கடவுளின் காலடிச் சத்தம் – 6 கவிதை சந்நிதி

This entry is part [part not set] of 23 in the series 20081204_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


1
மரமில்லாமல்
வெள்ளைத் தேன்கூடு
வீதிவிளக்கு
2
பகலுமில்லை இரவுமில்லை
பருவமும் இல்லை
பட்டணம்
3
நீண்ட குளிரான ரஸ்தா
தளர்ந்து நடையிடும் மாடுகள்
ஒளிரும் பீடிக்கங்கு
4
பௌர்ணமி இரவில்
புகைக்காதே
பாலில் வேணாம் விஷம்
5
அந்தி வந்தது
சிறகதிரக் கரையேறும்
கறுப்பு நாரைகள்
6
மேலேறும் பறவை
எறிந்தது கீழே
குரலை
7
டெலஸ்கோப் பார்த்தபடி
நடந்து வந்ததில்
காலில் ஆ முள்
8
கான்கிரீட் காடு
இரும்புக் கூடு
கிளிகள்
9
மூட்டுவலிப் பேச்சாளர்
வாழ்வே சுகம்
தலையாட்டும் வயோதிகர்
10
பறந்து கொண்டிருந்தது பறவை
காணாமல் போனதும்
திரும்பினேன் பூமிக்கு
11
கச்சேரியில் கூட்டமில்லை
எடுத்து விட்டார்
அமிர்தவர்ஷிணி
12
தூரம் வரை பனிமூட்டம்
அதோ பறவை
அதோ இன்னொன்று
13
ஊர் எல்லை தாண்டியும்
கூட வந்தது
நிலவு
14
எந்தப் பறவை கூவியது
கானகத்துள்
எட்டிப் பார்க்கும் நிலவு
15
சுட்டெரிக்கும் வெயில்
காய்ந்த சிறுகிளை
சுள்ளியாய் உதிரும் கீழே
16
கிழிந்த உடைதான்
சட்டையில் ரோஜா
கொள்ளை அழகு
17
அமைதியாய் மழை
என்ன சத்தம்
குடையடியில்
18
பேய் குடியிருக்கும் மரம்
படுத்திருக்கிறான் பயமின்றி
பைத்தியக்காரன்
19
அதிகாலை நடைப்பயிற்சி
வழியில் ஊர்வலமாய்
நத்தைகள்
20
பிறக்கும் புத்தாண்டு
பார்க்கிறான் தூரம் வரை
விலகும் பனிமூட்டம்
21
பூச்செறிந்த மரவெளி
தவழும் பனியில் பயணம்
எதிரே வரும் கடவுள்
22
ஒவ்வொரு நாளும்
பூமியில் இருந்தே
புறப்படுகிறது சூரியன்
23
மூடிய வீட்டுக்குள்
படார் படார்
கொசுத் தொல்லை
24
பறவைகள் இல்லை
மரங்களும் இல்லை
நகரத்துக்கில்லை வசந்தம்
25
காடு
காடழித்து வயல்
வயலழித்து வீடு
26
மீதமிருக்கிறது வாழ
உடலே
உதவி செய்
27
பூவு… பூவேய்
விற்று வருகிறான்
குரலில் ஏன் கடூரம்
28
சிறகசையாமல்
வானில் நீந்தும் வானம்பாடி
தனிமை அறியாதது
29
கையொடிந்த பொம்மை
பார்த்து அழுகிறாள்
மலடி
30
நீளமான வெள்ளை வானம்
கண்ணில் தெரிவது
ஒற்றைக் காகம்
31
காலில் செய்தியுடன்
புறா வரக் காத்திருக்கும்
ராஜாளி
32
ஆட்டுமந்தை ஒதுக்கி
நீர் குடிக்கக் குனிந்தான்
மந்தையாய் மீன்கள்
33
பனியாய் உருகி
கரையும் நிலவு
புல்வெளி அறியும் ரகசியம்
34
போர்க்காலப் புல்வெளி
படுத்துக் கிடக்கிறான்
உயிரில்லாமல்
35
பொருள்தேடும் பயத்தில்
பூட்டி வைத்தேன் பீரோவில்
காணவில்லை சாவி
36
மும்முரமாய்
விட்டுப்பாடம்
தெரு விளக்கடியில்
37
வசந்தம் எப்போது
காலண்டர் பார்ப்பதில்லை
மரங்கள்
38
கானகத்தில்
டார்ச்வெளிச்சம் வழிகாட்ட
துள்ளியோடும் மான்கூட்டம்
39
நிசப்தமான இரவு
உற்றுக்கேள்
கடவுளின் காலடிச் சத்தம்
40
பூவுக்கில்லை ரகசியம்
நீ¢ர் அறியாது நிறம்
மனிதனுக்கே எல்லாமும்


storysankar@gmail.com

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்