கடத்தப்பட்ட நகரங்கள்

This entry is part [part not set] of 46 in the series 20030822_Issue

புகாரி


ஆகஸ்ட் 14, 2003 ஒண்டாரியோ, நியூயார்க், மிச்சிகன் ஆகிய
வட அமெரிக்க மாகாணங்கள் ஒரே நேரத்தில் மின்சாரமற்றுப்
போயின. அடுத்தநாள் இரவுக்குள் அனைத்தும் கட்டுக்குள்
வந்துவிட்டன என்றாலும் அந்த இருட்டு இரவின் எண்ணங்கள்
ஒரு பிரகாசமான கவிதைக்கு வெளிச்சம் தந்ததென்னவோ உண்மை.

கஞ்சா கடத்தினால்
சிலமாதச் சிறைவாசம்
விமானம் கடத்தினால்
சிலவருடச் சிறைவாசம்
செழித்துக் கொழித்த சில
நகரங்களையே கடத்தினால் ?

ஆம்!
உலகின் தலைசிறந்த
வட அமெரிக்க நகரங்களுள்
சிலவற்றை
சிரஞ்சீவிமலை பெயர்த்துச்
சிவ்வென்று பறந்த அனுமந்தனாய்க்
கடத்திக்கொண்டுபோய்
கூடுவாஞ்சேரியும் கிண்டலடிக்கும்
ஓர் ஆதிவாசிப் பொட்டலில்
அப்படியே போட்டுவிட்டு
அநியாயமாய்ப் பறந்துவிட்டது
மின்சாரம் என்னும் துரோகி

வினோதம் என்னவென்றால்
கடத்தப்பட்ட நகரங்கள்
கடத்திய கொடுங் கள்ளன்
மின்சாரத்திடமே
ஆயுளுக்கும்
சிறையிருக்கக் கோரி
கண்ணீர்விட்டுக் கதறின

இருட்டுப் பற்கள்
மயான நிசப்தமாய் நெறிய
சத்தமில்லாமல்
சாத்தானாய்ச் சிரித்தான்
மின்சாரம்

0

ஆசைகளே தேவைகள் -அந்தத்
தேவைகளே மனிதர்கள்

‘என்னை எடுத்துக்கோ
ஏய்… என்னையும் எடுத்துக்கோ ‘
என்றே அழகுகாட்டி
அங்காடிச் சாளரங்களில்
வீற்றிருக்கும்
தேவையில்லாப் பொருட்கள்
ஆசை வாகனங்களேறி
நம்வீட்டு
அலமாரிகளை நிறைக்கும்
கதையல்லவா நம் கதை

இந்த நவீன நாட்களில்
சூரியனைக் கிள்ளித்தரும்
செயற்கை நிலாக்களாய் அணிவகுக்கும்
சாலை விளக்குகள் முதல்
வாழ்வின் எல்லாமுமாகிப்போன
இணையம் வரை
கொடுத்துக் கொடுத்து
மனிதவாழ்வை அடிமைவாழ்வாக்கிய
மின்சாரம் என்னும் மகா பூதம்
ஒருநொடி தொலைந்துபோனால்
உயிர் தொலைத்தப் பரிதவிப்பில்
தேடியோடும் பிணங்களாய்
மக்கள்

0

பெண்டாட்டி
பிறந்தகம் போனால்
வரும் வரை காத்திருக்கலாம்
கண்ணில் பொங்கும்
புதுப்பிக்கப்பட்ட காதலோடு

மின்சாரம் போனால் ?

0

வங்கிநிறைய பணமிருந்தும்
ஓர் அட்டையைத்தானே
வைத்திருந்தோம்

காசுகேட்டு நின்றால்
பேசாமல் நின்று
நம்மைப்
பிச்சைக்காரனாக்கிய
வங்கி இயந்திரத்தின்
பேச்சை நிறுத்தியது யார் ?

சின்னச் சிறகடித்து
வானம் பாய முடியாத
கோழிக்குஞ்சுகளாய்
மின்தூக்கிப் பருந்துகளிடம்
அகப்பட்ட அவலங்கள்

‘ஆயிரத்தெட்டாம் திருப்படி
சரணம் பொன் மின்சாரம் ‘ என்று
அடுக்கு மாடிப் படிக்கட்டுகளில்
அழுகுரல்கள்

உணவை
விசமாய் மாற்றித்தரும்
குளிரில்லாப்பதனப் பெட்டிகள்

தண்ணி இல்லாக்
கழிப்பறைக் கொடுமையை
எங்கே கொண்டுபோய்க்
கழிப்பது ?

இந்தத்
திருடர்களின் சுதந்திரதினத்தில்
மிரட்டும் இருட்டுக்குப் பயந்து
அவர்களும் பதுங்கிவிட்டார்கள்

உங்கள் பிரச்சினை உங்களோடு
எங்களுக்கு தொலைக்காட்சியில்
சித்திரப்படம் காட்டு என்று
உருண்டுபுரளும் இரண்டுவயது
புதிய சுகவாசிகள்

இப்படிப்
பட்டியலிட்டால்
முடிந்துபோகும் அவதிகளா
மின்சாரமில்லா அவதிகள் ?

0

ஆனாலும்
இந்த ஓர் இரவு மட்டும்
ஊருக்குப் போய்வந்த
அடிமன நிறைவு

மெல்ல மெல்ல
இருட்டைப் பழகிய கண்கள்
தங்களின் உட்பாவைக்குள்
ஊரை உயிர்ப்பித்துக்கொண்டன

நேற்றுவரை
கண்ணில் தெரியாத வானம்
ஆயிரம் கவிதைகள் சொன்னது

மெல்லிய ஓசைகளின்
இனிய காதலை
காதுகள் அங்கீகரித்து
மோகம் கொண்டன

இத்தனையையும்
தின்றுவிட்டுத்தானே
மின்சாரம் என்ற பக்காத்திருடன்
நம்மை உள்ளே அடைத்துத்
தாளிட்டுக் கொள்கிறான்

அந்தச் சிறையில்
காலமெல்லாம்
கம்பி எண்ணிக்கொண்டே
நம் நவீன வாழ்க்கை !

*

அன்புடன் புகாரி

buhari@rogers.com

Series Navigation