கடல் பற்றிய நான்கு கவிதைகள்

This entry is part [part not set] of 27 in the series 20021001_Issue

பிரம்மராஜன்


1)
கடலும் முன்று தளங்களும்

உறைந்த எஃகாய் மேலே வானம் கவிய
உருகிய தாமிரமாய்க் கிடக்கிறது பூமி
இரண்டையும் கோர்த்துக் கொண்டு
இதென்ன மரகதப் பச்சை வயல் போலவென
பிரமித்து நிற்கிறேன்
முகம் கொடுத்து மனம் கொடுத்து முலை கொடுக்கும்
கடல்தானென்று சொல்கிறாய்
சுய ஸஞ்சாரியாய் வந்து சேர்ந்த நீ
ஆகாச மண்டலத்தில் விறைத்து நீண்ட
சுழல் வட்டக் கோபுரத்தின்
மூன்றாம் தளத்தில் என்னோடு நீயிருந்தாய்
ஆயிரம் இதழ்களால் ஒரு முத்தத்தை
மீட்டெடுக்க முன்னிக் கொண்டிருந்த
அலைகள்
பால் வண்ணம்
வெள்ளி நுரைக் கோலம்
கொண்டாட
சீதளக் கடலின் தாவர மணத்தை மிச்சமின்றி
உறிஞ்சிக் கொண்டிருந்தது எனது உடல் தவிர
உனதும்
கலங்களைத் கரை தட்டச் செய்த குமரியின்
குளிர் முகம் காண்பெற்றதும்
உன்னால்தான் ஆயிற்று
குமரி நீ கடல் நீ வெதுவெதுக்கும் வெப்பம் நீ
யென்பதை நான் புரிய
சூர்யாஸ்தமனச் சிலிர்க் காற்றுக்களினூடாய்
வருகின்றன உன் பாசி விரல்கள்
என் உள்ளங்கைக்குள்


2)

மலை மீதிருந்து தெரியும் கடல்

பாறைப் பாசிகளின் அழுகிச் சிதையும் கன்றுக் காதல்
போலன்றி இங்கேயிருந்தேன் இத்தனைக் காலமாய்
பொத்தலிடும் மழைத்துளிகளுக்கஞ்சாமல்
வாசனைத் தைலங்களின் முகர்வுக்கப்பால்
சாம்பல வானத்தின் விதானத்தினடியில்
உன்னுடலாகும் கடல் நுரை
தோணிகள்
கட்டுமரங்கள்
லாஞ்சிகள்
திரையிடும் அலைத் திவிலைகள்
நூற்றெட்டு இடிகளுக் கொத்ததாகின்றன
உன் குமுறல் குரல்கள்
என் ஒரு தசாப்தத் தலை மறைவுகளை வினவுகிறாய்
என் செல்லச் சிறு பிராணியே யென்கிறேன்
சிறு மிலாற்றுக் குற்றலைகள்
என் தேகத்தை விளாசுகின்றன
பதில்கள் என்றும் சமாதானங்களாவதில்லை
உன் விடாய்களைத் தீர்க்க
வேருடன் தோப்புகளைச் சுழற்றி
உள்ளிழுத்துக் கொள்கிறாய்
மண்ணாசை மிஞ்சுகையில் உன் நாக்கில் நெருப்புச்
சொட்டுகிறது
விகாரினி
அகாலத்தில் உன் முலை மொட்டுக்களில்
கசிந்திருப்பது
சுரப்பின் பொய் மஞ்சள்
என்றென் உதடுகள்
குவிகின்றன


3)
கடலின் உபாசனை

சகரனின் புதல்வர்கள் வெட்டிய சாகரமாயினும்
கணுக்கால்களைக் கொஞ்சும் தாழ்வலைகளில்
யக்ஷனையொத்த ஒருவன்
வயலின் உடலை தன் கழுத்தில் ஏந்தி
அதன் கழுத்தை இடதில் பற்றி
வலது கையில் வில்லை அழுத்த
சுருதியும் சேர்ந்துவிட்டது
சுழன்றும் இடைவிட்டும்
கத்த ஆரம்பித்து விட்டன கடல் பறவைகள்
மதுவில் நுரைத் ஏரியாய்ப் பரவும் அலையோரம்
பார்வை நரம்புகள் புடைத்தெழ ஏதுவாய்
மலர்ந்து கிடக்கிறாள் துகில் பிரிந்த விராகினி
யாரோ எந்த சுருதியிலும் இணைகிறார்
உபாசனையும் நாதமும் அவரெவர்க்கு
அறியவிடுகிறதில்லை நீலமணிக் கடல்
லகுவாய் மிதக்கும் ஆளற்ற இருக்கைகள்
விரிந்த குடாக்கள் நீர் இணைகளை நிரவி
மஹா கடலாக்கி
நின்றவாறே மீட்டுகிறான்
இனம் புரியா துக்கம் நடபைரவி
உருகி வழிகிறது பறவைகளின் கீச்சொலி
கருவியின் விரற்கட்டைகளுக்கு
அப்பால் சஞ்சரிக்காத அவன் கண்கள்
சுருட்டி விடப்பட்ட காற்சட்டைகளை நனைத்து
அலைகள் உயரும் பட்சத்தில்
அனைத்தும் தலை கீழாகும் என்பதுணர்ந்தே
துயில் கொண்டிருக்கிறாள் அவள்


4)
ரகசியக் கடற்கரை

உன் துகில் நெகிழ் ஆசுவாசம் பார்க்க
வானாதி வானங்கள் முயன்று தோற்க
கரை விட்டகன்று
ஒரு சித்தமாய் உன்னிடம் மீனுக்காய்
யாசிக்கும் வெண்பருந்துக்கு
திரவ ரகசியக் கண்களின்
பாதாளங்களைத் திறக்கிறாய்
சுபத்திரமாய் உன் உதரத்தினுள்ளே
ஆல விருட்சம்
நான் காணட்டுமென்று
பாசி படிகளின் நிலவிரவில்
நீ அழைத்தணைத்த போது
பால் ஆழியாயிற்று
பூஞ்சைகள் மெத்தென விரிந்திருக்கும் படிகளில்
மூச்சிறைக்க
ஏறி இறங்கி
வெண்கலப் பாறைகளில் இடறி விடாமல்
பாதங்களைப் பதிந்து கொள்ளும் ஈர மணலில்
என் கால்கள் உன்னடிகளையொற்ற
உன் இளநீல சிற்றாடை பிடிபட
இதோ தளிர் சிவப்பாய் மாறி விடும்
ஆடைக்குள் நீ இல்லை
கரங்கள் மெய்யுணர
காரைத் தரையில்
தென்னம் பிஞ்சுகள் தொட்டில் கழன்று சிதறும்
அடங்கிய பின்னும்
குறையொளிப் பிரகாரத்தில்
மங்கலாய் ஒலிக்கப்படும் தம்பூரா
உன் தூரத்து அழைப்பாய்
இந்தக் கணம்
நாளைக்
கரையொன்றின்
மிச்சம்

****

bramoraj@hotmail.com

***

Series Navigation