ஒலிகள் ஓய்வதில்லை

This entry is part [part not set] of 27 in the series 20090507_Issue

அப்துல் கையூம்


சப்தங்கள் அழிவதில்லையாம். அறிவியல் கூறுகிறது. முகவரிகள் தவறிய முகிலினங்களாய் விண்வெளியில் நீந்துகின்றன.

நீச்சலின் நேரம்? ஊஹூம் .. தெரியாது.
உலகம் உள்ளவரை ஒலியலைகள் நிலவும்.

‘வாய்ஸ் மெயிலை’ என்றோ இறைவன் ஏற்படுத்தி விட்டான். நாம் பேசும் ஒவ்வொரு சொல்லும் பதிவாகிறது. இறவா வரம் பெற்று பரந்த உலகில் படர்கிறது. விண்வெளியை வியாபிக்கிறது. சிந்தைக்கு வியப்பூட்டும், கடவுளின் கட்டணமிலா, கம்பியிலா தந்தி மார்க்கம் அது.

ஆபிரகாம் லிங்கன் ஆற்றிய பதவிப்பிரமாணச் சொற்பொழிவை, அன்னப் பறவைபோல் பிரித்தெடுத்து, கேட்கின்ற வாய்ப்பை நாளை நமக்கு விஞ்ஞானம் தந்தாலும் வியப்பதற்கில்லை.

ஆண்டவனின் அற்புத படைப்புகளின் அழகான சூத்திரங்களை ஆராய்ந்தாலே போதும், நாத்திகம் பேசும் வே.மதிமாறன் போன்றவர்கள் கூட ஆத்திகர்களாகி விடுவது கண்கூடு.

காற்றில் மிதக்கும் ஒலிகளிலே
கடலில் மிதக்கும் அலைகளிலே
இறைவன் இருப்பதை நானறிவேன்
என்னை அவனே தானறிவான்

என்று கண்ணதாசன் பாடியது இந்த விஞ்ஞான உண்மைகளைத்தானோ?

அவனது இந்த அமரத்துவம் வாய்ந்த பாடல் வரிகள் கூட இன்னும் ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடத்தான் செய்கிறது.

நதியில் விளையாடி, கொடியில் தலை சீவி, நடந்து வரும் இளந்தென்றலாய், அண்டவெளியில் அலைபாய்கிறது.

கூண்டிலிருந்து பறக்கவிடப்பட்ட சுதந்திரப் பறவைகளாய் ‘ஓசோனை’ நோக்கி ஓசைகள் சிறகடித்து பறந்துக் கொண்டிருந்தன.

எல்லோரும் அமைதியை நாடி போவார்கள். ஓசைகள், ஓசைகளைத் தேடி போய்க் கொண்டிருந்தன.

மண்வெளிக்கும் விண்வெளிக்கும் எண்ணற்ற இடைவெளி. எத்தனையோ வேறுபாடு.

இது ஆசை உலகம்
அது ஓசை உலகம்

இங்கு ஒடுக்கப்பட்டவர்களின் குரல் வெளியே கேட்காது.
அங்கு ஓசைகளை ஒடுக்கும் அநீதச் சட்டங்கள் கிடையவே கிடையாது

அந்த ஒலிகளைக் காண வேண்டும், கேட்க வேண்டும் என்ற ஆவல் மிகுந்து விண்வெளிக்கு அப்பால் நானும் அப் ‘பால்வீதி’யில் பயணித்தேன். பிரமிப்’பால்’ பேச்சிழந்து போனேன். அது ஒரு ‘பசு’மையான அனுபவம்.

சாகாவரம் பெற்று வந்த சப்தங்களின் ஆராவாரப் பிரதேசத்தில் அடியெடுத்து வைத்தேன். இரைச்சல் சாம்ராஜ்ஜியத்தில் எத்தனை எத்தனை ஒலிகள்? உரக்கமான உலகில் உறக்கமில்லாமல் உலா வரும் ஒலியலைகள்.

அங்கு ஓசைகள் மட்டுமே ஜீவராசிகள். ஒலி பெருக்கிகளைக் கூட வெட்கித் தலை குனிய வைக்கும் அப்படியொரு அதிர்வலை. எத்தனை ‘டெஸிபல்’ என்று அளவெடுக்க யாரோ கருவி கொண்டு வந்தார்களாம். அந்தோ.. கருவியின் செவிப்பறைதான் பிய்ந்துப் போனது.

மனிதர்களைக் காட்டிலும் மாறுபட்டிருந்தன ஓசைகள். ஓசைகளில் ஊமைகள் இல்லை. ஓசைகள் மெளன விரதம் இருப்பதில்லை. ஓசைகள் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவதில்லை. ஓசைகளுக்கு பொய்வேஷம் போடத் தெரியாது. அதற்கு வானமே எல்லை.

அண்டங்களைக் கடக்கும் அபூர்வ சக்தி, ஒலிகளுக்கும், ஒளிகளுக்கும் ஆண்டவன் அளித்திருக்கிறான். ஊடுருவிப் பாயும் ஒலியின் வேகம் மாறுபடும். நீரில் வேகமாகவும் காற்றில் மெதுவாகவும் ஒலி சீறிப் பாயும்.

ஆதாம் ஏவாளின் உரையாடல் முதற்கொண்டு ஆஸ்கார் நாயகனின் திரைப்பாடல் வரை உண்டியலாய் சேமித்து வைத்திருந்தது அண்டவெளி.

அதோ.. .. வெகு தொலைவில் திக்கு வாயாய் தட்டுத் தடுமாறி பேசிக்கொண்டிருந்த ஓசையொன்று முதல் ஆளாய் கண்ணெதிரே தோன்றி கனிமொழியைக் காட்டியது. அருகில் சென்று “யார் நீ?” என்று வினவியபோது ‘எதிரொலி’ என்று தன்னை அறிமுகம் செய்துக் கொண்டது. “மலைமுகட்டிலிருந்து ஒலியெழுப்புகையில் மறுபடியும் ‘பூமராங்’காய் திரும்ப வருமே. அதுவா நீ?” என்றேன். “ஆம்” என்றது. அண்டவெளியில் நீச்சலடிக்கும் அத்தனை ஒலிகளையும் அடையாளம் காட்டுவதாகக் கூறி அழைத்துச் சென்றது.

என் மேனியெங்கும் வியர்வைத் துளைகளாய் காதுகள் முளைத்தன. யாரோ அங்கு சாணம் பிடித்துக் கொண்டிருந்தார்கள். என் காதுகளையும் கூராக்கிக் கொண்டேன். ‘ஆயிரம் காது போதாது வண்ணக்கிளியே!’ என்ற பாடலை என்னுள்ளம் முணுமுணுத்தது.

எங்கெங்கு காணினும் ஓசைகள். பால்வீதி, ரெங்கநாதன் தெருவாக மாறியிருந்தது.

கேட்க மட்டுமே முடிந்த ஓசைகளை இங்கு பார்க்கவும் முடிந்தது. சிலதுகளைக் காண்கையில் நமக்கு புன்சிரிப்பு. சிலதுகள் தந்தது மனதுக்குள் மத்தாப்பு, இன்னும் சிலதுகளைப் பார்த்தாலே அருவறுப்பு.

எம்பி எம்பி குதித்துச் செல்லும் ‘ஆச்சரியங்கள்’/ ஒளிவு மறைவின்றி நிர்வாணச் சாமியாராய் பாதயாத்திரை போகும் ‘உண்மைகள்’/ கூனிக்கிழவியாய் தள்ளாடிச் செல்லும் ‘கேள்விகள்’/ திருப்தியுற்று அமைதியாக நடந்துச் செல்லும் ‘பதில்கள்’/ திமிரேறி நெஞ்சை உயர்த்திச் செல்லும் ‘கட்டளைகள்’/ அடக்க ஒடுக்கத்துடன் பணிவாய்ச் செல்லும் ‘வேண்டுகோள்கள்’/ ஆனந்தமாய் கும்மியடித்துச் செல்லும் ‘காதல் மொழிகள்’/ ஊனமுற்று சக்கர நாற்காலிகளில் செல்லும் ‘அவதூறுகள்’/ துர்நாற்றம் வீச கடந்து போகும் ‘எசவு மொழிகள்’/ அனல் பறக்கும் தீப்பொறியாய் பறந்துச் செல்லும் ‘சாபங்கள்’ .. ..

அதோ.. .. தலைப்பாகை அணிந்து கம்பீர மிடுக்குடன் யாரோ ராஜநடை நடந்து வருகிறார்கள். கண்ட மாத்திரத்தில் கைகூப்பி கும்பிடத் தோன்றுகிறது. அவைகள் மத குருமார்களின் ஆன்மீக உரைகளாம். எதிரே வந்தவர்களை ‘எதிரொலி’ அறிமுகம் செய்தது.

ஒரிடத்தில் பார்த்தபோது ஒரே நிசப்தம். சப்த ராஜ்ஜியத்தில் நிசப்தமா? ஒன்றுமே புரியவில்லை. “உஷ்…” என்றது எதிரொலி. யாரென்று வினவினேன். அவை ‘இரகசியங்க’ளாம். பெரும்பாலும் பெண்குரல்கள்தான். பெண்களிடம் இரகசியங்கள் தங்காது என்பது உண்மைதான் போலும்.

திரும்பிய இடமெல்லாம் தென்பட்டது “அறிவுரைகள்”தான். சீனர்களைப்போல் ஜனத்தொகையில் மிகுந்திருந்தது. “கேட்காமலேயே உலகில் இலவசமாக கிடைப்பது அட்வைஸ் ஒன்றுதான்” என்று யாரோ சொன்னது நினைவுக்கு வந்தது.

அதோ தலைகவிழ்ந்து முக்காடிட்டு யாரோ செல்கிறார்கள். வெட்கித் தலைகுனியும் அளவுக்கு அப்படியென்ன நடந்து விட்டது? அவைகள் அரசியல்வாதிகளின் ‘வாக்குறுதி’களாம். நிறைவேற்றுவோம் என்று கூறி காற்றில் பறக்கவிடப்பட்வை தலைநிமிர்ந்து எங்கே நடப்பது?

மின்னல் வேகத்தில் யாரோ பந்தய வாகனத்தில் என்னைக் கடந்து போனார்கள். உடனே யாரென்று புரிந்துப் போனது. வேறு யார்? ‘வதந்திகளே’தான்.

நடக்கவும் திராணியற்று, படுத்த படுக்கையாகி, தொண்டை வற்றிப்போன ஓசைகளை சிலர் பரிதாபமாக தூக்கிக்கொண்டு போனார்கள். இவைகள் ஈழம். ஈராக், பாலஸ்தீனம் நாடுகளிலிருந்து அவ்வப்போது இறக்குமதியாகிக் கொண்டிருக்கும் “மரண ஓலங்கள்”. காணச் சகியாமல் கண்களை இறுக மூடிக் கொண்டேன். என் கன்னங்களில் கண்ணீருக்கு பதிலாக செந்நீர் உருண்டோடியது.

சேதாரமேயின்றி ஆதாரங்களாய் ஆகாயத்தில் திரியும் நம் வாக்குமூலங்களை பார்க்கும் போது ஒரு உண்மை நன்றாக விளங்கியது. ‘அக்கம் பக்கம் பார்த்து பேசு’, ‘சுவர்களுக்கும் காதுகள் இருக்கின்றன’, ‘வார்த்தையை அளந்துப் பேசு’, ‘வார்த்தையைக் கொட்டி விடலாம் ஆனால் அள்ள முடியாது’ போன்ற அறிவுரைகள் எத்துணை மகத்துவம் வாய்ந்தது என புரிந்தது.

“தீயினால் சுட்டபுண் ஆறினும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு”

என்ற பொய்யாமொழிப் புலவனின் வார்த்தைகளை ஓசை ஒன்று நெருங்கி வந்து என் காதில் கிசுகிசுத்து விட்டுப் போனது..

அப்துல் கையூம்
vapuchi@hotmail.com

Series Navigation

author

அப்துல் கையூம்

அப்துல் கையூம்

Similar Posts