கசப்பும் கற்பனையும் ( ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை ஸ்பானிஷ் சிறுகதைகள். ஃபெர்னான்டோ ஸோரன்டினா, ஆங்கிலம் வழியாகத் தமிழில் எம

This entry is part [part not set] of 39 in the series 20030925_Issue

பாவண்ணன்


( ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை-நூல் அறிமுகம்)

(ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை- ஸ்பானிஷ் சிறுகதைகள். ஃபெர்னான்டோ ஸோரன்டினா, ஆங்கிலம் வழியாகத் தமிழில் எம்.எஸ். காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, நாகர்கோயில். விலை. ரூ40.)

சமீப காலத்தில் மொழிபெயர்ப்புத் தளத்தில் முக்கியமான தடம்பதித்து வருபவர் எம்.எஸ். மலையாள எழுத்தாளரான சக்கரியாவின் சிறுகதைகள் மட்டுமே அடங்கிய தனித்தொகுப்பும் பல ஐரோப்பிய எழுத்தாளர்களுடைய முக்கியமான சிறுகதைகள் அடங்கிய மற்றொரு தொகுப்பும் கடந்த ஆண்டு அவருடைய மொழிபெயர்ப்பில் வெளிவந்தன. சிறுகதை முயற்சிகளில் பொதிந்திருக்கும் பலவித வெளிப்பாட்டுச் சாத்தியப்பாடுகளை நாம் அறிந்துகொள்ள அக்கதைகள் உதவின. இவற்றின் தொடர்ச்சியாக இப்போது ஸ்பானிஷ் எழுத்தாளரான ஃபெர்னாட்டோ ஸோரன்டினாவின் சில சிறுகதைகளை மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார். சில ஆணடுகளுக்கு முன்னால் காலச்சுவடு இதழில் ‘அவன் என்னைக் குடையால் அடித்துக்கொண்டே இருக்கிறான் ‘ என்னும் சிறுகதை வெளிவந்தபோது பலரையும் அது கவர்ந்தது. அந்த வரவேற்பின் ஊக்கத்தால் ஒரு தொகுதியையே மொழிபெயர்த்து நமக்கு வாசிக்கத் தந்திருக்கிறார் எம்.எஸ்.

இத்தொகுப்பில் 11 சிறுகதைகள் உள்ளன. எல்லாக் கதைகளிலும் ஒரேவிதமான சொல்முறையே கையாளப்பட்டுள்ளது. எதார்த்தத்தையும் கற்பனையையும் மிக அழகான கலவையில் முன்வைக்கின்றன இக்கதைகள். எதார்த்த முறையில் கதை நிகழ்ந்துகொண்டிருக்கும்போதே சட்டென கற்பனையின் இறகு ஒரே கணத்தில் நீண்டு வானத்துக்குத் தாவிவிடுகிறது. இந்தத் தளமாற்றம் வெளிப்படையாகத் தெரியாத விதமாக மிக லகுவாக அடையப்படுகிறது. இதுவே இக்கதைகளின் முக்கியச் சிறப்பு. மனித வாழ்வில் சாதாரணமாக நேரக்கூடிய இயலாமை மிகுந்த தருணங்களில் வெளிக்காட்டிக்கொள்ள முடியாத வண்ணம் ஆழ்மனத்தில் உருவாகும் கசப்புகளும் எதிர்ப்புணர்வுகளும் கற்பனைகளாக மலர்கின்றன. எதார்த்தத்தில் செய்ய இயலாத ஒரு செயலுக்கான உத்வேகத்தைக் கற்பனையில் பெருக்கிப்பெருக்கி வெடித்தெழும் ஒரு தருணத்தில் அந்தக் கற்பனையையே நிகழ்த்தி மகிழ்கிறது மனம். எந்த இடத்திலும் உறுத்தல் இல்லை. அதிகப்படுத்தி மலினப்படுத்தும் தன்மையும் இல்லை.

‘ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை ‘ சிறுகதையில் ஓர் ஆராய்ச்சியாளன் இடம்பெறுகிறான். போனஸ் அய்ரஸ் நகரில் எங்கெங்கும் ஆட்டுக்குட்டிகள் தன்னிச்சையாகத் தண்டனைகளை அளித்தபடி இருக்கின்றன. ஆடுகள் தண்டனைகளை வழங்குவதற்கான காரணங்கள் எவை என்பதைப்பற்றி ஆராய்வதே ஆராய்ச்சியாளனுடைய நோக்கம். இந்த முயற்சியின்நடுவில் தன் பணத்தேவையை நிறைவேற்றுவதற்காக மொழிபெயர்ப்பு வேலையொன்றை மேற்கொண்டு செய்து முடிக்கிறான். பதிப்பாசிரியரான நெபேரியா ஒரு பணப்பிசாசு. கையெழுத்துப்பிரதியை வாங்கிக்கொண்டு பணத்துக்கு வேறொரு நாளில் வரச்சொல்கிறான். இரண்டு வாரங்கள் கழித்து அவன் சொன்ன நாளில் சென்றபோதும் அவனைச் சந்திக்க வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. வேலைக்காரியாலும் அவன் மனைவியாலும் விரட்டப்படுகிறான். மோசமான வார்த்தைகளால் வசைபடுகிறான். அப்போது அவன் மனம் வேதனையில் குமுறுகிறது. அதே நொடியில் ராணுவ வீரர்களைப்போல ஆடுகள் உள்ளே நுழைந்து தோட்டம், வீடு எனக் கண்ணில் கண்ட எல்லாவற்றையும் நாசப்படுத்தத் தொடங்குகின்றன. நீதி நிலைநாட்டப்பட்டதன் அடையாளமாக அங்கங்கே ரத்தம் சிதறியிருப்பதைப் பார்த்துவிட்டுத் திரும்புகிறான் ஆராய்ச்சியாளன். அப்போதும் மொழிபெயர்ப்புக்கான பணம் அவனுக்கு வரவில்லை என்னும் நிலைதான். ஆனாலும் பழைய குமுறலின்றி வெளியேறுகிறான் அவன். ஆட்டுக்குட்டிகள் ஒருவகையில் வாய்பேச முடியாத பாதிக்கப்பட்டவர்களின் படிமம். மனிதர்கள் கொடுக்கவேண்டிய தண்டனையை ஆடடுக்குட்டிகள் வழங்கிவிட்டுப்போகின்றன. மனத்தின் கற்பனை ஒருவிதத்தில் எதார்த்தம்போல வெளியுலகில் நிகழ்த்திக்காட்டப்படுகிறது.

‘ஹார்ன் இசைப்பவர் ‘ சிறுகதையில் இடம்பெறுவது இன்னொரு விதமான கற்பனை. இக்கதையில் வங்கிக் குமாஸ்தா ஒருவன் இடம்பெறுகிறான். அவனுடன் வாழ மறுத்து அவனுடைய மனைவி வெளியேறிவிடுகிறாள். வாழ்வில் அவளது இல்லாமையால் உருவாகும் வெறுைமுயைத் தாங்க இயலாமல் தவிக்கிறாள் அவள். அப்போதுதான் அவன் ஹார்ன் ஒன்றைக்கடையில் வாங்கி வாசித்துப் பழகுகிறான். அவன் மனவெறுமையை அந்த இசை நிரப்பிவிடுகிறது. பிறகு அது ஒரு போதையாகவும் பித்தாகவும் மாறி அந்த இசையை இசைக்காமல் இருக்கவே முடியாது என்னும் நிலை உருவாகிவிடுகிறது. அந்த மன உச்சத்தில் மீண்டும் ஒரு சரிவைச் சந்திக்க நேர்கிறது. ஹார்னையே இந்தப் பாடுபடுத்துபவன் மனைவியை என்ன பாடுபாடுத்தியிருப்பான் என்று எண்ணத் தோன்றுகிறது. ஒருபுறம் மனத்தில் உருவாகும் ஏக்கம். மறுபுறம் அதன் பிடிவாதம். இரு புள்ளிகளுக்கிடையே ஊசலாடும் மன இயக்கத்தை நகைச்சுவைச் சித்திரங்களாக மாற்றி விடுகிறார் ஸோரண்டினா.

குடையின் அடி இல்லாமல் வாழ முடியாது என்கிற உணர்வும் கொசுவின் அதிகாரத்துக்குள் வாழ்ந்துகொண்டே தீர்வுக்காகக் காத்திருப்பவனுடைய வாழ்வும் ஒரே தளத்தில் அமைந்தவையே. பழக்கத்தை உதற முடியாத மனநிலை அது. ஒருபுறம் உதறும் விழைவு. மறுபுறம் உதற இயலாத அளவு வளர்த்துக்கொண்ட உறவின் இன்பம். இரு புள்ளிகளின் இடையிலான ஊசலாட்டம் இங்கு மனத்தை ஆட்டிப் படைக்கிறது.

மற்றவர்களுடைய மனங்கவர்ந்தவர்களாகத் தம்மைக் காட்டிக்கொள்வதற்காக மனிதர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மெல்ல மெல்ல ஒரு போட்டியுணர்வாக மாறுவதை முன்வைக்கும் ‘தற்காப்புக்காக ‘ சிறுகதையும் நன்றிக்கடனாக அடுத்தவீட்டுப் பெண்மணி கொடுத்துவிட்டுப் போன ஆர்டிசோக் செடியின் அசுர வளர்ச்சி வீட்டையே அழித்துக் குலைக்கும் கதையும் நுட்பமான மனத்தளத்தில் இயங்குகின்றன. பிறருக்காக அல்லது பிறருடைய கருத்துக்களுக்காக மனத்தில் எந்த அளவுக்கு இடம் ஒதுக்கலாம் என்கிற அம்சம் மன இயக்கத்துக்கு முக்கியம். சொந்த ஆளுமையுடன் இயங்குபவர்களாகவும் சொல்வித்தபடி இயங்குபவர்களாகவும் இருக்கிறார்கள் மனிதர்கள். மேற்சொன்ன இடஅனுமதி அல்லது இடப்பங்கீடு எந்த எல்லைக்குள் அமையவேண்டும் என்கிற கணிப்பையொட்டியே இந்த இயக்கம் அமைகிறது. இதில் உருவாகும் பிசகுகளே பெரிய விளைவுகளை உருவாக்குகின்றன.

இத்தகு சிறுகதைகளைத் தமிழ் எழுத்தாளர்கள் பலரும் அவ்வப்போது முயற்சி செய்திருக்கிறார்கள். நகர நெரிசலைப் பகடி செய்யும் கிருஷ்ணன் நம்பியின் ‘பாதுகை ‘, ஆசையாய்ப் பற்றிக்கொண்ட ஒன்றாலேயே அழிவைத் தேடிக்கொள்ளும் அவலத்தைச் சித்திரப்படுத்தும் சுந்தர ராமசாமியின் ‘குரங்குகள் ‘, எளிய பழக்கமாக மனத்தில் படரும் ஒரு சின்ன அம்சத்தின் கவர்ச்சி வாழ்வையே சூறையாடிச்செல்லும் கோலத்தைப் படைக்கும் ஜெயமோகனுடைய ‘டார்த்தீனியம் ‘ எனப் பல சிறுகதைகளைச் சுட்டிக்காட்டலாம். இவர்களிடம் சோதனை முயற்சியாக வெளிப்பட்ட ஒரு சொல்முறையைப் பிரதான வெளிப்பாட்டு முறையாகக் கையாண்டு பார்த்திருக்கிறார் ஸோரன்டினா. இது அவருடைய படைப்புகளின் பலம். நெருப்பு வளையத்துக்குள் பாய்ந்து கடக்கிற சர்க்கஸ் பெண்ணைப்போல சற்றே பிசகினாலும் கேலிக்குரியதாக மாறவிடக்கூடிய ஆபத்தை லாவகமாகத் தாண்டிவிடுகிறார். மனநெருக்கடியான ஒரு தருணத்தை உடைப்பதற்கு மாறாக வேறொரு தளத்துக்கு மடைமாற்றுவதால் ஆழத்துக்குள் செல்லும் பயணம் தடைப்படுவதைப் பலவீனமாகச் சொல்லலாம். சகஜமாகவே தோற்றமளிக்கக்கூடிய மூல எழுத்தாளரின் கவனம் மிகுந்த நடையை மொழிபெயர்ப்பிலும் சிதைவின்றித் தந்திருக்கும் மொழிபெயர்ப்பாளரான எம்.எஸ் பாராட்டுக்குரியவர். தமிழுலகத்தின் நன்றிக்கும் உரியவர் அவர்.

Series Navigation