கடிதம் மார்ச் 4,2004

This entry is part [part not set] of 47 in the series 20040304_Issue

விஸ்வாமித்திரா


வணக்கம்

சென்ற வாரத் திண்ணையில் திரு.நரேந்திரன் அமெரிக்க தேர்தல் நிதி பற்றிய எழுதிய கட்டுரை கண்டேன். அமெரிக்கத் தேர்தல் முறைகளில் குறைபாடுகள் பல இருந்தாலும், இந்த தேர்தல் நிதி என்பது ஒரளவு வெளிப்படையாகவே நடப்பதாகவேத் தெரிகிறது. உண்மையிலேயே, இந்தியர்கள் பார்த்துப் பொறாமைப் பட வேண்டிய நிலையில்தான் இருக்கிறது. நரேந்திரனுக்கு தற்போதைய தமிழ்நாட்டுத் தேர்தல் நிதி வசூல் நிலவரம் தெரிந்தால், கெர்ரியைப் பற்றிப் பெரிதாக எழுதியிருக்க மாட்டார். கொஞ்சம் தோண்டித் துருவிப் பார்த்தால் தமிழக அரசியல்வியாதிகளின் உண்மையான சொத்து மதிப்பு, கெர்ரியைப் படு ஏழையாகக் காட்டிவிடும். இங்குள்ள ஒரு எம்.எல்.ஏ, எம்.பிக்கே ‘ஹெயின்ஸ் கெச்சப் ‘ புகழ் கெர்ரியை விட அதிக சொத்து இருக்கலாம். அது போல் தேர்தலுக்குக்காக இவர்கள் வசூலிக்கும் நிதியும், அமெரிக்க அரசியல்வாதிகளுக்கு கொஞ்சமும் சளைத்ததல்ல. என்ன, இங்கு யார் கொடுத்தார், எவ்வளவு கொடுத்தார், எதற்காகக் கொடுத்தார் என்பதெல்லாம் மட்டும் பரம ரகசியம்.

சமீபத்தில் இங்கு ஒரு தலைவர், அதுவும் தமிழனத்துக்கே மானம் காக்க வந்த ஒரே தலைவர், தேர்தல் அறிவிக்கப் படுவதற்கு பல மாதங்களுக்கு முன்பே, தனது தொண்டர்களை எல்லாம் தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் அனுப்பி வசூல் வேட்டை நடத்தினார். அதுவும், தமிழ் நாடு கடும் வறட்சியில் தத்தளித்த நேரத்தில். யார் வறட்சியில் கஷ்டப்பட்டால் தமிழீனத் தலைவருக்கு என்ன ஆயிற்று ? அவருக்கு தமிழர்களது மானம் அல்லவா முக்கியம் ? ஆக தமிழர்களின் மானம் காக்க, வறட்சி பற்றியெல்லாம் கவலைப் படமால், வசூல் நடத்தச் சொன்னார், அவர்களும் சாதாரண வியாபரிகள் முதல் விவசாயிகள் வரை அனைவரையும் மிரட்டி, போட்டி போட்டுக் கொண்டு 25 கோடி ரூபாய் வசூலித்துக் கொடுத்தார்கள். அந்த 25 கோடி ரூபாயையும் தொண்டர்களின் தேனீர் செலவுக்காக என்று மிகப் பரந்த மனப்பான்மையோடு அறிவித்து விட்டார். உங்கள் அமெரிக்காவில் கெர்ரியோ, புஷ்ஷோ, டா செலவுக்கு மட்டுமே 5 மில்லியன் டாலர்கள் செலவழிக்கும் அளவுக்கு செல்வந்தர்களா என்ன ? தமிழ் நாட்டின் கால் தூசுக்கு வருமா அவர்களின் தேர்தல் நிதி ? அடடா! தேனீர் குடிப்பதற்கு மட்டுமே 25 கோடி செலவளிக்கும் கட்சி எப்படிப்பட்ட மகத்தான, பணக்காரக் கட்சியாக இருக்க வேண்டும் ? இவர்கள் தேனீர் குடித்த பின், பிஸ்கெட்டுக்கும், சாராயத்துக்கும் இனி எவ்வளவு கோடி செலவளிப்பார்களோ ? அந்த மஞ்சள் துண்டு மகானுக்குத்தான் வெளிச்சம். அப்பேர்ப்பட்டக் கட்சி எப்படி சாமானியர்களின் கட்சியாக இருக்க முடியும் ? நான் இவ்வளவு நாள் அந்தக் கட்சியின் தலைவர்கள் மட்டும்தான் கோடிசுவரர்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன், ஆனால் பாராளுமன்றத் தேர்தல் அறிவிப்பிற்குப் ப பின்னர்தான் தெரிந்தது, அக்கட்சியின் அடிமட்டத் தொண்டன் வரை கோடிசுவரன்தான் என்று, இல்லா விட்டால் தேர்தலில் இடம் கேட்டு மனுச் செய்வதற்கே ஒரு கோடி கட்டச் சொல்லி கட்சி வெளிப்படையாக உலகம் அறிய உத்தரவு போடுமா ? அப்படிப் போட்டவுடன்தான் தெரிந்தது கட்சியில் எத்துனைக் கோடிஸ்வரர்கள் இருக்கிறார்கள் என்பது. அமெரிக்காவில் ஒரு புஷ் அல்லது கெர்ரி போன்ற ஒரு சிலர் மட்டும்தான் கட்சியில் மில்லியனராக இருப்பார்கள், இங்கு பாருங்கள் எத்துனைக் கோடிசுவரர்கள் என்று ? இந்தியா நிச்சயமாக ஒளிரத்தான் செய்கிறது. இல்லாவிட்டால் எப்படி பெட்டிக் கடை வைத்திருப்பவரும், மருந்துக்கடை வைத்திருப்பவரும், சாதாரண விவசாயியும், தேர்தலில் போட்டியிடுவதற்கு அப்ளிகேஷன் ஃபார்முக்கு மட்டுமே கட்சிக்கு 1 கோடி ரூபாய் கப்பம் கட்ட முடிகிறது ? அல்லது அந்தப் பணக்காரக் கட்சியில் கோடிசுவரர்கள் மட்டுமே போட்டியிட முடியும் போலிருக்கிறது. ஆக இந்தியாவிலும், ஒரு சில கட்சிகளில் பெரும் பணக்காரர்கள் மட்டுமே, போட்டி போட முடியும். இந்தக் கட்சிதான் ஏழைகளின் இளிச்சவாய்ச் சிரிப்பில் இறைவனைக் காண்கிறது.

சரி, அந்தக் கட்சியில் போட்டியிட விரும்பும் ஒவ்வொருவரும் தலைக்கு 1 கோடி (60 லட்சம் என்பதை நான் ரவுண்டப் பண்ணியிருக்கிறேன்) கட்டி விட்டார்கள். ஆனால் தேர்தல் கமிஷன் தேர்தல் செலவுக்கான உச்சவரம்பாக எவ்வளவு நிர்ணயித்துள்ளது ? அதை விட இந்த டெப்பாஸிட் பணம் மட்டுமே பல மடங்கு அதிகம் இல்லையா ? இது போக தேனீர் குடிக்க வேறு ஒரு தொகுதிக்கு 2 கோடி அளிக்கப்படும். இது குறித்து எனக்கு பலத்த சந்தேகங்கள் சில உள்ளன

போட்டியிட விரும்பும் ஒவ்வொரு கட்சிக்காரருக்கும் எங்கேயிருந்து அந்த டெபாசிட் பணம் வந்தது ? எப்படி இந்த பணத்தைச் சம்பாதித்தார்கள் ? யார் கொடுத்தார்கள் ? எதற்காகக் கொடுத்தார்கள் ? அதற்கு ஏதெனும் கணக்கு உண்டா ? யார் அந்த கணக்கைக் கேட்பார்கள் ? யார் சரிபார்ப்பார்கள் ? தேர்தல் கமிஷன் என்ன செய்து கொண்டிருக்கிறது ? இன்கம்டாக்ஸ் டிபார்ட்மென் ட் என்ன செய்து கொண்டிருக்கிறது. சாதாராண மாதச் சம்பளக்காரணாகிய நான் சென்ற முறை அனுப்பிய ரிடர்னில் தவறுதலாக ஒரு ஐம்பது ரூபாய் குறைத்து விட்டதற்காக, என்னைச் சித்திரவதை பண்ணி, கழுவில் ஏற்றிய அதே IT Dept, ஒரு கோடி ரூபாயை சர்வ சாதாரணமாக விட்டெறியும் இந்தக் கட்சிக் காரர்களையும், தேனீருக்காக 25 கோடி செலவழிக்கும் அதன் தலைமையும் என்ன செய்யப் போகிறது ?

இத்தனைக் கோடி ரூபாய்களை எதற்காகச் செலவு செய்யப் போகிறார்கள் ? அதில் எவ்வளவு பணம் லஞ்சமாகக் கொடுக்கப் படப்போகிறது ?

இத்தனை கோடி செலவளித்து மக்களுக்கு சேவை செய்ய முயல்பவர்கள் என்ன அப்பழுக்கற்றத் தியாகிகளா ? இல்லை என்பது வெள்ளிடை மலை, அப்படியானால் சுமார் மூன்று கோடி முதலீடு செய்து தேர்தலில் ஜெயிக்கும் இவர்கள் எத்தனை கோடி சம்பாதிக்கப் போகிறார்கள் ? அது யாருடைய பணம் ?

நாட்டின் எந்த மூலையில் (குறிப்பாக குஜராத்தில்) அநியாயம் நடந்தாலும் தன் மூக்கை நுழைக்கும் நீதிமான்கள் இந்த விஷயத்தில் ஏன் தலையிடவில்லை ? தேர்தல்களை கண்கானிக்கும் அரசுசாரா அமைப்புகள் இது குறித்து ஏன் எவ்விதக் கேள்வியும் எழுப்பவில்லை ?

இவர்களுக்கு ஓட்டுப் போடும் மக்களாவது போட்டியிடுபவரைப் பார்த்து, உனக்கு எங்கேயிருந்து இவ்வளவு பணம் வந்தது ? ஏன் நீ இவ்வளவு செலவழிக்கிறாய் ? என்று கேள்வி கேட்பார்களா ? அப்படி கேட்கும் அறிவையும், துணைவையும்தான் முப்பாதாண்டு கால ஆட்சியில் முழுக்க மழுங்க அடித்து விட்டார்களே.

கேள்விகள், கேள்விகள், கேள்விகள், பதில் மட்டும் என்றுமே இந்த நாட்டில் கிடைக்கப் போவதில்லை. ஆகவே, திரு.நரேந்திரன் அவர்களே, உங்கள் அமெரிக்காவிலாவது ஒரு சாதாரண மனிதன் தேர்தலில் போட்டியிட்டு வென்று விடலாம், ஆனால் இந்தியாவில், ஒரு சில கட்சிகளைப் பொருத்தவரை தேர்தல் என்பது பணக்காரர்களுக்காக, பணக்காரர்களால், பணக்காரர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் ஒரு சூதாட்டத் திருவிழா ஆகும். முதலீடு போட்டுச் சூதாடு, ஜெயித்தால், பல மடங்கு அறுவடை செய். இதுதான் இந்திய ஜனநாயகம்.

****

சில இதழ்களுக்கு முன்பு ஞானி எழுதிய ஒரு அஞ்ஞானக் கட்டுரைக்கான, நண்பர் .வரதன் அவர்களின் கடிதம் கண்டேன். அருமையான பதில் திரு.வரதன். உங்கள் பதிலுடன் நான் முழுக்க ஒன்று படுகிறேன். பாராட்டுக்கள். தமிழ்நாட்டில் பிராமணர்கள் என்பவர்கள் ஒரு இளிச்சவாயர்கள் இனம். எல்லோருக்கும் அரிக்கும் பொழுதெல்லாம் சொறிந்து கொள்வதற்காக ஆண்டவனால் படைக்கப் பட்டவர்கள். யார் வேண்டுமானாலும் கேலி செய்யலாம், அவமானப் படுத்தலாம், பூணூலை அறுக்கலாம், ஆபாசமாக திட்டலாம், ஆபாச மேடை நாடகம் போடலாம், திரைப்படத்தில் கேவலமாகக் காட்டலாம். கீழ்த்தரமாக எழுதலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அவர்களது சுயநலம் காரணமாகவோ, பயம் காரணமாகவோ, பலவீனம் காரணமாகவோ, அவர்களிடமிருந்து ஒரு சிறு முனகல் கூட வராது. இதை சொல்வதற்குக் கூட பிராமணரல்லாத என்னைப் போன்றவர்கள்தான் வர வேண்டியுள்ளது.

அப்படி எதிர்ப்பே காட்டாத ஒரு இனம் கிடைத்தால் விடுவார்களா ? நமது திராவிட அட்டைக் கத்தி வீரர்கள் ? நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் அந்த செத்த பாம்பை அடித்து தன் வீரத்தைப் பறை சாற்றிக் கொள்கிறார்கள். இதில் திராவிடக் கட்சிகள் மட்டும் அல்ல, நேற்று முளைத்த லெட்டர் பேடு கட்சி வரை பார்ப்பானைத் திட்டி விட்டுத்தான் தங்கள் கட்சியையே துவங்குகிறார்கள். அதிலும் தலித் கட்சித் தலைவர்களுக்கு வீரம் கொஞ்சம் ஜாஸ்தி, அவர்களை அடிமைகளாக நடத்தும் தேவர்களையும், வன்னியர்களையும், பிற ஜாதிக்காரர்களையெல்லாம் விட்டு, விட்டு ஊரில் ஒருவர் கூட இல்லாத பிராமணர்களை திட்டித்தான் தங்கள் வீர, தீர, பராக்கிரமத்தைக் காட்டிக் கொள்வார்கள். கீரிப் பட்டியிலும், பாப்பாரப்பட்டியிலும், திண்ணியத்திலும் எத்தனைப் பிராமணர்கள் வாழ்கிறார்கள் ? திண்ணியத்தில் மலத்தை வாயில் திணித்தவனின் ஜாதியைக் குறிப்பிட்டுத் தண்டிக்கத் துணிவு இல்லாத தலவைர்களுக்கு செத்த பாம்பை அடிப்பதென்றால் ஒரே உற்சாகம்தான். இவர்கள் ஊருக்கு ஊர் பாப்பாத்தி மலம் அள்ளுவாளா என்று போர்ட் வைப்பார்கள், முதலில் இவர்களின் மனைவிமார்கள் மலம் அள்ளுவார்களா என்று எவரும் இதுவரை கேட்டதில்லை. இதில் ஞானி, மாலி, குத்தூசி என்று சேம் சைடு கோல் போடும் ஒரு கூட்டம் இருக்கிறது, எங்கே, நம்மை யாரேனும் இழிவாகப் பேசி விடுவார்களோ என்று, ஊருக்கு முன்பே, இவர்களே, தம் இனத்தாரை வசைப் பாடி, தத்தம் எஜமானர்களிடம் நல்ல பெயர் வாங்கிக் கொள்வதாக நினைத்துக் கொள்வார்கள். அப்படிப் பட்ட கீழ்த்தரமான பிரச்சாரங்களில் ஒன்றுதான் மாலியின் நாடகமும், அதற்கு வந்த ஞானியின் வக்காலத்தும். தமிழ்நாடு இருக்கும் வரை இவர்களின் பெட்டை வீரமும் இருந்து கொண்டுதான் இருக்கும். கேட்டால் நாங்கள் பார்ப்பணீயத்தைதான் எதிர்க்கிறோம் பித்தளையை அல்ல என்று வாய் கிழிய வியாக்கியானம் வேறு செய்வார்கள். இதில் எதிர்ப்பே காட்டாத, அல்லது காட்ட விரும்பாத, பலவீனமான, சிறுபான்மையான ஒரு இனத்தை அசிங்கப் படுத்தி, தங்களது வீரத்தையும், சமுதாய நீதியையும், தமிழர்களின் மானத்தையும் கட்டிக் காக்க தமிழ் நாட்டு அரசியல்வியாதிகளுக்குள் கடும் போட்டி. இந்த விஷயத்தில் அரசியல்வியாதிகளையே வெட்கப்படச் செய்யும் அளவிற்கு மறத்தமிழ் வீரத்தைக் காட்டுபவர்கள் ஒரு சில இலக்கியவியாதிகள். இவர்கள் எழுதுவதற்கு முன் பிள்ளையார் சுழி போடுகிறார்களோ இல்லையோ, பிராமணர்களை ரெண்டு வரியாவது திட்டினால்தான் அவர்களுக்கு எழுதவே வரும், கதையோ, கட்டுரையோ மேலே தொடரும். வாழ்க மறத்தமிழ் வீரம், வாழ்க வெண்ணை வெட்டி சிப்பாய்கள், வாழ்க தமிழர் பண்பாடு, வாழ்க திராவிடக் கலாச்சாரம்.

****

வழக்கம் போல் தலைவர்களுக்குத் தான் எழுதும் கடிதங்களின் மூலம், தொடர்ந்து திண்ணையில் நகைச்சுவை பஞ்சம் இல்லாமல் ஒருவர் பார்த்துக் கொண்டிருக்கிறார். சட்டத்தை மிதித்து கள்ளத்தோணியில் சென்றவருக்கும், இந்தியத் தலைவர்களை கொன்றவர்களை துதிபாடுபருக்கும் இவர் அளிக்கும் தியாகிகள் பட்டம் உச்சக் கட்ட நகைச்சுவை. இவர் எழுதியதில் ஒன்று மட்டும் உண்மை, நச்சுக்கிருமிகளும், தேசவிரோதிகளும், வாஜ்பாய் புகழ் பாட வேண்டியதில்லைதான், அத்தகைய சமூகக்கேடர்கள் புகழ்வதினால் அவருக்கு பெரும் இழுக்குதான் உண்டாகும். இவர்களிடமிருந்து எவ்வளவு தூரம் விலகி இருக்கிறாரோ அவ்வளவு தூரம் அவரின் பெருமைக்கும், நாட்டுக்கும் நல்லது.

****

மத அடிப்படைவாதம் குறித்த பித்தன் அவர்களின் கடிதங்களில் உள்ள உண்மைகளும் தார்மீக நியாயங்களும், செவிடன் காதில் ஊதிய சங்காக, விழலுக்கிறைத்த நீராக மாறிப் போனது பரிதாபமே. இவர்களின், மத அடிப்படை வாத விதண்டா விவாதங்களும், தீவிரவாத எண்ணங்களும், இந்தியாவின், ஏன் உலகத்தின் எதிர்காலம் குறித்து பலத்து அச்சத்தையே ஊட்டுகிறது. அதிலும் இவர்கள் எல்லாம் கல்லூரிப் பேராசிரியர்களாம், இத்தகைய மத அடிப்படைவாதிகளும், தீவிரவாத எண்ணம் கொண்டவர்களும் எவ்விதமான மாணவர்களை இந்த சமுதாயத்தில் உருவாக்கப் போகிறார்கள் ?

விஸ்வாமித்திரா

viswamitra12347@rediffmail.com

Series Navigation

விஸ்வாமித்திரா

விஸ்வாமித்திரா