கடிதம் ஜூன் 3 , 2004

This entry is part [part not set] of 47 in the series 20040603_Issue

ஒரு வாசகர் – ரெ.கார்த்திகேசு


திண்ணையில் குண்டலகேசி பற்றிய கட்டுரை வாசித்தேன். ஆச்சரியமாக இருந்தது – கட்டுரை எழுதிய வளவ-துரையன் கருணாநிதியையும் மந்திரிகுமாரியையும் மறக்கவில்லை. ஆனால் அவர் இன்னும் அடிப்படையான ஒன்றைக் குறிப்பிட்டிருக்கலாம். பெளத்த நூலான தம்மபதம், தன் 102, 103 பகுதிகளில், குண்டலகேசி பற்றி, தேரி குண்டலகேசியின் கதை என்று தெளிவாக, புத்தரின் வாக்குக்கு விளக்கமாக, குறிப்பிட்டுள்ளது.

தமிழ்க்காப்பியங்கள் என்று போற்றப்படும் சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலையின் கிளைக்கதைகள், பெளத்த, சமண மரபுக்கதைகள், பஞ்சதந்திரம் போலப் பல இடங்களில் காணப்படுவதை இத்தோடு ஒப்பிட முடியும்.

தமிழ்-அடையாளம் என்பதில் மட்டுமே கவனம் குவிந்தால் இவை கவனம் பெறுவது தவிர்க்கப்பட்டுவிடும்! அடையாள-அரசியல் விவாதங்களில் பங்கேற்று பலியாக எனக்கு விருப்பமில்லை.

தங்கள்,

ஒரு வாசகர்

(பெயர் குறிப்பிட விரும்பவில்லை)


சுஜாதாவின் ‘ஸ்ரீரங்கத்துத் தேவதைகள் ‘ கதைகள் பற்றி ஜெயமோகன்

பாராட்டி எழுதியிருப்பதும் (தின்ணை 20/5/04) அதன் பின் ஐகாரஸ் பிரகாஷ் எழுதிய

பின்பாராட்டும் (27/5/04) பற்றி. ‘மாஞ்சி ‘ கதை பற்றி ஜெயமோகனின்

உணர்ச்சி மயமான பாராட்டு ஆச்சரியம் தருவதுதான். அதைத் தமிழில் வெளிவந்த

முக்கியமான கதைகளில் ஒன்றாக அவர் குறிப்பிட்டு உயர்ந்த பீடத்தில் வைத்துள்ளார்.

அவர் கருத்து. அதை மறுப்பதற்கு ஒன்றுமில்லை.

ஆனால் இதற்கு ஒரு வரலாற்று அடிக்குறிப்புச் சேர்க்கப்பட வேண்டும். ‘மாஞ்சி ‘

கதையின் முடிவில் இந்த விதவை மாமி தனது முதிர்ந்த வயதில் தனக்கு

புருஷன் துணை தேடிப் போவதாக இருக்கிறது. இந்த முடிவைப் பிடிக்காதவர்கள்

எழுதிய கடிதங்களுக்குத் தலைசாய்த்த சுஜாதா ஆனந்த விகடனில் மன்னிப்புக்

கேட்டுக் குறிப்பெழுதினார் என்பதுதான் முக்கியம். அப்படியானால் இது ஒரு ‘வழு ‘

என்று அவரே ஒப்புக் கொண்டதாக ஆகிறது.

எனக்கு இந்தக் கதையிலும் வேறு கதைகளிலும் சொல்லப்படும் வேறு ஒரு விஷயம்

பிடிப்பதில்லை. அதாவது இந்திய மண்ணை விட்டு அமெரிக்காவுக்குப் போகும்

தமிழ் மக்கள் சராசரியாக சுயநலவாதிகளாகவும் மரபு மறந்தவர்களாகவும் ஆகிவிடுகிறார்கள்

என்றும் சொல்வதுதான். இந்தக் கதையிலும் நல்ல வேலை பெற்று அமெரிக்கா

செல்லும் மகன் தன் தாயைத் தன் பிள்ளையைப் பார்த்துக் கொள்ளூம்

வேலைக்காரி போல ஆக்கிவிடுவதாக சித்திரிக்கப் படுகிறான். அறிவுக் குறைவுள்ளவன்

ஆனாலும் ‘மாஞ்சி ‘ ஸ்ரீரங்கத்து மண்ணை விட்டு அகலாத காரணத்தினால்

புனிதமானவனாக இருந்து இறக்கிறான். ஒரு கிளிஷே போல இது ஆகிவிட்டது.

அமெரிக்க மண்ணில் போய்க் கால் நாட்டி வெற்றி பெற்ற தமிழர்களை ஒரு பொறாமையுடனும்

எரிச்சலுடனும் ‘ஆசாரம் இழந்தவர்கள் ‘ என்றும் பார்க்கும் பார்வை

புதிய தமிழ் இலக்கியத்தில் வளர்ந்து வருவதை நாம் கவனிக்க வேண்டும்.

அன்புடன்

ரெ.கார்த்திகேசு.


ஆசிரியருக்கு,

சென்ற இதழில் பிரதாபருத்திரன் எழுதிய கடிதம் கண்டேன். நினைவிலிருந்து எழுதியதனால் பிழை வந்து விட்டது. யசுநாரி கவபத்தாவின் தூங்கும் அழகிகளின் இல்லம் நாவலை நண்பர் கெளதம சித்தார்த்தன் [ உன்னதம் பதிப்பகம்] வெளியிட்டார். அது அச்சான நாட்களில் தமிழினியில் கைப்பிரதியில் படித்தேன். மொழியாக்கம் லதா ராமகிருஷ்ணன் . சா தேவதாஸ் கால்வினோ நாவல்களை மொழியாக்கம் செய்தவர் என்பதனால் இளையபாரதி [சந்தியா பதிப்பகம்] வெளியிட்ட கால்வினோ கதைகள் அவரால் மொழியாக்க்கம் செய்யப்பட்டது என்ற நினைவு எனக்கு. தவறுக்கு வருந்துகிறேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி

ஜெயமோகன்

jeyamoohannn@rediffmail.com


Series Navigation