கடிதம் மே 27,2004

This entry is part [part not set] of 54 in the series 20040527_Issue

பிறைநதிபுரத்தான்


ஆர்.எஸ்.எஸ், வி.டி.சவர்க்கார் மற்றும் தேச பிரிவினை: சில உண்மைகள்

பிறைநதிபுரத்தான்

RSS ஒரு தேச பக்தி இயக்கம் என்ற மாயையை உண்மையாக்குவதற்காக, நன்பர்கள் சிலர் அடுக்கடுக்காக பொய்களை கூறி வருகிறார்கள். அதற்காக துக்ளக் சோவிடம் சான்றிதழ் வாங்கி RSS யோக்கியர்களின் கூடாரம் என்று நம்ப வற்புறுத்துகிறார்கள். துக்ளக் சோ சொன்னது போல RSS ஷாகாக்களில் தினசரி நடத்தப்படும் ‘மூளைச்சலவை ‘ உரைகளில் பாரத நாட்டின் பெருமைகளாக, ஒரு குறிப்பிட்ட சாதியினரின் புகழை மட்டும்தான் பாடுவார்கள். சோ சொன்னதுபோல், முகலாயர்கள் மற்றும் பிரிட்டிஷார்கள் வந்ததால் இந்தியர்கள் மனிதர்களானார்களோ இல்லையோ ஆனால் ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்த பிறகுதான் சாதி வர்ணம் பூசி பூர்வீக மக்களை தீண்டத்தகாதவர்களாக லேபிள் குத்தி ‘மிருகங்களாக ‘ சித்தரித்தார்கள் என்பது உண்மை. மனுவுக்கு கூஜா தூக்கும் துக்ளக்கில், பிறப்பின் அடிப்படையிலான பேதத்தை நிலை நிறுத்த வேண்டும் என்ற, அரசியல் சட்டத்துக்கு புறம்பான சாதி வெறி கருத்துக்கள் அடிக்கடி பரப்பப்பட்டு வருகிறது என்பதை (http://www.thinnai.com/pl0415042.html) ‘தன்னலமற்ற இயக்கத்தில் ‘ அங்கம் வகிக்கும் பங்காரு லட்சுமன்களும், கிருபா நிதிகளும் படித்துணர வேண்டுகிறேன்.

அமெரிக்கா வியட்நாம் மீது படையெடுத்ததை, உலக நாடுகள் எதிர்த்தபோது, அதை வரவேற்று நியாயப்படுத்திய ஏகாதிபத்தியத்தின் ஜால்ராக்களான RSS க்கு, அமெரிக்காவை, யாராவது கண்டித்தால் வலிக்கிறது. அதுவும் முஸ்லிம்கள் கண்டித்தால், கோபம் ரொம்பவே பொத்துக்கொண்டுதான் வரும். அதனால்தான், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் அமெரிக்க பொருட்களை பகிஷ்காரம் செய்ய வேண்டுகோள் விடுத்தது பிடிக்காமல் தாலிபான்கள் பெயரை சொல்லி மக்களை குழப்புகிறார்கள்.

தாலிபான்கள் யார் ? ஆப்கானிஸ்தானில் இரஷ்ய ஆதிக்கத்தை எதிர்ப்பதற்காக, கோடிக்கனக்கான டாலர்களை கொட்டி, ஆப்கானிய அப்பாவி இளைஞர்களை பிடித்து, பாகிஸ்தான் மதரஸாக்களில் அடைத்து, இன-மதவெறியை ஊட்டி, கொரில்லா போர்முறைகள் கற்றுகொடுக்கப்பட்டு, விடுதலைபோராளிகள்-ஜிஹாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு, அமெரிக்காவால் உருவாக்கப்பட்டவர்கள்தான் ‘தாலிபான்கள் ‘. இந்த உண்மை, பொய்ப்புரட்டு வரலாறு பிரியர்களுக்கு புரியாமல் இருக்கலாம் அல்லது புரியாதது போல் நடிக்கலாம். சுய நலத்துக்காக தாலிபானை உருவாக்கிய அமெரிக்காவை கண்டிக்க வக்கில்லாத ‘தன்னலமற்றவர்கள் ‘ த.மு.மு.க வை கண்டிப்பது ஏன் ?

காஷ்மீர் தீவிரவாதிகளாலும், பாகிஸ்தான் கூலிப்படையினராலும் கொல்லப்பட்டு வரும் அப்பாவி இந்து மற்றும் முஸ்லிம் சகோதரர்களுக்காக இஸ்லாமிய தலைவர்களும்- இயக்கங்களும் கண்டனம் தெரிவித்தது, இந்திய இஸ்லாமியர்கள் செயலை இருட்டடிப்பு செய்யாத செய்தி ஊடகங்களின் மூலம் அனைவருக்கும் கேட்டது.

கைபர்-போலன் கனவாய் வழியாக முன்னாளில் அந்நியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்து இந்திய மக்களை சிதைத்து சின்னாபின்னமாக்கியது போல், பல வருடங்களாக பாகிஸ்தானிய கூலிப்படைகள் கள்ளத்தனமாக இந்திய காஷ்மீருக்குள் புகுந்து ‘ஜிஹாத் ‘ என்ற பெயரில் அப்பாவி இந்து-முஸ்லிம்களை கொலை செய்து வருகிறது. இஸ்லாமிய பெயர் மட்டும் தாங்கிய ‘கோழைகள் ‘ தான் இத்தகைய ஈனச்செயல்களில் ஈடுபடுகிறார்கள். கூலிக்கு மாரடிக்கும் அத்தகைய கயவர்களை ‘வீர் ‘ என்றோ ‘புனிதப்போராளி ‘ என்றோ பட்டம் சூட்டி எந்த ஒரு இந்திய முஸ்லிமும் தலையில் தூக்கி வைத்து ஆடியதில்லை அவர்களுக்கு பாராளுமன்றத்தில் படம் திறக்க கோரியதில்லை. ஆனால் அவ்வாறு கொண்டாடுவதாக சுய நலமிக்க சுயம்சேவக்குகள் வதந்திகளை பரப்பி இந்து-முஸ்லிம் உறவுக்கு ‘பகைத்தீ ‘ மூட்டி பிழைப்பு நடத்துகிறார்கள்.

இந்திய முஸ்லிம்கள் இரத்த சொந்தமில்லாத பிறநாட்டு முஸ்லிம்களுக்கு குரல் கொடுப்பது ஏன் என்று நக்கலாக கேட்பதற்கு முன்பு நீங்கள் உணர வேண்டிய சில உண்மைகள் உண்டு. இனம்-சாதி-நிற வேறுபாடு பாராட்டி, வேற்றுமையில் ஒற்றுமை என்று பஜனை பாடி ஒரே மதத்தை பின்பற்றும் மக்களில், சிலர் ஆதிக்க சக்திகளாகவும், பலர் அடிமைகளாகவும் நடக்கவேண்டும் என்று வற்புறுத்தும் மதம் அல்ல இஸ்லாம். எல்லை கடந்து வாழும் எங்களை ஒன்றினைப்பது இஸ்லாம் காட்டிய சகோதரத்துவமும் சமத்துவமும்தான். அதனால்தான் இந்திய இஸ்லாமியரகளான நாங்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்துபோராடும் ஆப்கானிஸ்தான் தாலிபான்களுக்கும், சொந்த மண்ணிலே வாழ உரிமைகேட்டு, கற்களையும், உயிரையும் மட்டும் ஆயுதமாக கொண்டு அதி நவீன இஸ்ரேல் இரானுவத்தை எதிர்க்கும் பாலஸ்தீனர்களுக்கும், எண்ணைய் திருடுவதற்கா இராக்கிய மண்ணை ஆக்கிரமித்த அமெரிக்க மற்றும் அதன் அடியாட்களோடு போராடும் இராக்கியர்களுக்கும், இரஷ்ய சுரண்டலை எதிர்க்கும் செசன்ய போராளிகளுக்கும் ஆதரவு குரல் எழுப்புகிறோம்.

‘தன்னலமற்ற ‘ நீங்களெல்லாம் நிறத்தையும் ஜாதியையும் அடிப்படையாக கொண்டு இந்திய மக்களை ‘கால் இந்து, அரை இந்து, முக்கால் இந்து என்று பிரித்துபோட்டு, புனித நூல் போட்டவர்கள் மட்டும்தான் முழு இந்து ‘ என்று பேதம் காட்டதெரியாது. பாதிக்கப்பட்டவர்களின் நிறத்திற்கு தக்கவாறு ஆதரவு குரலை தாழ்த்தி உயர்த்தி, நேரத்திற்கு தக்கவாறு வேஷம் போட்டு ஏமாற்றவும் தெரியாது. உதாரனமாக, காஷ்மீரில உயர் சாதி இந்து பண்டிட்கள் கொலைசெய்யப்பட்டால் மட்டும் ‘எட்டுக்கட்டையில் ‘ உரத்த ஒப்பாரி ஆனால், மத்திய பிரதேசத்திலோ, பீஹாரிலோ தாழ்த்தப்பட்ட ஹரிஜன்கள், உயர் சாதி வெறியினர்களால் படுகொலை செய்யப்பட்டால் மெளன ராகம்- இதுதான் சாதீய சங்பரிவாரத்தின் அடிப்படை நாதம்.

எல்லை தாண்டி சகோதரர்களிடம் நாங்கள் காட்டுவது பாசமும் நேசமும் மட்டும்தான். எங்களுக்கு சொந்தமான இந்நாட்டின் மீதும், மக்களின் மீதும் அநீதி இழைக்க துனிவது இஸ்லாமிய பாகிஸ்தானோ, இந்து நேபாளோ, கம்யூனிச சீனாவோ, ‘உலக போலீஸ் ‘ அமெரிக்கவோ – எந்த நாடாகா இருந்தாலும், எங்களின் எதிர்ப்புகுரலில் ‘ஏற்றத்தாழ்வு ‘ இருக்காது – அவர்களை தட்டிகேட்கவும், சந்திக்கவும் நாங்கள் தயார். வாய்ப்பு கிடைக்கும்போது உங்களுக்கு உனர்த்துவோம்.

இந்திய பிரிவினை: பிள்ளையார் சுழி போட்டது யார் ?

மாமன் மச்சானாக வாழ்ந்துகொண்டிருந்த இந்திய இந்து-முஸ்லிம் மக்களை பிரித்து மத அடிப்படையில் நாட்டைப்பிரித்துவிடவேண்டும் என்று ‘இரு நாட்டுக்கொள்கையை ‘ இந்த மண்ணிற்கு முதன் முதலில் அறிமுகம் செய்தது முகம்மது அலி ஜின்னாவோ அல்லது முஸ்லிம் லீகோ அல்ல. யார் தெரியுமா ? தேச பக்தர், வீரர் என்று தங்களால் போற்றி அழைக்கப்படும் வி.டி.சவார்க்காரால் 1923 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ‘ஹிந்துத்வா ‘ என்ற கட்டுரையில்தான் ‘இரு நாட்டுக்கொள்கைக்கு ‘ பிள்ளையார் சுழி போட்டார்.

வீரர் வி.டி.சவர்க்கார் 1923 ல் சொன்ன கருத்தை, செயல்படுத்தி அவரின் எண்ணத்தை நிறைவேற்றுவதற்காக(!), சவர்க்காரின் ‘முஸ்லிம் ‘ பதிப்பான முகம்மது அலி ஜின்னா, சவர்க்காரின் திட்டத்திற்கு செயல்முறை கொடுக்க ஆரம்பித்தார்.

ஹிந்து மகாசபா தலைவரான லாலா லஜபதிராய் (The Tribune of December 14, 1924) கீழ்கண்டவாறு எழுதியிருக்கிறார் ‘ என்னுடைய திட்டத்தின் அடிப்படையில், முஸ்லிம்களுக்கு நான்கு மாகானங்கள்: (1) பதான் பிராந்தியம் அல்லது வடமேற்கு பிராந்தியம் (The Pathan Province or North-West Frontier) (2) மேற்கு பஞ்சாப் (3) சிந்து மாகானம் (4) கிழக்கு வங்காளம். மேலும் மாகானங்களை உருவாக்கும் அளவிற்கு அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்கள் இருக்கும் இந்தியாவின் பிறபகுதிகளையும் இணைக்கவேண்டும் ‘ என்று மத அடிப்படையில் இந்தியாவை துண்டுபோட்டு விடவேண்டும் என்று முன்கூட்டியே திட்டம் தீட்டப்பட்டுவிட்டது. (Frontline Vol.18, Issue 26, Dec.22-2001-Jan, 04, 2002).

முகமது அலி ஜின்னாவுக்கு தூண்டுகோலாக இருந்து பிரிவினை எண்ணத்துக்கு மூலகாரனமாக இருந்தவர்கள், வாய் கூசாமல் இப்பொழுது இந்திய முஸ்லிம்களை பார்த்து ‘பிரிவினைக்கு காரணமானவர்கள் ‘ என்று கை நீட்டுகிறார்கள்.

விடுதலைக்கு பிறகு, ஒன்றுபட்ட இந்தியாவில் ‘ஹிந்துத்வா ‘ செல்லாக்காசாகிவிடும் என்பதை முன்கூட்டியே அறிந்த பண்டிட் மதன்மோஹன் மாளவியா, லாலா லஜபதிராய் போன்ற ‘தீவிர ஹிந்துத்வ ‘ தலைவர்கள், இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்திலிருந்து பிரிந்து, Natioanlist Party என்ற அமைப்பின் கீழ் காங்கிரஸை எதிர்த்து 1920 களில் தேர்தலில் போட்டியிட்டனர்.

ஹிந்துத்வவாதிகள் 14 டிசம்பர் 1924 ஆண்டு போட்ட தீர்மானத்தை அடிப்படை ஆதாரமாக கொண்டு, 16 வருடங்கள் கழித்து அதாவது 23, மார்ச், 1940 ஆம் ஆண்டுதான் லாஹூரில் முகமது அலி ஜின்னா ‘பாகிஸ்தான் தீர்மானத்தை முன்மொழிந்தார் ‘. அதாவது கோடு போட்டது- வி.டி.சவர்க்கார் & கோ; ரோடு போட்டது முகமது அலி ஜின்னா & கோ. (http://www.thehindu.com/fline/fl1826/18260810.htm).

மத அடிப்படையிலான இந்திய பிரிவினை எண்ணம் பெரும்பாலான மக்களிடம் பரவ முக்கிய காரணம் ‘இந்து மஹா சபா ‘ (Struggle for Freedom, Bharathiya Vidhya Bhavan, 1961; Page 661) தான் என்ற உண்மையை யாரும் மறக்கவோ மறுக்கவோ முடியாது. வி.டி. சவார்கார் தலைமையில், இந்தியப்பிரிவினை எண்ணத்தை, கருவாக்கி, உருவாக்கி, நீர்பாய்ச்சி, களையெடுத்து வளர்த்துவிட்டு காந்தி சொன்னதை காயிதே மில்லத் கேட்டாரா, காதர் மெய்தீன் கேட்டாரா என்று வதந்தி பரப்பும் கூப்பாடை தயவு செய்து இனிமேலாவது நிறுத்துங்கள்!

நடுநிலைவாதிகளை பொறுத்தவரை முகமது அலி ஜின்னாவுக்கும், வி.டி சவர்க்காருக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. ஆமாம்.

வி.டி சவார்கார் ஒரு இந்து ‘முகமது அலி ஜின்னா ‘ ; முகமது அலி ஜின்னா ஒரு முஸ்லிம் ‘வி.டி.சவர்க்கார் ‘- அவ்வளவுதான். அதனால் அவர்கள் இருவரையும் நல்லவர் அல்லது கெட்டவர் என்று தராசில் வைத்து தரம் பிரிக்க முயலாதீர்கள், இருவரும் ஒரே மாதிரியான சுயநலமிக்க மதவெறியர்கள்தான்!

காந்தி படுகொலை: யார் காரணம் ?

‘ஒருதாய் மக்களான நாம் பிரிந்து போகலாமா என்று காந்தியடிகள் முஸ்லிம்களிடம் கெஞ்சினாராம் ஆனால் முஸ்லிம்கள் கேட்கவில்லையாம் ‘ அடடா! காந்தியின் மீது எவ்வளவு கரிசனம் ? பொய்யைகேட்டு புல்லரிக்கிறது. காந்தியின் பெயரை சொல்லி போலிக்கண்ணீரும்- நீலிக்கண்ணீரும் வடிக்காதீர்கள்! இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக பாடுபட்டதற்கு ‘பரிசாகத்தானே ‘ காந்தியடிகள் ‘தன்னலமற்ற ‘ இயக்க வழியில் வந்த கோட்ஷேயால் சுட்டுகொல்லப்பட்டார்.

கோட்ஷே RSS காரனல்ல என்று அத்வானி ‘கை கழுவி விட்டதைப்போல் ‘ போல், மற்றவர்களும் அந்தர் பல்டி அடிப்பதை தடுப்பதற்காக காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்ஷேயின் சகோதரர் கோபால் கோட்ஷே அளித்த பதிலை உங்களுக்கு தருகிறேன். கொலைகார கோட்ஷே எழுதிய ‘நான் ஏன் காந்தியை கொலை செய்தேன் ‘ என்ற புத்தகத்தை புது டெல்லியில் வெளியிட்டு, Frontline-க்கு அளித்த பேட்டியில், தானும் தன் சகோதரரும் RSS-ன் தீவிரமான உறுப்பினர்கள் என்பதையும், காந்தி படுகொலைக்கு பிறகு RSS-ம் கோல்வால்கரும் தொந்தரவுக்கு ஆளானதால்தான், நாதுராம் கோட்ஷே RSS–ஐ விட்டு விலகிவிட்டதாக பொய்கூறியதாகவும் ஆனால் இறுதிவரை நாதுராம் கோட்ஷே RSS ஐ விட்டு விலகவேயில்லை என்றும் கூறினார் (Frontline, January 28, 1994).

RSSக்கும் நாதுராம் கோட்ஷேக்கும் தொடர்பில்லை என்று அத்வானி கூறியிருக்கிறாரே என்று Fronline நிருபர் கேட்டதற்கு ‘அவ்வாறு கூறுவது கோழைத்தனம் ‘ என்று தான் அத்வானிக்கு ஏற்கனவே பதிலளித்துவிட்டதாகவும், மேலும், ‘ஹிந்து மகா சபை ‘ இறுதிவரை நாதுராம் கோட்ஷேயை கைவிடவில்லை என்று ஆனித்தரமாக கூறினார்.

காந்தியை இந்தியாவின் தந்தை என்று இனிமேல் அழைக்கவேண்டாம் என்று அறிக்கை விட்டது யார் ? காயிதே மில்லத சாகிபா, முஸ்லிம்லீகா அல்லது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகமா ? அத்தகைய அறிக்கையை 1961 ஆம் ஆண்டு வெளியிட்டது தீன் தயால் உபாத்யாய என்ற ஹிந்துத்வ தலைவர்தான்! (A.G.Noorani, The RSS and the BJP: A Division of Labour, Leftword Books, 2000, pp 50-51).

வீர்சவர்க்கார் சில உண்மைகள்:

சவர்க்கார் கைதுசெய்யப்பட்டு 1910 ஆம் ஆண்டு அந்தமான் சிறைக்கு கொண்டுவரப்பட்டார். தண்டனை காலம் முழுமையாக ஒராண்டு நிறைவேறுவதற்கு முன்னரே, அப்போதைய பிரிட்டிஷ் வைஸ்ராய் உறுப்பினரான Reginald Crudke அவர்களுக்கு தன்மீது மட்டும் (சிறையிலுள்ள மற்ற இந்தியர்களுக்காக அல்ல!) கருனை காட்டி விடுதலை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார், அதற்கு பிறகு மீண்டும் 14 நவம்பர் 1913 ஆம் ஆண்டு அதே பிரிட்டிஷ் அதிகாரிக்கு எழுதிய வேண்டுகோள் என்ன தெரியுமா ? இதுதான்..

Savarkar said: ‘…if the government in their manifold beneficence and mercy release me, I for one cannot but be the staunchest advocate of constitutional progress and loyalty to the English government which is the foremost condition of that progress… Moreover, my conversion to the constitutional line would bring back all those misled young men in India and abroad who were once looking up to me as their guide… The Mighty alone can afford to be merciful and therefore where else can the prodigal son return but to the parental doors of the government ? ‘ (. R.C. Majumdar, Penal Settlement in Andamans, pages 211-214)

அதுமட்டுமல்ல அந்தமான் சிறையில் கொடுமையை அனுபவித்த Trailokya Nath Chakravarthi என்ற விடுதலை போராட்ட வீரரின் கூற்றுப்படி, ஆங்கிலேய அரசை எதிர்த்து சிறைக்கைதிகள் நடத்தி சட்ட மறுப்பு இயக்கத்திற்கு ஒத்துழைக்க சவர்க்காரும் மற்றும் சில தலைவர்களும் மறுத்தனர். ஏன் தெரியுமா ? ஆங்கிலேய அரசு அளித்த சில சலுகைகள் பறிபோய்விடக்கூடாது என்பதற்காகத்தான். கூறுகிறார். தன் நிலையை நியாயப்படுத்த அவர் கூறிய காரணம் இதுதான்:

Savarkar said: ‘And now to be put again in chains and solitary confinement, to go back to bad food and expose ourselves to caning, was to expect too much from us… The last and the most important reasons (sic) for my abstaining from it was that I would have forfeited thereby my right of sending a letter to India. ‘( V.D. Savarkar, My Transportation for Life, page 390.)

இவ்வாறு அடிமை சாசனம் எழுதிக்கொடுத்தது எல்லாம் ஆங்கிலேயரின் பிடியிலிருந்து தந்திரமாக ‘சிவாஜி ‘ போல வெளிவந்து ஆங்கிலேயர்களுக்கெதிரான போராட்டத்தில் ஈடுபடுவதற்காகத்தான் என்று சிலர் திசை திருப்பி சவர்க்காருக்கு வக்காலத்து வாங்கலாம். ஆனால் நடந்தது என்ன தெரியுமா ? காந்தியடிகள் 1942 ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை தொடங்கி, பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கீழ் பணிபுரியும் இந்தியர்கள் வேலையை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தபோது அதற்க்கு எதிராக, Hindu Sanghatanists யாரும் பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம் என்று வேண்டுகோள் வைத்தார் ( A.G. Noorani, ‘The collaborators ‘, Frontline, December 1, 1995). கருனைக்காட்டி தன்னை விடுதலை செய்த பிரிட்டிஷ் அரசுக்கு சவர்க்கார் நன்றிக்கடனோடு இருந்தார் என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் வேண்டுமா ?.

சம்ஸ்கிருதமும்-ஆங்கிலம் பேசுகின்ற தன்னலமற்ற ஹிந்து சுதேசி வாதிகளுக்கு வீர் சவர்க்கார் யார் என்றும், பாரத மாதாவின் கரங்கள் துண்டிக்கப்பட தூண்டியவர் யார் என்றும், தேசத்தந்தையை படுகொலை செய்த இயக்கத்தை உருவாக்கியது யார் என்றும் இப்பொழுதாவது புரிந்திருக்கும்.

RSS பிராண்ட் தேசபக்தி:

தங்களின் தானை தலைவர்களைப்போல் தேசத்திற்கு என்று எதுவும் சாதிக்காமல், கிரிக்கெட் விளையாட்டின் போது மட்டும் திறம்பட ‘பட்டாசு ‘ வெடித்து ‘மத்தாப்பு ‘ கொழுத்தி, எளிய வழியில் தேசபக்தனாகி, RSS இடம் இந்தியன் சான்றிதழும், தாமிரபத்திரமும் வாங்கிக்கொள்ளுங்கள், பாராளுமன்றத்தில் படம் வேண்டுமானலும் திறந்து கொள்ளுங்கள்! எங்களைப் பொறுத்தவரை விளையாட்டு என்பது வேறு, தேசபக்தி என்பது வேறு ஆனால் உங்களைப் போன்றவர்களுக்கு தேசபக்தியே விளையாட்டாக போய்விட்டது!

RSS/BJPக்கு தேசபக்தி திடாரென்று தலைக்கேறி பக்கத்துநாடான பாகிஸ்தானிடம் எந்த உறவும் வைத்துக்கொள்ள கூடாது, கிரிக்கெட் விளையாடக்கூடாது என்று அறிக்கை விடுவார்கள்! அதைப்பற்றி ஆறு, குளம், கக்கூஸ், பார்பர் ஷாப் என்று அனைத்து இடங்களிலும் தன்னலமற்ற வீரர்கள் விளக்கம் கொடுப்பார்கள், அதற்கு பிறகு அமெரிக்காவுக்கு பயந்து, பாகிஸ்தான் எதிர்ப்பை தூக்கி கங்கையில் போட்டு தலை முழுகிவிட்டு, ‘பஸ் ‘ விடுகிறோம், ‘ஆட்டோ ‘ விடுகிறோம் என்று விட்டுவிட்டு ‘பா.ஜ.க ஆட்சிக்காலத்தில்தான் இந்திய-பாக்கிஸ்தான் ‘ உறவு மேம்பட்டதாக கூறி, பாகிஸ்தான் எக்கேடு கெட்டு தொலைந்தால் என்ன என்றிருக்கும் இந்திய முஸ்லிம்களிடம் வாக்கு கேட்பார்கள்.

பா.ஜ.க வை தவிர இந்தியாவில் உள்ள மற்ற அரசியல் கட்சிகள் எல்லாம் முஸ்லிம்களின் வாக்குகளுக்காக போலி மதசார்பின்மை பேசுவதாக கூறிக்க்கொண்டே சர்க்கஸ்காரர்கள் வியக்கும்படி அந்தர் பல்டி அடித்து டெல்லி இமாம் புகாரியை விட்டு பா.ஜ.க வுக்கு ஆதரவாக ‘ஃபத்வா ‘ கொடுக்க சொல்வீர்கள். லக்னோ வில் முஸ்லிம்கள் வசிக்கும் மூளை முடுக்கு முகல்லாக்களில் – ‘ஹிமாயத் ‘ கமிட்டி அமைக்கச்சொல்லி முஸ்லிம் ஓட்டு ஏஜண்டுகளுக்கு பணத்தை வாரி இறைப்பீர்கள்.

முஸ்லிம்களின் வாக்குகளுக்காக வாஜ்பாயும்-அத்வானியும் ‘சுன்னத் ‘ மட்டும்தான் பன்ணிக்கொள்ளவில்லை மற்றபடி எல்லா தலையில் குல்லா போடுவது உள்பட பல ‘கோல்மால் ‘ வேலைகளை செய்தனர் (அவ்வளவையும் செய்துவிட்டு A Party with Difference என்று சுயசான்றிதழ் வழங்கிகொள்வார்கள்!).

இஸ்லாமிய எதிர்ப்பு:

‘இஸ்லாமியர்கள் தங்களின் தெருவழியாக இந்து கடவுளர்களை தூக்கி செல்ல அனுமதிப்பதில்லையாம் ‘. வழக்கமாக தூக்கி செல்லும் வழியை விட்டுவிட்டு ‘முஸ்லிம்கள் வசிக்கும் தெரு வழியாகத்தான் தூக்கி செல்வேன் என்று யாராவது அடம்பிடிக்கும் போதுதான் அவர்கள் அனுமதிக்க மறுக்கிறார்கள். அவர்களின் எதிர்ப்பு முருகனுக்கோ, வினாயகருக்கோ அல்ல. தெய்வங்களின் பெயரில் அமைதியை குழைக்க முயற்சிக்கும் ‘சூல வழங்கி ‘ மற்றும் ‘சூழ ஏந்தி ‘ கும்பலுக்குத்தான்.

இஸ்லாமியர்கள் வசிக்கும் தெருக்கள் வழியாக கடவுளை தூக்கி வரும்போது இவர்கள் மந்திரங்கள் சொல்ல மாட்டார்கள் (சொல்ல தெரியாது என்பது வேறு விஷயம்!), ஆனால், தந்திரமாக இஸ்லாமிய எதிர்பு கோசம் போட்டு, தாங்கள் தாக்கப்படுவிட்டதாக, கல் வீசப்பட்டுவிட்டதாக புரளியை கிளப்பி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பார்கள். அதனால்தான், வருடா வருடம், வினாயகர் சதுர்த்தியின் போது, இராம கோபாலனும், ஹிந்து மக்கள் கட்சியும், சென்னையில் முஸ்லிம்கள் வசிக்கும் ஐஸ் ஹவுஸ் வழியாகத்தான் விநாயகரை தூக்கி செல்வேன் என்று கூப்பாடு போடுவதை காதில் வாங்காமல் தமிழக காவல்துறை (கருனாநிதி மற்றும் ஜெயலலிதா ஆட்சியின் போதும்) அவர்களை அனுமதிப்பதில்லை. ஆனால், இதையும், வழக்கம்போல் திசை திருப்பி பொதுமக்களிடம் முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வை வளர்கிறார்கள்.

கடந்தெடுத்த பொய் சொல்வதில் கை தேர்ந்தவர்கள் RSS காரர்கள் என்பதற்கு பல உதாரணங்களை கூறலாம்:

முலாயம் சிங் ஆட்சியின் போது அயோத்தியில் கட்டுக்கடங்காமல் போன கார்சேவக்குகள் மீது நடந்த போலீஸ் தாக்குதலை ‘ஜாலியன் வாலா பாக் ‘ படுகொலை போல சித்தரித்து ஆதாயம் தேட முயர்சித்தனர். அதனால் பலியானவர்களின் எண்ணிக்கையை RSS பானியிலே மிகைப்படுத்தி பொதுக்கூட்டங்களில் அத்வானி பேசினார். இறந்தவர்களின் பெயர்களை, முகவரியையும் வெளியிட்டனர். என்ன ஆயிற்று ? நிகழ்வு அன்று அயோத்திக்கே போகாதவர்களின் பெயர்களை எல்லாம் வெளியிட்டு பட்டியலை அத்வானி நீட்டியிருக்கிறார் என்பது மட்டுமா வெளிச்சத்துக்கு வந்தது, ‘இறந்தவர்கள் பட்டியலில் ‘ உள்ள பலர் இன்னும் உயிரோடு இருப்பதாக பிரபல பத்திரிகைகளான The Sunday Observer மற்றும் Frontline நிரூபித்தது (Khaki Shorts and Saffron Flags: A Critique of Hindu Right, 1993, Orient Longman Limited, Hyderabad, p-93).

அது மட்டுமல்ல, சில ஆண்டுகளுக்கு முன்பாக சங்பரிவாரத்தினர், காஷ்மீரில் ஆயிரக்கனக்கான கோவில்கள், முஸ்லிம் தீவிரவாதிகளால், இடிக்கப்பட்டதாக ‘பீலா ‘ விட்டு, மத வெறிக்கு எண்ணை ஊற்றிக்கொண்டிருந்தனர். அதை பிரபல பத்திரிக்கையான India Today காஷ்மீரில் கள ஆய்வு செய்து கோவில்கள் இடிக்கப்படவில்லை என்ற உண்மையை வெளிக்கொனர்ந்து சங்பரிவாரின் பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது. இவ்வாறு, இந்திய முஸ்லிம்களுக்கு எதிரான புரளி, கட்டுக்கதை, வதந்தி இவைகளை மட்டும் பரப்பி பிழைப்பு நடத்தாமல் இருந்திருந்தால் – RSS என்றோ மறைந்திருக்கும்.

இறுதியாக ஒன்று, சுதந்திரத்திற்கு பிறகு நடந்த கலவரத்தின்போது மகாத்மா காந்தியின் நன்பர்களில் ஒருவர், மகாத்மாவிடம் RSS ன் கட்டுப்பாடு, ஒழுக்கம் ஆகியவற்றை புகழ்ந்து, ‘வாஹ் ‘ அகதி முகாமில் RSS காரர்கள் ஆற்றிய பணியைப்பற்றி கூறியபோது காந்தியடிகள், ‘ மறந்து விடாதீர்கள்! ஹிட்லர் தலைமையில் நாஜிகளும், முசோலினி தலைமையில் பாசிச வாதிகள் கூட அப்படித்தான் பணியாற்றினர் ‘ என்று கூறினர் (Mahathma Gandhi: The Last Phase; Navjeevan Publishing House, Volum II, pp. 439-40).

பிறைநதிபுரத்தான்

say_tn@hotmail.com

Series Navigation

பிறைநதிபுரத்தான்

பிறைநதிபுரத்தான்