கடம்

This entry is part [part not set] of 40 in the series 20110206_Issue

சின்னப்பயல்“செக்கா தருவீங்களா ? இல்ல கேஷா ?” அதிரடியாக ஆரம்பித்தார் அவர்.ஆனால் முகத்தில் அந்த பாவனை இல்லை.முன்னால் அமர்ந்திருந்த பெரியவரின் முகம் உணர்ச்சியற்று இருந்தது.” இல்ல நான் என்ன சொல்ல வர்றேன்னா ?’ ” நீங்க ஒண்ணும் சொல்ல வேணாம் சார்,ஏதோ பெரியவங்க பாத்து கூட்டிட்டு வந்திருக்கீங்க..அதனால தான் கொஞ்சம் மரியாதையோட பேசிட்டு இருக்கேன் இல்லன்னா..?”

அதிக கூட்டமில்லை ரெஸ்டாரண்டில், மிதமான ஏ.சி.காற்றை வீசிக்கொண்டிருந்தது.மங்கிய ஒளியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆட்கள் அமர்ந்திருந்தனர்.இவர் தன் மனைவியுடன் அமர்ந்திருந்தார்.எதிரே பெரியவரும் அவர் அருகில் அந்தப்பையனும்,பெண்ணும் உட்கார்ந்திருந்தனர்.சற்றுத்தள்ளி இன்னொரு மேசையில் நடுத்தர வயது மதிக்கத்தக்க இருவர் அமர்ந்திருந்தனர்.

“இந்தப்பயலுக்கு நான் எவ்ளவ் செஞ்சிருப்பேன்னு தெரியுமா உங்களுக்கு?” அவரேதான் தொடர்ந்தார்.”இவரோட அக்காவ கட்டி வெச்ச நாள்லருந்து இவர் எங்க கூட வந்திட்டார் சார், அப்போ சரியாப் பேசக்கூடத் தெரியாது இவருக்கு. (பேச்சில் தெலுங்கு வாடை அடித்தது.) இவ அம்மாவும் கஷ்ட ஜீவனம் தான் சார்.அப்பா இறந்தபோனவுடனே தையல் மெஷின வெச்சிகிட்டு நாலு பேருக்கு துணிமணி தச்சிக் கொடுத்தி (அப்படித்தான் சொன்னார் ) ஏதோ அவங்களால முடிஞ்ச அளவு நகையும் பணமும் சேத்தி எனக்கு கல்யாணம் பண்ணி வெச்சாங்க, சென்னையில இருக்காருன்னு சொல்லி பையன எங்ககூட அனுப்பி வெச்சாங்க சார் இவங்க அம்மா”.இவர படிக்க வெச்சி,வளத்தி ஆளாக்கி விட்டிருக்கோம் சார் இன்னிக்கு., கொஞ்சமாவது நன்றி “விஸ்வாஸம்” இல்ல சார் இவங்ககிட்ட. ” நீங்க சொல்றது சரிதான்” என்று இழுத்தார் பெரியவர். “கொஞ்சம் பொறுங்க சார், நான் பேசி முடிச்சிடறேன்” என்று அவர் வாயை அடைத்தார்.” ஸ்கூல் ஃபீஸ், பஸ்ஸுக்கு காசு,அப்புறம் சாப்பாடு எல்லாம் நாங்க தானே சார் குடுத்தோம்.”

எனக்கு எவ்ளவ் வருமானம் வருதுன்னு தெரியுமா? கார்பெண்டர் கான்றாக்ட் எடுத்து ஏதோ நாலு பில்டிங் கெடச்சாதான் உண்டு,நான் என்னா வேல பண்றேன்,எப்டி காசு வருது, எவ்ளவ் கஷ்டம் இருக்கு காசு வர்றதுல, இதெல்லாம் தெரியாம வளத்தோம் சார்.ஏதோ நான் கொண்டு வர்றத வெச்சி என் மனைவி ஆக்கி போடுவாங்க சார்”.பெரியவர் அவரையும், அவர் மனைவியையும் மாறிமாறிப் பார்த்தார்.” நீங்க என்னா முறை வேணும் சார் பொண்ணுக்கு?” சித்தப்பா முறை. ம்….உங்க வீட்டிலயும் இது போல நடந்தா விட்டிருவீங்களா சார்? என் புள்ளயப்போல வளத்தேன்.காலேஜுக்கு ஃபீஸ் கட்டணும்,புத்தகம் வாங்கணும்னு கடைசி நாள் சொல்வார் இவர்” உட்கார்ந்திருந்த பையனைக்காட்டி சொன்னார்.எங்கயோ போய் எப்டியோ கடம் வாங்கி கொண்டு வந்து முழுசா கொடுப்பேன் சார் இவர்கிட்ட.அதெல்லாம் எங்கருந்து வருதுன்னு தெரியாது சார் இவருக்கு.” இப்ப நான் கேக்கறது கடம்” தான் சார் ( கடனைத்தான் அப்படி சொன்னார்), என்னவோ இவர் இப்போ கொஞ்சம் நல்லா சம்பாதிக்கிறார் ( அந்த ‘ம்’மையும் ‘ப்’பையும் அழுத்தி சொன்னார்), அதனாலே காசு பணம் சேர்ந்திடுச்சின்னு வந்து டிமாண்ட் பண்ணலே, உதவிதான்.அதுவும் கடம்’ தான் சார் கேக்றேன்..இத வாங்கி நாங்க என்ன ஊர் சுத்தவா போறோம்? ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் கூரை மேலருந்து ஒழுகுது, இப்போ மழை கொஞ்சம் அதிகமாவே தான் பெய்யுது..ஏதோ அந்த ஷீட்ட மாத்தி புதுசு போடுவேன்..ரெண்டுபேர் படுத்தா ஒருத்தர் நிக்கற மாதிரிதான் இருக்கு வீடு.வசதியாதான் இருந்தோம்..இப்போ நிலம சரியில்ல.” கடம்” வாங்கித்தருவீங்களா சார்?”

பெரியவர் முஸ்தீபுடன் பேச விழைந்தார்.இடையில் சர்வர் வந்து” ஏதாவது ஆர்டர் குடுக்கறீங்களா சார்” என்றான்.விடாது பேசிக்கொண்டிருந்தவர் ‘பெரியவருக்கு’ ஒரு காப்பி மட்டும் ஆர்டர் பண்ணார்.சர்வர் இடத்தை விட்டு நகர்ந்ததும் , பையன் ‘சித்தப்பாவை’ சைகையாலேயே பேச வேண்டாம் எனத்தடுத்தான்.அவன் முகம் கொஞ்சம் குழைந்து இருந்தது.சித்தப்பா இனி பேசப்போவதில்லை என்பது போல் முதுகை பின்னுக்கு இழுத்து சோபாவில் சாய்ந்து கொண்டார்.மேசையில் வைத்திருந்த முன்னங்கைகளை எடுத்து தன் மடியில் வைத்துக்கொண்டார். அந்தப்பெண் எந்தச்சலனமுமில்லாமல் பையனைக் கண்களாலேயே ‘ஏன்’ என்பது போல் பார்த்தாள்.அவளிடம் “அவர்” பேசி முடிக்கட்டும் என்றான் அவன்.

அவரும் அவர் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.பேச்சு சரியான திசையில் பயணிப்பது குறித்து மனைவிக்கு கொஞ்சம் சந்தோஷம் முகத்தில் தெரிந்தது.சற்றுத்தள்ளி அமர்ந்திருந்த இருவரும் சித்தப்பாவையே பார்த்துக்கொண்டிருந்தனர்.சித்தப்பா தன்னை சோபாவுக்குள் புதைத்துக்கொண்டு இன்னும் இவர் என்னல்லாம் பேசுவார் என்ற சிந்தனையோடு மூக்குக்கண்ணாடியைக்கழற்றி ஒருமுறை கர்ச்சீப்பால் துடைத்துவிட்டு , பின் தனது வாயால் ஊதி அணிந்து கொண்டார்.

“நான் என் வொய்ஃப்க்கு உண்மையா இருக்கணும்னு நினைக்கிறவன் சார்,அது போல அவரும் வொய்ஃப்கிட்ட நடந்துகிடணும்னு ஆசைப்படறேன்.மூணு நாள் பட்டினி போட்டா எங்க அக்கான்னு இவர் சொல்றார், அதிக்கி முன்னாடி நாங்க ரெண்டுபேரும் எத்தினி நாள் சாப்டாம இருந்திருக்கோம்னு தெரியுமா சார் இவருக்கு?” முடிக்கும் போது குரல் கம்மியது.

எல்லோருடைய முகமும் உணர்ச்சியற்றிருந்தது போலவே தோன்றியது.அங்கு அமர்ந்திருந்த அனைவரிடமும் ஏதோ ஒரு சோகம், அது பொதுவானதாக இருந்ததை தெளிவாக உணர முடிந்தது.அனைவருக்கும் அவரவர் கருத்தை, சொல்ல நினைப்பதை சொல்லிவிடவேண்டும் என அவசரம் இருந்தாலும்,அதை சொல்ல எத்தனிக்கையில் வேகம் சற்று குறைந்தே காணப்பட்டது,பிறகு பேசுபவரே தொடர்ந்து பேசட்டும் என்று மௌனமாகினர்.சில சமயம் சொல்ல ஆரம்பித்து மென்று முழுங்கியவையே அதிகமாக இருந்தது.

“சார் காப்பி” அனைவரின் கவனத்தையும் திருப்பியது சர்வரின் குரல்.சர்வர் வந்து மேசையில் வைத்துவிட்டுப்போனதை ‘பெரியவர் சித்தப்பா’வின் முன் நகர்த்தி ” குடிங்க சார்” என்றார் அவர். சித்தப்பா அந்தக்காப்பியைக் குடிக்க விருப்பமே இல்லாமல் உடலை முன் கொண்டுவந்து கோப்பையின் கைப்பிடியை மட்டும் பிடித்து எடுக்கையில் சிறிது நடுங்கிய விரல்கள் காப்பியை சாசரில் சிந்தி விட்டது.”பார்த்து பார்த்து” என்றார் அவர்.” இல்ல ஒண்ணுமில்ல” என சமாளித்தார் சித்தப்பா.காப்பியைக் குடிக்க ஆரம்பிக்கும் போது, தொடர்ந்தார் அவர் ” இவருக்கி வேலை கெடச்சப்போ பி.எஃப்” க்கு நாமினி பேர்ல எங்க பேர் தானே போட்டார், அப்போ அதுக்கு மட்டும் நாங்க வேணும்,அதே நாங்க கஷ்டப்படும்போது உதவணும்னு தோணலியா ?இத்தினி நாளா அக்காவும்,மச்சானும் என்ன பண்றாங்க,எப்டி சமாளிக்கிறாங்கன்னு கொஞ்சமாவது நெனச்சிப்பார்த்திருப்பாரா இவரு ?எங்க அப்பா,அம்மா இருந்திருந்தா கல்யாணம் பண்ணி வெச்சிருப்பாங்கன்னு சொல்றார்,நாங்க எங்க புள்ள மாதிரிதானே வளத்தோம்”, இப்டி ஒரு பேச்சு என்னிக்கு இவர் வாயிலருந்து வந்துதோ அன்னிக்கே எங்க ரெண்டு பேரையும் கொன்னு போட்டார் சார் இவர்.

அந்த வார்த்தையைக்கேட்டவுடன் அனைவரும் அதிர்ந்தனர்.அவருக்கும் அவர் மனைவிக்கும் ஒன்றும் புரிபடவில்லை.சித்தப்பா உடைந்துவிடுவார் போலிருந்தது.அவரால் இயலவில்லை, எப்போது பேச்சை ஆரம்பிக்க நினைத்தாலும்,’அவர்’ அல்லது வேறு யாராவது தடுத்துக்கொண்டே இருந்தது,மிகவும் கஷ்டப்படுத்தியது. அவசரமாக சித்தப்பா காப்பிக்கோப்பையை சாஸரில் வைத்தது அந்த ஏ.சி.ரூமில் சப்தத்தை ஏற்படுத்தியது.அந்தப்பெண் “சித்தப்பா” என்று கொஞ்சம் சத்தமாகவே சொன்னாள்.திரும்பிய “சித்தப்பா’ ‘ ஒன்றுமில்லை ஒன்றுமில்லை , எனக்கூறிக்கொண்டே கப்பையும் சாஸரையும் ஒருங்கே வைத்தார்.

ரெஸ்டாரண்டின் ஏ.சி.அறை சிறிது சூடாக மாறிக்கொண்டிருப்பது போல உணர்ந்தனர்.

“ரெண்டு வருஷத்துக்கு முன்னால உங்க பொண்ண இழுத்துக்கிட்டு ஓடினவருக்கு இப்ப மட்டும் எங்களப் பாக்கணும்னு தோணிச்சா ? ஏன் எங்ககிட்ட சொல்லிட்டு செஞ்சிருக்கலாமே ?” பேசிக்கொண்டிருந்தவரை சித்தப்பா இடை மறித்து “அப்டி எல்லாம் தப்பா பேசாதீங்க சார்” எனக்கூறும்போது குரல் உடைந்தது.

தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த “அவருக்கு’ இப்போது தான் சமாதானமாகியது போலிருந்தது.அடுத்தவன துக்கத்திலயும், அவனோட வருத்தமான முகத்தையும்
பார்க்கிறதுல என்ன ஆனந்தமோ தெரியல.

“எங்க வீட்டுப்பொண்ணு ஒண்ணும் இவன இழுத்துக்கிட்டுல்லாம் ஓடல,எங்க எல்லார்கிட்டயும் சொல்லிட்டுதான் கல்யாணம் பண்ணிக்கிட்டா” என்றார் சித்தப்பா. தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த “அவருக்கு” அவமானம் பிடுங்கித்தின்றது. “அப்போ எங்கள ஒரு பொருட்டாக்கூட மதிக்காம சொல்லாமக் கொள்ளாம கல்யாணம் பண்ணிக்கிட்டாரா இவரு?” ஏ.சி.யிலும் வியர்த்தது அக்காவுக்கு, முகத்தை அழுந்தத்துடைத்துக்கொண்டாள்.மேற்கொண்டு என்ன பேசுவது என்று தட்டுத்தடுமாறி பின் அவரே தொடர்ந்தார்.

“இதே மாதிரிதான் சார், இவரோட அண்ணனும் ஸாஃப்ட்வேர் கம்பனியில வேலை கிடச்சி அமெரிக்கா போறேன்னு எங்களுக்கு போற அன்னிக்கு மொத நாள்தான் சார் சொன்னான்.ஏன் இந்த மாதிரி நடந்துக்கிறாங்கன்னு புரியல சார்” அங்க போய் கூட வேலை பாத்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டார் , எங்ககிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலை.அண்ணனும் தம்பியும் ஏன் இப்டி பண்ணாங்க சார்? சரி , ஏதோ கல்யாணம் பண்ணிட்டு ஸந்தோஷமா ( அந்த “ஸ”வையும் “ந்தோ” வையும் கொஞ்சம் அழுத்தமாகவே சொன்னார்) இருக்கிறான்னு பார்த்தா , சம்பாதிக்கிறத அவங்க மாமியார்கிட்ட கொடுத்துடணுமாம்,ஏதோ கொஞ்சம் பார்ட்டி, பியர்னு செலவு பண்ணதுக்கு, சொல்லாம செலவு பண்ணதுக்கு,வீட்டில ஒரே சண்டையாம், இப்போ பொண்டாட்டி புர்சன் கிட்ட சரியாப் பேச்சு வார்த்தை கிடயாது.” அதான் சார் சொல்றேன், இந்த ‘லவ் மேரேஜ்’ கண்றாவியே கூடாதின்னிட்டு.

“அவன் கிட்ட பணம் கேட்டப்போ இப்டி சொன்னான் சார், ஏதோ எனக்கு பணம் குடுக்க முடியாதின்னிட்டு காரணம் சொல்ற மாதிரிதான் சார் இருக்கு சரி அவன விடுங்க,தூரா தேசத்தில இருக்கான்,உதவ முடியல,பாக்க முடியலன்னா ஒத்திக்கலாம், இவருக்கு என்னா சார்? எங்கள ரெண்டு எட்டு பாக்கறதில என்னா கொறஞ்சுபோய்டுவார்?”

சர்வர் திரும்ப வந்து குடித்துவிட்டு வைத்த கோப்பையை எடுத்துக்கொண்டு “வேறே ஏதும் வேணுமா சார் ?”என்றான்.சைகையாலேயே வேண்டாம் என்றார் அவர். ஏ.சி.காற்றுக்கு அடுக்கி வைத்திருந்த டிஷ்யூ பேப்பர்கள் சிறிது அசைந்து கொடுத்தன.அந்தப்பெண் தனது கைப்பையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.பையன் ஏதையோ பறி கொடுத்தது போல வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தான்.சித்தப்பா தனது இருக்கையில் நெளிந்து கொண்டார்.

“முடிவா சொல்லுங்க சார்” எவ்ளவ் தருவார்னு,ஒரு இருபதாயிரம் இருந்தா கூரைய மாத்திக்குவேன். “ஏன் சார் நான் இவ்ளவ் பேசறேன், உங்களுக்கு எதித்து பேசணும்னு தோணலியா? சும்மாவே ஒக்காந்திருக்கீங்க? குத்தம் செஞ்ச நெஞ்சு குறுகுறுக்குதா சார் ? பணத்த மட்டும் வாங்கிக்கொடுத்திட்டீங்கன்னா அடுத்த ட்ரெயினப் புடிச்சு நான் பாட்டு போய்ட்டே இருப்பேன்,நீங்க உங்க வேலயப்பாத்துட்டு போய்ட்டே இருக்கலாம்” ” இவரு காலேஜிக்கு பைக்கில தான் போவேன்னு சொன்னதிக்கிகூட பணம் குடுத்திருக்கேன் சார்” கேட்டுப்பாருங்க இல்லன்னு சொல்லமாட்டார்”

உடைந்தே விட்டார் சித்தப்பா.” சார் எங்க பொண்ணோட பையன் ரெண்டு நாள் முன்னாடி பைக்கில போறப்போ ஆக்ஸிடெண்ட்டாகி , நிறய ரெத்தம் வீணாகி ஸ்பாட்லய பொண்ணு செத்துட்டா சார்.பையனுக்கு கொஞ்சம் உள்காயந்தான்.இடது கையில கொஞ்சம் அடிபட்டிருக்கு. சம்பவம் நடந்த அன்னிக்கே உங்ககிட்ட தகவல் சொல்லிறணும்னு பையன் வற்புறுத்தினான் சார், நாங்க தான் எப்டி சொல்றதுன்னு தெரியாம , உங்கள இன்னிக்கு நேர்ல கூப்டோம்.இப்போ ரெண்டு நாள் ஆகுது சார் இது நடந்து” என்றார்.சூழ்நிலை கலவரமாகியது.அவரும் அவர் மனைவியும் திடுக்கிட்டு பையனைப்பார்த்து விட்டு ” அப்ப இந்தப் பொண்ணு ?” , இவ அவளோட தங்கச்சி,நானே வந்து அவங்ககிட்ட சொல்வேன்னு கூடவே வந்துட்டா சார் உடனே தகவல் சொல்லாததுக்கு மன்னிக்கணும்”துக்கம் தாளாமல் சித்தப்பா விக்கித்து அழத்தொடங்கினார்.

ஏற்கனவே எழுதி வைத்திருந்த செக்’கை சர்வர் வைத்துவிட்டுப்போன பில் கவரின் கீழே செருகி வைத்தான் பையன்.பில்லோடு சேர்ந்து செக்’கும் ஏ.சி. காற்றில் சிறிது அசைந்தது.ஹோட்டல் சூப்பர்வைசர் இவர்களருகே வந்து” சார் இன்னிக்கு ஃப்ரைடே , அதுவும் ஈவ்னிங் டைம், கஸ்டமர்ஸ் அதிகமா வருவாங்க , கொஞ்சம் சீக்கிரமா கெளம்புனீங்கன்னா நல்லாருக்கும் ” என்றார்.

 சின்னப்பயல்
chinnappayal@gmail.com

Series Navigation

சின்னப்பயல்

சின்னப்பயல்