ஓரின காதல் – வரவேற்கத்தக்க ஒரு சட்டதிருத்தம்

This entry is part [part not set] of 28 in the series 20090702_Issue

சின்னக்கருப்பன்


ஓரினக்காதலை தண்டிக்கவேண்டிய குற்றம் என்ற சட்டம் என்று வரையறை செய்வது இந்திய அரசியலமைப்புச் சட்டம் தரும் மனித உரிமைகளுக்குப் புறம்பானது என்று கூறியுள்ளது.

இது நிச்சயம் வரவேற்கத்தக்கதாகும். ஓரினக்காதலுக்கு ஒரு சில மனிதர்கள் விரும்புவதன் ஆதாரம் அவர்களது மரபணுவில் உள்ளது என்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். ஓரினப்பாலுறவாளர்களது மூளைகள் நிச்சயம் மாறுபட்டவை எனப்து அறிவியலாளர்களது முடிவு. அப்படி ஓரினப்பாலுறவாளர்களாக பிறந்தவர்கள், பிறப்பினாலேயே குற்றவாளிகள் என்று கூறுவது அவர்களது மனித உரிமைகளுக்கு குந்தகம் விளைவிப்பதாகும்.

ஓரினக்காதல் என்ற வினோதம், மனிதர்களிடம் மட்டும் இருப்பதோ அல்லது பழக்கத்தினால் மட்டும் வருவதோ அல்ல.

பழ ஈக்கள் (fruit flies) என்ற பூச்சிகளிலிருந்து பெரிய மிருகங்கள் வரைக்கும் ஓரினக்காதலை அறிவியலாளர்கள் ஆவணப்படுத்தியுள்ளனர். (1) இப்படிப்பட்ட ஓரினக்காதல் உயிரியல் அடிப்படையானது. அவை பிறவியிலேயே அப்படி இருக்கும்போது அவர்களை அந்த உணர்வோடு பிறந்துவிட்டதற்காக குற்றம் சொல்லமுடியுமா?

இது பழக்கத்தினாலும் வருவதில்லை. எந்த காலத்திலும் ஆணை விரும்பாத ஒரு ஆணை ஓரினக்காதல் விரும்புபவனாக மாற்றிவிட முடியாது. அதே போல பெண்ணை விரும்பாத ஒரு பெண்ணை ஓரினக்காதல் விரும்பும் பெண்ணாகவும் மாற்றிவிட முடியாது. ஆகவே இது பற்றி மதவாதிகள் கொண்டிருக்கும் அச்சங்கள் அடிப்படையற்றவை. (2)

இந்தியா சகிப்புத்தன்மை கொண்ட நாடு மட்டுமல்ல, மற்றவர்களது பழக்க வழக்கங்களை மதித்து செல்லும் நாடும் கூட. இதன் மதம் மொழி கலாச்சாரம் ஆகியவை மற்றவர்களது பழக்க வழக்கங்களை மதிப்பதிலேயே உறுதியான அடித்தளம் கொண்டது.

மேலும் இந்தியாவில் எதற்கெடுத்தாலும் மதப்புத்தகத்தில் என்ன சொல்லியிருக்கிறது என்று நோண்டி பார்ப்பதும் பழக்கமில்லை. அப்படி இந்து மதப்புத்தகங்களிலும் எதுவும் சொல்லவும் இல்லை. ஆகவே இந்துக்கள் இந்த ஓரினக்காதலை தண்டிக்க வேண்டிய குற்றமாக இந்தியாவில் வைத்திருந்ததே தவறு.

இந்த சட்டமும் இந்துக்கள் எழுதிய சட்டமல்ல. இது ஆங்கிலேயர்கள் ஆட்சிகாலத்தில் ஆங்கிலேயர்கள் எழுதிக்கொண்ட சட்டம். அந்த சட்டம் இவ்வளவு காலம் இருந்ததும் தவறு. இது போன்ற சட்டங்களை அடிமுதல் நோண்டி தூக்கி எறிந்திருக்கவேண்டும்.

இந்துக்கள் ஓரினப்பாலுறவுக்கு எதிராக இருக்கக்கூடாது என்பதற்காகவோ என்னவோ அபத்தத்தின் உச்சத்தில் புத்தகங்கள் எழுதுவதும், கட்டுரைகளை எழுதுவதும் இந்தியாவில் அதிகரித்துள்ளது.

ரூத் வனிதா என்ற கிறிஸ்துவரும், சலீம் கித்வாய் என்ற முஸ்லீமும் எழுதியிருக்கும் புத்தகமும்(3) , அதனை ஒட்டி வெளிவந்த அஷோக் ராவ் கவி அவர்களது இந்துஸ்தான் டைம்ஸ் கட்டுரையும் இப்படிப்பட்ட அபத்தத்தின் உச்சங்கள். சிவனும் அக்னியும் ஓரினப்பாலுறவாளர்கள், கிருஷ்ணனும் அர்ஜுனனும் ஓரினப்பாலுறவாளர்கள் என்பது போன்ற கடும் கண்டனத்துக்குரிய, அபத்த புத்தகம் ஊடகத்துறையில் வலிமை கொண்ட இவர்களால் எழுதப்பட்டுள்ளது. (3) இது போன்ற அபத்தக் களஞ்சியங்கள் தடை செய்யப்படுவதில்லை. (தடை செய்யப்படவும் வேண்டியதில்லை) ஆனால், டாவின்ஸி கோடு எழுதும் கிறிஸ்துவரான டான் ப்ரவுன், சடானிக் வர்ஸஸ் எழுதும் சல்மான் ருஷ்டி, இன்னும் தஸ்லிமா நச்ரீன் போன்று அந்தந்த மதத்தினராலேயே எழுதப்பட்ட புத்தகங்கள் தடை செய்யப்படுகின்றன. ஏன் இப்படிப்பட்ட கருத்து சுதந்திரம் என்பது அண்ணல் நேருவுக்கு மட்டுமே புரியும் என்று நினைக்கிறேன்!

இந்துக்கள் எவ்வாறு அரவாணிகளை அணைத்துக்கொள்கிறார்களோ, அதே போல ஓரினப்பாலுறவாளர்களையும் அரவணைத்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு எந்த விதமான மதப்புத்தகமும் அறிவுரை சொல்லத்தேவையில்லை. ஓரினப்பாலுறவாளர்களை அரவணைத்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக தேவையில்லாமல், ஒரினப்பாலுறவாளர்களை இந்து புராணக்கதைகளில் கண்டுபிடிக்கும் அபத்தக்கட்டுரைகளை எழுதவேண்டிய தேவையும் இல்லை.

இப்படிப்பட்ட கட்டுரைகளும் புத்தகங்களும் காலனியாதிக்க விளைவுகளே என்று சொல்லித்தெரியவேண்டியதில்லை. காலனியாதிக்க கருத்துருவங்களில் ஒழுக்க மதிப்பீடுகள் சமூகத்தின் தேவைகளிலிருந்து பெறப்படுவதில்லை. அவை அவர்களது மதப்புத்தகங்களிலிருந்தே பெறப்படுகின்றன. இதனால் வெகுவாக பாதிக்கப்பட்ட இந்தியாவின் இந்த தலைமுறை, மேற்கத்திய மற்றும் மத்திய கிழக்கு மததினர் செய்வதுபோலவே தங்களது ஒழுக்க மதிப்பீடுகளை மாற்றவும், ஆராயவும் இது போல மதப்புத்தகங்களை தேடி ஓடும் அவலம் நிகழ்கிறது. இவ்வாறு காலனிய மனப்பான்மையால் பாதிக்கப்பட்ட மனநோயாளிகள், இந்தியாவை புரிந்துகொள்ள இந்து இலக்கியங்களை படிப்பது மட்டுமின்றி இந்து தத்துவங்களையும் படிக்க வேண்டும். அதுவே அவர்களை அவர்கள் கொண்டுள்ள மனநோய்களிலிருந்து காப்பாற்றும்.

மதரீதியில், என்னுடைய மத புத்தகத்தில் என் கடவுள் இப்படி சொல்லியிருக்கிறார் ஆகையால், ஓரினப்பாலுறவை தடை செய்யவேண்டும் என்று பேசுபவர்கள், இந்த மனிதர்களை படைத்ததாக இவர்கள் நம்பும் அவர்களது கடவுள், ஏன் இந்த மனிதர்களை இப்படி படைத்தார் என்பதையும் தாங்களே கேட்டுக்கொள்ளவேண்டும். இவர்களுடைய கருத்தியலிலேயே இருக்கும் இந்த முரண்பாடு இவர்களுக்கு ஒளி காட்டட்டும்.

பிபிஸியில் இது சம்பந்தமான செய்தியை கேட்டேன். பிபிஸி போன்ற அராஜகமான செய்தி நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் வெட்கப்பட வேண்டும். இன்னும் காலனியாதிக்க மனோபாவம் போகவில்லை என்பதற்கும், அவர்கள் ஒழுக்க மதிப்பீடுகளை நிர்ணயிப்பவர்களாக யாரை நிறுத்துகிறார்கள் என்பதும் அறிவுஜீவிகள் இதய சுத்தியுடன் ஆராயத்தக்கவை.

பிபிஸி செய்தியில் இந்த செய்தியை அறிவித்தவர் ஒரு பக்கம் இதற்காக போராடும் ஆதித்ய பந்தோபாத்யாவையும் மறுபக்கம் இந்தியாவில் 2 சதவீதமே இருக்கும் கத்தோலிக்க கிறிஸ்துவர்களது பிரதிநிதியையும் வைக்கிறார். ஆதித்யா இந்த செய்தியை வரவேற்கும்போது கத்தோலிக்க கிறிஸ்துவ பிரதிநிதி, இந்தியர்களது ஒழுக்கம் இதனால் பாதிக்கப்படும் என்று கவலை தெரிவிக்கிறார். இந்தியாவின் ஒழுக்க மதிப்பீடுகளை நிர்ணயிப்பவர் கத்தோலிக்க கிறிஸ்துவத்தின் பிரதிநிதிதான் போலும்.

இந்தியாவில் பெரும்பான்மையாக இருக்கும் இந்துக்களின் பிரதிநிதியாக ஒருவரையும் காட்டாமல் ஒழுக்க மதிப்பீடுகள் உருவாக்கபப்டுகின்றன. இந்தியாவின் இந்துக்கள் invisible majority போலிருக்கிறது.

உலகின் வேறெந்த நாட்டை விடவும் பழங்காலம் தொட்டே அரவாணிகளுக்கும் ஓரினப்பாலுறவாளர்களுக்கும் ஒரு சமூகத்தையும் பாதுகாப்பையும் ஏற்படுத்தித் தந்த சமூகம் இந்திய சமூகம். அந்த பாதுகாப்பு அவர்கள் தனியாக இருக்கும்போது விவசாயம் சார்ந்த சமூகங்களில் கிட்ட இயலாது என்பதால் புரிந்துணர்வுக்கு ஒரு பக்கம் அர்த்த நாரீஸ்வரரையும் பாதுகாப்புக்கு மறுபக்கம் அரவாணிகளுக்கு ஒரு சமூகத்தையும் கொடுத்த சமூகம் இந்து சமூகம்.

ஆனால், அது ஒரு மெயின்ஸ்டீர்ம் கலாச்சாரமாக என்றுமே ஆகாது. ஓரினப்பாலுறவாளர்கள் விளிம்பு நிலை மனிதர்கள் அல்லர் என்றாலும் அவர்கள் மையக்கலாச்சாரத்தையும் பேஷனையும் நிர்ணயிப்பவர்களாகவும், பேஷனே ஓரினப்பாலுறவு கலாச்சாரம்தான் என்று ஆவதும் தவறானது. அது அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் தொலைக்காட்சி நாடகங்க்ள் சில மூலமாக பரப்பப்படுகின்றன. வில் அண்ட் கிரேஸ் ஆகிய தொலைக்காட்சி நாடகங்களை உதாரணமாக சொல்லலாம்.

அந்த நிலைக்கு இந்தியா வராது என்று நம்புகிறேன்.

(1)In Fruit Flies, Homosexuality Is Biological But Not Hard-wired, Study Shows – Science Daily
http://www.sciencedaily.com/releases/2007/12/071210094541.htm

2)http://en.wikipedia.org/wiki/Homosexual_animals

3) Uncovering India’s oft-denied homosexual past, from Shiva to Babar Same Sex Love in India Ruth Vanita, Saleem Kidwai PENGUIN RS 295 /- PP 370

Series Navigation