கடவுளின் காலடிச் சத்தம் – 5 கவிதை சந்நிதி

This entry is part [part not set] of 28 in the series 20081127_Issue

எஸ். ஷங்கரநாராயணன்



1
உதிரும் இலையொன்று
இழுத்துச் செல்லும் நதி
தாவியேறும் எறும்பு
2
மனிதன் கையில்
குடையைப் பார்த்து
முகம் கருக்கும் மேகம்
3
ராணுவ முற்றுகை
பயமற்று வயற்காட்டு
காவல் பொம்மைகள்
4
சலசலத்த நீரோடை
வெறும் கற்பாறை
வந்தது கோடை
5
பாட்டி ரெண்டுக்கும்
பல்லே இல்லை
ஆடுகிறார் பல்லாங்குழி
6
யானைக்கா கோவணம்
பாறைகள் நடுவே
அருவி
7
வற்றிய குளத்தை
எட்டிப் பார்த்து
ஏமாந்தது நிலவு
8
பூசணிப்பூவின் வருத்தம்
கோலத்தின் நடுவே
சாணியுடன் வைக்கிறார்கள்
9
சாதுவான ஓடை
சீறிப்பாயும் வெள்ளம்
வந்தது புதுமழை
10
என் வீடு வந்துவிட்டது
நீயும் வீட்டுக்குப் போ
நிலவே
11
இரவின் அமைதி
தூங்க முடியாத கிழவரின்
செருமல்
12
பசிய வயல்கள் இருபுறமும்
டிரைவர்
மெதுவாகப் போ
13
காதலி வீட்டுக்கு
வழி சொல்லும்
பன்னீர் மரம் ஒன்று
14
புழுதி கிளம்ப
வந்து நிற்கும் பஸ்
எழுந்தோடி வரும் நாய்
15
பாறையடி
வழவழக்கும் பாம்பு
குறுகுறுக்கிறது பாறைக்கு
16
கோடையின் தனிமை
புழுக்கமான இரவு
கூடவே நிலா
17
பாழடைந்த கோவில்
யாரும் வருவதில்லை
கடவுளும் வெளியேறி விட்டார்
18
நதியில் விழுந்த நிலவே
மேலேறி வா
ஆல் நீட்டும் விழுதை
19
குலுங்கும் வளையல்
மூச்சு சப்தம்
துணி துவைக்கிறாள்
20
மாப்பிள்ளைக்கு
தலை தீபாவளி
மாமனார் தலை மொட்டை
21
பொம்மை வாங்கித்தா அம்மா
அது துட்டுச் செலவு
பெத்துத் தருகிறேன்
22
பௌர்ணமி நிலவு
படுசுத்தம் என்றாலும்
குளிக்க வந்தது குளத்துக்கு
23
ஏரிக்கரை மணல்
காணவில்லை கொக்குத் தடம்
கோடைகாலம்
24
ஏசுவைச் சிலுவையில்
அறைந்தவன் அலறினான்
கையில் சுத்தியல் பட்டு
25
நரசிம்மவதம்
கதைகேட்கும் பேரன்
பாதி தூக்கம் பாதி விழிப்பு
26
சர்க்கஸ் நொடித்த வறுமை
கோமாளி வீட்டில்
சிலந்தி வலை
27
கடுமையான குளிரில்
சட்டையை ஏன் கழற்றுகிறான்
ஓ கிழிசல் தைக்கிறான்
28
கண்ணீர் நின்றுவிட்டது
வேடிக்கை பார்க்கிறது குழந்தை
வெளியே மழை
29
பூட்டிய வீட்டில் தொலைபேசி
பதறியெழும்
உத்திரத்துக் குருவி
30
அழகழகான
வண்ண வண்ணப் பூக்கள்
ஜோரான சவப்பெட்டி
31
எல்லாரும் அழ
அழகாய்ச் சிரிக்கிறாள்
மாலை போட்ட படத்தில்
32
எழுப்பி விட்டது யார்
திரியில் உறங்கும்
வெளிச்சம்
33
மாடுபூட்டி வண்டியேறி
தூங்கிப்போனான்
மாடுகளும்
34
அமைதியான இரவு
தூரத்தில் ஆறு
கால்களில் குளிர்
35
நீண்ட அங்கிப் பாதிரி
கையுயர்ந்த ஆசி
கோவணச் சிறுவன்
36
மன்னியுங்கள் மலர்களே
இன்று வரவில்லை
தாடை சொறியும் கிழவன்
37
பருத்தி வெடித்து
மறைக்கிறது
காவல் பொம்மையின் கிழிசலை
38
நதியின் அமைதி
மிதக்கும் நிலவு
மேலே விழும் கொன்றைப்பூ
39
நல்லிரவு
தாமரை இலை இடையே
உறங்கும் ஆமைகள்
40
புல்லில் விழும்
பனித்துளி
உறக்கம் கலையும் எறும்பு


storysankar@gmail.com

Series Navigation