத்து.

2) உமையணன் கல்வெட்டு பற்றிய எனது கருத்து. கல்வெட்டில் வெடி குண்டு எனப் பொறித்திருந்தாலும், மக்கள் மத்தியில் அச்சம்பவம் வேறு மாதிரி சொல்லப்படுகின்றது. உமையணனின் தாயாதியினர் 2, 3 குடும்பத்தினர் வெள்ளறத்தில் வாழ்கின்றனர். அவர்களை மணியகாரர்கள் என்று வழங்குகின்றனர். அவர்களில் பிறந்த உமையணன் என்பவர், அவ்வப்போது விஜயம் செய்யும் ஜமீன் தாருடன் வெள்ளறம் கோட்டைக்கு மேற்புறமிருக்கும் பறம்பின் மேல்பக்க இறக்கத்தில் பரவி இருக்கும் (சுமார் 40 சதுர கிமீ )காடான ‘செடிங்காட்டில்’ (இதுதான் சாலிகுளம் கம்மாய் வரை பரவி இருப்பதால் சாலிகுளம் சிறைக்காடு எனக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டது) வேட்டைக்குச் செல்வது வழக்கம். அங்கு குள்ள நரிகளும், முயல்களும் அகப்படும். இப்போதும் வெள்ளறம், கவர்னகிரி ஆட்கள் முயல் வேட்டைக்கு நாயுடன் அங்கு செல்வது வழக்கமே. அவ்வாறு வேட்டை ஒன்றில் உமையணன், ஜமீன் தாருடன் போனபோது, தவறுதலாய் துப்பாக்கியைக் கையாண்டு குண்டுபட்டுச் செத்தான் என்பதே அவரின் சந்ததிகளால் சொல்லப்பட்டு வரும் கதை. ஆக உமையணன் மாண்டது தோட்டாவால்தானே தவிர வெடிகுண்டால் அல்ல. வருடத்திற்கு ஒரு முறை (பங்குனி உத்திரம் என எண்ணுகிறேன்) அக்கல்வெட்டுப் பலகைக்கு முன் மணியகார சாதியினர் பொங்கல் வைத்துக் கும்பிடுகின்றனர். கல்வெட்டு ஆதாரங்களுடன், மக்கள் சொல்லும் வரலாற்றுக் கதைகளையும் பொருத்திப் பார்ப்பது அவசியம் எனக் கருதுகிறேன்.

3) வீரன் சுந்தரலிங்கம், பிறந்த ஊர் வெள்ளறம். அவர் கல்யாணம் செய்த பிறகு குடியேறிய ஊரே கவர்னர்கிரி. எட்டையபுரம் ஜமீனால் எங்கள் ஊர் புஞ்சை நிலங்களுக்கு 1930களில் வழங்கப்பட்ட தீர்வை ரசீதுகளில் அவ்வூர் “கவுனகிரி” வணிதமென்றே குறிப்பிடப்படுகின்றது.

4) சுந்தரலிங்கம், கட்டபொம்மன் காலத்தில் நாம் கற்காலத்தில் ஒன்றும் வாழ்ந்திடவில்லை. 206 ஆண்டுகளுக்கு முன்புதான் அவர்கள் வாழ்ந்திருந்தனர். அதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்னரே டச்சு, போர்ச்சுகீசிய வணிகர்கள் தூத்துக்குடியில் வியாபாரம் செய்ய வந்து விட்டு இருந்தனர். கட்டபொம்மனுக்கு 50 ஆண்டுகளுக்கு முன்னரே மார்த்தாண்ட வர்மா, திருவாங்கூரில் தனது தளபதியான டி லனாய் எனும் அய்ரோப்பியர் தலைமையில் படையை நவீனமாக்கி இருந்தார். ஐரோப்பியர்கள் மூலம் நம்மிடையே நவீன ஆயுதங்களும், வெடி மருந்துகளும் புழக்கத்தில் வந்திருக்க வாய்ப்புக்களும் அதிகமாய்த்தான் இருந்தன. திப்புவின் பிரெஞ்சுத் தொடர்பும், திப்பு மூலமாய் மருதுவும், மருதுவும் ஊமைத்துரையும் எனக் கொடுக்கல் வாங்கல்கள் தொடரும். மேலும் பிரிட்டிஷ் ராணுவத்தினை மோதிச் சிதைத்து அவர்களின் ஆயுதங்களை / வெடிபொருட்களைக் கைப்பற்றியும் சண்டையிட்டுள்ளனர். ராமச்சந்திரன் குறிப்பிடும் பாரம்பரியத் தொழில்நுட்பம் இதில் எங்கே இருக்கின்றது எனப் புரியவில்லை.

**************************
vellaram@yahoo.com

Series Navigation