கடற்பறவையின் தொழுகை

This entry is part [part not set] of 35 in the series 20090926_Issue

ஹெச்.ஜி.ரசூல்


ஒவ்வொரு சமாதியின்

தலைமாட்டிலும் காலடியிலும்

கொப்பும் துளிரும் விட்ட

மஞ்சனாத்திமரங்கள்

இறப்பின் தருணங்களிலிருந்து

உயிர்ப்பிக்க எத்தனிக்கும்

காலம் மறநத சொல் ஒன்றை

தேடிக் கொண்டிருக்க

இலைகளில் படர்ந்த

வெற்று மெளனம் கலையத் துவங்குகிறது.

வராத தேவதை ஒன்றிற்காக

யாருமற்ற மணல் வெளியில் நின்று

நிரம்பவும் யாசித்து

கலுங்குப்பள்ளியின்

மினரா உச்சியில்

ஒளிநிரப்பிக் கொண்டிருந்த சுடர்

அலைகளின் நிழலில்

நீக்கமறக் கலந்து

பொழுதெல்லாம் காத்திருக்கிறது

கடலில் மிகவும் நீளமான பாய்விரித்து

திசையற்ற தொழுகையை

முடிக்க இயலாமல் கடற்பறவை


mylanchirazool@yahoo.co.in

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்