ஒரு விலங்கு.

This entry is part [part not set] of 35 in the series 20100121_Issue

எஸ். ஜெயலட்சுமி”விசாலம் என்ன பண்ணிக்கிட்டிருக்கீங்க? ·ப்ரீயாக இருக்கீங்களா? உங்ககிட்ட சில விஷயங்கள் கேக்கணும். ஒங்களுக்கு வேலை ய்¢ருந்தால் அப்பறமா வரேன். அவசரம் ஒண்ணும் இல்லை”, என்றார் நாராயணன்”. எனக்கொண்ணும் அவசர வேலை இல்லை. நீங்க வந்த விஷயத்தைச் சொல்லுங்க என்றாள்” விசாலம்.
உள்ளே வந்தவரைப் பிரம்பு சோபாவில் உட்காரும்படி சொல்லிவிட்டுத் தானும் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டாள்.

”இல்லம்மா, ம்ம்ம்…வந்து.. என்சொந்தக்காரருக்கு ஒரு பெண் குழந்தையிருக்கு. குழந்தைன்னும் சொல்ல முடியாது. ஒரு விதத்தில கொழந்தை தான். வயசுக்குத் தகுந்த மூளை வளர்ச்சி கெடயாது தன் வேலைகளைத் தானே பாத்துக்கத் தெரியாது. தெரியாதுன்னு சொல்றத விட முடியாதுன்னு தான் சொல்லணும். இந்தப் பொண்ணத்தவிர ஒரு பையனும் இருக்கான். இந்தப் பொண்ணு பொறந்த அதே வயத்தில தான் அந்தப் பையனும் பொறந்தானான்னு தோணும். அவ்வளவு கெட்டிக்காரன். படு சுட்டி. மெரிட்லயே அவனுக்கு சீட் கெடச்சு மேல் படிப்பு படிக்க அமெரிக்கா போயிருக்கான். அவனப் பத்திக் கவலையில்லை. ”என் சொந்தக்காரர் போன வருஷம் ரிடயர் ஆயிட்டார். பென்ஷன் வாங்கறார். அவங்க வீட்டம்மாவுக்கு எப்பவும் இந்தப்பொண்ணப் பத்தித்தான் கவலை. கவலைப் பட்டுக் கவலைப் பட்டு அதனாலேயே பிரஷர், ஷ¤கர், எல்லாம் அதிகமாகி,அடிக்கடி ஒடம்பு சரியில்லாமல் போறது. நம்ம காலத்துக்கப்பறம் இந்தப் பொண்ண யாரு பாத்துப்பா? பையன் அமெரிக்கால செட்டிலாயிட்டா?வர்ர மருமக எப்படியிருப்பாளோ?இப்படி பல கவலைகள்.

”இப்ப புதுசா ஒரு G.O.வந்திருக்குன்னு யாரோ சொன்னாங்களாம். அவருக்கும், அவர் மனைவிக்கும் அப்பறமாக்கூட அந்த மாதிரி மூளைவளர்ச்சி கொறஞ்ச பிள்ளைகளுக்கும் கூட பென்ஷன் வருமாம். ஒங்ககிட்ட அந்த G.O. காப்பியிருந்தா குடுங்களேன். அவருக்கும் ரொம்ப ஒதவியாயிருக்கும் அந்த அம்மாவுக்கும் மனசு சமாதானமா யிருக்கும். அவங்க காலத்துக்கப்பறம் இந்த பென்ஷன் பணம் வந்தால் ஒருவேளை யாராவது பாத்துக்கலாம். இல்லாட்டா ஏதாவது ஒரு அமைப்பு இருந்தால் அதிலகூட சேக்கலாமில்லியா? என்றார். ”ஆமாம், அந்த மாதிரி ஒரு G.O. வந்துருக்குன்னு நானும் கேள்விப்பட்டேன். ஆனா அதப்பத்தின முழு வெவரமும் தெரியல. எங்க ஆபீசுக்குக் காப்பி வரலை. வந்ததும் காப்பியெடுத்துத் தரேன்” என்றாள் விசாலம்.”சரிம்மா நான் வரேன்” என்று நாராயனன் போய் விட்டார்.

நாராயணன் அந்தப் பெண்ணைப் பற்றிச் சொன்னதிலிருந்து விசாலத்தின் மனம் சிண்டுவைப் பற்றியே சுற்றிச் சுற்றி வந்தது. அவள் மனம் பல வருஷங்கள் பின் நோக்கிச் சென்றது. அவளுக்குப் பத்து வயசிருக்கலாம். விசாலத்தின் அப்பா உள்ளூர் பள்ளியில் ஆசிரியராக இருந்தார். அவரோடு அதே பள்ளியில் தமிழாசிரியராக வேலை பார்த்தார் கோபாலன். கோபாலன் சார் எப்பொழுதும் கதர் வேஷ்டியும் கதர் ஜிப்பாவும் தான் அணிவார். சார், அவர் மனைவி மைதிலி இருவருமே நல்ல உயர மாகவும் நல்ல கலராகவும் இருப்பார்கள். ரெண்டுபேரும் சேர்ந்தாற்போல் வெளியில் போனால் ஜோடிப் பொருத்தம் ஜோராக இருக்கும்.’மேட் ·பார் ஈச் அதர்’ என்று சொல்லத் தோன்றும்.

விசாலம் அவர்கள் வீட்டுக்குக் கதைப் புஸ்த்தகங்கள் படிக்கப் போவாள். கல்கியின் சரித்திரநாவல்கள், தேவனின் நாவல்கள்,டாக்டர் மு.வ வின் நாவல்கள் எல்லாம் அங்கே தான் படித்தாள். விசாலத்தின் தம்பி ராமன் மாமியின் செல்லப் பிள்ளை. சாருக்கும் அவனிடம் பிரியம் உண்டு. பேச்சுப் போட்டிகளில் சேரச்சொல்லி தானே எழுதிக் கொடுப்பார். அப்படி எத்தனையோ போட்டிகளில் அவர் எழுதிக் கொடுத்து மாவட்ட அளவில் ராமன் நிறைய கோப்பைகள் வாங்கி யிருக்கிறான். ஒரே தலைப்பை ஆதரித்தும், மறுத்தும் எழுதிக் கொடுப்பார். எப்படி பாவத்தோடு பேச வேண்டும் என்றும் சொல்லிக் கொடுப்பார்.

விசாலம், மாமி வீட்டுக்குப் போன போதெல்லாம் அந்தக் குழந்தையைப் பார்த்திருக்கிறாள். ஆனால் கூர்ந்து கவனித்த தில்லை. குழந்தையின் பெயர் சிண்டு. மாமியைப் போலவே சிண்டுவும் நல்ல கலராக இருக்கும். எஸ்.எஸ் எல்.சி. பரி¨க்ஷ கழிந்த பின் லீவில் மாமி வீட்டுக்குப் போக ஆரம்பித்தபிறகு தான் சிண்டுவை நன்கு கவனித்தாள். சிண்டு எல்லாக் குழந்தைகளையும் போல ஓடியாடி விளையாடவில்லை. போட்ட இடத்தி லேயே கிடந்தது. அவளோடொத்த குழந்தைகளெல்லாம் ஸ்கூலுக்குப் போகத் தொடங்கிய பின்னும் சிண்டு மட்டும் ஏன் இப்படி? விசாலம் தன் அம்மாவிடம் கேட்டாள்.

அம்மா சொன்னாள் சிண்டுவுக்கு மூளை வளர்ச்சி யில்லையாம். பத்து வயசில் ரெண்டு வயசுக் கொழந்தைக்கு இருக்கும் மூளை வளர்ச்சி தான் இருக்குமாம். மைதிலி மாமிக்கு இதுக்கு முன்னால எத்தனையோ கொழந்தைகள் குறைப் பிரசவமாகி கடைசில இந்தச் சிண்டு பொறந்ததாம்.

சிண்டுவுக்குக் கண் மாறு கண்ணாயிருக்கும் வாயிலிருந்து எச்சில் வழிந்து கொண்டேயிருக்கும். முகமும் களை யில்லாமல் கொஞ்சம் விகாரமாயிருக்கும். இதையெல்லாம் இப்பொழுது தான் விசாலம் கவனித்தாள். ஆனால் மாமி பாவம். சிண்டுவுக்கு ஆசை ஆசையாக நல்ல நல்ல சட்டை கவுன் எல்லாம் தைத்துப் போடுவாள். கொஞ்ச நாளில் சிண்டு உயரமாக வளர்ந்தது. கொஞ்சம் நடக்கவும் ஆரம்பித்தது. மாமிதான் அவளை இழுத்துக் கொண்டு போய் குளிப்பாட்டிக் கூட்டிக் கொண்டு வருவாள்.

கோபாலன் சாருக்கு ரங்கராஜன் என்று ஒரு தம்பி. நல்ல வேலைபார்த்து வந்தான். மாமிக்கும் ஜெயந்தி என்று ஒரு தங்கை. இவர்கள் இருவருக்கும் கல்யாணம் பண்ணி வைத்தால்,தங்கள் காலத்துக்கப்புறம் சிண்டுவுக்கு ஒரு ஆதரவு கிடைக்கும் என்று நினைத் தார்களோ என்னவோ, இருவருக்கும் கல்யாணம் பண்ணி வைத்தார்கள். இதற்குள் விசாலமும் கல்யாணமாகி மதுரை போய் விட்டாள்.

ராமன் கல்யாணத்திற்காக ஊர் வந்த விசாலம் மாமியை அழைக்கப் போனபோது சிண்டுவைப் பார்த்தாள். சிண்டு, கையில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடித்துண்டை வைத்துக் கொண்டிருந்தாள். ”மாமி, கண்ணாடி ஒடஞ்சிருக்கே, சிண்டு கையில கீறிக்காம இருக்கணுமே,”என்று கவலையோடு கேட்டாள்விசாலம்.
”அதெல்லாம் செய்ய மாட்டாள். ஆனா,கண்ணாடிய வாங்கினா கத்துவாள்.” என்றாள். மாமி எவ்வளவோ துப்புரவாக உடனுக்குடன் துணிகளை மாற்றிய போதிலும் கூட ஒரு வாடை தெரிந்தது. மூத்திரத் துணிகளை மாற்றி வேறு பாவாடை கட்டிவிட்டு வந்தாள் மாமி. பாவம் மாமி என்று நினத்தாள் விசாலம்.

அம்மாவிடம் மாமியின் கஷ்டங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தாள். ”ஆமாம்,ரொம்பக் கஷ்டம் தான். ஒரு எடத்துக்குப் போகமுடியாது. சார் இருந்தால் கொஞ்ச நேரம் வாசல்ல வந்து உக்காருவாள். சில சமயம் ரொம்ப வருத்தப் படுவாள்.
’’மாமி, ஒங்க விசாலத்துக்கு பொறக்கத் தவசிருக்கணும். நான் சிண்டு இறக்கத் தவசிருக்கணும் நான் இப்படிச் சொல்லறேனேன்னு நெனச்சுக்காதேங்கோ. இது கால் கட்டுத்தானே மாமி? கால்கட்டுக் கூட இல்லை. கால் வெலங்கு! நானும் போய் இது திண்டாடக் கூடதில்லையா? என் பொறியை நானே தொலைக்கணும். இன்னொருத்தர் தலைல கட்டக் கூடாதில்லையா?’’ என்பாளாம். ஜெயந்திக்கு சீமந்தம் வரப் போவதாக அம்மா சொன்னதைக் கேட்க சந்தோஷமாக இருந்தது. அவள் குழந்தை விளையாடிப் பார்க்கும் போது மாமிக்கும் சாருக்கும் கொஞ்சம் சந்தோஷமாயிருக்கும் என்று நினைத்தாள் விசாலம்.

விசாலம், அவள் கணவர் இருவருக்குமே சென்னைக்கு மாற்றலாகி விட்டதால் அவள் ஊர்ப் பக்கமே வரமுடிய வில்லை. விசாலத்தின் அம்மா அப்பா இருவரும் டில்லி போகும் வழியில் சென்னை வந்தனர். ஊரைப் பற்றிப் பேச்சு வந்ததும்,ஜெயந்திக்கு என்ன குழந்தை பிறந்திருக்கிறது என்று ஆவலோடு கேட்டாள் விசாலம்.
”அந்த வயித்தெரிச்சலக் கேக்காதே, ஜெயந்திக்கும் சிண்டுவைப் போலவே ஒரு பொண் கொழந்தை பொறந்தது. எந்த வம்சத்துக் குத்தம்னு தெரியல. ஒரே அக்கா தங்கையும் ஒரே அண்ணன் தம்பிக்கு வாக்கப் பட்டதால எந்த ரத்தத்தில கொறைன்னு கண்டுபிடிக்க முடியல. அந்தக் கொழந்தயப் பாத்துப் பாத்து ஏங்கி ஏங்கி மனோ வியாதியிலேயே ஜெயந்தி போய்ச் சேந்துட்டா. ஜெயந்தியும் ரெங்கனும் சிண்டுவுக்கு ஆதரவா இருப்பான்னு நெனச்சா, நேர் மாறா நடந்து போச்சு”.என்றாள் அம்மா.

விசாலத்துக்கு ஒரே ஷாக்! இப்படியும் நடக்குமா? விஞ்ஞானம் எவ்வளவோ முன்னேறியும் கூட சிலவற்றுக்குக் காரணம் தெரிவதில்லை. மைதிலி மாமிக்கு ஏற்கெனவே ஒரு விலங்கு. இப்போ இரு விலங்கு! கடவுளே, இது என்ன சோதனை? மாமி எவ்வளவு கஷ்டப் படுவாள் என்று நினைத்தே பார்க்க முடியவில்லை.

அப்பாவின் ஷஷ்டிஅப்த பூர்திக்காக விசாலம்
வந்தபொழுது உடனடியாக மாமியைப் பார்க்க முடியவில்லை. முகூர்த்த நேரத்தில் மாமி மட்டும் வந்து தாம்பூலம் வாங்கிக் கொண்டு போனாள். சார் வரவில்லை. இரண்டு பேரில் ஒருவர் இல்லாவிட்டால் சிண்டு கத்திக்
கூப்பாடு போட்டு ஊரைக் கலக்கி விடுவாளாம். விசாலம், மாமிக்குச் சாப்பாடு கொண்டு போனாள். ஜெயந்தியின் குழந்தை எங்கே என்று
தேடியபோது ”அது போயிடுத்து” என்றாள் மாமி.’ ‘நல்ல காலம் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள் விசாலம். ”ஒரு விலங்கு
கழண்டாச்சு, இன்னும் ஒரு வெலங்கு இருக்கே! என்று மாமி விரக்தியுடன் சொன்ன போது விசாலத்தின் நெஞ்சு கனத்தது.மாமியின் வருத்தமும் புரிந்தது.
விசாலத்திற்கு நாகர்கோவிலுக்கு மாற்றலாகவே
மீண்டும் ஊருக்கு வந்தாள் விசாலம். மாமியைப் பார்க்கக் கிளம்பிய
பொழுது அம்மா சொன்னாள் .”கோபாலன் சார் பாக்குக் கடிக்கற நேரத்துக்குள்ள ஹார்ட் அட்டாக்கில ப்ராணன விட்டுட்டார். மாமி
தனியாயிருக்க முடியாதுன்னு அவ தம்பி ராஜாமணியோட போயாச்சு.
சார் போய் ஒரு மாசமாச்சு”. விசாலத்துக்கு கேக்கவே கஷ்டமா
யிருந்தது. மாமியின் கஷ்டங்களுக்கு முடிவேயில்லையா? என்று தோன்றியது. விசாலத்தைப் பார்த்ததும் மாமி அவளைக் கட்டிக் கொண்டு
கதறித்தீர்த்து விட்டாள். நான் ஜெயந்திய மலை போல நம்பிண்டிருந்தேன் அவள் மஹராஜியாப் போய்ச்சேர்ந்துட்டா. சாரும் போயிட்டார் நான் இத வெச்சிண்டு என்ன செய்யப் போறேனோ? நான் போறதுக்கு முன்னாடி இது போகணுமே, என்று குமுறிக் குமுறி அழுதாள். ஒரு தாயின் தவிப்பு எப்படியெல்லாம் பேச வைக்கிறது.! மாமியின் நியாயமான கவலையை அவள் புரிந்து கொண்டாள். அங்கிருந்து வந்து வெகு நாட்கள் வரை மாமியின் நினைவாகவே இருந்தது

மைதிலி மாமிக்கு இப்போ பேமிலி பென்ஷன் வந்துகொண்டிருக்கும். மாமியின் காலத்திற்கு அப்புறமும் இந்த G.O.
படி பென்ஷன் கிடைக்குமானால் மாமிக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் நாராயணன் சொன்னது போல அந்தத் தாயுள்ளத்திற்கு இந்த G.O ஒரு வரப்பிரசாதம் தான்! மாமிஅம்பாசமுத்திரத்தில் தான் இருக்கி றாளா என்று விசாரிக்க வேண்டும். மாமிக்கும் ஒரு காப்பி கொடுத்து அப்ளை பண்ணச் சொல்ல வேண்டும்.என்று நினைத்துக் கொண்டாள்.

மைதிலிமாமியின் விலாசமும் போன் நம்பரும் எழுதி வைத்திருக்கும் டைரியைத்தேட ஆரம்பித்தாள் விசாலம்.

Series Navigation

எஸ் ஜெயலட்சுமி

எஸ் ஜெயலட்சுமி