கடிதங்கள் – டிசம்பர் 4,2003

This entry is part [part not set] of 40 in the series 20031204_Issue

நவநீத கிருஷ்ணன் – நாக இளங்கோவன் – பொ கருணாகர மூர்த்தி – தங்கமணி – வரதன் – அரவிந்தன் நீலக்ண்டன் – K.ரவி ஸ்ரீநிவாஸ் – ஆசாரகீனன்


திண்ணை ஆசிரியருக்கு,

அண்ணாவுக்கு அறிஞர் பட்டம் பொருந்துமா அல்லவா என்ற விவாதத்தில் நேருவுக்கு பண்டிட் பட்டம் பொருந்துமா என்றும் கேட்கப்படுகிறது. நேரு காஷ்மீரின் பண்டித இனத்தினர் என்பதால் அவ்வாறு அழைக்கப்பட்டார். அவரது தந்தையாரும் அவ்வாறே அழைக்கப்பட்டார். அண்ணாவின் அறிஞர் பட்டம் அவ்வாறல்ல. ஆகவே இந்த விவாதத்தில் நேருவின் பாண்டித்யத்தைப் பற்றிய விவாதம் தேவையற்றது. நவநீதகிருஷ்ணன்.

nakas@sify.com


அன்பின் ஆசிரியருக்கு,

‘ஈராக் யுத்தம்- எண்ணெயா, டாலரின் மதிப்பா ? உண்மைக் காரணங்கள் ‘ என்ற, திரு.சியோஃப்ரெ எர்ட் அவர்களின் முதல் கட்டுரை மதிப்பு மிக்கது. ஈராக் போரின் காரணம் எண்ணெய் என்பது அனைவரும் தெளிவாக அறிந்திருந்தாலும், அதற்குள் இருக்கும் டாலர் சூக்குமத்தை அங்கை நெல்லியாய் எழுதியிருப்பது முழுதாக மனதில் பதிகிறது. கட்டுரைக்கு வாழ்த்துக்கள்; அதன் ஆசிரியருக்குப் பாராட்டுக்கள்.

நன்றி.

அன்புடன்

நாக.இளங்கோவன்

elangov@md2.vsnl.net.in


அன்பு நண்பர்களே,

2003ஆண்டு சன்ஸ்கிறிதி தேசிய விருது கவிஞர் மனுஷ்ய புத்திரனுக்கு

வழங்கிக் கெளரவிக்கப்படுகிறது.

இவர் இவ்விருதைப்பெறும் இரண்டாவது தமிழராவார்.

பொ.கருணாகரமூர்த்தி. பெர்லின்.01.12.2003

karunaharamoorthy@yahoo.ie


பொய்யாய் பழங்கதையாய் கனவாய்…

ஜெயகாந்தனைப் பற்றிய இரண்டு கட்டுரைகளையும் (சங்கரபாண்டி மற்றும் சிவக்குமார்) கடிதங்களையும் படித்தேன். அறிஞர் அண்ணாவின் (இப்போது ஜெயகாந்தனின் கூற்றுப்படி நான் ஒரு மூடன்!) இரங்கற் கூட்டத்தில் அவர் ஆற்றிய உரையினையும் திண்ணையில் படித்துத் தெளிந்தேன். நான் ஜெயகாந்தன் அவர்களின் மேல் பெரும் மரியாதையும், அவரது எழுத்தின் மேல் அளவுகடந்த ஈடுபாடும் கொண்டவன். பாரதிக்கு பிறகு தமிழுக்கு வலிமையும், வற்றாத வளமும் கொண்ட மொழியையும், தமிழ்ச் சமூகத்துக்கு ஒரு புத்துயிரையும் தந்தவர் ஜெயகாந்தன் என்று உளமாற நம்பியவன். அதன் மூலம் என்னளவில் பெரும்பயனடைந்தவன். அதனால் அவர்பால் நன்றி மிக்கவன். ஆனால் அவரது பிற்கால எழுத்துக்களின் நடுநிலையின்மையினை நான் உணர நேர்ந்த போதும் அதை அவரது ஆன்மீக முழுமையினால் ஏற்பட்ட ஒரு முழுமையான பார்வையின் விளைவு என்றே நம்பினேன். அதனால் அப்படிப்பட்ட பார்வையினை அடைந்த ஒருவர் எதையும் தர்க்கரீதியாக எழுதமுடியாது என்பதால் அவர் எதையும் எழுதாமலிருப்பதே இயல்பானது என்றும் கருதினேன். ஆனால், அண்ணாவின் இரங்கற் கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை, ஜெயமோகனைப் பற்றிய அவரது கருத்துக்கள், சங்கராச்சாரியாரின் விழாவில் அவரது பேச்சு இவைகளை கேட்டபோது நான் இனிமேலும் எனது நல்லுணர்வின் காரணமாக அவரைப் பற்றிய புரிதல்களில் எனக்கு ஏற்படும் முரண்பாடுகளை இனியும் அனுமதிப்பதும், அல்லது கண்டுகொள்ளாமல் இருப்பதும் ஒருவகையில் எனக்கு நானே இழைத்துக்கொள்ளும் அவமரியாதை என்பதால் அவரது நியாயங்களைப் பற்றிய கேள்விகளை எதிர்கொள்வதென்று முடிவு செய்தேன்.

1. அண்ணாவை அறிஞரென்பது மூடத்தனமென்றால், குலக்கல்வி முறையினை கொண்டுவர முயன்ற இராஜாஜியினை மூதறிஞர் என்றழைப்பதை ஜெயகாந்தன் என்ன சொல்கிறார் ?

2. இந்திய அரசியலே கூட்டத்தையல்ல கும்பலின் பலத்தையே சார்ந்துள்ளது; கும்பலின் பலத்தை நாடாத கட்சிகள், அமைப்புகள் இந்திய அரசியலில் அதிகாரத்தை எட்டமுடியாமலே இருக்கின்றன. எனவே உலகின் இரண்டாவது ஜனநாயக நாடு என்கிற போலிப் பெருமை குறித்து ஜெயகாந்தன் என்ன நினைக்கிறார் ?

3. அவ்வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியத் தலைவர்கள் குறித்து அவரது மேலான கருத்து என்ன ?

4. ஜெயமோகனது படைப்புகளை வாசிக்காமலே அவர் தனது குருவாக இருக்க தகுதிவாய்ந்தவர் என்று சொல்லியவர், அண்ணாவின் எழுத்துக்களை சிறிதளவாவது வாசித்துவிட்டு அவரை அறிஞர் என்றழைக்கும் பாமரர்களை அப்போது மூடர் என்றழைத்தது குறித்து இப்போழுது என்ன சொல்லுவார் ?

5. தன்னையும் பிற எழுத்தாளர்களையும் பாரதியின் வாரிசுகள் என்று அழைத்துவரும் ஜெயகாந்தன் பாரதி எந்த மூட, பொய்யான கருத்துக்களுக்காக அவரது மடத்துக் குருவை வெறுத்து வந்தாரோ (ஆதாரம்: யதுகிரியின் கட்டுரை, டிசம்பர் திசைகள் இதழ்) அந்த கருத்துக்களை அப்படியே பின்பற்றியும் பரப்பியும் வரும் அதே குருபீடத்தின் ஐம்பதாவது பீடமேற்பு விழாவில் புகழ்ந்து உரைக்கும் போது பாரதி பரம்பரைக்கு நியாயம் செய்கிறோமா என்று ஜெயகாந்தன் சிறிதும் யோசித்திருப்பாரா ?

6. இந்திய-சீன போரின் போது எல்லோரும் இந்திய தரப்பு நியாயங்களை பேசியும் எழுதியும் வந்த போது, அஞ்சாமல், இங்கு வாழும் சீன மக்களின் வாழ்வியல் நிலவரங்களை பதிவு செய்த அந்த மனிதாபிமானி, இந்திய அமைதிப் படையின் அட்டூழியங்களை இங்குள்ள ஊடகங்கள் திறமையாக மறைத்து தேசப்பணியாற்றிய போது மனிதாபிமானியாய், அஞ்சாநெஞ்சராய், உண்மையைப் பதிவு செய்யும் காலத்தின் குரலாய் இருந்தவர் எங்கே போயிருந்தார் ?

இன்னும் என்னுள் கேள்விகள் வந்துகொண்டேயிருக்கின்றன. ஆனால் அவைகளினால் பெரிய பயனெதுவும் இல்லையென்றே உணர்கிறேன். ஏனெனில் இந்த கேள்விகள் அனைத்தையும் அவர் ஒற்றை வரியில் தள்ளிவிடும் (முன்பாயிருந்தால், நேர்மைத்திறன் என்றெழுதியிருப்பேன்) திறன் படைத்தவர். அவரே தனது முன்னுரையொன்றில் சொல்லியிருக்கிறார், ‘நான் எழுதியதைப் பற்றி கேளுங்கள், அதை விட்டு நான் ஏன் அதை எழுதவில்லை, இதை எழுதவில்லை என்ற கேள்விகளுக்கெல்லாம் நான் பதில் சொல்லமுடியாது. உங்களை பாதிப்பதையல்ல, என்னைப் பாதிப்பதையே நான் எழுதமுடியும். ‘ அப்படிச் சொல்லி ஜெயகாந்தன் இம்முறையும் இறுமார்ந்து நடக்கலாம். ஆனால் நான் மிகவும் பணிவாக அவரிடம் சொல்ல முடியும், ‘ஐயா, நீங்கள் சொன்னதால்தான் கேட்கிறோம். அண்ணாவைப் பற்றி அஞ்சாமல் சொன்னதால்தான், இந்திராவைப் பற்றிக் கேட்கிறோம்; அண்ணாவுக்கு கூடிய கும்பலைப் பற்றிக் சொன்னதால்தான் இந்திராவுக்கு கூடிய கும்பலைப் பற்றிக் கேட்கிறோம்; அண்ணாவின் பிணத்திற்கு விழுந்த ஓட்டுக்களைப் பற்றிச் சொன்னதால்தான் இந்திராவின் பிணத்தின் மீதே நடந்த தேர்தலைப் பற்றிக் கேட்கிறோம்; பாரதியின் நேர்மையையும், அச்சமின்மையையும் பற்றிச் சொன்னதால்தான், குருபீட விழாவினைப் பற்றிக் கேட்கிறோம்; சீன மக்களை பற்றி எழுதிய மனிதாபிமானியிடம் தான் ஈழ மக்களைப் பற்றிக் கேட்கிறோம். ‘ அப்போதும் அவர் அட அசடே என்று எனைப் புறந்தள்ளி நடக்கக்கூடும்.

இப்போது நான் வருந்துகிறேன்..

யாரை நான் தமிழ் இலக்கிய உலகின் நந்தா விளக்கு என்றெண்ணினேனோ அவரையே இப்படி கேட்க நேர்ந்ததற்காக அல்ல. யாரைப் பயின்று என் வாழ்வின் விழுமியங்களை உறுதிபடுத்திக் கொண்டேனோ அவர் வெறும் சந்தர்ப்பவாதியாகிப் போனாரே என்று; யாருடைய நேர்மையைக் கண்டு நான் பெருமிதங்கொண்டு அவருடைய அதே விழிகளை விரும்பிப் பெற்றேனோ அவரது பார்வையும் கூட ஒரு சார்புள்ளதாகவும், கட்சியபிமானம் என்ற திரை படிந்ததாகத்தான் இருந்திருக்கிறது என்பதற்காக; அவர் எங்களை ஏமாற்றிவிட்டார் என்பதற்காக அல்ல, அவரது எழுத்துக்களையே ஏமாற்றிவிட்டார் என்பதற்காக.

N.Thangamani

Research Associate

Department of Metallurgy

Indian Institute of Science

Bangalore-12

ntmani@yahoo.com

(ஓரிரு வரிகள் நீக்கப் பட்டுள்ளன. – திண்ணை குழு)


கருணாநிதி இலக்கியவாதியா…. ?

யோரோ ஒருவர் ஏதோ ஒரு சூழலில் ‘கருணாநிதி இலக்கியவாதியில்லை ‘ எனும் கருத்தைச் சொல்ல, கருணாநிதியின் இலக்கிய சேவைகளை ஆராயாமல், பீராயாமல், அப்படிச் சொன்னவனைக் கிழி கிழி என்று கிழித்து விட்டனர்.

‘திண்ணை ‘யில் ஒரு நல்ல விஷயம். யார் வேண்டுமானாலும் வந்து அமரலாம். பேசலாம். கேட்கலாம். வசவு புரிந்து துண்டை உதறித் தோளில் போட்டுச் செல்லலாம்.

மிகப் பெரிய நல்ல விஷயம் , இந்தத் திண்ணை வீட்டுச் சொந்தக்காரன் நாட்டாமை பண்ணுவதில்லை. ‘இதைத் தான் பேசனும் இப்படித் தான் பேசனும் ‘ என்று.

அதனால் கருணாநிதியின் இலக்கிய பங்களிப்பைப் பற்றி அலசுவதற்கு சரியான தளம் இது தானென்று எனக்குப் பட்டதால் இதோ திண்ணையில் ஆரம்பிக்கிறேன்.

கருணாநிதி என்றவுடன் எனக்கு ஞாபகம் வருவது, ‘பராசக்தி ‘, ‘குறளோவியம் ‘, ‘உடன்பிறப்பே கடிதங்கள் ‘, தற்போது தமிழக மக்கள் லட்சம் லட்சமாய் பணம் கொடுத்து வாங்கிய (வசூலில் ஹாரிப்பார்ட்டரை தோற்கடித்த ) சமீபத்திய புத்தகம் ( புத்தகப் பெயர் ஞாபகம் வரவில்லை – அதை தி.மு.கா வினர் போட்டி போட்டு வாங்கிய செய்தி ஞாபகம் வரும் அளவு ) , அப்புறம் தமிழர்கள் ஓட்டுப் போடாத போது, பிரயோகிக்கும் வசவு மொழிகள் …. மேலும் , ‘காகித ஓடம் கடலலை மேலே… ‘ ‘தென்றலைத் தீண்டியதில்லை ஆனால் தீயைத் தாண்டியிருக்கிறேன் ‘ ‘மாதமோ சித்திரை, மணியோ பத்தரை, நீங்களோ நித்திரை ‘ எனும் வரிகள்.

சரி ஒன்றன் பின் ஒன்றாகப் பார்ப்போம்:

– பராசக்தி வசனம்:

… அவரை இலக்கியவாதி என அடையாளம் காட்டுவதற்கு இது போதும் என்றால், பல கால கட்டங்களில் பல பிரபலமான படங்களைத் தந்த வசனகர்த்தாக்கள், ‘ஸ்ரீதர், பாலசந்தர், ராம நாறாயணன், கலைமணி, பாக்கியராஜா, பாண்டியராஜ், பார்த்திபன், சுஜாதா & பாலகுமாரன் ( இந்த இருவரின் கெட்ட நேரம், பல இலக்கியப் படைப்புகளுக்கு சொந்தக்காரர்களாக இருந்தும் இப்படி ஒரு நிலைமை Sorry Sujatha and Bala ) அப்புறம் பாலா, ஹரி, கெளதம் , என்று இலக்கியவாதிகளுக்கான தகுதியானவர்கள் பட்டியல் நீளும்.

குறாளோவியம்:

– ஜே.கிருஷ்ணமூர்த்தி ஒரு முறைச் சொன்னார். எனது உரையாடலின் அர்த்தம் நான் சொன்னது மாதிரியே நீங்கள் புரிந்து கொள்ள நான் சொன்ன மொழியில், சொன்ன வார்த்தை வடிவிலேயே படியுங்கள். அது தான் சரி என்றார்.

உலகத்தில் இன்று பல்வேறு தலைப்புகளில் வரும் நூல்களை ஆராய்ந்தால் அதன் சாராம்சமான நிலை, திருக்குறளில் அருமையாகச் சொல்லப்பட்டிருக்கும். அதுவும் ரொம்ப கடின தமிழ் இன்றி.

கொஞ்சம் தமிழ்மொழி வார்த்தை கற்க ஒரு சில வாரம் ஒதுக்கினால், திருக்குறள் கருத்துக்களின் ஆழம் படிப்பவரின் ஆழ் மனது வரைச் சென்றடையும்.

சில பேருக்கு இது ஒரு தளம் மாதிரி. இவர் தான் , ‘பாரதியார் பற்றி கட்டுரை ஏழுதியுள்ளார் ‘, இவர், ‘காந்தியின் கனவு ‘ எழுதியவர், இவர் ‘கார்ல் மார்க்ஸ் ‘ சுயசரிதை எழுதியுள்ளார் என்று பிறர் சொல்லும் போது இவர்களுக்கு ‘பாரதி ‘ ‘காந்தி ‘ ‘கார்ல் மார்க்ஸ் ‘ போன்ற இமேஜ் வரும்.

அந்தக் கதை தான் குறளோவியம். கருணாநிதிக்கு ஒரு தளம் வேண்டியதிருந்தது.

ஜெயமோகன் கருணாநிதி பற்றி சொன்னதற்கு, கருணாநிதியின் இலக்கிய சேவையை ஆராய்ச்சி செய்யாமல் ஜெயமோகனை ( யார் இவர்.. ? யான் அறியேன் ) சொல்வதற்கு தகுதியுண்டா என்று கிழிப்பவர்கள், அதே பாணியில், குறளோவியம் பற்றி எழுதத் தகுதியுண்டா.. கண்ணகி பற்றிக் கவலைப்பட தகுதியுண்டா என்று கருணாநிதியைப் பற்றிக் கேட்பார்களா… ?

இன்றைய அரசியல் சுழலில், கருணாநிதியின் துக்ளக் எரிப்பு, குமுதம் ஆபிசில் செய்த அராஜகம் மறக்கப்பட்டு அவர் சாத்வீக ஞானி போல் தெரியலாம். ஆனால் 45 வயது மேற்பட்டவர்களிடம் கேட்டால் அவர் பற்றித் தெரியும். விமர்சித்தால் என்ன நடக்கும் என்று. உடம்பெல்லாம் பயம் கவ்வும்.

அன்று மேடையில் இருந்தவர்கள் 45 வயது மேற்பட்டவர்கள் என் நினைக்கிறேன்.

இந்தப் பாணியே தவறு. கருணாநிதியின் பங்களிப்பு இலக்கியத்திற்கு உண்டா இல்லையா என்று தர்க்கரீதியாக ஆராய்ச்சி செய்வதில் என்ன தப்பு.. ?

இதில் நண்பர் மாலன் ‘க.நா.சு ‘ திருக்குறளையே இலக்கியம் இல்லை, நீதி நூல் என்று சொல்லியுள்ளார், என்கிறார். உண்மை. முதலில் இலக்கியத்திற்கான வரைமுறைகளை வகுக்க வேண்டும்.

இன்னொன்று, மாலனும் கருணாநிதியின் இலக்கிய சேவையை பட்டியலிட்டு, கோடானு கோடி தமிழ் ஜனங்களின் கண் திறக்காமல், ஜெயமோகன் விமர்சனத்தில் இறங்கியது ஆச்சரியம் அல்ல… காரணம் – அவரின் இன்றைய நிலை.

மாலன் திசையில்லாமல் இருந்த பல தெரு சங்கமிக்கும் இடத்தின் நடுவே வந்தவர், கையில் ஒரு பல திசையும் காட்டும் ‘ கம்ப்யூட்டர் பி.சி.பீ ‘ வரைபடைத்தைக் கொணர்ந்தார். மாலனின் திசைகள் பத்திரிக்கையின் ‘லோகோ ‘ அது. நான் சொல்வது பல வருடம் முன் வந்த திசைகள் புத்தகத்திற்கு.

சுப்ரமண்ய ராஜீ, பாலகுமாரன் போன்றவர்களுடன் இலக்கியம் பாடித் திரிந்த மாலன், காலப் புயலில் திசைக்காட்டி சிதற இன்று திசை மாறி கருணாநிதி பற்றி சார்பற்ற ஒரு கருத்து பரிமாற்றம் செய்ய இயலா நிர்பந்தத்தில் இருக்கிறார். அவரின் நல்ல குணத்துக்காக ‘எங்கிருந்தாலும் வாழ்க ‘ என வாழ்த்தி அவரின் நிலையைப் புரிந்து கொள்வோம்.

எந்த விதமான பொருளாதார அனுகூலமோ, இல்லை பாரதி, அண்ணா, கலைமாமணி விருது வாங்க வேண்டிய ஆசையோ இல்லாதவர்களே வாருங்கள், தனிப்பட்ட துவேஷங்கள் இன்றி கருணாநிதி இலக்கியவாதியா என அவரின் படைப்புகளை வைத்து அலசி திண்ணையைச் சிறக்கச் செய்யுங்கள்.

அதில் அலசப் பட வேண்டியது- கருணாநியின் படைப்புகள், அதன் தரம், தகுதி மட்டுமே.

ஊரெல்லாம் ஹிந்தி படிக்காதே என்று சொல்லி விட்டு, ‘தயாநிதி மாறனுக்கு ‘ ஹிந்தி எழுத படிக்க நன்றாக தெரியும் எனப் பெருமையாக டில்லி அரசியலுக்கு தி.மு.க சார்பில் தயார்படுத்தும் அவரின் சாதூர்யம்..

சாதி துவேஷம் பற்றி ஊரைத் தூண்டி விட்டு தன் மகளை The Hinduல் பிராமணச் சங்கமத்தில் புனிதமடையும் பணியாற்ற வாய்ப்பு வாங்கித் தருதல்..

இந்து மத இழிவு பேசுவது ஒரு பக்கம் , மறுகக்கமோ தன் வீட்டுப் பெண்கள் பக்தைகளாக இருப்பதும் மஞ்சள் துண்டு போடுவதும்..

…. போன்றவற்றை மறப்போம் இந்த விவாதத்தில்.

கருணாநிதியின் வயதிற்கு மரியாதை உண்டு. அது எந்த ஒரு வயோதிகருக்கும் தருவது போன்றது.

ஆனால், அவரின் இலக்கிய பங்களிப்பு பற்றி இப்படி ஒரு நிலை வந்த பிறகு அவரின் படைப்புகளை முழுமையாக அலசி ஆராய்வது நாளைய சமுகத்திற்கு ஒரு தொண்டாகும்.

அழைக்கிறேன் தமிழ் ஆர்வலர்களை.

இந்த இடம் வெறும் வெட்டிப் பேச்சு திண்ணையல்ல, விவரமானவர்களின் சங்கமம் என புரிய வைப்போம்…!!!!!!!

வரதன்

varathan_rv@yahoo.com


சில எதிர்வினைகள்

திரு. நாக இளங்கோவன் அவர்களது கட்டுரையில் சமஸ்கிருத இணைய தளங்களை விமர்சிப்பில் அவரது சமஸ்கிருத எதிர்ப்பு உண்மைகளை மறைத்துள்ளது. ‘ஃபோர்ப்ஸ் ‘ பத்திரிகையில் வந்ததா இல்லையா என அவ்வளவு ஆர்வமாக தேடுகிற மனிதரின் இணைய தேடலில் ஒரு குறிப்பிட்ட தகவல் கிடைக்கவில்லையா அல்லது கிடைத்தும் அது தனது சமஸ்கிருத வசைபாடலுக்கு ஒத்துவராத காரணத்தால் விட்டுவிட்டாரா தெரியவில்லை. But he is a honourable man. And Sanskrit being supposedly dead, we too are supposed to bury it and not praise it. So with all due apologies to the bard, let us suppose … அவருக்காக இணையத்தில் வலைவீசிய IIT வித்தகர்கள் அது குறித்து அவரிடம் கூறவில்லை என்பது கூட அவர் அந்த தகவலை கூறாததற்கு காரணமாக இருக்கலாம். அந்த தகவல் இதுதான்: 1980 லிருந்து வெளியாகும் ‘செயற்கை அறிவு ‘ (Artificial Intelligence) ஆய்வாளர்களுக்கான இதழான ‘AI ‘ இல் ‘Knowledge Representation in Sanskrit and Artificial Intelligence ‘ என்கிற தலைப்பில் ரிக் ப்ரிக்ஸ் எனும் ஆய்வாளர் எழுதிய கட்டுரைதான் கணினிக்கும் சமஸ்கிருதத்திற்கும் முடிச்சு போடவைத்தது. சம்ஸ்கிருதம் ஒரு செயற்கை மொழி எனும் அடிப்படையில் வேறெந்த மானுட மொழியைக்காட்டிலும் முரண்மை அற்ற முறையில் பொருள்படுத்த அம்மொழி ஏதுவாக இருப்பதால் ‘செயற்கை அறிவு ‘ ஆய்வில் மொழி அமைப்பியல் அறிதலுக்கு அம்மொழி பயன்படும் என்பதாக அமைந்திருந்தது அவரது நிலைபாடு (AI Magazine, Vol.6 (1): 1985). இதன் மிகைபடுத்தப்பட்ட பிரபலப்படுத்தலே திரு. நாக இளங்கோவன் சுட்டிக்காட்டியிருந்த தவறுகள். இதோ நாக இளங்கோவன் சுட்டிக் காட்டியதற்கெல்லாம் ஒருபடி மேலே போய் ‘வெளிக்கிரகங்களில் சமஸ்கிருதத்தில் பேசுகிறார்களாக்கும் ‘ என கூறிய மேதாவிகளும் உண்டு. ஆனால் இவர்களை வைத்து ஒட்டுமொத்தமாக சமஸ்கிருத அன்பர்களை எடைபோடுவது ‘ஹாரிபாட்டர் நூல்கள் சைத்தானின் சதி திட்டம் அல்லது இணையத்தில் உள்ள www என்பது உண்மையில் அந்திக்கிறிஸ்துவின் 666 ‘ எனக்கூறுகிற வகையறாக்களை வைத்து (சமஸ்கிருதம் வேற்றுலகவாசிகளால் பேசப்படுவதாக கூறுகிறவர்களை விட இந்த வகையறாக்கள் கூடுதல் என்பது மட்டுமல்ல இந்த வகையறாக்களுடன் மிகவும் நெருக்கமாக உள்ள ஒரு சில பகுத்தறிவு பிரபலங்களும் உண்டு.) கிறிஸ்துவத்தை எடைபோடுவது போல அல்லது இராமாயணத்தில் ஆரிய சதித்திட்டத்தை கண்டுபிடித்த கூட்டத்தை வைத்து ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பகுத்தறிவை சந்தேகிப்பதை போன்றது.

பாரதத்தில் சமஸ்கிருதம் ஏதோ ஒரு வகுப்பினரது, அல்லது சாதியினரது அல்லது ஒரு மாகாணத்தைச் சார்ந்தவர்களது மொழி என்பது தவறானது. யானைபாகர்களும் சரி அந்தணர்களும் சரி அம்மொழியினை பயன்படுத்தியுள்ளனர். அம்மொழியின் மிகச்சிறந்த கவிஞன் காளிதாசன் எனும் சூத்திரன். அம்மொழியின் ஆதிகவி வான்மீகியான வனவாசி. திராவிடத்தைச் சார்ந்த சங்கரர், ராமானுஜர், நாகார்ஜுனர் ஆகியோரது பங்களிப்பினை பெற்ற மொழி அது. அது எந்த குறிப்பிட்ட சாதியினுடையவும் தனிச்சொத்து அல்ல. இந்நாட்டின் முழுமைத்துவம் வாய்ந்த சமுதாய விடுதலை இயக்கங்கள் சமஸ்கிருதத்தை மக்களிடம் கொண்டு சென்றவை. உதாரணமாக நாராயண குருதேவரின் இயக்கம். பாணினியின் சமஸ்கிருத இலக்கணத்தின் அடிப்படையில் பல தீர்வுமுறைகள் (algorithms) உருவாக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, முனைவர். P.இராமானுஜன் (Centre for Development of Advanced Computing) அவர்களால். எனவேதான் நமது மரியாதைக்குரிய குடியரசுதலைவரான அப்துல்கலாம் சமஸ்கிருதத்தை ‘பொக்கிஷங்கள் நிரம்பிய மொழி ‘ என்கிறார். அது நம் அனைவரினுடையவும் சொத்து. மெண்டலீப்பும்,வெர்னாட்ஸ்கியும், ஸ்க்ராட்டிஞ்சரும், ஓப்பன்ஹைமரும் இம்மொழியின் தத்துவசெழிப்பால் பெற்ற பலனை நம் குழந்தைகள் பெற நாம் ஆசைப்படுவதில் என்ன தவறு இருக்க முடியும் ? ஒருகாலத்தில் இவர்கள் எல்லாம் சமஸ்கிருதம் படிக்ககூடாது, வேதம் படிக்க கூடாது என கூறிய கூட்டம் தான் இன்றைக்கும் மார்க்சிய நாமம் தரித்து, மதச்சார்பின்மைக்கு தீட்டுபட்டுவிடுமென கூறி சமஸ்கிருத கல்வி சமுதாயத்தின் அனைத்து பிரிவினருக்கும் கிடைப்பதை தடுக்கிறது. நம் சமுதாய சமரசத்தை விரும்பும் பெரியவர்கள் அனைவருமே சமஸ்கிருதம் அனைத்து வகுப்பினருக்கும் கற்றுக்கொடுக்கப்பட வேண்டுமென கூறியவர்கள்.

திரு.ஜெயபாரதன் அவர்கள் ஜெயந்த் விஷ்ணு நர்லிக்கர் குறித்து எழுதிய கட்டுரை மிகச்சிறப்பாக இருந்தது. நர்லிக்கரின் குருவும் பின்னாள் சக ஆய்வாளருமான ப்ரெட் காயலுடன் ஒப்பிடுகையில் நர்லிக்கரின் அறிவியல் ‘eccentric dogmatism ‘ அற்று உள்ளது. அவரது அறிவியல் புனைவு நாவலான ‘வாமனனின் மீள்வரவு ‘ அறிவியல் மாணவர்கள் படிக்க வேண்டிய ஒன்று. இப்போது நின்றுவிட்ட ‘Science Today ‘ இல் அவர் எழுதிய மற்றொரு சிறுகதையான ‘விசித்திர விநாயகர் சிலை ‘ சர்வதேச தர அளவில் (அஸிமாவ், க்ளார்க் மரபுகளில்) சிறந்த அறிவியல் புனைகதைகளில் ஒன்று. ஒரு சிறந்த அறிவியலாளர் மட்டுமல்லாது அறிவியலை சமுதாயத்தில் பிரபலப்படுத்திய கலைஞராகவும் திகழ்ந்தவர் அவர்.

ஜேம்ஸ்டவுண் ஆகட்டும் டேவிட் கொரெஷி ஆகட்டும் தீர்க்கதரிசி மீம் இவ்விடங்களில் செயல்படுவதை காணலாம். சில மீம் அமைப்புகள் இத்தகைய பகுத்தறிவற்ற மூட கீழ்படிதலுக்கு மானுட மனத்தை அழைத்துச் செல்கின்றன. பொதுவாக ஆபிரகாமிய மதங்களுக்கு இத்தன்மை அதிகமாக உள்ளது. (மார்க்சியத்தையும் சேர்த்துதான் – ஜேம்ஸ்டவுண் தீவிர இடதுசாரிகளை கொண்டிருந்தது. மற்றொரு தொடர் கொலைவெறியனான சார்ல்ஸ் மான்ஸனின் பல வாதங்களையும், இன்றைய இடதுசாரி பிரச்சார தேவதையான அருந்ததி ராயின் வாதங்களையும் அருகருகே வைத்து ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடிக்கலாம். நோம்சாம்ஸ்கியின் இடதுசாரி வெறி, அவரை போல்பாட் அரசின் பரம விசிறியாக்கியது.) இந்நிகழ்வுகளுடன் நேரடித் தொடர்பற்றதாக காணப்பட்டாலும் இதனுடன் இணைவாக சிந்திக்க வேண்டிய ஒரு விஷயமாக ஸ்டான்லி மில்கிராமின் படு சர்ச்சைக்குரிய பரிசோதனைகள் தோன்றுகின்றன. பொதுவாக நமது எண்ணம் என்னவென்றால் சமுதாயத்தின் ஒரு சிறிய கூட்டம்தான் மகாக்கொடுமைகளை செய்யும் , மக்களை கூட்டம் கூட்டமாக வதைக்க தயங்காத அரக்கர்கள் என்பது. நியூரம்பர்க் விசாரணையின் போது பலரும் நம்பமுடியாத கொடுமைகளை செய்துவிட்டு பின்னர் ‘எனக்கு கொடுக்கப்பட்ட கட்டளையை நிறைவேற்றினேன் அவ்வளவுதான் ‘ எனகூறினர். இது தப்பிக்கவா அல்லது உண்மையாகவா ? கட்டளை கொடுக்கப்பட்டால் எந்த கொடுமையையும் பகுத்தறிவின்றி செய்யகூடியதுதான் மனித மனமா ? என்கிற கேள்விக்கு விடைகாண முயற்சிப்பது மில்கிராமின் பரிசோதனை. இன்று இந்த பரிசோதனை ‘ஒழுக்கவியலுக்கு புறம்பானது ‘ என்று கருதப்படத்தக்கது. ஆனால் அது வெளிக்கொணர்ந்த உண்மைகள் – உண்மைகளாக இருக்கும் பட்சத்தில்- நம்மை நம் இயற்கை குறித்து சங்கடம் கொள்ள வைப்பது. ‘ 65% ‘ஆசிரியர்கள் ‘ தங்கள் ‘மாணவர்களை ‘ 450 வால்ட்கள் வரை மின்-அதிர்ச்சி அளித்தனர். ஒருவர் கூட 300 வால்ட்களுக்கு குறைவான மின்னதிர்ச்சி அளிப்பதில் தயங்கவில்லை! ‘. அதாவது ஒரு கட்டளையின் பேரில் சக மானுடர்களுக்கு மின்னதிர்ச்சி அளிக்க மானுடர்கள் தயங்கவில்லை. ‘கட்டளைக்கு கீழ்படிந்து மானுட பண்புகள் அற்றுப்போகுதல் ‘ நம்முள் உறைந்திருக்கும் ஒரு மானுட-அரக்க பகுதியா ? நிச்சயமாக அது விலங்கின மீதி அல்ல என தோன்றுகிறது. ஏனெனில் ரீசஸ் குரங்குகளில் சககுரங்குகளுக்கு மின்னதிர்ச்சி அளித்தால்தான் உணவு எனும் சூழலில் குரங்குகளில் 80% பட்டினி கிடந்தன என்கிறார் கார்ல்சாகன்(Shadows of forgotten ancestors). கட்டளைக்கு கீழ்படிந்து சக மானுடர்களை கொல்லமுடியுமெனில் கெவன்ஸ்கேட்டின் மதத்தலைவரின் கட்டளையின் பேரில் விஷமருந்தி தன்னை அழிப்பதை நாம் எளிதில் கற்பனை செய்யமுடிகிறது – அல்லது காஃபிர்களை கொன்றால் மறுமையில் கிடைக்கும் வற்றாத மது ஆறுக்காக அல்லது மான்விழி கன்னியருக்காக, விமானத்தை கட்டிடத்தில் மோதுவதை. பொதுவாக ஆபிரகாமிய மதங்களின் ஆன்மிக சாதனைகளில் கீழ்படிதல் முக்கிய மைய அம்சம். எனவே இது அங்கு நிகழலாம். மோசடியான பாரத ஆன்மிக குழுக்களில் கூட இந்த அம்சம் குறைவுதான். தனிப்பட்ட விரோதங்கள், பலவீனங்கள் ஆகியவை மற்றும் தனிமனிதனின் மோசடி போன்றவை அவற்றிலும் இருக்கின்றன எனினும் ‘சுவர்க்கத்திற்கு போக நான் சொல்வது போல தற்கொலை செய்யுங்கள் ‘ என்று சொல்லும் குருக்கள் இங்கு இல்லை. இதை உயர்வாக சொல்லவில்லை. ஆனால் மேற்கத்திய – பாரத ஆன்மிக மரபுகளின் வேறுபாடாக கூறுகிறேன். இதுவே மற்றொரு விஷயத்தையும் சுட்டிக்காட்ட வைக்கிறது. பாரதத்தின் வடகிழக்கில் வனவாசிகளிடையே ராமகிருஷ்ண மிஷன் துறவிகள் பணி புரிகையில் தலைதூக்காத பயங்கரவாதம் கிறிஸ்தவ மிஷி ‘நரி ‘கள் ‘ஊழி ‘யம் புரியும் வனவாசிகளிடையே மட்டும் தலைதூக்குவதை காணமுடியும். ஏன் ? ‘உலகில் ஆபிரகாமிய மதங்களை பரப்புவது மனித வெடிகுண்டுகளை உருவாக்குவதுதான். பின்னர் அவை பயன்படுத்தப்பட்டால் ஆச்சரியப்படாதீர்கள். ‘ கூறியவர் ரிச்சர்ட் டாவ்கின்ஸ்.

அண்மையில் இராமர் கட்டிய பாலத்தை நாசா கண்டுபிடித்ததாக எழுந்த புரளி குறித்து திண்ணை வாசகர்கள் அறிந்திருப்பீர்கள். இதனை குறித்து அடியேன் எழுதிய கட்டுரையையும் நீங்கள் படித்திருக்க கூடும். அது உண்மையில் பாலமே அல்ல பவளப்பாறைகள்-தீவுகளின் தொகுப்பு என கூறியிருந்தேன். இவ்வுண்மையை மிகத்தெளிவாக பார்க்க முடிகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் RESOURCESAT-I செயற்கைகோள் 26-அக்டோபர்-2003 அன்று அனுப்பிய முதல் புகைப்படங்களில் இராமேஸ்வரமும் சுற்றுப்புறங்களும் அடக்கம். முழுப்படமும் மிக அழகாக ISRO இணையதளத்தில் கிடைக்கும். உங்கள் கணினியில் ‘வால் பேப்பராக ‘ அதை வைக்கலாம் அந்த அளவு அழகு. மற்றொரு புகைப்படம் மானஸரோவர் ஏரி. ISRO காரர்கள் இந்த புகைப்படங்களின் தொகுப்பினை ஒரு காலண்டராக மாற்றி பள்ளி மாணவர்களுக்கு கொடுக்கலாம். ஒரு ISRO -theme தங்கள் இணைய தளத்திலிருந்து கீழிறக்க முடிந்ததாக உருவாக்கலாம். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு நன்றி மற்றும் வாழ்த்துகள்.

(அறிவுஜீவிகளுக்கு கடினமாக இருக்கும் பட்சத்தில் தலைப்பை ‘எதிர்வினைகள் சில ‘ என வாசித்துக் கொள்ளலாம். எனக்கு ஆட்சேபனை இல்லை.)

அரவிந்தன் நீலக்ண்டன்


நாக. இளங்கோவனின் `சமஸ்கிருதம் வாங்கலியோ சமஸ்கிருதம் ‘ படித்தவுடன் அதிர்ச்சியடைந்தேன்.

அதென்ன 1540 பேர்தான் சம்ஸ்கிருதம் பேசத்தெரிந்தவர்கள் என்ற பிழையான் தகவலைத் தருகிறாரே என்று.

அது தேவர்கள் பேசுகிற மொழியய்யா! அந்தக் காலத்திலேயே 33 கோடி தேவர்கள் பேசியிருக்கிறார்கள். இன்றைய தேதிக்கு 1000ங் கோடி தேவர்கள் பேசிக்கொண்டிருப்பார்கள். அதனால்தான் இன்னமும் சம்ஸ்கிருதத்திலேயே அர்ச்சனை செய்ய வேண்டும் என்கிறார் சங்கராச்சாரியார். மனிதப் பயலுக்கு புரிந்தாலென்ன புரியாவிட்டாலென்ன ? (புரியாமலிருக்கையில்தான் அதிலிருக்கும் mysticism என்பது வேறு அரசியல்). நீச பாஷைகளெல்லாம் என்ன மிஞ்சிப்போனால் 6 கோடி 7 கோடி பேர் பேசுவார்களா ? சரி போனால் போகிறதென்று கோயில்களில் பஜனைப் பாடல்கள் பாடலாமென்று தமிழுக்கு அனுமதி வழங்கியிருக்கிறோம். அத்தோடு நிறுத்திகொள்ள வேண்டும். கருவறைக்கெல்லாம் வரக்கூடாது. கடவுளுக்கே ஒத்து வருகிற மொழியைப் பார்த்து இவர் கணினிக்கு ஒத்துவருமா இல்லையா என்பதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்! இவரது அறியாமையைக் கண்டு சிரிப்புத்தான் வருகிறது.

தெரியாமல் தான் கேட்கிறேன், கணினிக்கும் சம்ஸ்கிருதத்திற்கும் உள்ள அறிவியல் பூர்வமான தொடர்பையே இப்படிக் கேலிபேசுகிறாரே, சமஸ்கிருத மந்திரங்கள் எழுப்பும் ஒலிகள் சில அதிர்வுகளை உண்டாக்கி அவை நோய்களை குணப்படுத்துகிண்றன; உடலை பேணுகின்றன; செடிகளை வேகமாக வளர்த்து பயன் தரச் செய்கிறன; பசுக்களை பாலைப் பொழியச் செய்கின்றன; இவ்வளவு ஏன், நாட்டை அமைதியாக வைத்திருக்கின்றன என்றெல்லாம் அறிவியற் பூர்வமாக நிருபிக்கப் பட்டிருக்கிறதே அதைப் பற்றி என்ன சொல்லுவாரோ!

கடைசியாக ஒன்று சொல்லிக் கொள்கிறேன்!

சமஸ்கிருத வெறுப்பு என்பது இந்திய வெறுப்பு என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். இப்போதுதான் சரஸ்வதி நதிக்கரையில் (அது எங்கே இருக்கிறது என்று கேட்பவர்கள் புவியியல் அறிவற்றவர்கள்) தோண்டிக் கொண்டிருக்கிறோம், இன்னும் கொஞ்ச நாட்களில் அங்கு முற்றிலும் சமஸ்கிருதத்திலேயே இயங்கிவந்த கணினிகள் சுமார் 13,600 வருடங்களுக்கு முன்பே இருந்தன என்கிற அரும் பெரும் கண்டுபிடிப்பை இந்திய அரசு வெளியிடும். அப்போது அன்பர் புரிந்துகொள்வார்!

நிற்க!

இன்றைக்கு ஆங்கிலம் போல், அன்று இந்த துணைக் கண்டத்தின் அத்தனை அறிவு சார் (சாராத) துறைகளிலும் இயங்கிவந்து, இத்துணைக் கண்ட மக்களின் பாரிய அறிவுச் செல்வத்தின் சேகரமான பல நூல்களை தன்னகத்தே கொண்ட மொழியொன்று முற்றாக அழிந்தது எவ்வாறு என்று (நேர்மையாக) ஆராய்ந்தால், பல உண்மைகள் வெளிவரும்.. அவற்றில் சில.. ஆதிக்க மனப்பான்மை, மக்கட்படுத்தபடுதலுக்கெதிரான போக்கு, மக்களை அடிமைப் படுத்த அறிவை முடக்குதல், உயர்சாதி மனப்பான்மை எல்லாவற்றிற்கும் மேலாக பிறமொழியெதிர்ப்பு! இதைச் சரியாக புரிந்து கொள்ள இன்று வளர்ந்துவரும் ஆங்கில மொழி எவ்வாறு எளிமைப் படுத்தப் படுகிறது; பரவலாக்கப் படுகிறது; மக்கட் மயமாக்கப் படுகிறது என்பதைக் கவனித்தாலே தெரியவரும்.

N.Thangamani

ntmani@yahoo.com


நாக. இளங்கோவனின் கட்டுரை நல்ல நகைச்சுவை உணர்வுடன் எழுதப்பட்டிருப்பதோடு மொழி வெறியர்களைத் துணுக்குறச் செய்வதாகவும் அமைந்திருக்கிறது. பாராட்டுகள்.

தேவநேயப் பாவாணர் போன்றவர்கள் முன்மொழிந்த மூன்றாம் தர மொழித் தூய்மை, இனத் தூய்மை முதலியவற்றை இன்னமும் வலியுறுத்திக் கொண்டிருக்கும் சிலர் தமிழ் தீட்டுப்பட்டு விடக்கூடாது என்பதற்காக வடமொழி எழுத்துகளைத் தவிர்த்து, சிறு பத்திரிகைத் தமிழை விட வேடிக்கையான ஒரு மொழியில் எழுதுவதையும், ஆங்கிலச் சொற்களை ஆங்கிலத்தின் ‘கற்பு ‘ கெட்டுவிடாமல் அப்படியே எழுதி வருவதையும் நன்றாகக் கேலி செய்துள்ளார் கட்டுரையாளர். ‘நகைச்சுவையும் வித்தியாசமானவையும் ‘ பகுதியில் இக் கட்டுரையை வெளியிட்டிருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்.

‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த குடி ‘ என்றும், பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட நீதி நூல் ஒன்றை ‘உலகப் பொது மறை ‘ என்றும், தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலைப் பாடிப் புல்லரித்த வண்ணம் தமிழ்ப் பெண்கள் புடவை கட்டிக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியபடியும் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் சிலர், சமஸ்கிருதம் உள்ளிட்ட பிற மொழியினருக்கும் தத்தமது மொழியின் அருமை பெருமைகளை ஊதிப் பெரிது படுத்திக் காட்டும் உரிமை உண்டு என்பதை நாக. இளங்கோவன் போன்றோரின் கட்டுரைகளைப் படித்தாவது புரிந்து கொள்ள வேண்டும்.

– ஆசாரகீனன்

aacharakeen@yahoo.com


ஆசிரியருக்கு

திண்ணையில் வெளியானவற்றுக்கு பொருத்தமான இணைப்புகளை தந்துள்ளீர்கள்.இது வரவேற்கத்தக்கது, நன்றி.

ஜெயகாந்தன் அக்னிவேஷ் போன்ற துறவிகளை ஆதரித்து பேசியிருந்தால் அதில் பொருள் உண்டு.

ஜெயந்திரேர் குறித்து அவ்வாறு பேசியது ஜெயகாந்தனை விமர்சிக்கவே இடம் தருகிறது.துறவிகள்

ஹிந்த்துவ அரசியல் கட்சி/இயக்கங்களுக்கு நேரடியாக/மறைமுகமாக ஆதரவு தரும் போது அதை எதிர்க்காமல், அத்தகைய துறவிகளை புகழ்ந்து பேசுவது பொறுப்பற்ற செயல்.உண்மையில் பல துறவிகள் , காவி கட்டிய அரசியல்வாதிகள் போல்தான் செயல்படுகிறார்கள்.இவர்களை துறவிகள் என்று கருதுவதே தவறு.

ஹிந்த்துவ பயங்கரவாதி அசோக் சிங்கலை வைத்துக் கொண்டு பத்திரிகையாளர்களை சந்திக்கும் துறவிகள் அன்பே சிவம் என்பது நகைமுரண்.சமூக மாற்றங்களை/சீர்திருத்தங்களை விமர்சித்து ஏற்க மறுத்தவர் சந்திரசேகர சரஸ்வதி.அவரது அத்வைதம் அத்தகையது. நாராயண குருவின் அத்வைதம் இதற்கு எதிரானது. ஜெயகாந்தன் எந்த அத்வைத நிலைப்பாட்டினை ஆதரிக்கிறார்.அக்னிவேஷ் விவேகானந்தரின் எழுத்துக்களால் உந்துதல் பெற்று முழு நேரத் துறவியானவர். கொத்தடிமை தொழிலாளர் மீட்பு, குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பது போன்று பலவற்றில் செயல்படுபவர்.ஹிந்த்துவ இயக்கங்களை எதிர்ப்பவர்.ஜெயேந்திரரோ சமத்துவம் என்பதை ஏற்க மறுப்பவர்.தமிழில் குடமுழுக்கு என்றால் எதிர்ப்பார்.வேலைக்குச் செல்லும் பெண்கள் குறித்து கூறிய கருத்துகளுக்காக பெண்ணிய இயக்கங்களால் விமர்சிக்கப்பட்டவர். இவரை நிராகரிக்காத ஒருவர் தன்னை முற்போக்காளர் என்று எப்படி கூறிக் கொள்ளமுடியும்.

ஜெயகாந்தனின் வீழ்ச்சி என்றே அப்பேச்சைக் கருதுகிறேன்.துரதிருஷ்டவசமாக இத்தகைய நிலைப்பாடுகளை அவர் முன்பும் எடுத்துள்ளார்.அவரை மதிப்பிடும் போது இவற்றையும் கருத்தில் கொண்டு விமர்சிக்க வேண்டும்.அது தவிர்க்க முடியாதது.முன்பு காங்கிரசுக்கு கண்மூடித்தனமான ஆதரவு கொடுத்ததால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடுமையான விமர்சனத்திற்கு ஆளானது.பின்னர் நிலைப்பாட்டினை மாற்றிக் கொண்டது.

ஜெயகாந்தன் சுய விமர்சனம் செய்து கொள்ள வேண்டும்.அதற்கான காலம் இன்னும் கடந்து விடவில்லை.

முரசொலி மாறன் குறித்து காஞ்சனா தாமோதரன் எழுதியுள்ளார்.திசைகளில் மாலன் எழுதியுள்ளார்.

வேறு சில கட்டுரைகளும் உள்ளன.இவற்றுடன் நான் முரண்படும் இடங்கள் பல உள்ளன. முரசொலி மாறனின் பங்கு,அவர் முன்வைத்த தாரளமயமாக்கல் கொள்கை குறித்தும், சர்வதேச அரங்குகளில் இந்தியா எடுத்த நிலைப்பாடுகள்,நடைமுறையில் செய்தவை -இவை குறித்து எழுத நினைக்கிறேன்.ஒரு மிகையான மதிப்பீடே மாறன் குறித்து முன்வைக்கப்படுகிறது என்று தோன்றுகிறது.மாறன் ஆற்றிய பணிகளின் முக்கியத்துவத்தை நான் குறைத்து மதிப்பிடவில்லை.அதே சமயம் தவிர்க்க முடியாத சில கேள்விகளும் உள்ளன.சுற்றுச்சூழலில் அக்கறை கொண்டவன் என்ற முறையில் மாறன் அமுல்படுத்திய வணிக-வர்த்தக கொள்கைகள் குறித்து

எனக்கு விமர்சனம் உண்டு.உதாரணமாக இந்தியா shrimp-turtle வழக்கில் அமெரிக்காவின் நிலைப்பாட்டினை எதிர்த்தது, ஆனால் அழிவு நிலையில் உள்ள ஆமை இனங்களை காக்க போதுமான முயற்சிகள் செய்யப்படவில்லை.shrimp ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருவாயில் ஒரு சிறு பங்கை இதற்கு ஒதுக்கியிருந்தால் கூட இந்தியாவின் சொல்லுக்கும்,செயலுக்கும் அதிக இடைவெளி இல்லை என்றாகியிருக்கும்.மாறன் சியாட்டிலில் ஆற்றிய உரையில் ‘India is second to none in its commitment towards environmental protection and sustainable development. The very ethos of India’s culture and history is not only to respect but also to worship nature. ‘(http://www.indianembassy.org/policy/WTO/maran_wto_nov_30_99.htm)

என்று கூறுகிறார்.ஆனால் நடைமுறையில் நடந்தது வேறு.Down to Earth போன்ற வெளியீடுகளைப் படித்தால்

இது தெளிவாகப் புலனாகும்.

K.ரவி ஸ்ரீநிவாஸ்

K.Ravi Srinivas

http://in.geocities.com/ravisrinivasin


Series Navigation

ஆசாரகீனன்

ஆசாரகீனன்