கடிதம் ஜனவரி 20,2005 – நேச குமார் தெளிவுபெறவேண்டும்

This entry is part [part not set] of 47 in the series 20050120_Issue

ஹமீத் ஜாஃபர்


‘நீங்கள் அனைவரும் ஒற்றுமை என்ற அல்லாஹ்வின் கயிற்றை பற்றி பிடித்துக்கொள்ளுங்கள் ‘ (அல் குர்ஆன்; 3:103)

யாரையும் மிரட்டவேண்டும் என்ற எண்ணம் நமக்கில்லை, மாறாக நாம் அனைவரும் சகோதரர்களாக வாழவேண்டும், சமத்துவமும் அமைதியும் தழைக்கவேண்டும் என்பதே நமது குறிக்கோள். அதுதான் இஸ்லாத்தின் குறிக்கோளுமாகும். நேசத்துடன் வரும் கரத்தை பாசமென்ற கயிற்றால் பிணைத்தால் எவராலும் பிரிக்கமுடியாது என்பதே அதன் பொருள். திரு நேச குமார் தவறாகப் புரிந்துக்கொண்டார்.

‘சுனாமி ‘ வந்தபிறகு மனித நேயத்தை முன்வைப்பதின் அவசியத்தை உணர்ந்துள்ள திரு நேச குமாரை பாராட்டாமல் இருக்கமுடியாது. ஆனால் அதன் அவசியமே இல்லை. மனிதநேயமும் சகோதரத்துவமும் எங்கும் போய்விடவில்லை முன்னால்தான் நின்றுக்கொண்டிருக்கின்றன. அவற்றை மறைத்திருக்கும் திரையை கிழித்துவிட்டால் போதும். ஒற்றுமையும் மனிதநேயமும் காலாகாலமாக இருந்து வரும் ஒன்று. கும்பினிகள், தங்களை நிலை நிறுத்திக் கொள்வதற் காக செய்த சூழ்ச்சியில் அடிமைப் பட்டு, அதுவே உண்மை, அதுவே வரலாறு என்று நம்பிக்கொண்டு தன் வயிறு வளர்க்கும் ஒரு சில புல்லுருவிகளைக் கொண்ட அமைப்புக்களால் ஒட்டு மொத்த சமுதாயம் பாதிக்கப்பட்டு சகோதரத்துவத்தை சிறுகச்சிறுக இழந்துக்கொண்டிருக்கிறது என்பதை திரு நேச குமார் புரிந்துக்கொள்ளவேண்டும். ‘மனிதர்கள் யாவரும் ஏக சகோதரர்களே எனும் தத்துவம் இஸ்லாத்தில் தேசிய, இன எல்லைகளைத் தாண்டி நிற்கும் ஓர் உயரிய கொள்கையாக இயங்குகிறது என்பதை நாம் மறுக்கவியலாது. ‘ என்று நம் நாட்டின் இரண்டாம் ஜனாதிபதி சர்வபள்ளி டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்கள் கூறியுள்ளதை நினைவு படுத்த விரும்புகிறேன்.

நான், எனது சொந்த விமரிசனங்களையோ அல்லது குறைகளையோ இந்து மதத்தின்மீது வைக்கவில்லை, உங்களால் எழுதப்பட்ட புராணங்களில் ஒரு சில பகுதிகளை சுட்டிக் காட்டினேன். வள்ளலார் ஐயா குறிப்பிடுவதுபோல் ‘….பிண்ட லஷணத்தை அண்டத்தில் காட்டினார்கள். கைலாசபதி என்றும் வைகுண்டபதி என்றும் சத்தியலோகாதிபதி என்றும் பெயரிட்டு இடம் வாகனம் ஆயுதம் வடிவம் ரூபம் முதலியவையும் ஒரு மனிதனுக்கு அமைப்பதுபோல் அமைத்து உண்மையாக இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். இஃது உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்களென்று பெயரிட்டுக் கொண்டிருந்தவர்களும் உண்மை அறியாது அப்படியே கண்ணைமூடிக்கொண்டு உளறியிருக்கிறார்கள். ஆனால் ஆதியிலே இதை மறைத்தவன் ஒரு வல்லவன். அவன் மறைத்

ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை, அவன் பூட்டிய அந்த பூட்டை ஒருவரும் திறக்கவில்லை… ‘ ((ஆதாரம்: சித்திவளாகப் பேருபதேசம்))

மெய்நிலை கண்ட ஞானிகள்:

வள்ளலார் ஐயா அவர்களை ‘மெய்நிலை கண்ட ஞானி ‘ என நான் குறிப்பிட்டுள்ளதைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்பட்டதன் மூலம், இன்னும் நீங்கள் மதங்களை புரிந்துக் கொள்ளவே இல்லை என்பதை தெளிவாகக்காட்டியுள்ளீர்கள். ஐயா அவர்கள் மட்டுமல்ல ராமகிருஷ்ண பரமஹம்சரும், கருவூராரும், திருவாரூர் தட்சிணா மூர்த்தி சுவாமிகளும் மெய்நிலை கண்ட ஞானிகள்தான். இஸ்லாத்தைப் புரியாமலே இஸ்லாத்தைப் பற்றி அவதூராக எழுதும் அன்பரே! ஏக இறை கொள்கையை எவர் ஏற்றுகொண்டு அதன்படி நடக்கிறாரோ அவர் எங்கிருந்தாலும் விசுவாசிகள்(முஃமின்கள்)தான்.

‘A Muslim, in the original meaning of the word, is someone who submits to the ONE AND ONLY GOD, regardless of whether he calls himself

a Jew, a Christian, or a Muslim. ‘ – Religion on the Rise, by: Murad Wilfried Holfmann

‘விசுவாசிகளாயினும் யூதர்களாயினும் கிறிஸ்தவர்களாயினும் ஸாபியீன்களாயினும் எவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும்

உண்மையாக விசுவாசித்து, நற்கருமத்தைச் செய்தார்களோ அவர்களுக்கு, அவர்களுடைய கூலி அவர்கள் இறைவனிடத்தில்

நிச்சயமாக உண்டு. மேலும் அவர்களுக்கு எந்தவித பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவுமாட்டார்கள். ‘ (அல் குர்ஆன் 2:62)

இங்கு முஸ்லிம் என்று கூறவில்லை, விசுவாசிகள் (முஃமின்கள்) என்று இறை ஆவேசம் [நேச குமார் அகராதிபடி] கூறுகிறது. அதாவது எவர் எப்படி தன்

இறைவனை பகவான் என்றோ அல்லது கர்த்தர் என்றோ அல்லது அருட்பெரும் ஜோதி என்றோ அல்லது அல்லாஹ் என்றோ நினைத்து அதில் கிஞ்சிற்றும் மாறாமல் ஓர் இறைக் கொள்கையுடன் இருக்கிறாரோ அவருக்கு நற்கூலி உண்டு என்பதே இதன் பொருள். பெயர் மாறினாலும் பெயரிடப்பட்டப் பொருள் மாறாது.

இருண்ட கண்டத்தில் அன்பர் இருந்துக்கொண்டு இஸ்லாத்தின் அடிப்படை என்னவென்றே புரியாமல் எதையெதையோ திரித்துக்கொண்டிருக்கிறார். நபிகள் நாயகத்திற்குப் பிறகு இஸ்லாத்திற்கு வெளியே இறைஞானிகள் இருக்க வாய்ப்பில்லை, மெய்நிலை காண வழியே இல்லை என்று இஸ்லாம் எங்கே சொல்லியிருக்கிறது ?

இஸ்லாத்தின் தோற்றம்:

இஸ்லாத்தை நபிகள் நாயகம் தோற்றுவிக்கவில்லை, எப்போது முதல் மனிதர் இவ்வுலகில் தோன்றினாரோ அப்போதே இஸ்லாமும் தோன்றிவிட்டது. மக்கள் பெருகப் பெருக இஸ்லாமியம் மறக்கப்பட்டு தான்தோன்றிதனமாக நடக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களை நேர்வழிப்படுத்தவே அவ்வப்போது இறைதூதர்கள் தோன்றினார்கள்.

நபிகள் நாயகத்தால் தன் பெரிய தந்தையை கடைசி வரை திருத்த முடியவில்லை, தமது சொந்தக் கூட்டத்தாரை மாற்ற முடியவில்லை, மதினாக்காரர்களையே மாற்றமுடிந்தது, கடைசியில் வாளின் துணைகொண்டே குறைஷிகளை மனம் மாறவைக்க முடிந்தது என்று குற்றம் சாட்டியுள்ளீர்கள்.

நான், உங்களை நல்ல சிந்தனையாளர் என்று நினைத்திருந்தேன். இப்போது புரிகிறது தங்களுக்கு சிந்திக்கவும் தெரியவில்லை என்று. நோய் உள்ளவனுக்கு நோய் குணமாகவேண்டுமானால் மருத்துவர் கொடுக்கும் மருத்துவத்தையும் மருந்தையும் ஏற்றுகொள்ளவேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக நம்பிக்கை வேண்டும். இதில் எதுவுமே இல்லையென்றால் நோய் குணமாகாது. சுருக்கமாகச் சொன்னால் வாதத்துக்கு மருந்து உண்டு குணப்படுத்திவிடலாம், பிடிவாதத்தை குணப்படுத்தமுடியாது என்று நான் சொல்லி நேச குமார் தெரிந்துக்கொள்ளவேண்டிய நிலையிலில்லை என்று நினைக்கிறேன். இப்போது புரியும் ஏன் தன் பெரியதந்தையைத் திருத்தமுடியவில்லை என்று.

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதா ?:

இறை தூது வருவதற்குமுன்வரை ‘அல் அமீன், அல் அமீன் ‘ ( ‘நேர்மையாளர் ‘) என்று சொல்லிக்கொண்டிருந்த மக்கத்து குறைஷியர்கள் நுபுவத்து(இறைதூது) வந்தபின் நபிகளாரை ஏற்கமறுத்தனர் ஒரு சிலரைத்தவிர, ஆனால் மதினாவாசிகள் அவர்களை ஏற்று கொண்டனர். வாளின் துணைகொண்டு குறைஷிகளை மாற்ற முடிந்தது என்று யார் சொன்னார்கள் ? ஐயா, நபிகளார் செய்த யுத்தங்கள் தற்காப்பு யுத்தங்களே என்று ஏற்கனவே சலாஹுதீன் அவர்கள் திண்ணையில்

எழுதியிருந்தார்கள். இன்னும் மூன்று கால் என்ற நிலையிலேயே இருக்கிறீர்கள். உங்களை ஒருவர் தாக்க வருகிறார், நீங்கள் என்ன சும்மாவா இருப்பீர்கள் ? அவன் கை ஓங்குவதற்குமுன்பே உங்கள் கை ஓங்கிவிடுமில்லையா ? அப்படி செய்தால் நீங்கள் செய்வது யுத்தமாகுமா ?

நீங்கள் சொல்வதுபோல் யுத்த வசனங்களே குர்ஆனில் பெரும்பாலும் உள்ளன, நபிகள் நாயகம் யுத்த சிந்தனை உள்ளர்களாக இருந்தார், வாளினால்தான் இஸ்லாம் பரவியது என்று சொன்னால், இவர்கள் எதிரிகள் இருந்த இடத்திற்கு சென்று யுத்தம் செய்திருக்கவேண்டும். மாறாக எதிரிகளல்லவா இவர்கள் இடத்திற்கு வந்தனர். இவர்கள் சந்தித்த யுத்தங்களில் பிரசித்திவாய்ந்தது மூன்று யுத்தம். முதல் யுத்தமான பதுரு என்ற இடத்தில் நடந்த பதுருயுத்தம். (1) இது மக்காவுக்கு அருகில் இல்லை, மதினாவுக்கு அருகிலுள்ள இடம். (2) இவர்களின் படைபலம்: 313 வீரர்கள், 6 எஃகு கவசங்கள், 8 வாட்கள், 70 ஒட்டகங்கள், 5 குதிரைகள். (3) எதிரியின் படைபலம்: 1000 வீரர்கள், 700 ஒட்டகங்கள், 100 குதிரைகள், 600 கவசங்கள் மற்றும் ஆயுதங்கள், படையினருக்கு உற்சாகமூட்ட பாட்டுப்பாடும் பெண்கள் ((ஆதாரம்: மறுவிலா முழுமதி – ஜமால்)). இப்போது சொல்லுங்கள் யார் முதலில் வாளேந்தினார்கள், யாருக்கு வெற்றி கிடைத்தது ?

‘THE MORE I STUDY THE MORE I DISCOVER THAT THE STRENGTH OF ISLAM DOES NOT LIE IN THE SWORD ‘ – மஹாத்மா காந்தி யங் இந்தியாவில்

உம்ரா செய்ய நபிகள் கோமான் 1400 தோழர்களுடன் மக்கா வந்தபோது, அதை தடுத்த மக்கத்து குறைஷிகளுடன் ஹுதைபியா என்ற இடத்தில் தங்களுக்கு பாதகமான உடன்படிக்கையை செய்துக்கொண்டு உம்ரா செய்யாமல் திரும்பினார்களே! உங்கள் கூற்றுப்படி போர் குணம் கொண்டவராக இருந்தால் சண்டை செய்திருக்கலாமே!

இஸ்லாத்தை அரபு நாட்டிற்கப்பால் பரவச் செய்ய எண்ணிய நபிகளார் பெரும்படையை அனுப்பவில்லை. மாறாக ஐந்து பேர்களை (நபித்தோழர்கள்)தெரிவு செய்து ரோமானியப் பேரரசர் ஹெராக்ளியஸ், பாரசீக மாமன்னர் குஸ்ரு பர்வேஸ், அபிஸினிய மன்னர் நஜ்ஜாஷி, எகிப்திய மன்னர் முகெகிஸ், யெமன் நட்டரசன் ஆகியவர்களுக்கு ஐந்து கடிதங்களை அனுப்பிவைத்தார்கள். அதில் நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுகொள்ளவில்லயானால் பெரும்போரை சந்திக்கவேண்டி வரும் என்று எழுதவில்லை. அவர்கள் எழுதியிருந்தது இதுதான்: ‘ஹெராக்ளியஸ் பேரரசருக்கு அல்லாஹ்வின் தூதர் முஹம்மது எழுதியது, இஸ்லாத்தை ஏற்று ஈடேற்றம் பெறுங்கள் என்று தொடங்கி ‘வேதத்தை உடையவர்களே! எங்களுக்கும் உங்களுக்கும் (சம்மதமான) ஒரு மத்திய விஷயத்தின்பால் வருவீர்களாக! (அதாவது:) ‘நாம் அல்லாஹ்வைத் தவிர வேறொன்றையும் வணங்கோம். நாம் அவனுக்கு யாதொன்றையும் இணையாக்கோம். நம்மில் எவரும் அல்லாஹ்வையன்றி எவரையும் ஆண்டவனாக எடுத்துக்கொள்ளோம் ‘ (விசுவாசிகளே! இதனையும்) அவர்கள் புறக்கணித்தால், (அவர்களை நோக்கி) ‘நிச்சயமாக நாங்கள் (அவன் ஒருவனுக்கே முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்கள் என்று நீங்கள் சாட்சியங் கூறுவீர்களாக! ‘ என்று நீங்கள் கூறிவிடுங்கள். ‘ என்ற அல் குர்ஆனின் 3 ம் அத்தியாத்தின் 64 வது வசனத்தையும் எழுதி அனுப்பியிருந்தார்கள். இந்த கடிதம் இன்றும் இஸ்தான்புல் டப்காபி அருங்காட்சியகத்தில் இருக்கிறது.

நபிகளார் செய்தது மாற்றமல்ல சீர்திருத்தம்:

நபிகள் நாயகம் தொடர்ந்து தமது மார்க்கத்தில் பலவித மாற்றங்களை ஏற்படுத்தியே வந்திருக்கிறார். வரலாற்றினூடே நபியவர்களைப் பார்க்கும்போது விஷமிட்டு கொலையுண்டிருக்காவிட்டால் அவர் காட்டிச் சென்ற இஸ்லாத்தில் பலவித மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும், அதை அவரே செய்திருப்பார் என்று தோன்றுகிறது என்று உங்கள் அறிவில் தோன்றியதை காட்டியிருந்தீர்கள்.

இதிலிருந்து வரலாறும் தெரியவில்லை என்று தெரிகிறது. கைபரில் நபிகளாருக்கு யூதர்கள் அளித்த விருந்தில் ஆட்டிறைச்சியில் விஷம் கலந்து கொல்ல முயற்சி நடைபெற்றது. ஆனால் ஒரு இறைச்சித் துண்டை வாயில் வைத்தவுடன் அருவருப்புடன் உடனே துப்பிவிட்டு, உணவில் விஷம் கலந்திருக்கிறது யாரும் உண்ணவேண்டாம் என்று தடுத்துவிட்டார்கள். ஆனால் பிஷர் இப்னு பராபின் மஃரூர் என்ற தோழர் மட்டும் அவர்கள் தடுக்குமுன்பே சிறிய துண்டை விழுங்கிவிட்டால் நொடிப்பொழுதில் இறந்துவிட்டார் ((ஆதாரம்: மறுவிலா முழுமதி – ஜமால்))

நபிகள் நாயகம் ஒருபோதும் மார்க்கத்தில் மாற்றம் செய்யவில்லை, சீர்திருத்தமே செய்துவந்துள்ளார்கள். ஆரம்ப காலத்தில் இருந்துவந்த மது அருந்துவது போன்ற சில செயல்களை சிறிது சிறிதாக தடை செய்து முற்றிலுமாக ஒழித்தார்கள். தன் மறைவுக்கு பிறகு மார்க்கம் நலிந்துவிடும் என்று தெரிந்துதான் ‘ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்பத்திலும் மார்க்கத்தைப் புதுப்பிக்க ஒரு சீர்திருத்தவாதி(முஜத்திது-Mujaddid) வருவார். ‘ [நூல்: அபுதாவுத்] என்று அறிவிப்பு செய்துள்ளார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் அரேபியாவில் இப்னு தைமிய்யா, அபு ஹஸன் ஷாதுலி ஈராக்கில் முஹைய்யிதீன் அப்துல் காதர் ஜெய்லானி, அபு ஹாமித் அல் கஜ்ஜாலி, பாரசீகத்தில் மொலானா ரூமி, அபு பயாசித் புஸ்தாமி, மலாயாவில் துவான் பட்ரா கரவான், இந்தியாவில் காஜா முயினுதீன் சிஷ்தி, சாஹுல் ஹமீது பாதுஷா இன்னும் பலர். ((ஆதாரம்: 1.Religion on the rise, by: Murad Wilfried Hofmann. 2.Arabic, Arwi and Persian in Sarandib and Tamil Nadu, by: Shu ‘ayb))

ஏன் இந்து மதத்தில் வரவில்லையா ? வந்தார்கள், அவர்களை கண்டுகொள்ளவில்லை. வள்ளலாருக்குத்தான் எத்தனை தொல்லை! வள்ளலார் அருட்பா பாடியபோது அது அருட்பா இல்லை மருட்பா என்று ஆறுமுக நாவலரின் மாணாக்கர்களும், கதிர்வேல் பிள்ளை, திரு. வி. க. போன்றோர்கள் எதிர்ப்பு காட்டியபோது சதாவதானி செய்கு தம்பி பாவலர் அவர்கள் கதிர்வேலருக்கு எதிர்வேல் தொடுத்து அருட்பாவை கண்டனக்கணையிலிருந்து மீட்டு பெருமை காத்தது மறந்துபோன விசயமாக இருக்கலாம். ((ஆதாரம்: இஸ்லாம் – தமிழ் சில பண்பாட்டுக் கூறுகள் என்ற ஆய்வு நூலில், பேராசிரியர் டாக்டர் சே.மு.மு.முஹம்மது அலி)) பட்டினத்தார்கூட (ஆன்மிகம் என்ற) ‘கடைவிரித்தேன் வாங்குவாரில்லை, கடை எடுத்தேன் கேட்பாரில்லை ‘ என்று கூறுகிறார்.

ஆக எல்லாமதங்களிலும் அதன் தூய்மை கெடாதிருக்க பாதுகாவலர்கள் தோன்றாமலிருக்கவில்லை. சுய விமரிசனமில்லாத அத்தகைய ஞானிகளை பைத்தியக்காரர்கள் என்று முத்திரை குத்தி ஓரங்கட்டிவிட்டு போலிகளை தலையில் தூக்கிவைத்துக்கொண்டு ஆடுவது மக்களின் தலைவிதியாகிவிட்டது. எல்லா மதங்களும் தனக்கென ஒரு கோட்பாட்டை வரையறுத்து வைத்துள்ளது. அவற்றை தெரிந்துகொள்ளாமல் இருந்தால்கூட பரவாயில்லை, ஆனால் அவற்றை திரித்து சொல்வதுதான் வேதனைக்குறியது. அதனால்தான் மனிதநேயம் கெட்டுவருகிறது. மனிதநேயத்துக்கு முன்கையெடுத்து விளக்கங்கள் அளித்தால்கூட அது

பயங்கரவாதம் என்று இஸ்லாத்தின்மீது முத்திரை குத்துவது இப்போது வாடிக்கையாகிவிட்டது.

இறைவணக்கம்

(நபியே நீர் கூறும்) ‘நிச்சயமாக என்னுடைய தொழுகையும், என்னுடைய தியாகமும், என் வாழ்வும், என் மரணமும் உலகத்தாரைப்

படைத்து போஷித்துப் பரிபக்குவப்படுத்தும் அல்லாஹ்வுக்கே உரித்தானவை. ‘ (அல் குர்ஆன் 6:162)

இறைவணக்கத்தின்போது அனுசரிக்கப்படும் செயல்களுக்கு காரணம் தேடிக்கொண்டிருந்தால் வாழ்க்கை பூராவும் தேடுதலில் இருக்கநேரிடும். அதேசமயம் அவற்றுக்கு காரணமில்லாமலில்லை, நமக்கு தெரியவில்லை. தெரிந்தபிறகுதான் செய்வேன் என்றால் நீண்ட ஆராய்ச்சிக்குப் பின் கிடைக்கும் பதில் மிக சாதாரணமானதாக இருக்கும்பட்சத்தில் இதற்கு இத்தனை நாள் கஷ்டப்பட்டிருக்கவேண்டிய அவசியமில்லயே என்று தோன்றும். ‘அல்லாஹ் சொன்னான் செய்கிறோம். பெருமானார் சொன்னார்கள் செய்துகாட்டினார்கள், பின்பற்றுகிறோம் ‘ என்பதுதான் முஸ்லிம்களின் நிலைபாடு. இது மூட நம்பிக்கை அல்ல, இது ஈமானின் (நம்பிக்கை) ஒருபகுதி. அறிவும் ஆர்வமும் உள்ளவர்களுக்கு காரணம் தனக்குத் தானாகத் தெரியும்.

ஹஜ் செய்வது என்பது நபிகளார் பிறப்பதற்குமுன்பே அரபு மக்களிடையே நடந்துவந்த வணக்கமாகும். கி.பி. 605 ம் ஆண்டு, அப்போது பெருமானாருக்கு 35 வயது, நபித்துவம் வருவதற்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு கஃபத்துல்லாஹ்வை சீர்படுத்திக்கொண்டிருந்தபோது ஹஜ்ருல் அஸ்வத் என்று சொல்லப்படும் கருப்புக் கல்லை யார் வைப்பது என்று நான்கு கோத்திரக்காரர்களுக்கிடையே சர்ச்சை நடந்தது. அதன் தீர்ப்பை நபிகளாரிடம் விட்டபோது அவர்களின்

முடிவுப்படி நான்கு கோத்திரத்தை சேர்ந்தவர்களும் சேர்ந்து ஒருமித்து எடுத்துவந்து அதன் உரிய இடத்தில் பெருமானார் பதித்தார்கள். அது கஃபாவின் வெளியே இருக்கிறது. நீங்கள் குறிப்பிட்டிருப்பதுபோல் உள்ளே அல்ல. மக்கா வெற்றிக்குப் பிறகு கஃபாவின் உள்ளே இருந்த அனைத்து விக்ரஹங்களையும்,

ஓவியங்களையும் அழித்தார்கள். அந்த கல் இருக்குமிடத்திலிருந்துதான் தவாஃப் செய்வது தொடங்கப்படுகிறது. அப்படி இல்லையானால் ஒவ்வொருவரும் தனக்கு தோன்றிய இடத்திலிருந்து தொடங்குவார்கள். அதேபோன்றுதான் தொழுகையும். உலகில் எந்த மூலையில் இருந்தாலும் முஸ்லிம்கள் கஃபாவை நோக்கித்தான் தொழவேண்டும். எதிலும் ஒழுங்குமுறை இருக்கவேண்டும் என்ற கொள்கையே தவிர சிலை வணக்கமல்ல. சிந்திப்பவர்களுக்கு தானாகப் புரியும்.

ஹஜ்ஜின்போது குர்பானி கொடுப்பது, சாத்தானுக்கு கல்லெறிவது போன்ற அனைத்து காரியங்களும் அடையாளமாக (Symbolic) செய்யப்படுபவைகளாகும். குர்பானி கொடுப்பது இறைவனுக்கு சாப்பாடு போடுவதோ அல்லது அபிஷேகம் பண்ணுவதோ அல்ல. நபி இபுறாஹிம்(அலை) அவர்களின் தியாக உணர்வுக்கு மரியாதை செய்வதாகும். இப்போதும் ஹஜ்ஜின்போது குர்பானி கொடுக்கப்படும் மிருகங்களின் இறைச்சி பதப்படுத்தப்பட்டு ஏழை நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன.

கிப்லா

குறிப்பிட்ட இடத்தில் இருப்பிடத்தை(கிப்லா) உடைய இறைவன் என்று இடைதலைப்பு கொடுத்து, அதில் ….நபிகள் நாயகம் தம்மைப் பின் பற்றியவர்களை ஜெருசலேம் நகரில் உள்ள இந்த இறைவனை நோக்கி தொழச் செய்தார், என்று எழுதி மீண்டும் உங்கள் இந்துத்துவாவை திணிக்கப் பார்க்கிறீர்களே! நேச குமார் ஐயா! சூரியனை மறைக்க முயற்சிக்கிறீர்கள், அது முடியாத காரியம்.

எங்கும் நிறைந்திருக்கும் சர்வசக்தனாகிய இறைவனை நோக்கி எந்த முஸ்லிமும் தொழவில்லை. தொழுவது கஃபாவை முன்நோக்கி. ‘கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே(உரியன). – (அல் குர்ஆன் 2:115)

கிப்லாவை ஏன் மாற்றினேன் என்ற காரணத்தையும் அவனே தன் திருமறையில் 2: 144, 148 வசனங்களில் கூறுகிறான். மேலும் உங்களைப் போன்றவர்களின் கேள்விகளுக்கு… ‘(நபியே! ‘முஸ்லிம்கள் முன்னர்) நோக்கிவந்த ‘கிப்லா ‘விலிருந்து அவர்களைத் திருப்பிவிட்டது எது ? ‘ என, மனிதர்களில் அறிவீனர்கள் சிலர் கேட்க ஆரம்பிப்பார்கள். (அதற்கு) நீர் கூறும்: கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கு உரியனவே! அவன் விரும்பியவர்களை (மேலான) நேரான வழியில் செலுத்துவான். ‘ (அல் குர்ஆன் 2:142) என்று பதிலையும் அவனே சொல்லிவிட்டான். இதை சரியாகப் புரிந்துகொள்ளாமல் வேண்டுமென்றே கேள்வியை எழுப்பியுள்ளீர்கள்.

வர்ணாசிரமம்

ஒரு மனிதர் செய்யும் தொழிலின் அடிப்படையில் அவர் மருத்துவர், பொறியாளர், விவசாயி என்று அழைக்கப்படுகிறார். அதுபோன்று எந்த சமயத்தைச் சார்ந்தவராக இருக்கிறாரோ அந்த சமயத்தின் பெயரால் பிரிக்கப்படுகிறார். இது மனிதன் பிறந்தபிறகு நடப்பவை. அதல்லாமல் மனு சாஸ்திரம் சொல்வதுபோல் படைக்கப்படும்போதே வர்ணம் பூசி ஒவ்வொரு அங்கத்திலிருந்தும் மனிதனைப் படைக்கவில்லை. ‘மனிதன், (தான்) எதனால் சிருஷ்டிக்கப்பட்டிருக்கின்றான் என்பதை சிறிது கவனிக்கவும். குதித்து வெளிப்படும் ஒரு துளி நீரைக்கொண்டே சிருஷ்டிக்கப்பட்டான் ‘ (அல் குர்ஆன் 86:5,6) என்று கூறும் இறைவன், ‘அவனுடைய துர்நடத்தையின் காரணமாக பின்னர்தாழ்ந்தோனிலும் தாழ்ந்தோனாக ஆக்கிவிடுகின்றோம் ‘ (அல் குர்ஆன் 95:5) என்றும் கூறுகின்றான். இறைவன் கருணையாளன், அருள்புரிபவன், கொடையாளன்தான் அதேநேரம் கண்டிப்பவன், தண்டிப்பவன், அடக்கியாள்பவன்கூட. நீங்கள் அன்பு பாராட்டும் உங்கள் பிள்ளை தவறு செய்தால் கண்டிப்பீர்களா ? இல்லை கண்டுக் கொள்ளாமலிருப்பீர்களா ? நான் எல்லா தவறுகளும் செய்வேன் ஆனால் அவன் தண்டிக்கக்கூடாது, கருணைக்காட்டிக்கொண்டிருக்கவேண்டும். இதுதான் உங்கள் கூற்றா ? முடிவில் ‘சர்வசித்தியுடைய கடவுள் ‘ கோட்பாடக இது தென்படவில்லை என்று உங்கள் அறியாமையை நன்றாக வெளிப்படுத்திவிட்டார்கள்.

வஹி என்ற இறைதூது

அதை பற்றிய ஒரு பெண்ணிற்கு பிரசவம் இன்பவேதனையா அல்லது துன்பவேதனையா அல்லது அது எப்படிப்பட்டது என்று பிரசவமே ஆகமுடியாத மலடிக்குத் தெரியாது. இது எந்தமாதிரியான வேதனை என்று பெண்களாலும் சொல்லமுடியாது, எழுத்தில் வடிக்கவும் முடியாது. அதுபோன்றுதான் வஹி என்ற இறைதூதும். அதை விளக்கி எழுதமுடியாது, ஆன்மிகத்துடன் தொடர்புகொண்ட அதை, அந்த அறிவு உள்ளவர்களுக்கு மட்டுமே புரியும். மாம்பழத்தின் சுவை மறத்துப்போன நாவிற்கு தெரியாது.

குர்ஆனின் வசனங்கள்

திருகுர்ஆன் வசனங்களுக்கு பொருள் பார்க்கும்போது, அதன் காலகட்டத்தையும் கருத்தில் கொள்ளவேண்டும். அப்போதுதான் அதன் பொருள் விளங்கும். தவிர குர்ஆனின் மொழி பெயர்ப்பை மட்டும் பார்க்கக்கூடாது, விரிஉரையிலும் கவனம் செலுத்தி விளக்கம் பெறவேண்டும். அரபு மொழியிலிருக்கும் குர் ஆனுக்கு அதே மொழியில் இருபதுக்கும்மேற்பட்ட விரிஉரைகள் உள்ளன. எனவே குர்ஆனில் சொல்லப்பட்ட செய்திகள் குறுகிய வட்டத்திற்குள் மட்டுமில்லை,

நீங்கள் குறிப்பிட்டுள்ள வசனம் திரு குர்ஆனில் 24-ம் அதிகாரத்தில் மூன்றாவது வசனம். இது விபச்சாரத்தைப் பற்றியது. நான்கு திருமணங்கள் வரை செய்துகொள்ள அனுமதிக்கும் இஸ்லாம் விபச்சாரத்தை வன்மையாகக் கண்டிக்கிறது, அதற்கு கடுமையான தண்டனையும் வழங்குகிறது. அதன் பொருள்:

‘(கேவளமான) ஒரு விபசாரன் (தன்னைப் போன்ற) ஒரு விபசாரியை, அல்லது இணைவைத்து வணங்குபவளை அன்றி (மற்றெவளையும்) மணந்துகொள்ளமாட்டான். (அவ்வாறே) ஒரு விபசாரி (கேவளமான) ஒரு விபசாரனை, அல்லது இணைவைத்து வணங்குபவனை அன்றி (மற்றெவனையும்) மணந்துகொள்ளமாட்டாள். இத்தகைய திருமணம் விசுவாசிகளுக்கு தடுக்கப்பட்டிருக்கிறது. ‘

அப்போது அரபு நாட்டில் விபச்சாரம், குடி, அடிமைத்தனம் போன்றவைகள் மலிந்துகிடந்த காலம், அந்த காலகட்டத்தில் இது அருளப்பட்டது. அதை மறந்துவிட்டு மாற்று மதத்துப் பெண்களெல்லாம் விபச்சாரிகள் என்று பொருள் கொள்வது அபத்தமாகும். அதுபோன்றே இரண்டாம் அதிகாரம் 106 ம் வசனமும்.

‘திருகுர்ஆனை அல்லாஹ் அருளும்போது பல சமயங்களில் ஏற்கனவே தாம் தெரிவித்ததை மாற்றிவிடுகிறார் ‘ என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அதற்கு ஆதாரமாக இரண்டாம் அதிகாரத்தில் 105 ம் வசனத்தை காட்டியுள்ளீர்கள். அது 105 ம் வசனமல்ல 106 ம் வசனமாகும். அதன் பொருள்:

‘(நபியே! முந்திய வேதங்களில் இருந்த) யாதொரு வசனத்தை நாம் மாற்றிவிடுவோமாயினும் அல்லது அதை மறக்கடித்து விடுவோமாயினும், அதற்கு ஒப்பானதை அல்லது அதைவிட சிறந்ததை (இவ்வேதத்தின் மூலம்) நாம் கொண்டுவருவோம். அல்லாஹ், எல்லாவற்றிற்கும்

நிச்சயமாக ஆற்றலுடையோன் என்பதை நீர் அறியவில்லையா ? ‘

முந்திய வேதமென்பது, முந்திய நபிமார்களான மூசா(Moses அலைஹிஸ்ஸலாம்)அவர்களுக்கு தெளறாத்(Torah)வேதத்தையும், தாவுத்(David அலை)அவர்களுக்கு ஜபூர்(Psalms)வேதத்தையும், ஈசா(Jesus அலை) அவர்களுக்கு இன்ஜில்(Gospel)வேதத்தையும் அருளிய இறைவன் அதைவிட சிறந்ததை இவ்வேதத்தின் மூலம் கொண்டுவருவோம் என்று கூறுகிறான். நீங்கள் குற்றம் சாட்டுவதுபோல் குர்ஆனை மாற்றவுமில்லை, தாமருளியதை திரும்பப்பெறவுமில்லை. அந்தந்த காலத்தில் இருந்த சமுதாயங்களின் நிலமைக்கும் அவசியத்திற்கும் ஏற்பவே வேதங்கள் அருளப்பட்டன.

போதிய நேரமில்லாமை காரணமாக உங்களுடைய சில கேள்விகளுக்கு நீண்ட விளக்கம் அளிக்கமுடியவில்லை, என்றாலும் நான் கொடுத்துள்ள இந்த சிறிய விளக்கம் உங்களை திருப்திப்படுத்தாது என்பது நிச்சயமாக தெரியும். உங்களுடைய எழுத்தில் குழப்பங்களும், முன்னுக்குப்பின் முரணான செய்திகளும் மலிந்து கிடக்கின்றன. வேண்டுமென்றே திரித்து கூறப்பட்ட செய்திகளும் இதிலடங்கும். ஏடுகளிலிருந்து பெறப்படும் செய்திகளிலிருந்து புறப்படும் சந்தேகங்களுக்கு கற்றறிந்த சான்றோர்களிடம் நேரடியாக கேட்டு தெரிந்துகொள்வதுதான் அறிவுடமை, அதல்லாமல் எனக்கு எல்லாம் தெரியும் என்பதுபோல் திண்ணையிலும் இணைய தளத்திலும் எழுதினால் தெளிவு கிடைக்காது. மாறாக குழப்பமும், வேதனையும்தான் மிஞ்சும்.

‘ஓம்.. பஹோர் பஹாவ பஸுஹா,

ஒம்.. தஸய்யா விதுர்வானீனம், பஹர்க்கஹோ,

தேவ்ஸத்யா தீமஹய்ய தீமஹவு,

பர்ச்ச வதாயத. ‘

என்ற பிரணவ மூலமந்திரம் அல்லது காயத்ரி மந்திரத்திற்கு தெளிவான விளக்கம் எப்போது உங்களுக்குத் தெரியவருமோ, அப்போது இந்து மதமும் தெரியும் இஸ்லாமும் புரியும்.

‘எப்பொருள் எத்தன்மை தாயினும் அப்பொருள்

மெய்பொருள் காண்பது அறிவு ‘

இவண்,

Hameed jaffer,

e.mail: maricar@emirates.net.ae

குறிப்பு:- குர்ஆன் வசனங்களுக்கான தமிழ் மொழிபெயர்ப்பு: அல்லாமா ஆ.கா. அப்துல் ஹமீது பாக்கவி அவர்களின் தர்ஜுமதுல் குர்ஆன்.

Series Navigation

ஹமீத் ஜாஃபர்

ஹமீத் ஜாஃபர்