ஒளவை பிறக்க வில்லையா ?

This entry is part [part not set] of 50 in the series 20040226_Issue

சி. ஜெயபாரதன், கனடா


பாலின் நிறம்
வெண்மை என்று
சுண்ணாம்பின் சான்றிதழ் வேண்டுமா ?
மீன் குஞ்சு
நீந்து மென்று
கொக்குவின் முத்திரை வேண்டுமா ?
ரோகினி
விண்மீன் என்றோர்
எரி நட்சத்திரம்
பறைசாற்ற வேண்டுமா ?
வைகறைப் பொழுது புலர்ந்ததென
சேவல் கூவித்தான்
காவலர் விழித்தெழ வேண்டுமா ?
மாதவியின்
மடிமேல் தலைவைத்த
கோவலனை
நெற்றிக் கண்ணால் சுட்டெரித்தாய்!
தீக்குளித்த
கர்ப்பிணி சீதாவைக் காட்டுக்கு மீண்டும்
அர்ப்பணம் செய்த
வில்லாதி வில்லன்
இராமனைச்
சொல்லால் அடித்த சூடாமணி நீ!
நள்ளிராப் பொழுதில்
தூங்கும்
நங்கையை விட்டு
நழுவிச் சென்ற
நளச் சக்கரவர்த்தியை
கழுவிச் சென்ற காவியப் பெண் நீ!
மோதிர மிட்ட மாதை மறந்து
நோக விட்ட
துஷ்யந்த மன்னனை
மாலை சூடாது
காலால் எற்றிய வனிதாமணி நீ!
கரையான் தின்னாத,
கால வெள்ளம் அடித்துச் செல்லாத
நூல்களை வடித்த
நூதனப் பெண்ணே!
ஆதிக்க வர்க்கமாய் அடிமைப் படுத்தும்
ஆடவர் முத்திரை நீ
நாட வேண்டுமா ?
ஊன்றுகோல் எதற்கு ஊமைக் குயிலே ?
‘தேன்முட்கள் ‘
என்னும்
உன்னரும் கீதாஞ்சலிக்கு
நோபெல் பரிசளிக்க
ஒளவை ஒருத்தியோ,
ஆண்டாள் ஒருத்தியோ
உன்குலத்தில்
இன்னும் உதிக்க வில்லையா ?

****
jayabar@bmts.com

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா