கடிதங்கள் – ஜனவரி 29,2004

This entry is part [part not set] of 46 in the series 20040129_Issue

கு.மு.விசயகுமார் – சோதிப் பிரகாசம் – நாக.இளங்கோவன் – அ.முஹம்மது இஸ்மாயில் – அரவிந்தன் நீலகண்டன்- பித்தன் – K.ரவி ஸ்ரீநிவாஸ் –


என்னினிய தமிழர்களுக்கு!!

கிராமத்திலிருந்து ஒரு உலகளாவிய மின்னிதழ்!

முழுவதும் யுனிகோடில் உங்களுக்காக துளிர் விட்டுள்ளது!!

ஆம் இ-சங்கமம் மின்னிதழ் வெளிவந்துவிட்டது 14.01.2004 முதல்.

தமிழர்களை இணைக்கும் களமாக, அவர்களின் அறிவுப் பசியைத் தீர்க்க, தமிழர்களின் கலை, கலாசாரம்,

மரபு சேவையைப் பிரதானப்படுத்தவும் இ-சங்கமம் ஓர் தளமாக அமையவேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடன்

இ-சங்கமம் தொடங்கப்பட்டுள்ளது.

சனவரி இதழில் ….

எந்த இதழ்களிலும் வராத(EXCLUSIVE) பகுத்தறிவு பகலவன் பெரியாரின் நாட்குறிப்பு (தொடர்)

புகைப்படங்களுடன் http://e-sangamam.com/periyar_dairy.htm

எண்ணற்ற சிறுகதைகள்,

கவிதைகள்,

தமிழ் மருத்துவம்

பெண்கள் முன்னேற்ற கட்டுரைகள்

கணினி தொழில் நுட்ப கட்டுரைகள்

சிறுவர் பகுதி

இத்தாலி …. பயணக்குறிப்புகள்

சிங்கப்பூர், இந்திய செல்வாக்கின் கீழ் இருந்த தீவு என்பதைக் குறிக்கும் எழுத்துக்கள் கொண்ட பழங்காலப்

பாறைக்கு என்னவாயிற்று ?

அத்தீவுக்கு முதன் முதலில் சென்ற தமிழன் யார் ?

சிங்கப்பூர் வரலாறு அறிமுகத்தில் சிங்கப்பூர் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.

http://e-sangamam.com/singai.htm

கட்டுரைகள் பகுதியில் இ-சுவடியை நடத்தும் கண்ணன், அத்திட்டத்திற்கு உதவியாக இருக்கும் சுபாஷினி,

கணினி பகுதியில் முகுந்தராஜ், உமர் என மேலும் பலரும் எழுதியுள்ளனர்.

மேலும் பல புதிய உள்ளீடுகளுடன்,புத்தம்புதிய பொலிவுடன் மலர்ந்துள்ளது- http://e-sangamam.com/.

உலகெங்கும் வாழும் தமிழர்கள் தமிழ்நாட்டுக்குச் செய்திகள் அனுப்ப வேண்டுமானால், அத்தகைய சேவையை

இலவசமாக வழங்க முன்வந்துள்ளது http://e-sangamam.com/mannanjal.htm

நீங்கள் உதவும் விருப்பமுள்ளவரா ? அல்லது சேவை அமைப்புகளோடு தொடர்புடையவரா ?

நீங்கள் உதவவேண்டிய பக்கம் ஒன்று உள்ளது அது உதவுவோம் வாருங்கள் http://e-sangamam.com/Vasantham_help.htm

யூனிகோட்டில் தமிழுக்குப் புதிதாக வந்துள்ளது http://e-sangamam.com/.

உங்களின் மதிப்பு மிக்க படைப்புகள் எதுவாயினும் சங்கமம் வரவேற்கின்றது.

நீங்கள் எழுதவேண்டும் என ஆவல் உள்ளவரா ? ஆனால் இதுவரை ஏதும் எழுதாதவரா ? உங்களின் படைப்புகளை

சங்கமம் வரவேற்கின்றது.

முரசு அஞ்சலில் திஸ்கி (tscu_inaimathi) எழுத்துருவைப் பயன்படுத்தி உங்களின் படைப்புகள் கருத்துகள் அனைத்தும்

தமிழில் தட்டச்சு செய்யப்பட்டு editor@e-sangamam.com முகவரிக்கு உங்கள் முகவரி, நிழற்படத்தையும் இணைத்து மின்னஞ்சல் செய்யுங்கள்.

அன்புடன்,

ஆல்பர்ட்,

கெளரவ ஆசிரியர், இ-சங்கமம்.

கு.மு.விசயகுமார்,

ஆசிரியர்,

இ-சங்கமம்.


‘திண்ணை ‘யின் தொகுப்பாளருக்கு வணக்கம்!

ஜெயமோகனின் ‘காடு ‘ கதை பற்றிய எனது கருத்துகளை விள்ளனம் செய்து இருக்கின்ற ரவி ஸ்ரீநிவாஸ், எது ‘அ-பத்தம் ‘ ? எது ‘பத்தம் ‘ ? என்று மதிப்பெண் வழங்குகின்ற ஓர் ஆசிரியராகத் தம்மைக் கருதிக் கொண்டு இருப்பது தெரிகிறது.

‘நன்று ‘, ‘மிகவும் நன்று ‘, ‘போதாமை ‘, ‘மிகவும் போதாமை ‘, என்று எல்லாம் குறிப்புகளை எழுதிப் பரிட்சைத் தாள்களை யாரும் திருத்தி விடலாம்; ஆனால்,

எதிர்க் கருத்துகளை எதிர் கொண்டு விட முடியாது.

எனினும், ‘அபத்தம் ‘ என்னும் ஒரே வார்த்தையில் என்னமாய் மார்க்சியத்தை

நமக்கு ரவி ஸ்ரீநிவாஸ் தெளிவு படுத்தி விடுகிறார்!

‘மாயப் படல் கீறித் தூய ஞான நாட்டம் பெற்ற பின் யானும், உன்னையும் கண்டேன்; என்னையும் கண்டேன்; பிறரையும் கண்டேன் ‘ என்று பாடிய பட்டினத்து அடிகளைத் தமது ‘அபத்த ‘க் குண்டுகளால் இன்னமும் இவர் வீழ்த்தாமல் இருப்பதுதான் அதிசயம்!

‘அனுபவ அறிவு நிலை ‘யில் ‘அபத்தமாக ‘ ( நன்றி: ரவி ஸ்ரீநிவாஸ்! )

முதலாண்மையைப் புரிந்து கொள்வதற்கு முற்பட்டுக் கொண்டு இருந்த ஆய்வாளர் களுக்கு எதிராக, ‘காரண அறிவு நிலை ‘யில் கார்ல் மார்க்ஸ் எழுதிய நூல்தான் ‘முதல் ‘! அதன் ஒன்றாம் தொகுதியின் ஒன்றாம் அதிகாரத்தைக் கொஞ்சம் படித்துப் பார்த்து விட்டு ரவி ஸ்ரீநிவாஸ் பதில் கூறட்டும்—எது அபத்தம் என்று! ( குறிப்பு:

தியாகு மற்றும் ஜமதக்னி ஆகியோரின் ‘மூலதனங் ‘களைத் தவிர்த்து விடலாம்! )

சரக்கு இருந்தால் அவிழ்த்து விடுங்கள், ரவி! உங்களை எதிர் கொள்வதற்கு

நான் தயார்! மற்றபடி ‘அபத்தம் ‘ என்பது போன்ற உங்கள் முனகல்களை எப்படி

நான் எதிர் கொள்ள முடியும்—பரிதாபப் படுவதைத் தவிர ? முனகல்கள் வாதம்

ஆகிட முடியாது; அறிவாண்மைப் பண்பாடும் ஆகி விட முடியாது.

நாயர் ஆண்களால் தலித் பெண்கள் இழிவு படுத்தப் படுவதைப் பொறுத்துக்

கொள்ள முடியாத ‘காடு ‘ கதையின் நாயர் கதாநாயகன், நாயர் பெண்களை

இழுத்துப் பேசி, இழிவு படுத்துவது நாயர் ஆண்களைத்தான்! மற்ற வீட்டுப் பெண்களை இழிவு படுத்துகின்ற ஆணாதிக்கக் காரர்கள், தங்கள் வீட்டுப் பெண்கள் இழிவு படுத்தப் படுவதைப் பொறுத்துக் கொள்ளாதது போன்ற ஒரு நிகழ்வின்

எதிர்வினை இது! சமுதாயத்தின் மெய்மையினைச் சித்தரிக்கின்ற ஒரு கதை

எழுத்தாளன், அந்த மெய்மைக்கு எப்படிக் காரணம் ஆகிட முடியும் ?

எப்படியும், பெண்களை விடவும் அதிகமாகப் பெண்மையின் மாண்பில் அக்கறை கொண்டு இருக்கின்ற ரவி ஸ்ரீநிவாஸ் நமது பாராட்டிற்கு உரியவர்

ஆகிறார்.

அன்புடன்,

சோதிப் பிரகாசம்.


திரு.வரதன் அம்மா..அம்மா என்று எழுதியிருந்த பாசமடல் கண்டேன்.

மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம் என்று

சொல்வது போல இருக்கிறது திரு.வரதனின் ஊழல் ஒப்பீடு!

கருணாநிதி ஊழல் செய்தார்; ஆனால் செயலலிதா செய்யவில்லை என்று கூட

துணிந்து சொல்லிவிடுவார் போலிருக்கிறது. அவ்வளவு பாசம் 😉

எனினும் அப்படிச் சொல்லாத திரு.வரதனைப் பாராட்டத்தான் வேண்டும்.

கீழே இருப்பன அவரின் சில எண் வரிசையிட்ட, இடாத கருத்துக்களுக்கான

எதிர்வினை. ‘[ ‘குறிக்குள் இருப்பன அவரின் கருத்துக்கள்.

[ 1. 1991-ல் ‘சோ ‘வையும், மூப்பனாரையும் அண்டிப் பிழைத்த கருணாநிதி,

-அதே திரு.கருணாநிதி, மத்திய பதவிக்காய் ‘மாற ‘க் காரணம் இருந்ததால், இந்துத்துவா மறந்து மஞ்சள் துண்டு அணிந்து உறவு பூண்டது போலல்லாமல், நீங்கள் தைரியமாக நிலைப்பாடு எடுத்து, காங்கிரஸை வைக்க வேண்டிய இடத்தில் வைத்தீர்கள்.

]

மூப்பனாரை அண்டிப் பிழைத்தது கருணாநிதியா என்பதை மக்கள் அறிவர்.

தங்களின் கருத்துப்படி தேசத்தை நடத்தும் பா.ச.க

இப்பொழுது அண்டுவதற்கு இடம் தேடி, முட்டிக்கால் போட்டு

வெயிலில் நிற்பதெல்லாம் விட்டுவிடலாம். ஏனெனில் அதுவும் மக்களுக்கு நன்கு தெரியும்.

அதேபோல ‘மூப்பனார்களை அண்டி பிழைப்பை நடத்தியது

உண்மையில் யார் ? யார் யார் ? ? ‘ என்பதும் மக்களுக்குத் தெரியும்;

மயிலாடுதுறை டி.இராசேந்தரைக் கேட்டால் மிகத் தெளிவாகச் சொல்லிவிடுவார்.

கேட்டுப்பாருங்கள், பாட்டு கூட எழுதித் தருவார்.

மூப்பனார் – கருணாநிதி ஒருபுறம் இருக்கட்டும்.

‘சோ ‘ வை அண்டிப்பிழைத்தார் என்கிறீர்களே;

அதுதான் நகைச்சுவையின் உச்ச கட்டம்.

பா.ச.கவுடன் கூட்டு சேர மஞ்சள் துண்டு போட்டார் என்பதும்

உங்களின் கிண்டல் என்றே, செல்லமாக உங்களைப் பார்த்து

புன்னகை செய்யத் தோன்றுகிறது. கொஞ்ச நாளைக்கு முன்னர்

கொழுக்கட்டை அரசியல் எழுதினீர்கள்; இப்பொழுது மஞ்சள்

துண்டு அரசியல் செய்கிறீர்கள். அவர் வெள்ளைச் செருப்பு

அணிகிறார்; அதற்கு ஏதாவது அடுத்த முறை எழுதுங்கள்.

அய்யா, அவிழ்த்துப் போட்டு விட்டு வந்தால் கூட பரவாயில்லை,

என்று கூட்டு வைத்துக் கொள்ள அலையும் பா.ச.கவுக்கு

துண்டோ கோவணமோ மஞ்சளா கருப்பா என்ற சிந்தனை

எங்கிருந்து வரக்கூடும் ?

[ 5. கண்ணகி சிலையின் கற்புக்கு கண்ணீர் வடித்து வேம் போடத் தெரியாமல்,

நிஜத்தில் பெண்கள் நிம்மதியாக வாழ வழி செய்தீர்கள்.

]

கண்ணகி என்பவள் இம்மண்.

அதன் பொருள் தமிழ்ப்பகைகளுக்கும்தெரிய வாய்ப்பில்லை.

செல்வமணிக்கும் இராசேந்திரனுக்கும் முதலைக் கண்ணீர்

விடுபவர்களுக்கு அதே திசையில் திரும்ப எழுதுதல்

ஏலாததல்ல; அது பண்பாடல்ல என்பதால் தவிர்க்கிறேன்.

அதேபோல, கண்ணகியின் பண்பாட்டு வரலாறு

தெரியாத பண்பாளர்களிடம் கண்ணகி பற்றிப் பேசுவது கண்ணகி சிலைக்கு

நடந்த அநீதியை விட அநீதி என்பதால் இங்கு தவிர்க்கிறேன்.

[

8. கிளைக்கு கிளைத் தாவி கனி பறிப்பது போல் தி.மு.க நிலைப்பாடு கொண்ட போது,

காங்கிரஸையும் பா.ஜ.கா-விடமும் மண்டியிடாமல் அரசியல் செய்கிறீர்கள்.

]

1998ல் செயலலிதாவுடன் பா.ச.க கூட்டு.

1999ல் கருணாநிதியுடன் பா.ச.க கூட்டு.

2004ல் செயலலிதாவுடன் பா.ச.க கூட்டு.

அதையே திருப்பி எழுதினால்,

1998ல் பா.ச.கவுடன் செயலலிதா கூட்டு.

1999ல் காங்கிரசுடன் செயலலிதா கூட்டு

2004ல் பா.ச.கவுடன் செயலலிதா கூட்டு

இப்படி மாற்றி மாற்றி கனி பறிக்கும் அனைவரையும்

மறந்துவிட்டுத் தனக்குப் பிடிக்காத கருணாநிதியை மட்டும்

சொல்வதில் திரு.வரதனுக்கு ஆனந்தமோ ஆனந்தம் போலிருக்கிறது.

மண்டிக் கலை பற்றி நீங்கள் இன்னும் அறிய வேண்டியதிருக்கிறது.

தற்போது காங்கிரசுகிட்டே மண்டி போட்டாலும் நடக்காது.

அண்டோ மைனா அம்முவை இன்னும் மறந்துவிடவில்லை.

மறக்கவிரும்பும் போது மண்டி மட்டும் இல்லை; இன்னும் என்னென்னவோ

போடவேண்டியதிருக்காது என்று யார் சொல்லமுடியும் ?

[

9. மாறன், உடல்நிலை i.c.u என்ற போதிலும், பிற வசதிகளுக்காக மந்திரி பதவியைக் கெட்டியாக பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்து விட்டு, காங்கிரஸ் ஜெயிக்கும் என்ற நிலை வந்தவுடன் கிளை மாறும் தி.மு.க தலைமையின் சந்தர்ப்ப வாதத்தை மக்கள் அறிவர்.

]

சரி – அப்படியே வைத்துக் கொண்டாலும், எம்.சி.ஆரின் உடல்நலம்

கெட்டு நடக்க முடியாமல், பேசமுடியாமல் கிடந்த போது

முதல்வராகவே வைத்திருந்ததையெல்லாம் எம்.சி.யாரின்

தலைமையில் வந்த அதிமுகவைப் போற்றும் திரு.வரதனுக்கு

நினைவில் இருந்து நீங்கி விட்டது போலும்.

ஒரு மாதத்திற்கும் சற்று முன்னே, காங்கிரசுக் கட்சி

3 பெரிய சட்ட மன்றத் தேர்தலிலே தோற்று, ஆட்சியை

இழந்து நின்ற நிலையில்தான் தி.மு.க பா.ச.கவை விட்டு

விலகியதே அன்றி, காங்கிரசு வெற்றிப் பேரிகைக் கொட்டிக்

கொண்டு இருந்த போது அல்ல. அண்மையில் நடந்த இதனையே மறந்து விட்டு

‘சந்தர்ப்பவாதம் ‘ என்று கூறும் திரு.வரதனுக்கு, முந்தையது

நினைவில் நீங்கியதில் வியப்பேதுமில்லை.

ஏதோ வெங்கைய நாயுடுவுக்கும் தமிழக பா.ச.கவுக்கும்தான்

பேச வேறு ஏதுமே இல்லாததால் ‘சந்தர்ப்பவாதம் ‘ என்று

பேசித் திரிகிறார்கள் என்றால் திரு.வரதனும் அப்படித்தான் போலும்.

[

10. …… சும்மா கையைப் பிடிக்கும் முன்னே, ‘ஐயோ கொல்றாங்களே.. ‘ என்று நடிகர் திலகம்.சிவாஜி அவர்களை மிஞ்சும் நடிப்புச் சக்ரவர்த்திகளைப் போல் அல்லாமல் தைரியமாக ஆண்மையுடன் தலைமை கொண்டுள்ளீர்கள்

]

கருணாநிதி ‘கையைப் பிடிக்கும் முன்னர் ‘ நாடகம் ஆடிவிட்டார் என்று சொல்கிறீர்கள்.

நடிகர் திலகத்தையும் மிஞ்சி விட்டார் என்று சொல்கிறீர்கள்.

89/90ல் சட்டமன்ற பாஞ்சாலி நாடகத்தைக் கூட விட்டுவிடலாம்.

ஏனெனில் அங்கே கருணாநிதி இருந்தார் என்பதால் நீங்கள் நம்பக் கூடாது

என்ற விதி உங்களுக்கு உண்டு.

சென்னாரெட்டி என்றொரு வயதான மனிதர்.

நடக்கும் போது காலும் சரியாக இருக்காது.

கையைக்கூட தூக்க முடியாத மனிதர்.

அதிலும் ஒரு கையில் கம்பை வைத்துக் கொண்டிருக்க

வேண்டிய கட்டாயம் அவருக்கு உண்டு.

அப்படிப் பட்ட அவர், ‘கையைப் பிடித்து இழுத்து விட்டார் ‘ என்று யார் சொன்னது

என்பது நாடகக் கலை வல்லுனராக தன்னைக் காட்டிக்கொள்ளும்

திரு.வரதன் யோசிக்க விரும்ப வில்லை போலும்.

[

11. பா.ஜ.க- ஆட்சி கூட்டணியிலிருந்து தி.மு.க விலகும் முடிவுக்கு ஒரே நீண்ட தொலை நோக்கு காரணம், தன் குடும்பம் சேராத, திரு.டி.ஆர்.பாலு முக்கியத்துவம் பெற்றுவிடக் கூடாது எனும் மூன்றாம் தர சுயநல நிலைப்பாட்டை திரு.கருணாநிதி குடும்பம் கொண்டதால் தான் என்பது ஊரறியும்.

]

கருணாநிதியை எதிர்க்கக் கூடாது என்பதில்லை. கருணாநிதிக்கு எதிராக

எழுதுவது நல்லதுதான். ஆனால் எழுதுவதில், கேட்கும் கேள்விகளில்

ஓரளவேனும் முதிர்வை எதிர்பார்ப்பவர்கள் வாசகர்கள் என்பதை அறியவேண்டும்.

சும்மாவாச்சும், ‘எனக்கு மட்டும் முக்கா முட்டாயி; அவனுக்கு பார் முழு முட்டாயி ‘

என்பது போன்ற கருத்துக்கள் நகைக்கத்தான் உதவும்.

[

திரு.கருணாநிதி போல் தனக்குத் தானே உலக தமிழ் மக்களின் தலைவர் என்று நீங்கள் பட்டம் சூட்டிக் கொள்ளவில்லை.

]

என்ன வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம். ஆனால் ‘தமிழ் மக்களின் தலைவர் ‘

என்பது பொருந்தாது என்று போட்டுக் கொள்ளாத செயலலிதாவின் நேர்மையை நான் பாராட்டுகிறேன்.

[

இல்லை ஒளவையாருக்கு உரை எழுதுகிறேன் என்று பம்மாத்து பண்ணவில்லை.

]

அட, அந்தப் பம்மாத்தைத்தான் பண்ணச் சொல்லுங்களேன்; படிக்கவா ஆளில்லை.

அம்மா ‘உதிர்ந்த உரோமம் ‘ என்றால் அது இயற்றமிழ்.

அவர் ஆடிய நடனங்களே கூத்துத் தமிழ்.

அதனால் பேரீச்சம்பழ இலக்கியங்கள் பெருத்து விட்ட

இக்காலத்து இலக்கியம் ஒன்றனுக்காவது

உரையை ‘இசைத் தமிழில் ‘ எழுதச் சொல்லுங்கள்.

தமிழன்னையை முத்தமிழன்னை என்று சொல்லி விடலாம்.

அன்புடன்

நாக.இளங்கோவன்

nel@vsnl.com

(நீக்கங்கள் உண்டு – திண்ணை குழு)


பதில் மரியாதை

அ.முஹம்மது இஸ்மாயில்

பெண்களில் ஏன் நபி இல்லை ? இது பலரது கேள்வி. பெண்ணுக்கு நபி பட்டம் இல்லாவிட்டாலும் தாய்மை எனும் உயரிய பட்டம் இருக்கிறது என்று சிந்தித்தேன்-

நபியை பெறாவிட்டாலும் தாய்மை இருக்கிறது அதற்கு சிறப்பு இருக்கிறது என்கிறீர்கள், அது மட்டுமா ? ஒளவை(ப்பாட்டி ?)யை பற்றி குறிப்பிட்டு திருமணம் ஆகவில்லை என்றால், குழந்தை பெற இயலாதவர் என்றால் அந்த பெண்ணுக்கு மதிப்பு இல்லை என்ற மறைமுக கருத்து என் கட்டுரையில் இருப்பதாக எனக்கு சுட்டி காட்டியிருக்கிறீர்கள்-

உங்கள் கருத்துக்களில் தான் என் பதிலும் ஒளிந்திருக்கிறது என்று நானும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்- அதாவது ஒரு ஆணுக்கு நபியாக தேர்ந்து எடுக்கப்பட்டாலோ அல்லது புனிதன் என்று பெயர் எடுத்தாலோ தான் சிறப்பு ஆனால் பாருங்கள் பெண்ணாக பிறந்தாலே தாய்மை எனும் சிறப்பு வந்து ஒட்டி விடுகிறது- ஒரு பெண் குழந்தை பெற இயலாதவள் என்பதற்காக அவளுக்கு கற்பு கிடையாது என்று யாரும் சொல்லி விட முடியாது இல்லையா ?

நீங்கள் என்னை இப்படி திருத்தியிருந்தீர்கள் என்றால் கூட நான் மகிழ்ந்திருப்பேன், அதாவது ஒரு பெண்ணுக்கு தாய்மை என்பது கூடுதல் பெருமை என்று நீங்கள் கூறியிருந்திருக்கலாம். இப்ப, குழந்தை பெறாத மூதாட்டி ஒருவரை பார்த்து தாய் அல்லது அம்மா என்று கூறுகிறேன் என்று வையுங்கள் அல்லது ஓளவையை பாட்டி என்று குறிப்பிடுகிறேன் என்று வையுங்கள் நீங்கள் உடனே, அதெப்படி நீங்கள் கூறலாம் அவருக்கு தான் கல்யானமே ஆகலையே, பிள்ளை பேறு இல்லையே என்று வாதிடுவீர்களோ ?

நீங்கள் இந்து மதம் பற்றி குறிப்பிட்டார்கள்- சகோதர மதத்தை சார்ந்தவரான நீங்கள் இஸ்லாத்தில் உள்ள சட்ட திட்டங்கள் பற்றி கேள்வி எழுப்புகிறீர்கள்- சரி, நானும் ஒரு கேள்வி கேட்கிறேன், கோயிலில் அர்ச்சகராக இருக்கும் ஆண் குருக்களை நான் பார்த்துள்ளேன்- தவிர அந்த ஆண் குருக்கள் யாரையும் சட்டை அணிந்து நான் பார்த்ததில்லை- நான் தெரியாமல் தான் கேட்கிறேன் பெண்களை அர்ச்சகராக கொண்ட கோயில்கள் ஏதேனும் உள்ளதா ? அப்படி பெண்களை அர்ச்சகராக்கினால் அவர்களின் ஆடை எப்படி இருக்க வேண்டும் ? மேலாடை அணியலாமா ? கூடாதா ? நான் யார் மனதையும் புண்படுத்துவதற்காக இங்கு கூறவில்லை நான் அப்படி பெண்ணை குருக்களாக போடாததற்காக அல்லது பெண்களை குருக்களாக போட்டு மேலாடை அணிய சொன்னதற்காக பெண்களுக்கு அநீதி என்று குரல் எழுப்ப போவதுமில்லை- ஒரு சந்தேகம் கேட்கிறேன் அவ்வளவு தான்- சிந்தித்து பார்ப்போமே ?

கடவுள் எல்லா இடத்திலும் இருக்கிறான் ஆமாம் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் குப்பை தொட்டியிலும் இருக்கிறான், சாக்கடையிலும் இருக்கிறான், இன்னும் கள்ளுக்கடை, சாராயக் கடை- எங்கே இல்லை அவன்- ஆனால் அதற்கெல்லாம் தனி பெயர் இருக்கிறது- தவிர இட மரியாதை என்று ஒன்று உள்ளது கல்யாண வீட்டில் செய்த அரட்டை எல்லாம் எழவு வீட்டில் செய்ய முடியாது- அது போல இறை இல்லம் என்று தனிப் பெயர் பெற்று சில இடங்கள் உள்ளது- அதற்கு தனி மரியாதை உள்ளது- அதை கட்டி காக்க வேண்டும்- அதுவும் தவிர ஹஜ் என்ற புனித யாத்திரையில் ஆண்கள், பெண்கள் இருவரும் சேர்ந்தே தான் பங்கு கொள்கிறார்கள்- அங்கும் பெண்கள் ஹாஜியா என்று அழைக்கப்படுகிறார்கள், கண்ணியத்துடன் மதிக்கப்படுகிறார்கள்-

பர்தா அணிய வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது ஆனால் அப்படி அணியாதவர்களை ஆசிட் ஊற்ற சொல்லவில்லை- உதாரணமாக ஒரு பள்ளிவாசலை இடித்து விட்டு அதே இடத்தில் ஒரு கடவுள் பிறந்ததாக கூறி கோயில் கட்ட ரதத்தில் செல்கிறார்கள், நினைத்தது போல பள்ளிவாசலை இடித்து விட்டு ஸ்பெஷல் ரயிலில் வெற்றி முழக்கமிட்டு திரும்புகிறார்கள். அதற்காக நான் இந்து மதத்தை குற்றம் சொல்ல முடியாது காரணம் இந்து மதத்தில் பள்ளிவாசலை இடிக்க சொல்லவில்லை. அது போல குற்றம் ஆசிட் ஊற்றியவர்கள் மீது தான்-

பெண்களை பர்தா அணிய சொல்வதை வீட்டுக்குள் போய் ஒளிந்து கொள்ளுங்கள் என்று தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள்- பர்தா அணிவதால் வெளியே வர முடியாது என்று யார் சொன்னது ? பர்தா அணிந்தால் இந்த கண்ணியமான தொழில்கள் பார்க்க முடியாது என்று எந்த கண்ணியமான தொழில்களாவது உண்டா ? இவ்வளவு ஏன் ? ஈரான் நாட்டு பெண்கள் இராணுவத்தில் பர்தா அணிந்தவாறே பணிபுரியவில்லையா ? பெண்கள் கண்ணியமான தொழில்கள் செய்யட்டும், கல்வி கற்று சிறக்கட்டும் யார் வேண்டாம் என்றது ? ஆனால் கண்ணிய ஆடைகள் அணியட்டும். தொப்புள் தெரிந்தால் தான் இந்த தொழிலை செய்ய முடியும் என்றால் எங்களது குல பெண்கள் மட்டுமல்ல எந்த குல பெண்களையும் அப்படி பார்க்க எங்களுக்கு உடன்பாடில்லை- இதில் என்ன தவறு ? ஒரு வேலை நாங்கள் பெண்களை நீங்கள் மார்பு தெரிய ஆடை அணிய வேண்டும் என்று வற்புறுத்தினாலோ, தொப்புள் தெரிய நடனமாட வேண்டுமென்று கட்டயப்படுத்தினாலோ அதை நீங்கள் கண்டிக்கலாம், விளக்கம் கேட்க நீங்கள் ஆவலாய் இருக்கலாம் நாங்களும் பதில் சொல்ல இயலாமல் திணறியிருப்போம்.

கல்வி என்றால் என்ன ? ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பார்கள்- ஒரு பெண் திருமணம் செய்கிறாள் என்றால் அவள் தன் கணவரை எப்படி மதிக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்கள் ? ஒரு சாரார் கணவனே கண் கண்ட தெய்வம் என்று காலில் விழுந்து கும்பிடுகிரார்கள்- இது தவறு- படித்து வேலை பார்க்கும் பெண்கள் சாதாரண பிரச்சிணைக்கு எல்லாம் சண்டை போட்டு விவாகரத்து கோருகிறார்கள்- அலுவலகத்தில் மேலாளர் தாமதமாக வந்ததற்கு திட்டினால் மன்னிப்பு கேட்கிறார்கள் ஆனால் வீட்டில் கணவன் நியாயமான காரணத்திற்காக ஏதாவது சொன்னாலும் விவாகரத்து கேட்கிறார்கள்- இதுவும் தவறு- அதே சமயத்தில் கருத்து வேறுபாடு என்று வந்து சந்தோஷமான வாழ்க்கை அமையவில்லை என்றால் கட்டிகிட்ட பாவத்துக்காக வாழ்ந்து தொலைக்கிறேன் என்று கூறுவதும் தவறு- பெருமானார் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூரினார்கள், இறைவன் ஹலாலக்கினாதிலேயே இறைவனுக்கு மிகவும் வெறுப்பானது விவாகரத்து தான் ‘ என்று-

தவிர பெருமானார் அவர்கள் வாழ்விலும் விவாகரத்து முன்மாதிரி இல்லை- பெருமானார் அவர்கள் மணம் முடித்த எந்த மனைவியையும் விவாகரத்து செய்யவில்லை- இஸ்லாத்தில் விவாகரத்து செய்யும் முறை தான் எளிமையக்கப் பட்டிருக்கிறதே தவிர விவாகரத்தை ஊக்குவிக்கவில்லை- தெரியுமா செய்தி ?

அறியாமையால் ஒருவன் செய்து விட்ட பிழையை மன்னிக்க சொல்கிறீர்கள்

பெருமானார் முஹம்மது நபி(ஸல்) அவர்களிடம் ஒரு முஸ்லிமல்லாதவர் வந்து சொன்னார், நீங்கள் ஹராமானதை விழுங்கி விட்டார்கள் என்று- நபித்தோழர் உமர்(ரலி) அவர்கள் கடுஞ்சினத்தோடு வாலை உறுவி விட்டார்கள், பெருமானார் அவர்கள் உமர்(ரலி) அவர்களை கையமர்த்தி விட்டு அவர் சொல்வது உண்மை தான் என்றார்கள், எல்லோருக்கும் ஆச்சரியம், பெருமானார் அவர்கள் பொறுமையுடன் கூறினார்கள், அவர் அப்படி சொன்ன போது எனக்கு கோப்ம் வந்தது, அதை நான் விழுங்கி விட்டேந் கோபம் ஹராமானது தானே என்றார்கள்- எங்களுக்கும் பொறுமை கற்றுக் கொடுக்கப்பட்டே உள்ள்து-

மன்னிக்கும் மனப்பண்பை எங்களுக்கு சொல்லி தருகிறீர்கள் ? தனிப்பட்ட முறையில் எனக்கு துரோகம் செய்திருந்தால் நான் அந்த கொடியவனை மன்னிக்கலாம்- ஆனால் ஒரு சமுதாயத்துக்கே துரோகம் செய்ததால் அவனை விட்டு வைக்கக் கூடாது- உதாரணமாக பெருமானார் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இந்தவை மன்னித்ததை சொல்லலாம்- தனது சிறிய தந்தை ஹம்ஜா(ரலி) அவர்களை இந்தா என்பாள் கொன்று குடலை உறுவி வெளியே எடுத்து போட்டாள் பெருங்குணம் கொண்ட பெருமானார் அவர்கள் அந்த இந்தாவை மக்கா வெற்றிக்கு பிறகு மன்னித்தார்கள்-அதே பெருமானார் அவர்கள் திருடியது என் அருமை மகள் பாத்திமா என்றாலும் அவர்களது கையையும் வெட்டத்தான் வேண்டும் என்றார்கள்- யாரை மன்னிக்க வேண்டும் ? திருந்தியவனை மன்னிக்கலாம் திருடுகிறவனை ஆமாம் உண்மையை திருடுகிறவனை மன்னிக்க கூடாது- பல சமயங்களில் மன்னித்து விடுவார்கள் என்ற நினைப்பே மேன்மேலும் தவறு செய்ய தூண்டி விடும்-

கண்ணியங்கள் கட்டாயப்படுத்தினால் தான் வரும் என்றால் கட்டாயப்படுத்தலாம்- இஸ்லாத்துக்கு வாருங்கள் என்று நாங்கள் யாரையும் கட்டாயப் படுத்தவில்லை அதே சமயத்தில் இஸ்லாத்தில் நிறைய மாசு படாத, மாற்றம் தேவைப்படாத கட்டுபாடுகள் வலியுறுத்தல்கள் நிறையவே இருக்கின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை-

என்னால் ஆன தவறுக்கு வருத்தம்

நம்மால் ஆன நிறைவுக்கு நன்றி

dul_fiqar@yahoo.com.sg


திரு.பித்தனின் கடிதம் குறித்தும், மற்றும் இந்த சர்ச்சை குறித்தேயும் இறுதியாக கூறிக் கொள்வது:

ஒருவர் கூறாத விஷயத்தை கூறியதாக முத்திரை குத்தவேண்டிய அவசியம் என்ன வந்ததென்பது தெரியவில்லை. இச்சர்ச்சையில் நான் கூறாத விஷயங்கள்:

1. சமஸ்கிருதம்தான் கணிதத்திற்கு ஏற்ற மொழி அல்லது சமஸ்கிருதம் ஒரு கணினி மொழி.

2. ரிக் ப்ரிக்ஸின் ய்வுக்கட்டுரை மிகவும் சிறந்த ஒரு கட்டுரை அல்லது அது ஒரு குப்பை.

3. ரிக் ப்ரிக்ஸின் கட்டுரையால் சமஸ்கிருதம் தமிழை விட உயர்ந்தது.

நான் தெளிவாகவே மறுத்த விஷயம்:

சமஸ்கிருதம்தான் கணிதத்திற்கு ஏற்ற மொழி அல்லது சமஸ்கிருதம் ஒரு கணினி மொழி. நான் கூறியுள்ள விஷயங்கள் என்ன ? சமஸ்கிருதம் – கணினி தொடர்பு தாரமேதுமில்லாமல் உருவாக்கப்பட்ட பொய் என திரு.நாக.இளங்கோவன் கூறியது தவறு. குறைந்த பட்சம் ஒரு ய்வுத்தாளாவது இது குறித்து சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. (இப்போது சில நூல்களே வந்துள்ளன என அறிகிறேன். ஒரு நூலை படித்தும் வருகிறேன்.) னால் அதே சமயம் ‘சமஸ்கிருதம்தான் கணிதத்திற்கு ஏற்ற மொழி ‘ என கூறுவது ‘மிகைபடுத்தப்பட்ட பிரபலப்படுத்தலே ‘ என்றும் தெளிவாகவே ‘தவறு ‘ என்றும் என் முதல் கடிதத்திலேயே – அதாவது இது சர்ச்சையாக்கப்படுவதற்கு முன்னரே- கூறியிருந்தேன். இவற்றை வேண்டுமென்றே வெட்டி நான் தெளிவாகவே ‘ரிக் ப்ரிட்சின் நிலைபாடு ‘ என என் முதல் கடிதத்திலேயே கூறியதை கண்டும் காணாமல், சில பகுதிகளை மட்டும் வெட்டியும் ஒட்டியும் இதனை சர்ச்சையாக்கியதிலும் மீண்டும் மீண்டும் முத்திரை குத்துவதிலும் ஒரு அடிப்படையான நேர்மையின்மை இருக்கிறது. இயற்பியலின் மொழியாக கணிதம் இயங்குகையில் அதன் சில தளங்களில் வெளிப்படும் ambiguity குறித்து நான் கூறியுள்ள கருத்துக்கள் ஏற்கனவே சில முக்கியமான கணித வல்லுநர்களால் கூறப்பட்டுள்ளது. இது குறித்தும், சாங்கிய-பெளத்த மற்றும் ஸ்க்ராட்டிஞ்சர்-நெய்ல்ஸ்போர் குறித்தும் விரைவில் முழுமையான கட்டுரைகளை திண்ணையிலேயே -திண்ணை சிரியர் குழு பிரசுரிக்க தகுந்ததென முடிவெடுக்கும் பட்சத்தில்- பிரசுரிப்பேன். நாம் சமஸ்கிருதம் கற்பதற்கான காரணங்களாக நான் கூறுவதெல்லாம் நமது சமூக-கலாச்சார சூழல் சார்ந்தவை. ஏற்கனவே இந்நாட்டின் மிகச்சிறந்த சமூக சீர்திருத்தவாதிகள் ன்மிக அருளாளர்கள் கூறியவை. நாராயண குரு சமூக விடுதலை வேள்வியின் ஓர் அங்கமாக சமஸ்கிருத படிப்பினை எடுத்துக்கொண்டார். அதைப்போலவே டாக்டர் அம்பேத்கர் ஒருபடி மேலே போய் சமஸ்கிருதம் பாரத தேசத்தின் தேசிய மொழியாக இருக்கவேண்டுமென கூறினார். நான் காட்டிய தமிழ் இலக்கிய மேற்கோள்கள் எனக்கும் தமிழ் இலக்கியம் தெரியும் பார் என்பதற்காக காட்டப்படவில்லை. மாறாக நம் தமிழ் இனத்தின் மிகப்பெரிய அருளாளர்கள் மற்றும் பெருமக்கள் சமஸ்கிருதத்தையோ, வேத மரபையோ நம் தமிழ் பண்பாட்டிற்கு அயலானதாக கண்டதில்லை. வேதமரபும் தமிழ்மரபும் அந்நியமானவை என்று கூறுவது மிகவும் பிற்காலத்தில் ஏற்பட்ட ஒரு பிரிவு. சமஸ்கிருதம் அறிந்த அந்தணரல்லாதோரெனில், மிகுந்த வேதமறுப்புடையவராக கூறப்படும் சித்தரான சிவவாக்கியரே சமஸ்கிருதம் அறிந்தவரென்பதற்கு அவர் பாடல்களில் சான்றுகள் உள்ளன. கம்பர் சமஸ்கிருதமே அறியாமல் வான்மீகி இராமாயணத்தை தமிழ் செய்தார் என நம்புவது கடினமான விஷயம். வான்மீகியும் காளிதாசனும் விதிவிலக்கென்போமென்றால் வேறு யாரெல்லாம் விதிவிலக்கு ? சத்யகாமன் ? சிறுத்தொண்டர் ? கம்ப நாட்டாழ்வார் ? திருமூலர் ? விஸ்வாமித்திரர் ? குமரகுருபரர் ? நாராயணகுரு ? ஸ்வாமி விவேகானந்தர் ? ஸ்ரீ அரவிந்தர் ? சுவாமி சித்பவானந்தர் ? இவர்களனைவருமே விதிவிலக்கா ? இந்த விசித்திர விதிவிலக்கு விதிவிலக்கின் இலக்கணத்துக்கே விதிவிலக்காக இருக்கும் போலிருக்கிறது. இந்நிலையில் எவ்வித அறிவியல் அடிப்படையும் இல்லாமல் ஐரோப்பியர்கள் உருவாக்கிய ரிய-திராவிட இனவாத அடிப்படையில் சமஸ்கிருதமே தமிழருடையதில்லை என கூறுவது தமிழர்கள் பாரம்பரியத்தையே மறுதலிப்பதாகும். இந்த கபட பகுத்தறிவு கூட்டத்தின் கீழ்த்தர பிரச்சார உக்திகளின் தொடக்கமே, வைபிராட்டியார் சங்கத்தமிழ் வேண்டிய, தமிழகத்தின் அனைத்து சாதியினரும் தொட்டு வணங்க முடிந்த, விநாயகப்பெருமானை உடைத்துதான். அதிலிருந்தே தமிழ் கலாச்சாரத்திற்கும் இந்த ஐரோப்பிய இனவாதத்திற்கு தன் மூளையை விற்ற கூட்டத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

– அரவிந்தன் நீலகண்டன்

infidel_hindu@rediffmail.com


இலக்கியவாதிகளும் அவதூறுகளும் – பித்தன்.

ஜெயமோகனின் ‘அவதூறுகள் தொடாத இடம் ‘ படிக்கும் போது தோன்றிய கருத்துக்களையே இங்கு எழுதுகிறேன்.

அக்கட்டுரையைப் படிக்கும்போதே, ஒரு எழுத்தாளனுக்கு இவ்வளவு அவதூறு எதற்காக என்று தோன்றியது. பின்னாலேயே இதெல்லாம் அவராகவே வருவித்துக்கொண்டது என்ற கருத்தும் எழுந்தது! அவரைப் பற்றிய அவதூறுக் கட்டுரைகளுக்கு அவர் தரும் விளக்கங்கள் வித்தியாசமாக இருக்கிறது. அவற்றில் அவர் தரும் முதல் கருத்து, அக்கட்டுரைகள் ‘இலக்கியத்தரத்தில் இல்லை-இலக்கிய விமர்சனக் கட்டுரைகளும் இல்லை-தனி நபர் வசைகள் ‘ என்பது! இதைக்கேட்டு எனக்கு வியப்பாக இருக்கிறது. அக்கட்டுரைகள் அவர் படைப்புக்களை விமர்சிப்பன அல்லவே. அவர் கலைஞரைப்பார்த்து ‘இலக்கியவாதியா ? ‘ என்று கேட்டதற்கான எதிர்மறைகளே. இவர் அப்படிக் கேட்டதே தனி நபர் விமர்சனம்தானே. அதுவே தவறு. அதற்கு பதிலாக தனி நபர் விமர்சனம் வருவதாகப் புலம்புவது எதற்கு என்று புரியவில்லை. தனி நபர் விமர்சனம் செய்துவிட்டு பதிலுக்கு இலக்கியத் திறனாய்வுகளை எதிர்பார்ப்பது எந்தவித புத்திசாலித்தனம் என்று எனக்கு தெரியவில்லை. அப்படி எதிர்பார்ப்பது, புகழுக்காகவும், அங்கீகாரத்துக்காகவுமே அவர் தனி நபர் விமர்சனம் செய்தார் என்ற மற்றவர்களின் கூற்றுக்கு வலு சேர்ப்பதாகவே இருக்கிறது.

எந்த தனி நபர் விமர்சனங்களிலும், அவதூறுகளிலும் எனக்கு நம்பிக்கையில்லை. அது தவறானது என்றே கருதுகிறேன். (இப்போது ஜெயமோகனை நோக்கி வீசப்படும் அவதூறுகளையும் சேர்த்து). இப்படித் தனி நபர் விமர்சனம் பிடிக்காதவர் முதலில் அவ்வாறு செய்யாமலிருந்திருக்க வேண்டும். கலைஞரின் எழுத்துக்களை, குறளோவியத்தை, தொல்காப்ப்ியப்பூங்காவை திறனாய்வு செய்து அவற்றைப் பற்றி விமர்சனம் செய்திருக்க வேண்டும். அதை விடுத்து தனிநபர் விமர்சனம் செய்துவிட்டு வேறு எதிர்பார்ப்பது என்ன கணக்கில் ? வினையை விதைத்துவிட்டு வேறு எதிர்பார்க்க முடியுமா என்ன ? ‘என்னுடைய மதிப்பீடுகள் வெளிப்படையானவை திட்டவட்டமானவை ‘ என்ற அவர் வாதம் சரியானதாக இருக்கலாம்.ஆனால்/அதனால் அவர் மதிப்பீடுகள் உண்மையானதாகவோ, சரியானதாகவோ இருக்கும் என்று அர்த்தமில்லை. அதைப்பற்றி மற்றவர்கள் கருத்து கொண்டிருக்கக்கூடாது என்றும் கூறமுடியாது.

அவரை ‘மலையாளி ‘ என்று விமர்சிப்பது தவறானது என்பதில் மாற்றுக்கருத்துக்களிருக்கமுடியாது. உலக மக்கள் அனைவரும் சமம் என்று நினைப்பவன் நான். இதில் ஒரே நாட்டுக்குள்ளிருந்து பக்கத்து மாநிலக் காரரை அவ்வாறு பிரித்துப் பேசுவதில் எனக்கு எவ்விதத்திலும் உடன்பாடில்லை. அது தவறானது. இப்படிப்பட்ட விமர்சனங்கள் ஏன் வருகின்றன என்று யோசித்துப்பார்த்தேன். இந்த எதிர்மறைகள் எல்லாம் கலைஞர் தமிழகத்தில் ஒரு பெரிய தலைவர் என்பதால் மட்டும் வந்தது என்றும் சொல்லிவிடமுடியாது. அது முக்கியகாரணி அவ்வளவே. ஒரு பெரிய தலைவரை, அவர் எழுத்துக்களைப்பற்றிய திறனாய்வு எதுவும் செய்யாமலேயே, வெகுசாதாரணமாக இலக்கியவாதியா என்று கேட்டதாலேயே வந்தது. இது அமெரிக்காவில் வாழ்வதால் பில் கிளிண்டன் அவர்களைப்பார்த்து ‘நீ ஒரு அமெரிக்கனா ? ‘ என்று கேட்பது போன்றது!! அப்படி கேட்பவர் ஒரு தமிழன் கூட இல்லை என்று ஒதுக்குவதற்காக சொல்லப்பட்டதாக இருக்கும் என்று யூகிக்கிறேன். ஆது தவறான விமர்சனம் என்பதில் எனக்கு ஐயமில்லை. அதே சமயம் ‘என்னை ‘மலையாளி ‘ என்று சொல்பவர்களுக்கு என்னைவிட அதிகம் தமிழ் தெரிந்திருக்கவேண்டும் ‘ என்ற அவரின் வாதம் சிறுபிள்ளைத்தனமானது. அவருக்கு எவ்வளவு தமிழ் தெரியும் என்று யாருக்குத்தெரியும். எனின் யாருமே அவரை விமர்சிக்ககூடாதென்றாகிறது. ஒருவரின் எழுத்தை விமர்சிக்கும் போது அவருக்கு எவ்வளவு தெரியும், நமக்கு எவ்வளவு தெரியும் என்று தராசில் வைத்துப்பார்த்துவிட்டு விமர்சிக்க முடியாது. நியாயமான, அவதூறில்லாத விமர்சனக்களை யார் வேண்டுமானாலும் வைக்கலாம். இவர் வாதப்படி ‘என்னைவிட அதிகம் இலக்கியம் தெரிந்தவர்கள்தான் என்னை இலக்கியவாதியா எனக் கேட்கத் தகுதியானவர்கள் ‘ என்று கலைஞர் சொன்னால் இவர் என்ன செய்வார் ?

யார் இலக்கியவாதி என்று யார் முடிவுசெய்வது ? முதலில் எது இலக்கியம் எது இலக்கியமில்லை என்று யார் முடிவுசெய்வது ? இலக்கியம் என்பதற்கான வரையீடு என்ன ? சிலர் இலக்கியமென்பதை மற்றவர் ஒத்துக்கொள்வதில்லை. மற்றவர் இலக்கியமென்பதை இவர்கள் ஒத்துக்கொள்வதில்லை! சினிமாப்பாடல்கள் இலக்கியமில்லை என்கிறார்கள். வசனங்கள் இலக்கியமில்லை என்கிறார்கள். கதைகள், சிறுநாவல்கள், புதுக்கவிதைகள் இலக்கியமில்லை என்கிறார்கள். எதுதான் இலக்கியம் ? சமீபத்திய சினிமாப்பாடல்களை வேண்டுமானல் ஒதுக்கிவிடுவோம், வாதத்திற்காக. ‘ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமேயில்லை ‘ என்கிறார் மருதகாசி. என்னைப்போன்ற சாதாரணர்களுக்கு அதுவே இலக்கியமாகத்தான் தெரிகிறது. நல்ல கருத்து, எளிமையான நடை. இதை இலக்கியமென்று ஒத்துக்கொள்ள யாருக்கு என்ன தடை ? எனக்கு புரியவில்லை. இலக்கியங்கள் சமுதாயத்தில் மறுதல்களை ஏற்படுத்தவேண்டும் என்று நான் நினைக்கிறேன். அந்தவிதத்தில் கலைஞரின் பராசக்தி பட வசனமும் இலக்கியமே. புதுக்கவிதைகளும் இலக்கியமே. இதுதான் இலக்கியம் இது இல்லை;இவர்தான் இலக்கியவாதி இவரில்லை என்று சொல்பவர்கள் அனைவரும் கர்வம் பிடித்த, தலைகனம் பிடித்த, புகழுக்கு ஏங்கும் மூடர்கள் என்பது தான் உண்மை. எல்லோருமே இலக்கியவாதிகள் என்று ஆகிவிட்டால், தான் ஒரு இலக்கியவாதி, எழுத்தாளன் என்று தனியாக நின்று புகழடைய முடியாமல் போய்விடும் என்பதாலும் மற்றவர்களைவிட தான்புத்திசாலி என்று கூற முடியாமல் போய்விடும் என்பதாலேயே அவ்வாறு கூறித்திரிகிறார்கள். என்னைப் பொறுத்தவரை ஒரு மொழி தெரிந்தாலே அவன் அதில் இலக்கியவாதிதான்! எழுத வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை! ஏனெனில் எழுதத்தெரியாத கிராமத்து மக்கள் கூட நயமானப் பாடல்களைப் பாடுகிறார்கள். பிரபலங்களின் கடிதங்கள் புத்தகங்களாக வருகின்றன. சாதாரணர்களின் கடிதங்களுக்கும் அதே மதிப்பையே நான் தருவேன். மற்றவர்களின் படைப்போடு தன்னுடையதை ஒப்பிடுவது, மற்றவர்களை இலக்கியவாதியா என்று நக்கல் செய்வது போன்றவைகளும் ஒருவித சிறுபிள்ளைத்தனமான மூடநம்பிக்கைகளே!. (இங்கு நான் படைப்பு ஒப்பீடு என்று கூறுவது, சும்மா வாதத்திற்காக ஒப்பிட்டுக்கொள்வதையே. முறையான ஒப்பீடுகளையில்லை.). இவையெல்லாம் தேவையில்லாத ஒன்று.

கலைஞரைப்பற்றிய அவருடைய விமர்சனம் தேவையில்லாத்தது. அதற்கான எந்த அவசியமும் இல்லை. முதல்நாள் கூட்டத்தில் இலக்கியவாதிகள் அவரைப் புகழ்ந்தார்கள் என்றால் இவருக்கு என்ன வந்தது ? மற்றவர்களின் புகழைக்கண்டு முகம் சுளிப்பவர்களை என்ன சொல்வது ? யாரோ யாரையோ தமிழ் இலக்கியத்துக்கே தலைவர் என்று புகழ்வதால் அவர் தலைவராகிவிடுவாரா ? ஒரு இலக்கியவாதி அவர் காலில் விழுந்தால் மற்ற இலக்கியவாதிகள் அனைவருமே அவர் காலில் விழுந்துவிட்டதாக ஏன் நினைக்கவேண்டும் ? யாரோ யார் காலிலோ விழுவதாலோ, புகழ்வதாலோ இவர் என்ன குறைந்துவிட்டார் ? அவர் தன்மானத்திற்கு தாங்கவில்லை அதானால் மறுநாள் அப்படிக் கேட்டார் என்று சப்பைக்கட்டுக் கட்டுபவர்களைக் கண்டு சிரிப்புத்தான் வருகிறது. முதலில் இலக்கியவாதிகளும் அரசியல்வாதிகளும் தன்மானம் என்று பேசுவதே வேடிக்கையானது. தன்மானம் என்று ஒன்றுமில்லை. தன்மானம் என்பது கர்வம் பிடித்தவர்கள், தங்கள் பிடிவாத குணத்தை மறைக்கப் போடும் வேசம். அவ்வளவே. ஒருவன் 10 நாட்கள் பட்டினி கிடந்தால், 11வது நாள் யார் கொடுத்தாலும் வாங்கி சாப்பிடுவான் என்பதே நிதர்சனம். இல்லை அப்படி சாப்பிடமாட்டேன், செத்துவிடுவேன் என்று சொல்வதுதான் தன்மானமென்றால் அப்படி ஒரு தன்மானம் தேவையா என்ற அடிப்படைக் கேள்வி எழுகிறது. இது தன்மானமா, பிடிவாதமா ?

‘என் தலைமுறையில் என்னைப்போன்ற தமிழ் இலக்கிய அறிமுகமுள்ளவர்கள் குறைவு. என்னைப்போன்ற விமர்சன அங்கீகாரம் பெற்றவர்கள் யாருமில்லை ‘ என்றதுப்போன்ற ஜெயமோகனின் வாக்கியங்களில் காணப்படும் தற்பெருமை, கர்வம் அவர் பேச்சிலும் வெளிப்படக்கூடும். கர்வமுள்ளவர்கள் அவதூறுகளைச் சந்திப்பதும் இயல்பானதே. அதை அவர் புரிந்து கொள்ளவேண்டும். எழுதுபவர்களைப் பார்த்து இலக்கியவாதிகளில்லை என்பது. அவர்தான் இதை எழுதியிருக்கிறாரே என்றால் அது நவீன எழுத்து இல்லை எனவே ‘நவீன ‘ இலக்கியவாதியில்லை என்பது. அப்படி எழுதுபவர்களை பின் நவீனத்துவமில்லை, முன்நவீனத்துவமில்லை, நடு நவீனத்துவமில்லை என்று எதையாவது சொல்லிக்கொண்டேயிருப்பது இவையெல்லாம் தேவையில்லாத ஒன்று. அவரவருக்குத் தோன்றியதை, அவரவருக்குப் பிடித்த நடையில் எழுதிக்கொண்டே செல்லுங்கள். மற்றதை தமிழிடமும் காலத்திடமும் விட்டுவிடுங்கள். தரமான படைப்புக்கள் நிற்கும். தரமற்றது மறைந்துபோகும்.

வாழ்க தமிழ்.

பித்தன்.

(நீக்கங்கள் உண்டு – திண்ணை குழு)


அன்பினிய இணைய நண்பர்களுக்கு,வணக்கம்.

தமிழ்க் கவிதை நண்பர்களுக்கோர் நற்செய்தி :

‘உலக அளவில் வாழும் தமிழ்க்கவிஞர்கள் ‘ பற்றிய, மற்றும் ‘உலகஅளவில் தற்போது எழுதப் பட்டுவரும்

தமிழ்க்கவிதை ‘ பற்றிய பெரிய இரு நூல்களைத் தொகுக்கும் மிகப்பெரிய பணியில் ஈடுபட்டிருக்கும்

-நெல்லை சாகித்ய அகாதெமிக் கருத்தரங்கத்தில் நான்சந்தித்த- திரு.சம்பத் அவர்கள் தரும்செய்தி:

ஏற்கெனவே ‘தினமணி – சங்கமம் ‘ பகுதியில் பார்த்திருக்கலாம். அதற்கான தேதி 31.03.2004 வரை

நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது கவனிக்கத் தக்கது.

———(அப்படியே அவர்களின் கடிதத்தினை இங்கே தருகிறேன்)————

புதுவை மொழியியல் பண்பாட்டு ராய்ச்சி நிறுவனம்

புதுவை அரசு நிறுவனம்.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக இணைப்புப் பெற்றது.

112, காமாட்சிஅம்மன் கோவில் தெரு, புதுச்சேரி – 605 001

அன்புடையீர்,

வணக்கம். புதுவை மொழியியல் பண்பாட்டு ராய்ச்சி நிறுவனம், புதுவை அரசின் சார்பில் ‘இந்தியத்

தமிழ்க் கவிஞர்கள் மாநாடு ‘ ஒன்றினை நடத்திடத் திட்டமிட்டுள்ளது.இம்மாநாட்டினை ஒட்டி, ‘வாழும்

கவிஞர்களின் உலகத்தமிழ்க் கவிதை ‘, ‘வாழும் உலகத்தமிழ்க் கவிஞர்கள் கையேடு ‘ எனும் நூல்களை

வெளியிடவிருக்கிறது. இம்மாபெரும் முயற்சியில் புதுவை மொழியியல் பண்பாட்டு ராய்ச்சி நிறுவனம்

முனைப்புடன் ஈடுபட்டுள்ளதைத் தாங்கள் அறிவீர்கள். வாழும் முதன்மைத் தமிழ்க் கவிஞர்களுள், தாங்களும் ஒருவர்

என நிறுவனம் கருதுகிறது.

மேற்குறிப்பிட்ட தொகுப்புகளில் தங்கள் கவிதைகளும், வாழ்க்கைக் குறிப்பும் அவசியம் இடம்பெற வேண்டும்

என்று நிறுவனம் பெரிதும் விரும்புகிறது.

எனவே தங்கள் கவிதைகளில் தாங்கள் விரும்பிய ஐந்தைத் தட்டச்சில் பத்துப் பக்கங்களுக்கு மிகாமல்

இருக்குமாறு அமைத்து அவற்றோடு தங்கள் வாழ்க்கைக் குறிப்பையும் (பெயர், பிறந்தநாள், இடம், பெற்றோர்,

குடும்ப விவரம், கல்வித் தகுதி, வெளியிட்ட கவிதை நூல்கள், சிறப்புத் தகவல்கள்) சிறு நிழற்படம்

ஒன்றையும் மார்ச்சுத் திங்கள் 31ம் தேதிக்குள் (31.03.2004)

‘இயக்குநர்,

புதுவை மொழியியல் பண்பாட்டு ராய்ச்சி நிறுவனம்,

112, காமாட்சிஅம்மன் கோவில் தெரு, புதுச்சேரி – 605 001

எனும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

தங்கள் ஒத்துழைப்பினைப் பெரிதும் நாடும்,

தங்கள் அன்பான,

(ஒப்பம்)

முனைவர் ப.மருதநாயகம்,

இயக்குநர்

இரா.சம்பத்,

இலக்கியப் புலம்,

ஒருங்கிணைப்பாளர்,

தொலை பேசி:

0413 – 2337117,

0413 – 2332317.

e-mail:

—————anbudan, Na.Muthu Nilavan—————–

=====

Nandri,vaNakkam.

Naa.Muthu Nilavan,

Pudukkottai-Tamil Naadu.


ஆசிரியருக்கு,

வெங்கட் ரமணன் கட்டுரை திண்ணையில் கடந்த வாரம் வெளியாகியுள்ளது.ஆனந்த விகடனில் சுஜாதா

கற்றதும் பெற்றதும் பகுதியில் ழ கணினி திட்டம் குறித்து எழுதியுள்ளார். அதைப் படிப்பவர்கள்

சுஜாதா மற்றும் அவரும் குழுவினர் மட்டுமே இதில் அனைத்தையும் செய்துள்ளதாகவே புரிந்து கொள்வர்.

இதற்கு தமிழ் இணையப்பல்கலைகழகம் நிதி உதவி செய்துள்ளது. எனவே ஒரு குற்றசாட்டு எழுந்துள்ள

நிலையில் இது எந்த அளவு உண்மை என்பதை அறிய ஒரு நிபுணர் குழு அமைக்குமாறு நிதி உதவி செய்த அமைப்புகளை,குறிப்பாக தமிழ் இணையப்பல்கலைகழகத்தை கோரலாம்.இதை சுஜாதா என்ற தனிப்பட்ட நபர் குறித்த ஒரு பிரச்சினையாகப் பார்ப்பதை விட மென்பொருள் உருவாக்கம் குறித்த தார்மீக்,அற,அறிவு சார்சொத்துரிமை பிரச்சினையாகக் காணவேண்டும்.இந்தியாவில் பரவலாகத் தெரிந்த, மஞ்சளின் மருத்துவ குணங்களை அடிப்படையாக கொண்ட சில செய்நுட்பங்களுக்கு இந்திய வம்சாவழியைச் சேர்ந்த இருவர் அமெரிக்காவில் உரிமம் பெற்றனர்.வழக்குத் தொடர்ந்து இதில் புதுமையில்லை என்பதை நீரூபித்தது Council For Scientific & Industrial Research (CSIR).இதற்கான பல ஆதாரங்களை (இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் 1950 களில் வெளியான கட்டுரை,ஆயுர்வேத நூல்கள் போன்றவை) காட்டி அந்த உரிமத்தை ரத்து செய்யக் கோரி, அதில் வெற்றி பெற்றது.எனவே ,வெறும் கூக்குரலால் பயனில்லை.தமிழ் லினக்ஸ் திட்டங்களில் பங்களிப்பு செய்தோர் தாங்கள் இந்த பிரச்சினையில் என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்யும் தருணம் வந்துவிட்டது.CSIR செய்தது போல் ஆதாரங்களை திரட்டி வாதிட்டு தங்கள் தரப்பு நியாயத்தை நிலைநாட்ட முயற்சி எடுக்கப்போகிறார்களா அல்லது இணையத்தில் சில இதழ்களிலும்,விவாதக்குழுக்களில் மட்டும் இதைப் பேசுவதுடன் நின்றுவிடப் போகிறார்களா ?

K.ரவி ஸ்ரீநிவாஸ்

ravisrinivas@rediffmail.com


ஆசிரியருக்கு,

சில வாரங்களுக்கு முன் யமுனா ராஜேந்திரன் எழுதிய கட்டுரைக்கு பதில் எழுதும் போது ரஜனி தேசாயும்,

சிலரும் சேர்ந்து எழுதிய ஒரு வெளியீட்டைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன்.கைவசம் அது இல்லாததால்

விரிவாக அதைப் பற்றி எழுத முடியவில்லை. Aspects of India ‘s Economy ன் சமீபத்திய இதழில்

பின் நவீனத்துவ அரசியல் பார்வை குறித்த ஒரு விமர்சனம் உள்ளது.இது மும்பையில் நடைபெறும் WSF பற்றிய விமர்சனத்தின் ஒரு பகுதி.தன்னார்வ அமைப்புகள், வெகுஜன மக்கள் இயக்கங்கள் குறித்தும் இதில் பேசப்பட்டுள்ளது.இணையத்தில் இதை கீழ்க்கண்ட முகவரியில் காணமுடியும்.

http://www.rupe-india.org/35/contents.html

K.ரவி ஸ்ரீநிவாஸ்

ravisrinivas@rediffmail.com


Dear Editor,

Had Mr. M. Vedasakaya Kumar responded to my article honestly without distorting my views or attributing to me views which I had not expressed, I would have responded to him as one would do in any exchange of views. But he has indulged in cheap and dirty tricks in his rejoinder(1) and hence I am not keen on wasting my time and energy in sending a detailed rejoinder to his piece. In my article, a part of which is a rejoinder to the article by Mr. Rajapandian(2) I had clearly expressed my views on the article by Mr. Jayamohan, and, my opinion about the points raised by Mr. Rajapandian, and, had cited at length from an article, to show, how a scholar in social sciences, would approach the issues relating to matrilineal societies, and, had raised some questions. In other words, that was just a rejoinder,(3) not an essay on issues related to matrilineal societies. Nor have I claimed that I had researched on matrilineal societies and hence I am putting forth my views on the basis of my research. When all this is amply clear and self evident in the article, he has no business to distort my views. He can put forth his pet theories or praise Mr. Jayamohan but he should have done that without indulging in cheap tricks, which no self respecting person would indulge in when engaged in polemics. I request him not to use my writings, as an excuse for such purposes in future. I do not need any certificate or endorsement from him. Those who do shoddy work and pass that off as a scholarly work or put forth fanciful but flawed views which are no more than weak hypotheses but pretend or claim that they have developed a grand theory, and, charlatans, may need his help or endorsement or support. And it makes perfect sense when he supports them or endorses such views.

Regards

K.Ravi Srinivas

(1) http://www.thinnai.com/pl0115042.html

(2) http://www.thinnai.com/pl1225035.html

(3) http://www.thinnai.com/pl0108041.html


Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்