கடிதம் செப்டம்பர் 30,2004 – தமிழ்ச்செம்மொழி – பார்வைகள்!

This entry is part [part not set] of 42 in the series 20040930_Issue

நாக.இளங்கோவன்


—-

நமது தாய்மொழியான தமிழ் மொழி மிக மூத்த மொழி என்பதையும்

ஆதி மொழி என்பதனையும் நாம் ஏற்கனவே அறிவோம். தற்போது

இது இந்திய நடுவணரசால் செம்மொழி என்று அறிவிக்கப்

பட்டிருக்கிற இவ்வேளையில், செம்மொழி என்றால் என்ன ? இதனால்

என்ன பயன் ?என்று பலரும் பேசிக் கொண்டும், சிந்தித்துக்

கொண்டும் இருப்பது வரவேற்கத் தக்கது. பலரும் பல கருத்துகளைச்

சொல்லி வருகிறார்கள். எல்லா கருத்துகளும்

வரவேற்கத்தக்கனவையே.

தமிழ் மொழி என்றாலே வேம்பாய் நினைப்பவர்கள் சிலர் மட்டும்

‘தமிழ் செம்மொழி ஆகிவிட்டால், பசி தீர்ந்துவிட்டதா ? பட்டினி

தீர்ந்து விட்டதா ? வேலை கிடைத்து விட்டதா ‘ என்று வினவி

வழக்கம் போல அவர்களின் அகத்தை அவிழ்த்து விட்டுக்

கொண்டிருக்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும்.

நெடுங்காலமாக கோரிக்கையாக, போராட்டமாக தமிழர்களால்,

அரசியலார் மற்றும் தமிழறிஞர்களால்

வைக்கப்பட்ட உரிமை, இன்று நிகழ்ந்திருப்பது

மிகவும் இனிமையான செய்தியாகும்.

இவ்வேளையில் 3,4 ஆண்டுகளுக்கு முன்னர் தில்லிக்கு சென்று

கோரிக்கையும் வலியுறுத்தும் செய்யப் போன தமிழறிஞர்களில் ஒரு

அறிஞர் சாலினி இளந்திரையனார். இந்த அம்மையார் தில்லிக்கு

சென்று வலியுறுத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ள வைகறையில்

புறப்பட்டு, சீருந்தில் ஏறப்போன போது, மற்றொரு வண்டி

மோதி தில்லிச்சாலையிலேயே மூதாட்டி உயிரை விட்ட அந்தக்

கொடுமையான நிகழ்வு நமது நெஞ்சைப் பிழிந்தது. அவரை

இவ்வேளையில் நினைவு கூர்வது கடமையாகும்.

தமிழறிஞர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் எல்லாம்

பெரும் பொருள் செலவு செய்து தில்லிக்குப் போய்

கோரிக்கையை வலியுறுத்தி தன்னலமற்ற தமது உழைப்பைத்

தந்தனர். தி.மு.க இதற்காக பல தீர்மானங்களை நிறைவேற்றி

கோரிக்கையாகவும் வைத்துக் கொண்டேயிருந்தது. பா.ச.க வுடன்

கூட்டு மந்திரி சபையில் இருந்த போது கூட இதனை தம்

கட்சியின் கோரிக்கையாக வைத்திருந்தது. தமிழகத்தின்

மற்ற தமிழ்க் கட்சிகள் பலவும் இதற்காக குரல் கொடுத்தே

வந்திருந்தன.

இதற்கு முன்னர் இந்தியாவில் அரபி, பாரசீகம் மற்றும்

சமக்கிருதம்என்ற மூன்று மொழிகள் மட்டுமே செம்மொழியாக

ஏற்கப் பட்டிருந்தன. ஆயினும் செம்மொழி வரையறைகள்

ஏதும் இல்லாமல் வாய்மொழி உத்தரவுகளால் செம்மொழி என்ற

தகுதியில் அவை இருந்திருக்கின்றன. அதிலும், அரபி மற்றும்

பாரசீகம் இந்திய மொழிகளே அல்ல.

தற்போது நடுவணரசு செம்மொழியாக ஒரு மொழி

சொல்லப்படுவதற்கான வரையறைகளை ஏற்படுத்தியிருப்பதாக

ஏடுகள் சொல்கின்றன. அவ்வரையறைகளில் சில குழப்பத்தை

ஏற்படுத்துவதாக இருந்தாலும், வரையறைகள் ஏற்படுத்தப் பட்டு

முறையே செம்மொழி என்ற நிலையைப் பெறுவது தமிழ் மொழி

என்று நாம் சொல்லிக்கொள்ளலாம்.

ஒரு அறிஞருடன் பேசிக் கொண்டிருந்த போது, ‘என்னதான்

இருந்தாலும், நம்மது என்று வரும்போது வரையறைகளும்,

ஏதாவது சூழ்ச்சியையும் செய்து வைத்து விடுவார்கள் ‘ என்று

அவர் குறிப்பிட்டது சிந்திக்கச் செய்தது.

ஏதோ போனால் போகிறது என்ற போக்கினாலோ, அல்லது தமக்குப்

பிடித்த மொழி என்ற எண்ணத்தினாலோ இல்லாமல், நடுவணரசு ஒரு

முறைக்குட்படுத்தி தகுதியின் அடிப்படையில் செம்மொழி ஆகின்ற

நிலையை தமிழுக்கு ஏற்படுத்தியது நாம் மகிழ்ச்சி கொள்ள வேண்டிய

ஒன்றாகும். தகுதி உள்ள மொழிதானே தகுதி பெற முடியும் ?

ஆயினும், தகுதிகளில் ஒன்றாக, ஆயிரம் ஆண்டுகள் பழமை

இருந்தால், அது பேசும் மொழியாக இருந்தால் அது செம்மொழி

என்று அறிவித்து இருக்கிறார்கள். இது நமக்கு அய்யத்தைத்

தோற்றுவித்திருக்கிறது. ஆயிரம் ஆண்டுகள் பழமை என்றால்,

கொஞ்சம் முயன்றால், அல்லது சில ஆண்டுகளிலே கூட,

நேற்றுப் பிறந்த மலையாளம் கூட செம்மொழி என்று

அறிவிக்கப் பட்டுவிடக்கூடும். அந்த அடிப்படையில், பார்த்தால்,

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஒரியா, மராத்தி என்று

ஒன்று விடாமல் செம்மொழி ஆகிவிடும்.

இவையெல்லாம் செம்மொழி என்று சொல்லப் பட்டால்

நமக்கு அதில் பொறாமை கிடையாது. ஆனால், இவற்றுக்கெல்லாம்

மூத்த ஆதி மொழியான தமிழ் சரியான இடத்தை அடைந்திருக்கிறதா

என்றால், அது அய்யத்திற்கிடமாகிறது.

‘செம்மொழிதானே கேட்டாய்! இந்தாப் பிடித்துக் கொள்!

ஆனால் பார் இந்திய மொழியனைத்தும் செம்மொழிகள்

என்று யாரோ சொல்வதைப் போல, ஒரு சூட்சுமம் சிந்தையில்

ஓடுவதைத் தவிர்க்க முடியவில்லை. ‘

எனினும், முயற்சியில் ஒரு சிறு முன்னேற்றம் என்றளவில்

இதை எண்ணி நாம் மகிழ்ச்சி அடையலாம். அதே நேரத்தில்

பல வட-சார் மாக்கள் இதனை அமுக்கிவிட, பலனற்றதாக

ஆக்கிவிட எத்தனையோ முயற்சிகளில் ஈடுபடுவர். அதனையும்

வென்று கொண்டே இருக்க வேண்டும்.

இதனால் என்ன பயன் என்று பல தமிழறிஞர்கள் சொல்வதையும்

கேட்டோமானால், ‘இது உலகக் கல்வி மற்றும் ஆய்வு

நிலையங்களில் இடம் பெறும்; உலக அறிஞர்கள் இதை

ஆய்வார்கள் ‘ என்ற கருத்து பொதுவாக இடம் பெறும். இது போன்ற

பல பயன்களையும் இவர்கள் சுட்டிக் காட்டுவார்கள்.

அவற்றையெல்லாம் விட முக்கியமானது என்னவென்றால்

தமிழை செம்மொழியாக்கியிருப்பதால் ‘தமிழர்கள் தங்களின்

அடையாளத்தை மீட்டெடுத்திருக்கிறார்கள் ‘ என்பதுதான்.

ஒரு இனத்தை எப்படி அறிய முடியு மென்றால்,

அம்மக்களுக்கு ஒரு நாடு இருக்க வேண்டும்: தற்போது

தமிழர்களுக்கு நாடு இல்லை.

ஒரு சமயம்/மதம் இருக்க வேண்டும்: தமிழர்களுக்கு

சமயம் உண்டென்றாலும், அது புழக்கத்தில் இருந்தாலும், அது

முழுமையாக மறைக்கப் பட்டுவிட்டது. தமிழர்களின் மதங்களை

தமிழர்கள் மீட்டெடுப்பார்கள் என்ற நம்பிக்கையே

வரமாட்டேன்கிறது.

ஒரு மொழி இருக்க வேண்டும்: தமிழ் மொழி 70 மில்லியன் மக்களால்

பேசப்பட்டு வருகின்ற போதிலும் கேள்விப் படாத மொழியாகவே

உலகத்திற்கு இருந்து வந்திருக்கிறது.

இந்த நிலையில், இது இந்திய நடுவணரசால் செம்மொழி என்ற

தகுதியில் அமர்த்தப் படுகையில், அம் மொழி வந்த நமக்கு

உலகில் முகவரி கிடைத்து விடுகிறது. இன்னும் சொல்லப்போனால்

இந்தியாவிற்குள்ளேயே முகவரியின் தேவை ஓரளவு நிறைவு

செய்யப்படுகிறது.

இந்த முகவரியும் அடையாளமும்தான் நமக்குப் பெருமை.

எத்தனையோ முறை வடக்கே பயணித்திருப்பவர்கள்,

‘உனக்கு இந்தி தெரியாதா ? தேசிய மொழி தெரியாதா ? ‘

என்ற இந்திக்காரர்களின் காழ்ப்பு கொட்டும் கேள்விக்கு

இனிமேல், ‘…hell with you! What I know is Classic ‘

என்று முகத்திலறையலாம்! குறைந்த பக்கம் அதற்காக

மகிழ்ச்சியடையலாம்.

இந்தப் பெருமை வரச் செய்ததற்கு

யாருக்கு நன்றி சொல்லவேண்டும் ?

மொழி, இனம், இலக்கியம், அரசியல் என்ற பலதுறைகளிலும்

தன் பங்கை வெகுவாக அளித்து, தான் சார்ந்த கூட்டரசை

செயல் பட வைத்து செம்மொழி ஆக்கிய மூத்த திராவிட இயக்கத்

தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கா ?

கலைஞரும், பிற தலைவர்களும், தமிழறிஞர்களும் நெடுங்காலம்

குரல் கொடுத்தும் நடைபெறாத ஒன்றை, சிந்திக்கப் படாத ஒன்றை,

அடம் பிடிக்காமல், தமிழ், தமிழர் என்றால் பரிகசிக்கும்

வடக்குத் தலைமைகள் மத்தியிலே, காலத்தாழ்வும், தேவையற்ற

அரசியலும் செய்யாமல், விரைந்து செய்ய

ஒப்புதல் அளித்த, நாகரிகமும், படிப்பறிவும் மிக்க இந்தியாவின்

தலைமை அமைச்சர் முனைவர் மன்மோகன் சிங் அவர்களுக்கு

நன்றி சொல்வதா ?

தமிழ்நாடு என்றாலே மதறாசி எனவும், தமிழ் மொழி என்றாலே

வேப்பங்காயாகவும், அதோடு முக்கியமாக இன, மொழி, சாதி

காழ்ப்புகளைக் கொண்டு, கட்சி பாகுபாடுகளைக் கடந்து

தமிழ்/திராவிட இயக்கம் என்றால் காழ்ப்புகளைக் காட்டி வந்த

பல கட்சித் தலைவர்களின் மத்தியில், நேர்மையுடன்

எந்த விதமான ஏற்றத்தாழ்வுக்கும், சார்புத்தன்மைக்கும்

இடம் தராமல் விரைந்து செய்து வைத்த பேராயக் கட்சியின்

தலைவர் திருமதி சோனியா காந்தி அம்மையாருக்கு நன்றி

சொல்வதா ?

கலைஞர் தமிழ் நாட்டுப் பிள்ளை! நம் வீட்டுப் பிள்ளை.

அவருக்கு நன்றி சொல்ல வேண்டியதில்லை. மாறாக

பாராட்டி விட்டும் உச்சி முகர்ந்து விட்டும் போகலாம்.

முனைவர் மன்மோகனுக்கும் திருமதி சோனியா காந்திக்கும்

நன்றி சொல்ல வேண்டியது நமது கடமை.

ஆனால், இன்னும் சிலருக்கு நன்றி சொல்லவேண்டுமே!

அதை மறக்கக் கூடாது அல்லவா ?

இந்த நடுவண் கூட்டரசு வந்ததும், அதற்கு அடித்தளமாக

அமைந்த தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் கூட்டணியும்,

அக்கூட்டணிக்கு, மத்தியில் ‘தற்போது ‘ இருக்கும் வலுவும்

இதற்குக் காரணமென்றாலும், இது ஏற்படுவதற்குக் காரணமாக

இருந்தது எதுவோ, யாரோ அதுதானே, அவர்கள்தானே நமது

நன்றிக்கு உரியன/உரியவர்கள் ?

நமது நன்றிக்கு உரியது, கடந்த 3/4 ஆண்டுகளில்

தமிழகத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட பாசிச சக்திகளின்

எத்தனையோ கொடுமைகள் என்றால் அது தவறா ?

கொடுங்கோல் சட்டங்கள் தவறாகப்

பயன்படுத்தப்பட்டது, தமிழ் அரசியல்வாதிகள்

அடித்து உதைக்கப் பட்டது, கோயில்களில் தமிழ்

அருச்சனைகள் கண்டிக்கப் பட்டது, கண்ணகி சிலை

அகற்றப்பட்டது,(பழனி முருகனே காணாப்போய் இப்பதான் திரும்ப

வந்திருக்கிறார்) வரலாற்றுச் சங்கதிகள் மாற்றப்பட்டது போன்ற

தமிழ் எதிர்ப்பு நிலை உருவானதால்தானே இந்தக் கூட்டணி

ஏற்பட்டது ? இல்லாவிடில், தமிழர்க் கட்சிகள் ஒன்று

சேர்ந்திருக்குமா ? சேர்ந்திருக்க மாட்டா!

அதனால், அந்த நன்றிக்குரிய கொடுங்கோன்மைக்கு நமது

நன்றிகள் உரித்தாகட்டும்.

தமிழர்கள் யார் என்ற அடையாளத்தை அண்மைய 20 ஆண்டுகளில்

உலக அரங்கில் காட்டியவர்கள் புலம் பெயர்ந்த தமிழர்கள்.

அவர்கள் புலம் பெயர்ந்ததும் கொடுங்கோன்மையால் என்பது

உலகறிந்த விடயம்.

இன்று செம்மொழியை செம்மொழிதான் என்று ஒத்துக் கொண்ட

நிலையும் ஒரு கொடுங்கோன்மைக்குப் பின்னர் கிடைத்த நிலைதான்.

ஆகவே, தமிழர் வாழ்வும், தமிழும்

கொடுங்கோன்மைக்கு

உட்பட்டால்

‘மேலும் மேலும் தழைக்குமே தவிர தவிக்காது ‘

என்பதை எடுத்துக் காட்டுவதே

தமிழ்ச் செம்மொழி என்ற அறிவிக்கை!

ஆகவே, அந்தக் கொடுங்கோன்மைக்கும் நமது நன்றியை

சொல்லும் நேரத்தில், தமிழ்-ஒழிப்பாளர்களுக்கு,

‘எத்தனை சூழ்ச்சி செய்தாலும் இவர்தமிழ் இளைக்காது ‘

என்ற செய்தியும் சென்றடைகிறதல்லவா ?

மற்றொரு சங்கதியை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்!

கலைஞரை, நீஙகள் இந்துவா ? என்றால் இல்லை, எனக்கு மதமே

இல்லை என்பார். ஆயினும் அவரை மதத்தில் சேர்க்க

வேண்டுமானால் அவரை ஒரு சைவராக வைத்துக் கொள்ளலாம்.

ஆக, கலைஞர் என்ற தமிழ்ச் சைவர் முன்வைத்த கோரிக்கையை,

மன்மோகன் என்ற சீக்கியர் ஏற்றுக் கொண்டு, சோனியா என்ற

கிறித்துவரின் ஆதரவைப் பெற்று, அப்துல்கலாம் என்ற தமிழ்

இசுலாமியரால் ஒப்புதல் அளிக்கப்படுகின்ற நிலையை

என்னும் போது ‘எல்லா மதமும் எம் மொழிக்கு அரண் ‘ என்ற

மகிழ்ச்சியான செய்தி ஒன்று கிடைக்கிறதல்லவா ?

அதோடு கூட, மத்திய நிலைகள் ‘இந்துவாகவே ‘ நிறைந்திருந்த

போதும் சரி, இந்து மதம் இந்நாடெங்கும், தமிழகமெங்கும்

பெருகிக் கிடக்கையிலும் சரி, இந்த இந்து மதமும், அதன்

பற்றாளர்களும் தமிழ் மொழிக்கு என்ன செய்தனர் என்ற

வினாவையும் ஏற்படுத்துகிறதல்லவா ? மாறாக தமிழ் மொழியையே

கோயிலுக்குப் பக்கத்தில் அண்ட விடாமல் அல்லவா

செய்துவிட்டார்கள்!

இத்தனைக்கும் இந்தியா முழுதும் இந்துப் பற்றாளர்களான

பா.ச.க காரர்கள் ஆண்டு கொண்டுதானே இருந்தார்கள் ?

தமிழ் மொழிக்கு என்றும் இந்து மதம் நல்லதையே செய்ததில்லை,

மாறாக தள்ளியே வைத்து விட்டது என்றுதானே நமக்கு

செய்தியாகக் கிடைக்கிறது ?

அதனால்தான் தமிழ் கற்றோர்களும் சான்றோர்களும்

இந்துமதம் நம்மது இல்லை, நமக்காக இல்லை என்று சொல்கிறார்களோ என்னவோ ?

அன்புடன்

நாக.இளங்கோவன்

Series Navigation