கடிதம் டிசம்பர் 9,2004

This entry is part [part not set] of 57 in the series 20041209_Issue

பாவண்ணன்


அன்புள்ள ஆசிரியருக்கு,

வணக்கம். கடந்த இரண்டு மாதங்களாக எதிர்பாராமல் குவிந்துவிட்ட கடுமையான அலுவலக வேலை நெருக்கடிகளால் இணையதளங்களின் பக்கமே செல்லவியலாத நிலையில் இருந்தேன். களைப்பில் விடுப்பெடுக்கவேண்டிய அளவுக்கு வேலைகள். தவறவிட்ட எல்லா இதழ்களின் கட்டுரைகளையும் மற்ற படைப்புகளையும் படித்துக்கொண்டிருக்கிறேன். அறிவியல் புனைகதை வரிசையில் ஜெயமோகன் புதிதாக எழுதியுள்ள சிறுகதைகளை மிகவும் விரும்பிப் படித்தேன். கண்பிசவும் கைபிசகவுமே பெரிதும் வாய்ப்புள்ள மிகச்சிறிய ஒரு புள்ளியிலிருந்து கதையின் மையத்தை அவர் கண்டடைவதும் பிறகு அதை மெல்லமெல்ல வளர்த்தெடுப்பதும் அதற்கப்புறம் ஒரு சூத்திரப்பாவையை ஆட்டிவைக்கும் திறமையுடன் தன் பார்வைக்குத் தோதாக வளைப்பதும் மிகச்சிறந்த கலையாக அவருக்குக் கைவந்துள்ளது. எல்லாக் கதைகளுமே படிக்க மகிழ்ச்சியாக இருந்தன. அவருக்கு என் வாழ்த்துகள். பி.கே.சிவக்குமாரின் கட்டுரைவரிசையும் படிக்க ஆர்வமூட்டுவதாக இருந்தது. குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டிய இன்னொரு அம்சம் இரா.முருகன் மொழிபெயர்த்தளித்திருக்கும் கொட்லேகர் கவிதைகள். தினசரிக் காட்சிகள் சார்ந்தும் சாதாரண மானுடர்களின் செயல்பாடுகள்சார்ந்தும் வாழ்வின் சாரமான புள்ளியைநோக்கி மீண்டும்மீண்டும் குவியும் அவர் கவி தை வரிகள் நல்ல அனுபவத்தைக் கொடுக்கின்றன. இரா.முருகனுக்குத் தமிழ்க்கவிதை உலகம் கடமைப்பட்டுள்ளது. அவருக்கும் என் வாழ்த்துகள்

அன்புடன்

பாவண்ணன்

04.12.04

பெங்களூர்

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்

கடிதம் டிசம்பர் 9,2004

This entry is part [part not set] of 57 in the series 20041209_Issue

ராதா ராமசாமி


திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு

நான் திண்ணையில் எழுதுவதில்லை.திண்ணையை தொடர்ந்து படித்து வருகிறேன். திரு.அரவிந்தன் நீலகண்டன் சுலேகா இணையதளத்தில் எழுதியுள்ள கட்டுரைக்கு என் பதில் அதே தளத்தில் உள்ளது.

http://www.sulekha.com/expressions/articledesc.asp ?cid=307440

என் பதில் சுருக்கமாக உள்ளது.ஏனெனில் அக்கட்டுரையைப் படிக்கும், ஒரளவு விஷய ஞானம் உள்ள எவர்க்கும் அதன் பலவீனங்கள் வெளிப்படையாக தெரியும். கட்டுரையாளர் தனது வழக்கமான மார்க்சிய, கிறிஸ்துவ மத எதிர்ப்பினை அங்கே கொட்டியுள்ளார்.அதற்கு எந்தவிதத் தேவையுமில்லை. மீரா நந்தா ஒரு மதத்திற்கு ஆதரவாக இன்னொரு மதத்தினை விமர்சிக்கவில்லை. இந்த மதத்தினை நான் ஏற்கிறேன் இது அறிவியல் பூர்வமானது என்று எங்கும் அவர் எழுதாத போது அரவிந்தன் இப்படி எழுதியிருப்பது வேடிக்கைதான், ஆனால் அவரது பாவ்லாவிய எதிர்வினைகளை கவனித்தவர்களுக்கு இது புதிதல்ல.

அரவிந்தனால் ஒரு கோர்வையான, மீராவின் வாதங்களின் அடிப்படைகளை கேள்விக்குட்படுத்தும் பதிலைக்

கூட தரமுடியவில்லை.அவர் வைக்கும் வாதங்களின் படி பார்த்தால் அறிவியல் ரீதியாக மதத்தின் கோட்பாடுகளை ஆராய வேண்டும், கொள்ளத்தக்கன இவை, தகாதவை இவை என பிரித்திட வேண்டும். இது கேட்க சுவாரசியமாக இருக்கும். ஆனால் அறிவியலின் தத்துவம் குறித்த விவாதங்களை அறிந்தவர்கள் இதைக் கேட்டுச் நகைப்பார்கள். ஏனெனில் இதுதான் ஒரே அறிவியல் கண்ணோட்டம் என்று ஒன்றை நிருவுவது கடினம். கடவுள் இருக்கிறாரா இல்லையா என்றால் முதலில் கடவுள் என்றால் என்றுதான் கேட்க வேண்டிவரும். அப்புறம் அதை நிரூபிக்க முடியுமா, முடியுமெனில் எப்படி, உதாரணமாக பரிசோதனைகள்

மூலமா, ஆம் எனில் எந்தப் பரிசோதனைகள், எந்தக் கருவி கொண்டு … எனக் கேள்விகள் விரியும்.அப்புறம்

நிரூபணம் என்பது குறித்த கேள்விகளும் எழும். இங்கு மொழி, பொருள் குறித்த பிரச்சினைகளும் உண்டு.

எங்கும் நிறை பரம்பொருள் என்பது tautology. இதை எப்படி நிரூபிப்பது. அரவிந்தன் பதில் சொல்வார்

என்று எதிர்பார்க்கிறேன்.

இறந்தவர் நினைவாகக் செய்யப்படும் சடங்குகளுக்கு எனக்குத் தெரிந்த வரை அறிவியல் பூர்வமான நிரூபணம் இல்லை, எனவே அவை வீண் என்று அரவிந்தன் கூறுவாரா. விவேகானந்தர் அறிவியலுக்கு எதிரியல்ல, மீரா கேள்விக்குட்படுத்துவது அவர் முன்வைத்த சில கருத்துக்களை.அவர் அறிவியலுக்கு ஆதரவு தெரிவித்தார் என்பதற்காக அவர் கூறியவை எல்லாம் சரியாகிவிடாது. இந்த வேறுபாடு மிக அடிப்படையானது, அது அரவிந்தனுக்கு புரியவில்லை. ரிச்சர்ட் டாகின்சும், ஜே கோல்டும் வேறுபடும் புள்ளிகள் உண்டு. இருவரும் சிலவற்றில் ஒரே மாதிரி கருத்துத் தெரிவித்திருக்கலாம். ஆனால் வேறுபடும் புள்ளிகள் மிக முக்கியமானவை. எல்லாவற்றையும் இரண்டு சாக்குகளுக்குள்,இதற்கு ஆதரவு, எதிர்ப்பு என்று போட்டுப் புரிந்து கொள்ள முடியாது.மீராவின் கட்டுரையின் நோக்கம் வேறு, அதை சரியாக தன் கட்டுரையில் கூறியுள்ளார். இன்றைய ஹிந்த்துவ சிந்தனைக்கு சவால்விடும் கட்டுரை அது. அரவிந்தனால் அதை சரியாக எதிர்கொள்ள முடியாமல் போனதற்கு பல காரணங்கள் உள்ளன. ஒன்று அவருக்கு இதில் அறிவியல் தத்துவம் குறித்த பிரச்சினைகள் எவை என்பது புரியாதது.இரண்டாவது தன் தரப்பிற்கு வலுச்சேர்க்கும் ஆதாரங்கள் குறித்து அவர் அறியாதது. மூன்றாவது எதையும் மார்க்சிய எதிர்ப்பு அல்லது ஆதரவுக் கண்ணோட்டமாக கருதுகின்ற மனப்பாங்கும், அதன் விளைவான பாவ்லோவிய எதிர்வினையும். இது அவருடைய பிரச்சினை.இதற்கான தீர்வினை அவரே கண்டுபிடிக்கட்டும். இறுதியாக மீராவின் எழுத்துக்கள் பல polemical pieces என்று கருதத்தக்கவை. இதை எதிர்கொள்ள polemicsல் பயிற்சி வேண்டும். அரவிந்தனுக்கு அது இல்லை.எனவே தேவையற்றவற்றை முன் வைத்து தன் வாதத்தினை பலமிழக்க வைக்கிறார்.

வணக்கத்துடன்

ராதா.R

—-

radha100@rediffmail.com

Series Navigation

ராதா ராமசாமி

ராதா ராமசாமி

கடிதம் டிசம்பர் 9,2004

This entry is part [part not set] of 57 in the series 20041209_Issue

விசிதா


திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு,

வணக்கம். கடந்த வாரத் திண்ணையில் ஜோதிர்லதா கிரிஜாவின் இன்னொரு புலம்பல் கட்டுரை. அவருக்கு ஒன்று புரியவில்லை , புகை பிடிப்பது,குடிப்பது போன்றவை தனி நபர் தெரிவுகள்.இதனால் உடல் நலம் கெடும் என்று வேண்டுமானால் சொல்லலாம்.பெண்கள் குடிக்கக் கூடாது என்று சட்டமில்லையே. பெண்கள் குடித்தால் அது ஒழுக்ககேடு என்று அவராக கற்பனை செய்து கொள்கிறார். அதற்கும் பெண்ணுரிமைக்கும் என்ன தொடர்பு. பாலியல் சுதந்திரம், திருமணம் இன்றி சேர்ந்து வாழ்வது இதெல்லாம் அவருக்கு ஒழுக்கக் கேடாகத் தெரிகிறது. பெண்ணுரிமை இயக்கத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று சொல்ல இவர் யார். என்னைக் கேட்டால் அவர் குருமூர்த்தியுடன் வேறுபடும் கருத்துக்களை விட, அவர் குருமூர்த்தியுடன் ஒத்துப் போகும் கருத்துக்கள் அதிகம்.இருவருக்கும் அடிப்படைக் கருத்துக்களில் வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை.குடிக்கும் பெண்கள் இழிவான பெண்கள் என்று எழுதுபவர் பேசாமல் காஞ்சி மடத்தில் சேர்ந்தோ அல்லது ஆர்.எஸ்.எஸ். சின் மகளிர் பிரிவில் சேர்ந்தோ ‘பண்பாட்டைக் ‘ காப்பாற்றலாம். ஸ்வீடனைப் பற்றி குருமூர்த்தி தரும் புள்ளிவிபரம் குறித்து

மூலக்கட்டுரையில் என்ன சான்றாதாரம் தரப்பட்டுள்ளது என்பதைப் பார்க்காமல் கருத்துக் கூற விரும்பவில்லை. இந்தியச் சூழலில் பெண்கள் மீதான வன்முறை குறித்து குருமூர்த்தி என்ன எழுதியுள்ளார் என்பது

எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்றைச் சொல்ல முடியும், ஸ்வீடன் மனித வளர்ச்சி குறியீட்டு எண்ணில்

(Human Development Index) உலகில் முதல் ஐந்து நாடுகளில் ஒன்றாக உள்ளது. அங்கு சமத்துவம்

என்பது நடைமுறையில் உள்ளது.எல்லாச் சமூகங்களில் உள்ளது போல் அங்கும் சில பிரச்சினைகள்

இருக்கலாம்.அதே சமயம் ஆண்-பெண் சமத்துவம், அனைவருக்கும் கல்வி, சுகாதார வசதி, தனி நபர்

உரிமைகள், மனித உரிமைகள் போன்றவற்றில் அது இந்தியாவை விட பல படி முன்னே உள்ளது

என்பது உண்மை. ஜோதிர்லதா கிரிஜாவின் போலி பெண்ணுரிமை வாதம் குருமூர்த்தியின் கன்சேர்வேட்டிசத்தின் இன்னொரு வடிவம்தான்.

வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் குறித்த கட்டுரை மிக நன்றாக உள்ளது. மொழிபெயர்ப்பாளருக்கு

என் பாராட்டுகள். இது குறித்து மேலும் சில கட்டுரைகளை திண்ணையில் வெளியிட வேண்டும் என்று

கேட்டுக்கொள்கிறேன். indiatogether இணையதளம், திட்டக்குழு இணையதளம், பொதுவான குறைந்தபட்சத்திட்டம் குறித்த ஆலோசனைக்குழுவின் இணையதளம், எக்கானமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி இணையதளம் – இவற்றில் வேலைவாய்ப்பு, வேலைவாய்ப்பிற்கான உத்தரவாதம், கிராமப்புற வேலைவாய்ப்புத்திட்டங்கள் பற்றி பல கட்டுரைகள் உள்ளன.

விசிதா

http://wichitatamil.blogspot.com/

Series Navigation

விசிதா

விசிதா