கடிதம் டிசம்பர் 2,2004 – ஏகலைவன்: ஜெய மோகன்: பி.கே.சிவக் குமார்

This entry is part [part not set] of 50 in the series 20041202_Issue

சோதிப் பிரகாசம்


திண்ணையின் ஆசிரியருக்கு, வணக்கம்!

இந்து மதத்தின் மூட நம்பிக்கைகளைக் கிண்டல் செய்து ஜெய மோகன் எழுதி இருக்கின்ற ஒரு கதைதான் ‘விஷ்ணு புரம் ‘ என்று நான் எழுதினால், அ. மார்க்சைச் சுட்டிக் காட்டி என்னைப் பயமுறுத்துகிறார் ஏகலைவன்! விஷ்ணு புரத்தில் வருகின்ற ‘மரத்தடி ஆழ்வாரின் ‘ ஆசியுடன் மீண்டும் ஒரு முறை அதனை அவர் படித்துப் பார்த்துக் கொள்வது நல்லது!

அந்த மடலில், ‘மார்க்சியப் பேரறிஞர் ‘ என்று என்னை ஏகலைவன் குறிப்பிட்டும் இருக்கிறார். என் மீதான ஒரு தாக்குதல் என்று அதனைச் சுட்டிக் காட்டி அவருக்கு நான் மடல் எழுதினேன். அவரிடம் இருந்து இன்னமும் மறுவடி எதுவும் வர வில்லை!

அறிஞர்-பேரறிஞர், தலைவர்-பெருந் தலைவர், புரட்சித் தலைவர்-புரட்சித் தலைவி-புரட்சிப் புயல், என்பன போன்ற பல பட்டங்களை அரசியல் காரர்கள் கட்டிக் கொண்டு வந்து இருக்கலாம். ஆனால், நமக்கு எதற்கு அவை எல்லாம் ?

‘இயங்கு இயல் ‘ என்பதை ‘முரண் இயக்கம் ‘ என்று ஏகலைவன் புரிந்து கொண்டால் போதும், அதனைக் கற்றுக் கொள்வதற்கு அவருக்கு ஆசிரியர் யாரும் தேவைப் பட மாட்டார்கள். கார்ல் மார்க்சின் நூல்களே போதும் ஆனவையும் ஆகும்.

வையாபுரி(பிள்ளை)யாரின் மேல் உள்ள ஒரு பற்றின் காரணமாக ஒரு கட்டுரைத் தொடரினைப் பி. கே. சிவ குமார் எழுதிக் கொண்டு வர—-

ஆகா, வையாபுரியாரா ? அவரது அகராதிதானே, இன்றைக்கும் சிறந்த அகராதி! அவர் மேல் பல குற்றங்களைச் சுமத்திக் கொண்டு வந்து இருந்த தேவ நேயனார் கூட அவரது சில சொற்களைத் தமிழ்ச் சொற்கள் என்று நிருபித்திட வில்லையா ? வையாபுரியாரையும் தேவ நேயனாரையும் ஒப்பிட்டு ஆய்ந்தால் உண்மை தெரிந்து விடும்! என்பது மாதிரியாக அவருக்கு ஜெய மோகன் மறு-வினை புரிய—-

கதைஞர் ஜெய மோகனின் கருத்தினால் உள்ளம் மகிழ்ந்து போன பி. கே. சிவ குமார், அப்படி ஓர் ஒப்பீட்டினை ஜெய மோகனே எழுதிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ள—-

ஜெய மோகனோ இப் பொழுது நழுவிக் கொண்டு இருக்கிறார். இந்த நழுவலை மூடி மறைக்கின்ற வகையில், ஜெயகரனை வம்புக்கு இழுத்து யாரும் கண்டு இருக்க முடியாத குமரிக் கண்டத்தைப் பற்றியும் அவர் பேசுகிறார். அது மட்டுமா, ‘கொற்றவை ‘ என்னும் தமது புதுக் கதையையும் அவர் குறிப்பிடுகிறார்.

எல்லாம் சரிதான்!

ஆனால், ‘திரவிடர் வரலாறு ‘ நூலுக்குப் பின் வெளி வந்த ‘ஆரியர் வரலாறு ‘ நூலைப் படித்து விட்டு, இந்த ‘அம்மன் ‘ கதையைப் பற்றி என்னிடமும் ஜெய மோகன் பேசி இருக்கிறார். ‘தென் புலம் ‘ பற்றிய அவரது கருது கோள்களை நிருபிப்பதாக அந்த நூல் அமைந்து இருந்தது என்றும் கூட என்னிடம் அவர் கூறி இருக்கிறார்.

எனினும், கவிஞர் இன்குலாப்பிற்கு இருப்பது போல ஜெய மோகனுக்கும் ஞாபக மறதி அதிகம் போலும்! அல்லது, தமக்குப் பிடித்தமான நூல்களைப் பற்றி ‘மவுன மொழி ‘யில் பேசி விட்டு, தாம் படிக்காத ஈரோப்பிய எழுத்தாளர்களைப் பற்றி மட்டும் ‘மவுனம் இல்லாத மொழி ‘யில் அவர் பேசிக் கொள்வார் போலும்!

தாங்கள் படித்த நூல்களை ஒளித்து வைத்து விட்டுப் புத்தி சாலிகளாகத் தங்களைக் காட்டிக் கொண்டு வந்து இருக்கின்ற மேதாவிகளை நான் சந்தித்தும் இருக்கிறேன்.

எப்படியும், கதைஞர்களை வினயமாக எடுத்துக் கொள்வதில் எந்தப் பொருளும் இல்லை என்பதுதான் பி. கே. சிவ குமாருக்கு இதன் மூலம் கிடைத்திடக் கூடிய ஒரு படிப்பினை!

வையாபுரியாரின் பங்களிப்பினைப் பற்றிய ஆய்வினைப் பி. கே. சிவ குமாரே மேற் கொள்ளலாம் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. மாக்ஸ் முல்லர், பி. :டி. சீனிவாச(அய்யங்கார்)னார், ஆகியோரின் நூல்களை அவர் படித்துப் பார்த்தாலே இதற்குப் போதுமானது!

மிகவும் தெளிவாகத் தமது கருத்துகளை வெளிப் படுத்துவதில் வல்லவர் மாக்ஸ் முல்லர்! மிகவும் விரைவாக இவரை நாம் படித்து முடித்தும் விடலாம். பி. :டி. சீனிவாசனாரின் எழுத்துகளிலோ தெளிவும் நகைச் சுவையும் கலந்து இருக்கும்.

இவர்களின் கருத்துகளுக்கு நேரடியான ஓர் அறிமுகம் தேவை என்றால், ‘திரவிடர் வரலாறு ‘ மற்றும் ‘ஆரியர் வரலாறு ‘ ஆகிய நூல்கள் பெரிதும் அவருக்குப் பயன் படும். ‘ஆரியர் ‘ என்று ஒரு பந்தவம் (ரேஸ்) உலகில் எங்கும் என்றும் இருந்தது இல்லை என்பதுதான் ‘ஆரியர் வரலாறு ‘ நூலின் அறுதியான முடிவும் ஆகும்.

ஆனால், ஞா. தேவ நேயனாரோ ‘ஆரியர் ‘ என்று ஒரு பந்தவத்தினர் இருந்தனர் என்றும் திரவிடர்களை அவர்கள்தாம் அடிமைப் படுத்தி இருந்தனர் என்றும் நம்பிக் கொண்டு வந்து இருந்தவர்! செல்வச் செழிப்பிலும் நாகரிகத்திலும் ஏற்கனவே சிறந்து விளங்கிக் கொண்டு வந்து இருந்த திரவிடர்களையாவது, ஆரியர்கள் அடிமைப் படுத்துவதாவாது, என்று மாக்ஸ் முல்லரைப் பி.:டி. சீனிவாசனார் கிண்டல் அடித்து இருந்ததைக் கூட அவரால் கவனித்திட முடிய வில்லை.

இங்கே, பி. :டி. சீனிவாசனாரையும் வையாபுரியாரையும் பற்றிய ஒரே ஒரு கோணத்தினை மட்டும் சிறிது நான் சுட்டிக் காட்டிட விரும்புகிறேன்.

‘விண் ‘ என்னும் தமிழ்ச் சொல்லின் இருந்து விளர்ந்து வந்து இருந்ததுதான் ‘விஷ்ணு ‘ என்னும் சம்ஸ்க்ருதச் சொல் என்று பி. :டி. சீனிவாசனார் கூறுகிறார். வையாபுரியாரோ சம்ஸ்க்ருத வேரில் இருந்துதான் அது கிளைத்து வந்து இருந்தது என்று குறிப்பிடுகிறார்.

‘முத்து ‘ என்னும் சொல், ஒரு தமிழ்ச் சொல் என்பது பி. :டி. சீனிவாசனாரின் கருத்து! சம்ஸ்க்ருத ‘முக்தா ‘வின் திரிபுதான் தமிழ் ‘முத்து ‘ என்பது வையாபுரியாரின் கருத்து!

‘மீன் ‘ என்னும் தமிழ்ச் சொல்லிற்கு ‘மீன ‘ என்னும் சம்ஸ்க்ருதச் சொல்தான் அடிப்படை என்றும் ‘நீர் ‘ என்னும் தமிழ்ச் சொல்லோ ‘நீர ‘ என்னும் சம்ஸ்க்ருதச் சொல்லுடன் தொடர்பு உடையது என்றும் வையாபுரியார் கூறுகிறார்.

ஆனால், பி. :டி. சீனிவாசனாரோ இவர் போன்றவர்களைக் கிண்டல் அடிக்கிறார்—-காலம் காலமாக நீரைப் பருகிக் கொண்டும் மீனை அருந்திக் கொண்டும் வந்து இருக்கின்ற தமிழர்கள், சம்ஸ்க்ருதத்தில் இருந்து இந்தச் சொற்களைக் கடனாகப் பெற்றுக் கொண்டு இருந்தனர் என்பது வேடிக்கையானது என்று!

எனினும், ‘இந்தோ-ஈரோப்பிய மொழிகள் ‘ என்னும் வகைப்பாட்டினை இவர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டு இருக்க, ஆரியர் வரலாற்றிலோ இந்த வகைப்பாடு கேள்விக்கு உட்படுத்தப் பட்டு இருக்கிறது. ஞா. தேவ நேயனாரின் சொல் ஆய்வுகளில் ஈடுபாடு கொண்டு இருக்கின்ற நண்பர் ஜெய மோகன், இந்த முயற்சியிலாவது பின் வாங்காமல் ஈடுபடலாம் என்றும் தோன்றுகிறது.

ஆக, வையாபுரியாரின் பங்களிப்பினைப் பற்றிய ஆய்வு ஒன்றும் கடினமானது அல்ல என்பதைப் பி. கே. சிவ குமாருக்கும் அவர் போன்றோருக்கும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். பி. கே. சிவ குமாரின் முயற்சி வெற்றி பெறுவதாக!

27-11-2004

அன்புடன், sothipiragasam@yahoo.co.in

சோதிப் பிரகாசம்

***

Series Navigation

சோதிப் பிரகாசம்

சோதிப் பிரகாசம்