ஒரு விருதும் நாவல் புனைவிலக்கியமும்

This entry is part [part not set] of 46 in the series 20040129_Issue

காஞ்சனா தாமோதரன்


‘இலக்கிய அந்தஸ்து அல்லது அழகியல் சாதனை அல்லது மானுட அறிவின் தடங்கள் அங்கிருக்குமென நம்பி விருது வழங்கியது அவர்களது முட்டாள்தனத்துக்கு அத்தாட்சி. ‘

முட்டாள் பட்டம் பெற்றவர்கள், அமெரிக்கத் தேசீயப் புத்தக நிறுவனத்தின் இலக்கிய விருது-2003 தேர்வுக்குழு அங்கத்தினர்கள். முட்டாள் பட்டமளிப்பு விழா நடத்தியவர், மேற்கத்திய/ஆங்கில இலக்கியத்தின் பாதுகாவலராகத் தன்னை நியமித்துக் கொண்டிருப்பவரும் மதிப்புக்குரிய யேல் பல்கலைக்கழகத்தின் இலக்கியப் பேராசியருமான ஹரால்ட் ப்ளூம். ‘இலக்கிய அந்தஸ்தோ அழகியல் சாதனையோ மானுட அறிவின் தடங்களோ ‘ இல்லாத நாவல்களின் அடிப்படையில் பெருமதிப்புள்ள வாழ்நாள் இலக்கியப் பங்களிப்பு விருதைத் தட்டிச் சென்றவர், வெகுமக்களிடையே வெற்றியடைந்த பல ‘பயங்கரக் ‘ கதைகளை வடித்த பிரபல அமெரிக்க எழுத்தாளர் ஸ்டாவன் கிங்.

ஸ்டாவன் கிங்கையும் விருது வழங்கியவர்களையும் திட்டிப் பேராசிரியர் ஹரால்ட் ப்ளூம் தீட்டிய கோபக் கட்டுரைகள் — முட்டாள் பட்டங்களையும் சேர்த்துத்தான் — ‘லாஸ் ஆஞ்சலிஸ் டைம்ஸ் ‘ மற்றும் ‘பாஸ்டன் க்ளோப் ‘ நாளிதழ்களின் தலையங்கப் பகுதிப் பத்திக்கட்டுரைகளாக வெளிவந்தன. மின்னஞ்சல் மூலம் நாட்டின் இலக்கிய ஆர்வலர்களால் பகிர்ந்து கொள்ளப்பட்டன. அட்லாண்ட்டிக் சமுத்திரத்தின் மறுகரையிலும் விவாதிக்கப்பட்டன.

இலக்கியப் புனைவு என்றால் என்ன ? வெகுமக்கள் கதை என்றால் என்ன ? இரண்டும் வேறு வேறா ? ஏன் ? எப்படி ? கேள்விகள். கருத்துகள். அலசல்கள்.

முதலில், ஹரால்ட் ப்ளூம் பற்றி: ஆங்கில இலக்கியத்தைப் போதிக்க, ஆய்வு செய்ய, விமரிசனம் செய்யத் தன் வாழ்வை அர்ப்பணித்த 73 வயதுப் பேராசிரியர். முக்கிய விமரிசனப் புத்தகங்களை எழுதியவர். டான்டே, சாஸர், ஸெர்வான்டெஸ், ஷேக்ஸ்பியர் முதலானோரின் செவ்விலக்கியங்களை நிச்சயமாய்க் கற்றறிய வேண்டுமென்பவர். ஷேக்ஸ்பியரை உண்மையான பன்மைக்கலாச்சார இலக்கியவாதியாக, இலக்கியக் கடவுளாகவே பார்ப்பவர். இன்றைய அமெரிக்கப் பல்கலைக்கழக இலக்கிய வாசிப்பு/கல்வி தேய்ந்து அரசியலாக மாறிப் போனதாய் வருந்துபவர். சரித்திரபூர்வமாக ஒடுக்கப்பட்டவர்களான பெண்கள், ஆஃப்ரிக்க-அமெரிக்கர்கள், பிற இனத்தவர் மற்றும் மார்க்ஸீயவாதிகள் ஆகியோரின் அடையாள அரசியல் இலக்கியத்தை நசுக்குவதாய்க் கருதுபவர்; ஃபூக்கோ முதலான ஃப்ரெஞ்சுச் சிந்தனையாளர்களால் வந்த வினை இது என்பவர். ‘வெகுமக்கள் கலாச்சாரம் எனப்படும் குப்பைமேட்டின் மீது ஆர்வமுள்ள பேராசிரியர்களே என்னைச் சுற்றியிருக்கிறார்கள்; ப்ரெளஸ்ட், ஷேக்ஸ்பியர், டால்ஸ்டாய் ஆகியோரின் மீது இவர்களுக்கு ஈடுபாடில்லை; இன்றைய அமெரிக்கப் பல்கலைக்கழக இலக்கிய விமரிசனமென்பது ஸ்டாலினற்ற ஸ்டாலினிஸமே; பன்முகக்கலாச்சார இலக்கியக் கல்வியென்ற பெயரில் கடுங்கோபத்திலும் இலட்சியவாதத்திலும் ஊறிய பெண்/கறுப்பின/பிற இன எழுத்தாளர்களின் எழுத்து இங்கே திணிக்கப்படுகிறது. ‘

அடுத்து, ஸ்டாவன் கிங் பற்றி: கீழ்மத்திய வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பம். இவருக்கு இரண்டு வயதாகும்போது வீட்டை விட்டு ஓடிப்போன அப்பா. எங்கெல்லாம் வேலை கிடைக்குமோ அங்கெல்லாம் இடம்பெயர்ந்து இவரையும் இவரது அண்ணனையும் ஒற்றையாக வளர்த்த அம்மா. வறுமையில் காதல் மணவாழ்வு. பள்ளிக்கூட வாத்தியார் வேலை. முதல் நாவலின் எதிர்பாராத வாசக வெற்றி. பணம். புகழ். தொடர்ந்து சில நாவல்களின் வெற்றி. இன்னும் பணம். இன்னும் புகழ். போதைமருந்துக்கும் குடிக்கும் அடிமையாதல், அடிமைத்தனத்திலிருந்து மீளுதல். எழுத்து. பணம். புகழ். அமெரிக்கத் தேசீயப் புத்தக நிறுவனத்தின் வாழ்நாள் இலக்கியப் பங்களிப்பு விருது. ‘ஒரு வெற்றுப் பக்கத்தைப் பக்தியுடனோ கேள்வியின்றியோ அணுகுங்களென்று சொல்லவில்லை; ‘அங்கீகரிக்கப்பட்ட ‘ அரசியலுடனோ நகைச்சுவை உணர்வின்றியோ அணுகுங்களென்றும் சொல்லவில்லை. இது பிரபல்யத்துக்கான போட்டியோ, ஒழுக்க ஒலிம்பிக்ஸோ, தேவாலயத் தொழுகையோ அல்ல. இது எழுத்து. காரைக் கழுவுவதோ கண்ணுக்கு மையிடுவதோ அல்ல. தீவிர மனநிலையுடன் இதில் இறங்க முடியுமென்றால், செய்யுங்கள். இல்லையெனில், புத்தகத்தை மூடிவிட்டு வேறு வேலை செய்யப் போங்கள். ‘

ஸ்டாவன் கிங்கின் புத்தகங்கள் ஒவ்வொன்றும் பல மில்லியன் பிரதிகள் விற்பவை. பல நாவல்கள் திரைப்படங்களாகவும், சின்னத்திரைக்கான முழுநீளப் படங்களாகவும் வெற்றி பெற்றிருக்கின்றன. ஸ்டான்லி கூப்ரிக் இயக்கி, ஜாக் நிக்கல்சன் நடித்த ‘ஷைனிங் ‘ போன்ற பயங்கரப் படங்களை ரசித்திருக்கிறேன். ‘இட் ‘ போன்ற நாவல்களை வாசிக்கத் துவங்கிப் பயந்து போய் முடிக்க இயலாமல் பாதியிலேயே விட்டிருக்கிறேன். ஆழ்மனக் கனவுகளைப் பூர்த்தி செய்வதற்கு மனிதர் தரும் விலை பற்றிய ‘நீட்ஃபுல் திங்ஸ் ‘ போன்ற நாவல்களில் செவ்விலக்கியச் சாயல்கள் உண்டு (Goethe-யின் ஃபெளஸ்ட் போல்). மனித மனதின் பயங்களையும் இருண்மைகளையும் ஆசைகளையும் புரிந்த அடிப்படையில், எளிய மொழியில் எழுதப்பட்ட நாவல்கள் இவருடையவை. அவரது இளம்பருவத்தைப் பற்றி அவர் சொல்லுவதை அவரது எழுத்துடன் பொருத்திப் பார்க்கலாம்: ‘பனிமூட்டத்தினூடே ஆங்காங்கே தனித்துத் தெரியும் மரங்கள் போல் சிற்சில குழந்தைப்பருவ நினைவுகள்…..என்னைத் துரத்திப் பிடித்துத் தின்னப் போவது போல் தோன்றும் நினைவுகள். ‘

ஆனால், அவரது பதிப்பகத்தின் லாபத்தைப் பெருக்குவது தவிர அவரது எழுத்து மானுடகுலத்துக்கு என்ன செய்திருக்கிறது என்று கேட்கிறார் ப்ளூம். இப்படியே போனால், அடுத்த இலக்கிய நோபெல் பரிசு ‘ஹாரி பாட்டர் ‘ சிறுவர் நாவல்களை எழுதிய ரெளலிங்கிற்கா என்று கோப-வேதனைக் கிண்டல் செய்கிறார். சால் பெல்லோவும் ஃபிலிப் ராத்தும் பெற்ற இலக்கிய விருது வரிசையில் ஸ்டாவன் கிங்கா என்று புழுங்குகிறார். இன்று பாராட்டு பெற வேண்டிய அமெரிக்க நாவலாசிரியர்கள் நான்கு பேர் மட்டுமே என்கிறார்: சால் பெல்லோ, ஃபிலிப் ராத், தாமஸ் பின்ச்சான், டான் டெலில்லோ.

ஸ்டாவன் கிங் சால் பெல்லோவோ தாமஸ் பின்ச்சானோ அல்லதான். கிங் எழுதியவற்றில் குறிப்பிட்ட விழுக்காட்டை pulp என்று வகைப்படுத்த முடியும்; மிஞ்சுவதில், தன் எழுத்துவகை/genre-க்கும் தனது எழுத்துக்கும் உரிய உண்மையுடன் ஸ்டாவன் கிங் செயல்படுவதாய் என் வாசக அனுபவம் சொல்லுகிறது. அவரது ‘ஆன் ரைட்டிங் ‘ என்னும் சுயசரிதை நூலை வாசிக்கையில் அவரது வெற்றி பெற்ற நாவல் பாத்திரங்கள் பலரும் அவரைச் சுற்றியிருந்தவர்களின் புனைவு வடிவங்கள் என்பதும், அவர்களது குணாதிசயங்களை எவ்வளவு கூர்மையாக அவர் அவதானித்திருக்கிறார் என்பதும் புரியும். யதார்த்தத்தைக் கற்பனை மூலம் நீட்டிக் கதை சொல்லும் திறன் புரியும். பரந்துபட்ட அமெரிக்க எழுத்தில் இவருக்கும் இடமுண்டு.

ஆனால், இந்த விவாதம் கிங்கின் எழுத்து பற்றியது மட்டுமல்ல.

ப்ளூமின் குற்றச்சாட்டு கிங்கின் எழுத்து மீதான விமரிசனத்தைத் தாண்டி, ஓர் ஆழமான சமூக விமரிசனத்தைக் கோரி நிற்பது. ஆகவே முக்கியமானது. அவரது கேள்வியில் பொதிந்துள்ள குறுகல் பார்வையும் மேட்டிமைத்தனமும் அவரது உண்மையான கேள்வியைப் பின்தள்ளி விட்டது துரதிர்ஷ்டவசமே.

இன்றைய சிறந்த அமெரிக்க நாவலாசிரியர்களாக ப்ளூம் முன்வைக்கும் பெயர்களில் நோபெல் விருதாளரான டோனி மாரிசனைக் காணவில்லை (கறுப்பினப் பெண்ணாய்ப் பிறந்த டோனி மாரிசன் எழுத்துப் பற்றி ப்ளூம் தன் புத்தகங்களில் அலசியிருந்துமே). ஜான் அப்டைக்கைக் காணவில்லை. நேடின் கோடிமரைக் காணவில்லை. காணாமல் போனோரின் பட்டியல் இன்னும் நீளமானது. தன் பட்டியலைத் தர்க்கரீதியாகப் பொது மக்களுக்கு விளக்க ப்ளூம் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. விரிவான, ஆழமான, தொடர்ச்சியான, பன்மையான விமரிசன மரபுள்ள ஒரு மொழியின் தற்கால நாவல் இலக்கியத்தில், அந்த விமரிசனத்துக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்திருக்கும் ப்ளூம், நான்கே நாவலாசிரியர் பெயர்களை விளக்கமின்றி வெகுமக்கள் நாளிதழ்களில் சொல்லிச் செல்லுவது வாசகருக்கும் இலக்கியத்துக்கும் இழைக்கும் அநீதியாகும்.

பெண்ணிலைவாதிகள், கறுப்பினத்தவர், பிற இனத்தவர், மார்க்ஸீயவாதிகள் எல்லாரும் கடுங்கோபமும் இலட்சியவாதமும் பிரிவினைவாதமும் உள்ளவற்றை எழுதி, இலக்கிய வாசிப்பையும் அழகியலையும் கெடுத்து விட்டதாய் அங்கலாய்க்கிறார் ப்ளூம். இவர் வணங்கும் ஐரோப்பியச் செவ்விலக்கியம் விமரிசனத்துடன் வணங்கப்பட வேண்டியதுதான், மறுக்கவில்லை. அதே நேரத்தில், இன்றைய பன்முகக் கலாச்சார அமெரிக்காவில், இறந்த ஐரோப்பிய வெள்ளைக்கார ஆண் (Dead European White Male) வடித்த கலை-இலக்கியத்தையும் அவனது அழகியலையும் மட்டுமே உச்சமெனக் கொண்டாட முனைவது செயற்கையே. மேலும், நூற்றாண்டு காலத்து அடிமைப்படுத்துதலின் விளைவுகள் உடனே மறைந்ததாய் எழுதி விட முடியுமா, அது உண்மையுள்ள இலக்கியமாகுமா, அதை நம்பத்தான் இயலுமா ? தம்மைப் பற்றிய அனைத்துமே தாழ்ந்ததாய் நினைக்கும் சுயமரியாதையற்ற அடிமைகளாய்க் கறுப்பினத்தவரை வெள்ளையர் நசுக்கியாண்ட நுட்பம் அமெரிக்க நாவல் இலக்கியத்தில் இயன்ற அளவு மனசாட்சியுடன் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. (இந்தச் சிக்கலான அடிமை உணர்வுநிலைக்கும் காலனீய ஆதிக்கத்தின் நுட்பமான உளவியல் விளைவுகளுக்குமிடையே சில ஒற்றுமைகள் இருக்கின்றன ?) விலங்குக்கும் கீழாய்ச் சில நூறாண்டுக் காலம் நடத்தப்பட்ட மனிதச்சமூகம் தன்னிலைக்கு மெல்ல மீளுவது பற்றி எழுதுகையில், சிக்கலான உணர்வுகள் சிக்கெடுக்காமலேயே தெறித்து விழுவது இயல்பு. கல்வி, வாக்குரிமை துவங்கிப் பல உரிமைகளையும் நூற்றைம்பது வருடங்களாய்ப் போராடிப் பெற்ற அமெரிக்கப் பெண்களின் நிலையும் தனிப்பட்டதுதான்; இவர்களிலும் கறுப்பினப் பெண்கள் கதை தனி.

நாவல் புனைவிலக்கியத்தில் அரசியலும், பொருளாதாரமும், பிற அசலான சமூகப் பிரச்சினைகளும் தான் வரையறுக்கும் அழகியலை மீறி விட்டால், ‘இலக்கியத் தூய்மை ‘ கெடுவதாய் ப்ளூம் கண்டிக்கிறார்; உண்மையான சமூகப் பிரக்ஞை உள்ளவர்கள் சமூகச் சீர்திருத்தத்தில் இறங்க வேண்டியதுதானே, ஏன் எழுத வருகிறீர்கள் என்கிறார். இவர் பண்டிதக் கோபுர உச்சியிலிருப்பவர்தான் எனினும், எல்லாமும் எல்லாவற்றுடனும் தொடர்புள்ள வாழ்க்கையின் ஒரு பகுதிதான் இலக்கியம் என்பது இவருக்குப் புரியாததா. பிரிவினையும், அடிமைத்தனமும், ஒடுக்குமுறையும், குரூரமும், கண்ணீரும், இரத்தக் கறையும் படர்ந்த சமுதாயம் பற்றிய கதையாடலில் கோபமும், அவமானமும், இயலாமையும், இலட்சிய நிலைக்கான தாபமும் இருப்பது இயல்பானவோர் இலக்கியப் படிநிலையே. சமூகம் சமநிலையை நோக்கிச் செல்லச் செல்ல, இலக்கியப் படிநிலைகளும் பரிணாம மாற்றமடையும்; இன்றைய பெண்களின் எழுத்து, நேற்றைய ‘கடும் பெண்ணியவாத ‘ எழுத்தினின்றும் வேறுபடுவது இத்தகைய இயல்பான மாறுதலுக்கோர் உதாரணம். பிரிவினைவாதத்தின் விரிசலுக்கும் பன்முகவாதத்தின் முழுமைக்குமுள்ள நுட்பமான வேறுபாட்டை உணர்ந்தேதான் இலக்கிய ஆக்கம் முன்னகருகிறது.

ப்ளூமின் தனிப்பட்ட மனச்சாய்வுகள் மேட்டிமைத்தனம் முதலியவற்றின் புரிதலுடன், அவற்றுக்கு அப்பாற்பட்ட அவரது முக்கியமான, நியாயமான கேள்விக்கு இனி வரலாம்: இன்றைய கலாச்சார வாழ்வு தொடர்ந்து மழுங்கடிக்கப்படுகிறதா ?

அமெரிக்காவில் இவ்வருடம் விற்ற நாவல்களில் 34% ‘ரொமான்ஸ் நாவல் ‘ எனப்படும் மசாலா நாவல் வகை. 19% மர்ம/பயங்கர நாவல் வகை. 6% விஞ்ஞானப்புனைவு/ ‘ஃபான்டஸி ‘ வகை. 25% பொதுவான பல்வகை நாவல்கள்–இவற்றின் மிக மிகச் சிறிய பகுதியே இலக்கிய நாவல்கள் என்னும் வகை. சந்தைப்படுத்தும் செப்படி வித்தை காட்டியுமே ‘இலக்கிய ‘ நாவல்களுக்கு வெகுமக்கள் வரவேற்பு குறைவு–சில விதிவிலக்குகள் தவிர.

மாறாக, அன்றைய இலக்கிய உலகத்திலிருந்து சில சுவாரசியமான தகவல்கள். ஷேக்ஸ்பியர்: வாழ்ந்த காலத்தில் அவரது நாடகங்கள் மேட்டிமை இலக்கியமாகக் கருதப்படவில்லை. மேட்டுக்குடிப் பின்னணியுள்ள கதைகளை வெகுமக்கள் ரசிப்பதற்காகப் பல ஜனரஞ்சக அம்சங்கள் — அக்காலகட்டத்தியப் பொதுச்சமூகம் மட்டரகம்/crude என்று கருதிய அம்சங்கள் உள்பட — புகுத்தி எழுதப்பட்ட, நிகழ்த்தப்பட்ட நாடகங்கள் அவை; ஷேக்ஸ்பியரின் வாழ்நாளில் மேட்டுக்குடியினரும் வெகுமக்களும் ஒரே அரங்கில் அவரது நாடகங்களைக் கண்டு ரசித்ததாய்ப் பதிவுகள் தெரிவிக்கின்றன. சார்ல்ஸ் டிக்கென்ஸ்: நாவலின் வார்த்தை எண்ணிக்கைக்கு இத்தனை ‘பென்னி ‘க்காசு என்று பதிப்பாளர் சம்பளம் கொடுத்ததால், கூறியது கூறல் மூலம் தன் நாவல்களை நீளமாக்கியவர்–பொருளியல் காரணங்களுக்காகத் தன் இயல்பான எழுத்து நடையையே மாற்றியவர். நாவல்கள் அதிக விற்பனை கண்டன. டிக்கென்ஸ் ஐம்பது வருடங்களில் மறக்கப்படுவார் என்றொரு விமரிசகர் எழுதினார் — 1848-இல்! ஃபியோடோர் தோஸ்தோயெவ்ஸ்கி: தனித் தனி நாவல்களாக எழுதத் திட்டமிட்டிருந்தவற்றை இணைத்து ஒற்றை நாவலாக்கினார்; அதுதான் அரசியல் பிரச்சாரக் காரணங்களுக்காக ‘மாஸ்கோ ஹெரால்ட் ‘ நாளிதழில் தொடர்கதையாக வெளிவந்து, இன்றும் இலக்கியமாக மதிக்கப்படும் ‘பிரதர்ஸ் கரமஸாவ் ‘. இலக்கியத் தரம், எளிமை, வெகுமக்கள் வரவேற்பு, விற்பனைச் சாதனை எல்லாம் தொடர்பற்றவையாய்த்தான் இருக்க வேண்டுமென்பது அவசியமில்லை.

அமெரிக்காவில் மேட்டிமை இலக்கியம்-வெகுமக்கள் புனைவு என்ற பிளவு ஆழமானது நவீனத்துவக் காலகட்டத்தில். டி.எஸ்.எலியட்டும் (கவிதை) ஜேம்ஸ் ஜாய்ஸும் (நாவல்) எழுதியவை மேற்கத்திய இலக்கிய வரலாற்றின் முக்கியப் புள்ளிகள் என்றான காலகட்டம் (1920-கள்). பதவுரை பொழிப்புரை இல்லாமல் — அல்லது இருந்துமே — இவை புரியாதென்ற நிலை. பெரும்பாலோரிடமிருந்து விலகி, அவர்கள் வாசிக்கச் சிரமமானதே இலக்கியம் என்ற வினோதமான பார்வையின் துவக்கம் இதுவாய்த்தான் இருக்க வேண்டும் என்கிறார் லெவ் க்ராஸ்மன்: ‘அமெரிக்கர்களாகிய நாம் நமது அரசியலில் ஜனநாயகம் வேண்டுமென்று பேசுகிறோம்; ஆனால், இலக்கிய அழகியலில் மேட்டுக்குடி வர்க்கமாகி விட்டோம். ‘

இன்றைய முக்கிய அமெரிக்கக் ‘கோடாரி ‘ விமரிசகரான பெக் நவீனத்துவ-பின் நவீனத்துவ இலக்கியப் பெரிசுகளைத் தீவிரத்துடன் ஒதுக்குகிறார்: ‘அமெரிக்க நவீனத்துவ இலக்கிய மரபு ஜேம்ஸ் ஜாய்ஸின் சொல் ‘டயரியா ‘வுடன் துவங்கி/ ஃபாக்னரின் புரியாத அலைச்சல்களிலும் நபக்கோவின் வளமற்ற ஆக்கங்களிலும் தொடர்ந்து/ பார்த், ஹாக்ஸ், காடிஸ் ஆகியோரின் அர்த்தமற்ற உளறல்களிலும், பார்த்தெல்மேயின் குறுகிய அட்டைப்பெட்டிக் கட்டமைப்புகளிலும், பின்ச்சானின் பிரமிக்கத்தக்க திறமை ஒவ்வொரு வார்த்தையாக விரயமாவதிலுமாய்த் தன் அருவெறுக்கத்தக்க வாழ்வின் முழுமையை அடைந்து/ டெலில்லோவின் முட்டாள்தனமான நூல்களின் பாரம் தாங்க மாட்டாமல், விரிசலடைந்த நடைபாதை போல் இறுதியில் உடைந்தே போனது. ‘ இது ப்ளூமின் பார்வையிலிருந்து வேறுபடுவது. ப்ளூம் உயர்த்திப் பிடிப்பது இலக்கியப் புனிதர்களாக மேற்கத்தியக் கலாச்சாரம் அங்கீகரிப்பவர்களை (புனிதமாக்கல்/canonization என்பது கத்தோலிக்க மதத்திலிருந்து இலக்கியம் கடன் வாங்கிய பதம்); அவர் நிராகரிப்பது ஸ்டாவன் கிங் போன்ற ‘வெகுமக்கள் கலாச்சாரம் என்னும் குப்பைமேட்டின் ‘ அங்கீகாரம் பெற்றவர்களை. ப்ளூம் குறிப்பிடும் அமெரிக்க நவீன/பின்நவீனப் புனிதர்களில் பலரைப் பெக் விமரிசித்து நிராகரிக்கிறார்; பழைய புனித மரபுகளின் தொடர்ச்சியாக, இந்தத் தலைமுறை எழுத்தாளர்களும் தம்மைப் பொதுமக்களிடமிருந்து அந்நியப்படுத்திக் கொள்ளும் போலி அறிவுஜீவிகளாக இருப்பது அவசியமா என்று கேட்கிறார். (ஸ்டாவன் கிங் போன்றவர்களின் எழுத்தைப் பற்றி இவர் கருத்துச் சொல்லவில்லை.) அழகியல்ரீதியாக முழுமை பெறும் அதே சமயத்தில், நவீனத்துவ மற்றும் பின்நவீனத்துவக் காலகட்டத்திய மக்களிடமிருந்து விலகியதால், நாவல் இலக்கியம் இன்று தன் சமூக-கலாச்சார இடத்தை இழந்து நிற்கிறதேயென்று பெக் கவலைப்படுகிறார். பெக்கும் ப்ளூமும் தத்தம் பார்வைகளில் வேறுபட்டாலும், அவர்களது அக்கறை ஒரு புள்ளியில் சந்திப்பது போலத்தான் தோன்றுகிறது.

பின்னோக்கிப் பார்க்கையில், இலக்கியத்தைப் பெருவாரி வாசகரிடமிருந்து தனிப்படுத்தியது நவீனத்துவ காலத்தின் ஒரு முக்கிய பங்களிப்பு என்பது தெளிவாகிறது. பதிப்புத்துறை விரிந்து, வெகுமக்கள் இலக்கியச் சந்தையும் லாபமும் விரிந்து, அதற்கேற்றபடி பலருக்கும் புரியும் எழுத்து அதிகரித்தது அக்காலகட்டம். அப்போது, சந்தை லாபமின்மை என்பதே மேட்டிமை இலக்கியத்தின் தனித்த அடையாளமாக இருந்தது. ஆனால், இன்றைய சந்தைக் கலாச்சார அவதாரம் வேறுபட்டது, எதிர்/மாற்றுக் கலாச்சாரத்தையும் கூட மற்றுமொரு சந்தைக்கூறாகத் தனது இயங்குவிதிக்குள்ளேயே நுட்பமாக அடக்கும் சக்தியுள்ளது, (தனிக்கட்டுரையாக விவாதிக்கப்பட வேண்டியது).

இன்று உலகம் வந்து நிற்கும் புள்ளியென்ன ? சந்தைப் பீடத்தில் நுகர்வுக் கலாச்சார வழிபாடு. அறிதல் மூலம் மனம் பண்படுதலே கல்வியென்பது மறத்தல். மனித உரிமை மறுப்பு. இல்லார்க்கும் உள்ளார்க்குமுள்ள இடைவெளி விரிதல். பிம்பங்களின் மின்னணு வேகத்துக்கு ஈடுகொடுக்க இயலாமை. எதைத் தேடி ஓடுகிறோம் என்பதே தெரியாமல் ஓடிக் களைக்கும் நேரமின்மை. அசலான ஆழ்ந்த சிந்தனை, உணர்வுகளை முழுதாய் உணர்தல், உலகை அதன் பன்முகச் சிக்கல்தன்மையுடன் முழுமையாக எதிர்கொள்ளுதல் முதலியவற்றை உள்ளடக்கிய தனித்துவமான எழுத்துப் படைப்பூக்கத்துக்கு இச்சூழலில் எந்த அளவு இடமிருக்கிறது என்பது கேள்விக்குரியது. ஆனால், முன்னெப்போதையும் விட இத்தகைய படைப்பூக்கம் இப்போது தேவை என்றும் நம்பத் தோன்றுகிறது.

நூற்றாண்டு காலத்திய நவீனத்துவ மற்றும் பின்நவீனத்துவப் புனைவிலக்கியம் செய்த பங்களிப்பு என்னவென்று விமரிசகர்கள் அலசும் நேரம் இது; தோல்விகளையும் தெளிவாகப் புரிந்து கொள்ளுவது அத்தியாவசியம் — அடுத்தகட்டக் கலாச்சார மாறுதலுக்கான காரணிகளும் விதைகளும் எப்போதுமே சமகாலக் கலாச்சாரத்தில், அதன் விமரிசனத்தில்தான், ஒளிந்திருக்கும். உதாரணமாக, பல நூற்றாண்டுக் காலத்திய மேற்கத்தியக் கலாச்சாரம் இயந்திரமயத் தொழில்முறை உலகுக்கும் அதன் முதல் பெரும்போருக்கும் (1914-18) இட்டுச் சென்றது புரிந்ததும், முந்தையவற்றை எதிர்க்கும் நவீனத்துவக் கலாச்சாரம் எழுந்தது. ஒட்டுமொத்த யூத இனப்படுகொலை உள்பட்ட இரண்டாம் உலகப்போரின் (1939-45) பின்னணியில், முந்தையதை முழுதாய் மறுதலிக்கும் பின் நவீனத்துவக் கலாச்சாரம் எழுந்தது. பின் நவீனத்துவ இலக்கியத்தின் தேய்பிறைக் கட்டப் புனைவுகளும், ‘நவ யதார்த்தப் ‘ புனைவுகளும் தற்போது உலவி வருகின்றன; கூடவே, ‘இவை போதுமா ‘ என்று குறுகுறுக்கும் வாசக உள்ளுணர்வும்.

(அமெரிக்க) நாவல் புனைவிலக்கியம் ஒரு புதிய பக்கம் திருப்பும் காலம் இது……

விருதுகளும் விமரிசனங்களும் விவாதங்களும் ஒருபுறமிருக்க, வாசிப்பு அனுபவமென்பது புத்தகமும் வாசகரும் இணைந்து தீர்மானிப்பது. பல புத்தகங்கள் வாழ்வின் இருளையும் ஒளியையும் நேர்த்தியுடன் படியெடுக்கும் பிரதிகளாகவே நின்று விடுகின்றன. மிகவும் சில புத்தகங்களே அறிவுத் துடிப்புள்ளவையாக, இதமான மருத்துவர்களாக, ஆப்த நண்பர்களாக நம்முடன் கைகோர்த்து நடக்க விரும்புகின்றன. இத்தகைய வாசிப்புக் கணங்களில், — மானுட குலத்துடன் உணரும் பிணைப்பும், மனதுள் படரும் உணர்வும், உலகு பற்றிய அறிதலின் ஒளியும், கற்பனையில் புரியும் சாகசங்களும், போற்றும் கைகளில் பொதிந்துள்ள இலட்சியக் கனவுகளும், கிளைத்து விரியும் கேள்விகளும் தோய்ந்த வாசிப்புக் கணங்களில், — நாம் வளர்கிறோம். என் வாசக எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் இன்னும் மழுங்கவில்லை.

சில தகவல் மூலங்கள்/ குறிப்புகள்:

1. ‘பாஸ்டன் க்ளோப் ‘, ‘லாஸ் ஆஞ்சலிஸ் டைம்ஸ் ‘, ‘நியூயார்க் டைம்ஸ் ‘ நாளிதழ்கள், ‘டைம் ‘ வார இதழ் (செப்டெம்பர்-நவம்பர் 2003).

2. ஸ்டாவன் கிங்கின் சில பொதுவான எழுத்து பற்றிய கருத்துகளின் மூலம்: அவரது சுயசரிதை ‘On Writing ‘ (Scribner, 2000).

3. ஹரால்ட் ப்ளூமின் பல பொதுவான கருத்துகளுக்கு மூலமாகும் நேர்காணல்கள் இடம்பெறும் இதழ்கள்: A Review of Contemporary Criticism (Fall 1983), Scripsi (July 1986), Paris Review (Spring 1991), Newsweek (October 1994), Queen ‘s Quarterly (Fall 1995).

4. மேற்கத்திய இலக்கியம் பற்றிய ஹரால்ட் ப்ளூமின் பல முக்கியப் புத்தகங்களில் ஒன்று: ‘The Western Canon: The Books and School of the Ages ‘ (New York: Harcourt Brace, 1994).

5. பெக்கின் பொதுவான கருத்துகளுக்கான மூலக்கட்டுரைகள் இடம்பெறும் இதழ்கள்: The New York Times (September 2003), The Guardian Observer (November 2003), The New Republic (December 2003).

6. பெக் எழுதிய நாவல்களில் சில: Martin and John (Farrar Straus & Giroux, 1993), The Law of Enclosures (Farrar Straus & Giroux, 1996), Now It ‘s Time to Say Goodbye (Farrar Straus & Giroux, 1998).

7. ‘பின் நவீனத்துவப் புனைவிலக்கியம் இறந்து விட்டதா ? ‘ ரேமண்ட் ஃபெடர்மனின் ‘க்ரிட்டிஃபிக்ஷன் ‘ நூலின் ஒரு பகுதித் தமிழாக்கமும் சிறு குறிப்பும் (காஞ்சனா தாமோதரன்), திண்ணை.காம் (நவம்பர் 1999), கணையாழி (ஜனவரி 2000).

(ஜனவரி 2004 ‘உயிர்மை ‘ இதழில் வந்த கட்டுரை, சில விரிவுகளுடன்.)

uyirmmai@yahoo.co.in

Series Navigation

காஞ்சனா தாமோதரன்

காஞ்சனா தாமோதரன்