ஓவியப் பக்கம் : ஓன்று :லீ போந்தேகோ (Lee Bontecou)- வன்முறை மறுக்கும் உலோகப் படிமம்

This entry is part [part not set] of 51 in the series 20041007_Issue

மோனிகா


Josh Titus

Lee Bontecou in her Pennsylvania studio.

June 2003

Photo by Josh Titus, courtesy UCLA Hammer Museum, Los Angeles.

ஓரு கலைகூடத்தினுள் நுழையும்போது இதுவரை பழக்கப்பட்ட நம்முடைய எதிர்பார்ப்புகளுக்கெல்லாம் அப்பாற்ப்பட்டு கம்பிகளினூடே கட்டப்பட்ட கரடுமுரடான முரட்டுத் துணிகளும், தகரத்தட்டுக்களும், இழுத்துத் தைக்கப்பட்ட தோலும் ஒரு கலைப்பொருளாக நம்மை மிரளவைக்கின்றன. நட்சத்திரப் போர் படங்களில் வரும் விண்கலங்களை நேரில் கொண்டுவந்து இறக்கியதுபோல் பார்வையாளர்களை வாய் பிளக்க வைக்கின்றன இந்த ஆளுயர இறக்கைகள். கான்வாஸினுள் கட்டப்பட்ட இந்த அறைகளினூடே நமக்கு வன்முறையின் இருளை கோடிட்டு காண்பிக்கிறார் போந்தேகோ.

Lee Bontecou

Untitled

1962

Welded steel and canvas.

68 x 72 x 30 in.

The Museum of Fine Arts, Houston Gift of D. & J. de Menil.

முப்பத்தியிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தனது படைப்புகளோடு தலைகாட்டியிருக்கும் இந்தப் படைப்பாளியை உலகின் பிரசித்தி பெற்ற எல்லா நிறுவனங்களும் கைகூப்பி வரவேற்கின்றன. பெண்களுக்கான ஓவியப் பாணி எதுவும் இல்லை. மனிதார்த்த உணர்வுகள் இரு பாலார்க்கும் பொதுவானவை என்று கூறி அழகியலையும், பெண்மையின் கட்டுமானங்களையும் கேள்விகுள்ளாக்குபவை இவரது சிற்பங்கள்.

1931ம் ஆண்டு அமெரிக்காவின் ரோட் ஐலேண்ட் மாகாணத்தில் உள்ள பிராவிடென்ஸ் நகரில் பிறந்த போந்தேகோவின் தாயார் இரண்டாம் உலகப் போரின்போது உபயோகப்படுத்தப்பட்ட தொலைதொடர்புச் சாதனங்களை உருவாக்கும் ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்தார். அவரது தகப்பானாரும் தாய்மாமனும் முதல் முதலில் முழுக்க முழுக்க அலுமினியத்தினால் தயாரிக்கப்பட்ட போர்க்கப்பலை கட்டமைக்கும் தொழிலாளிகளாக வேலை செய்து கொண்டிருந்தனர். சிறு வயதில் தான் கண்டு பழக்கப்பட்ட பொருட்களே பிறகு போருக்கெதிராக அவர் வரையத்தொடங்கியபோது கைகொடுக்கத் தொடங்கின. 1952-55ம் ஆண்டுகளில் நியூயார்க்கில் உள்ள ஒவிய மாணவர் கூட்டமைப்பில் (Art Students League) முறையாக ஓவியம் கற்ற போந்தேகோ அதன்பிறகு ஓவியத்தைவிட்டு சிற்பத்தில் ஆர்வம் கொண்டார்.

நியூயார்க்கில் தனது ஓவியக்கூடத்தில் கீழிருந்த சலவை இயந்திரப் பட்டிகளையும், ஆணிகள், சிறிய இரும்பு குழாய்கள், ராணுவ மிகுதிகள், தபால் பைகள் போன்றவற்றை கொண்டு உலோகக்கம்பிகளுடன் இணைத்துக் கட்டுவதன் மூலம் அவற்றிலிருந்து கலைத்தன்மையை வெளிக்கொணர்ந்தார் போந்தேகோ. இந்த பொருட்களின் வர்ணங்களின் அமைவும், கடினத்தன்மையும் அவர் விரும்பிய வெளிப்பாட்டைப் பெறுவதற்கான தன்மை பெற்றிருந்தன. போந்தேகோவின் துணிகரமான முயற்சிகள் 1959ம் ஆண்டு நடந்ததெனக் கூறலாம். துணிதுவைக்கும் இயந்திரத்தில் பயன்படுத்தும் கன்வேயர் பெல்ட் மற்றும் இரும்புத்தகரங்களை கான்வாசில் இணைத்து இவர் தனது கலைப் பொருளை உருவாக்கினார். ரம்பங்கள், வாகனத்தில் செல்லும்போது அணியும் ஹெல்மட்டுகள் மற்றும் போர்க்கருவிகளின் பகுதிகளை வைத்து தனது ஓவியச் சிற்பங்களை கட்டமைத்தார்.

Lee Bontecou

Untitled

1961

Welded steel, canvas, wire, and velvet.

56 x 39 ண x 21 1/8 in.

Collection Walker Art Center, Minneapolis; gift of the T.B.

Walker Foundation, 1966.

போந்தேகோ தனது கூடத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது அவரது வானொலிப் பெட்டி பனிப்போரையும், ஆப்பிரிக்கப் படுகொலைகளையும் வர்ணித்தவாறிருந்தது. அவரது இளமைக்கால கோபமும், பீதியுமே அவரது கலைக்காண அஸ்திவாரமாக உருவெடுத்தது. அதைப்பற்றி கூறுகையில் அவர் “நான் எனது நாட்டின் மீது மிகவும் கோபம் கொண்டவளாக இருந்தேன். ஐ.நா சபைக்காக நான் ஓவியம் வரைந்து கொண்டிருந்தபோது என் வேலைகளுக்கு பின்னிசையாக போரைப்பற்றிய அறிவுப்புகளும் வர்ணனைகளும் ஒலித்துக் கொண்டேயிருந்தன. ஒவ்வொரு முறை நான் வரையும்போதும் அழகுணர்வு சார்ந்த ஓவியங்களை விடுத்து வெளிப்படையான ஒரு உருவகத்தை கையாள வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். உதாரணத்துக்கு எனது ஓவியத்தினுள் ஒரே ஒரு திறப்பு (opening) தென்படலாம் ஆனால் அந்த திறப்பு நம்மை அது வழியாக சொர்க்கத்துக்கு இட்டு செல்வதாக இருக்க வேண்டும். அதன் மூலம் நாம் பிரிதொரு வெளிக்கு செல்லவேண்டும். அந்த வெளியை (space) நமக்கு உணர்த்துவதாக இந்த துவாரம் இருக்க வேண்டும். என்னுடைய இன்னொரு ஓவியச் சிற்பம் ஒரு போர்களக் கருவியைப் போன்று பற்களைக் கொண்டதாகும். ஆனால் இது யாருக்கும்புரிவதில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த ஓவியச் சிற்பங்கள் ஜெர்மனியிலும் இஸ்ரேலிலும் உள்ள கலைக் கண்காட்சி சாலைகளில் உள்ளன. அவை நான் கூறாமலேயெ தாம் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றுவிட்டன. அவற்றில் ஒன்று நியூயார்க்கின் யூதர்கள் கண்காட்சிசாலையில் உள்ளது. அவை என் துன்பங்களுக்கான நினைவுப் பொருட்களாகும். நான் அவற்றில் ஒன்றுக்குமே தலைப்பிட்டது கிடையாது. அப்படி எத்தனித்தபோதெல்லாம் அது மக்களை ஒருசில வரையரைகளுக்குள் சிந்திக்க வைப்பதுபோல் தோன்றியதால் அந்த முயற்சியை தொடரவில்லை” என்கிறார்.

1972ம் ஆண்டு, லீ போந்தேகோ நியூயார்க்கின் லியோ காஸ்டெல்லி ஓவியக்கூடத்தைவிட்டு வெளியேற்ினார். திருமண வாழ்க்கையோடு ஓவியம் சொல்லிக் கொடுப்பது, குழந்தைப் பராமரிப்பு போன்ற சுமைகள் கூடவே இரண்டு ஆண்டுகளுக்கொருமுறை வரைவது அதை முடித்துக் கண்காட்சிகளில் காட்டுவது போன்ற ஒரு இயந்திரத்தனமான செயல்பாட்டை விட்டுவிட்டு புதிதாக எதாவது முறையை கையாளவும் தன்னளவில் விரிவடைய வேண்டியதொரு தேவையும் கருதி அவர் நகர்ப்புற வாழ்க்கையை விட்டு விலகிச் சென்றார்.

1960ம் ஆண்டு ரோஷன்பர்க், ப்ரான்க் ஸ்டெல்லா மற்றும் ஆண்டி வாரொலுக்கு நிகரான பிரசித்தியும் வியாபாரத் தகுதியும் இவரது ஓவியங்களுக்கு இருந்தது. போந்தேகோ காஸ்டெல்லியைவிட்டு வெளியேற்ியபோது லூயி லாலர் என்னும் புகைப்பட கலைஞர் ஒரு சிறிய பறவை “ஜாஸ்பர், டொனால்டு, ராபர்ட், ப்ராங்க், ஆண்டி“ என்று மற்ற ஆண் ஒவியர்களைக் கூப்பிட்டு கேலி செய்வதுபோல் ஒரு கலைப் பொருளை உருவாக்கினார்.

Lee Bontecou

Untitled

1997

Graphite on paper

22 1/2 x 30 in.

Collection of Tony and Gail Ganz, Los Angeles

போந்தேகோவின் சமீபத்துச் சிற்பங்கள் அசையும் சிற்பங்களாகும். மெல்லிய கம்பிகளிலிருந்து தொங்கும் சுடுமண் விண்வெளி மண்டலங்கள் சில சமயங்களில் உயிருள்ள கடல் வாழ்பிராணிகள் போன்று காட்சியளிக்கின்றன. மீன்களின் செதில்களுக்கு நடுவில் திணிக்கப்பட்ட மனிதக் கண்பாவைகள் ஒரு யதார்த்துக்கு (surrealistic) அப்பாற்பட்ட தோற்றத்தைக் கொடுக்கின்றன.

Lee Bontecou, Untitle 1998 (begun in 1980s) Welded steel, porcelain, wire mesh, canvas, and wire, 7 x 8 x 6 ft.

Collection of the artist, courtesy of Knoedler & Co., New York

போந்தேகோ எப்பொழுதும் தன்னிச்சையாகவும், தனித்தும் இயங்கக்கூடியவராதலால் பெண்ணிய இயக்கங்களிலிருந்தும் மற்ற இயக்கங்கள்ிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டார். ஆனால், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு அவர் கடந்துவந்த பாதையையும் அவரது கருத்துச் செறிவுள்ள வேலைப்பாட்டின் கடின உழைப்பையும் பார்க்கும்போது இன்றைய ஓவியச் சூழலில் உள்ள போட்டியும், மோதல்களும் தவிர்த்த ஒரு எளிமையே தலைகாட்டுகிறது.

பல்வகை ஓவியப் பிரிவுகளை தழுவியும் தருவித்தும் படைக்கப்படுகின்ற ஓவியங்களுக்கும் சிற்பங்களுக்கும் நடுவே தனக்கென ஒரு பாணியை அமைத்துக் கொண்டு உணர்வுகளுக்கு மட்டுமே உண்மையானதாகவும், இன (பால்) அடையாளத்திற்கு அப்பாற்பட்ட ஒரு முழுமையான தன்னிலை வெளிப்பாடாகவும் திகழ்பவை போந்தோகோவின் சிற்ப முயற்சிகள். இவை அடுத்த தலைமுறையினரை பல புதிய முயற்சிகள் நோக்கி நகர்த்துபவை.

இன்னும் இவரது மற்ற படைப்புகளைக் காண கீழ்கண்ட வலைப்பக்கம் செல்லவும்:

http://www.hammer.ucla.edu/exhibitions/3/

—-

monikhaa@hotmail.com

Series Navigation