ஒரு மயானத்தின் மரணம்

This entry is part [part not set] of 46 in the series 20060331_Issue

ம. ந. ராமசாமி


கிடங்கு எதிரே ஜீப்பை நிறுத்தி விட்டு இறங்கினேன். பாண்ட் பாக்கெட்டினுள் கையை நுழைத்து சாவிக் கொத்தை எடுத்து கிடங்குக் கதவை, நவ்டால் பூட்டைத் திறந்தபடி திரும்பிப் பார்த்தேன். மயானத் திடல் வெறிச்சோடிக் கிடந்தது. மருதனைக் காணோம்.

கண்கள் துளாவின. நெட்டைத் தென்னை மரங்கள். இங்கே ஒன்றும் அங்கே இரண்டுமாகச் சில கல்லறைகள். சாம்பல் படர்ந்த பூமி. அதே ருத்ர அரங்கம். மயான நிலத்தைக் கூட்டியபடியோ குவித்த குப்பைகளைக் கூடையில் அள்ளிப் போட்டுக் கொண்டோ விழுந்து கிடக்கும் தென்னை மட்டைகளை இழுத்துச் சென்றபடியோ அல்லது குழி வெட்டிக் கொண்டோ சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் மருதனை அங்கு காணவில்லை. எங்கே போயிருப்பான் ? அவன் உதவி எனக்கு அவசியம். கிடங்கில் இருக்கும் கால்ஸியம் கார்பைடு டிரம்களில் இரண்டைத் துாக்கி ஜீப்பினில் வைக்க அவனது உதவி தேவை. என் ஒருவனால் எண்பது கிலோ டிரம்மைத் துாக்க முடியாது.

பூட்டைத் திறக்காமல் பக்கத்தில் வயல் ஓரமாக இருக்கும் அவனுடைய குடிசையை நோக்கி நடந்தேன். வயல்களில் வாழைகள் பயிரிடப் பட்டுள்ளன. மயான பூமிக்கருகே வாழைகள் நல்ல பலன் கொடுக்கும் என்று மருதன் சொல்லியிருக்கிறான். சுடுகாட்டுப் புகை காய்க்கு ஊட்டம் கொடுக்கிறது போலும்.

குடிசைக் கதவு சாத்தப் பட்டிருந்தது. ‘ ‘மருதா ? ‘ ‘ என்று அழைத்தேன். பதில் இல்லை. கதவைத் தள்ளியபடி குடிசையுள் குனிந்து நுழைந்தேன். அதிர்ச்சி! மருதன் நடுவாந்திரமாக கைகளையும் கால்களையும் பரப்பி விழுந்து கிடந்தான். பாதி மூடிய கண்கள். ஆள் காலி. இறந்து விட்டான். மரணம் அடைந்தவர்களை எல்லாம் புதைப்பதற்கும் எரிப்பதற்கும் உதவியவன் மரணத்தைத் தழுவிக் கிடந்தான். சோகம் புகையாக மூண்டு என் மேல் கவிகிறது.

இப்போது என்ன செய்வது ? யோசித்தாக வேண்டும். திரும்பினேன். குடிசையை விட்டு வெளியே வந்து கதவைச் சாத்தி விட்டு கிடங்கை நோக்கி நடந்தேன்.

கிடங்கைத் திறந்து பூட்டு சாவிக்கொத்தை ஒரு டிரம் மீது வைத்து விட்டு ஈசிசேரை எடுத்துக்கொண்டு வெளியே வந்தேன். ஜீப்புக்குப் பின்னால் கண்டிருந்த நிழலில் ஈசிசேரை விரித்துப் போட்டு உட்கார்ந்தேன். எதிரே மயானம்.

யாராவது ஒருவரின் உதவி இல்லாமல் இரண்டு கால்ஸியம் கார்பைடு டிரம்களைத் துாக்கி ஜீப்பினுள் என்னால் வைக்க முடியாது. வயலுக்கு எவராவது வந்தால் அவருடைய உதவியை நாடலாம். அதுவரை இப்படி உட்கார்ந்திருக்க வேண்டியதுதான்.

காலைநேரம். இருபத்தியஞ்சு டிகிரி கோணத்தில் கிழக்கே சூரியன் எழுந்திருக்கிறது. விறுவிறுவென்று கன காரியமாக மேலே எழும் வெப்பத்தில் இந்த மயான பூமி தகிக்கும். வானில் ஒரு மேகத் திவலையைக் கூடக் காணோம்.

கிடங்குக்கு மருதன்தான் காவல். மாதம் ரூபாய் நுாறு கொடுத்து வந்தேன். டிரம்களை எடுத்துச் செல்ல வாரம் இரண்டு முறையும் உற்பத்தியாளரிடமிருந்து லாரியில் வரும் டிரம்களை இறக்க மாதம் ஒரு தடவையும் நான் இங்கு வருவது வழக்கம். லாரியில் இருந்து இறக்க உடன் வரும் கூலிகள் போதும். எடுத்துச் செல்லும் போதுதான் எனக்கு மருதன் உதவி தேவை. அவன் உதவி இனி எனக்குக் கிடைக்காது.

அவர் என்று சொல்ல வேண்டும். அத்தனை வயது அவனுக்கு. தொடக்கத்தில் வாங்க, நீங்க… என்றுதான் நான் அவனிடம் பேசினேன். ‘ ‘வேண்டாஞ் சாமி! அப்பிடிப் பேசாதீங்க. சாதீல நான் உங்க பக்கத்திலே வரக் கூடாதவங்க. மருவாதி குடுத்தீங்கன்னா உடலு கூசுது! ‘ ‘ என்றான்.

வந்தால் இப்படித்தான் ஈசிசேரைத் துாக்கிப் போட்டுக்கொண்டு சாய்ந்திருப்பேன். நேரம் அநேகமாகக் காலையாகத்தான் இருக்கும். எப்போதோ ஒரு சமயந்தான் ஒரு காலைநேரத்தில் அவனுக்கு வேலை இருந்தது. வேலையை விட்டுவிட்டு வரமுடியாமல் இருந்தது. மற்றபடி என் ஜீப் குழல் ஒலியைக் கேட்டுவிட்டு கிடங்கு அருகில் வந்துவிடுவான். நேராக அமராமல் என் வலப்பக்கமாக உட்கார்வது அவன் வழக்கம்.

‘ ‘ஒனக்கு என்ன வயசு ஆறது மருதா ? ‘ ‘ என்று ஒரு சமயம் கேட்டேன்.

‘ ‘என்னங்க பதினாறோ பதினேழோ ஆகிறது… ‘ ‘

திடுக்கிட்டேன். ‘ ‘விளையாடுறியா ? ‘ ‘ என்றேன்.

‘ ‘ஏங்க ? ‘ ‘

‘ ‘நீ என்ன மார்க்கண்டேயனா, என்றும் பதினாறு வயசு இருக்க ? ‘ ‘

‘ ‘அது யாருங்க மார்க்கண்டேயன் ? ‘ ‘

‘ ‘கிடக்கட்டும் விடு. உனச்கு நுாத்திப் பதினாறு வயசாவது இருக்கும்… ‘ ‘

‘ ‘எனக்குத் தெரியாதுங்க… ‘ ‘

‘ ‘ரூவா நோட்டை எண்ண மட்டும் தெரியுமாக்கும் ? ‘ ‘

மருதன் சிரித்தான். துாய உள்ளத்தின் சிரிப்பு.

இப்போது அந்த மார்க்கண்டேய மருதன் இறந்து கிடக்கிறான். அவனை எடுத்து – அவன் உடலை எடுத்து யார் புதைப்பார்கள் ? அவன் புதைக்கப் படும் சாதியா ? அவனது பந்துக்களுக்கு தகவல் கொடுக்க வேண்டுமே ?

‘ ‘மருதா உன் சொந்தக்காரங்க இங்க வருவாங்களா ? ‘ ‘ ஒரு சந்தர்ப்பத்தில் கேட்டேன்.

‘ ‘மாட்டாங்க. அவங்க எல்லோரும் பெரிய படிப்பு படிச்சிப் பெரிய மனுஷாளா ஆயாச்சி ‘ ‘ என்றான்.

‘ ‘உனக்குக் கல்யாணம் ஆச்சோ ? ‘ ‘

‘ ‘ஆச்சுங்க. ஒரு பையன் கூடப் பொறந்துச்சு. வளந்து போயிடுச்சு. பொண்டாட்டியும் செத்திட்டா. இங்கிட்டுதாள் பொதைந்நேள்… ‘ ‘

என் கவனத்துக்கு வருகிறது – இவன் புதைக்கப் படும் சாதி!

சேரி அருகில்தான் இருக்கிறது. திரும்பும்போது அங்கே போய்ச் சொல்லிவிட்டுப் போனால், அவர்களில் யாராவது சொந்தக்காரர்கள் இருந்து, உடலைப் புதைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யலாம். நிறையக் காசு சேர்த்து வைத்திருப்பான். சேரியில் சொல்கையில் நாலு பேரை சாட்சி வைத்துக் கொண்டு சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் எவனாவது குடிசைக்குள் புகுந்து திருடிக் கொண்டு போய்விடுவான்.

இப்படியொரு இடத்தில் கிடங்கு அமைக்க வேண்டியது எனக்கு சட்டப்படி அவசியம். கால்ஸியம் கார்பைடு என்பது வெடிக்கக் கூடிய சமாச்சாரம்.

அஸிடிலின் வாயு கேள்விப் பட்டிருக்கிறீர்களா ? இந்த வாயு தொழிற்சாலைகளில் இரும்புத் தகடுகள் முதலான வலிய உலோகங்களைத் துண்டிக்க உதவுகிறது இது. எரியக் கூடியது. அழகிய நீல ஜ்வாலை தரும். ஆக்ஸிஜன் என்னும் பிராணவாயுவின் உதவியால் தீ ஜ்வாலை அதிக உஷ்ணம் பெற்று உலோகங்களைத் துண்டிக்கிறது. கல்கத்தாவில் இந்த அஸிடிலின் வாயு-விளக்குகளை வைத்துக்கொண்டு சாலையோர வியாபாரிகள் இரவில் வாணிபம் செய்வதைக் காணலாம். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாகத் தமிழகத்தில் கார்பைடு விளக்குகள் சைக்கிள்களில் பொருத்தப் பட்டிருந்தன. Gas welding செய்யவும் அஸிடிலின் வாயு பயன்படுத்தப் படுகிறது. கால்ஸியம் கார்பைடுடன் நீர் சேர்த்தால் இவ்வாயு கிடைக்கும்.

இந்த கால்ஸியம் கார்பைடு பச்சைநிற டிரம்களில் வருகிறது. ஒருதுளி நீர் டிரம்மில் இறங்கினாலும் போதும், டிரம்மினுள் அஸிடிலின் வாயு எழுந்து டிரம் வெடித்துச் சிதற ஏதுவாகும். அதனால் explosive விதிகளின்படி கால்ஸியம் கார்பைடு கிடங்கு ஊரைவிட்டு ஒதுக்குப்புறமாகக் கட்டப் பட்டிருக்க வேண்டும்.

இங்கே மயானம் ஓரமாக மேடான இடத்தில் ஊர்க் கணக்குப் பிள்ளை மூலமாக இடம் வாங்கி கிடங்கு கட்டினேன். மரம் பயன்படுத்தக் கூடாது என்று சட்டம். கருங்கற்களும் கான்கிரீட்டும் ஸ்டால் ட்ரஸ்களும் கொண்ட கட்டடம். கதவுகூட இரும்புத் தகடால் ஆனது. தீப்பற்ற ஏதுமில்லை. மழைநீர் புக முடியாது.

கிடங்கு கட்டப்பட்ட போது மயானம் காக்கும் மருதன் கிடங்குக்குக் காவலாளாக அமைவான் என்றோ, தேவைப்பட்டபோது டிரம்களைத் துாக்கி ஜீப்பில் வைக்க உதவுவான் என்றோ நான் எண்ணி யிருக்கவில்லை. அவனது தானே வந்துவிடக் கூடிய சகாயம்.

கிடங்குக்கான கட்டடத்தைக் கட்ட நான் அஸ்திவாரம் போட ஏற்பாடு செய்தபோது அவன் வந்தான். ‘ ‘என்ன கட்டறீங்க ஐயா ? ‘ ‘ என்று கேட்டான்.

‘ ‘குடோன் ‘ ‘ என்றேன்.

‘ ‘இது சுடுகாடு ஆச்சே… ? ‘ ‘

‘ ‘ஊருக்கு வெளியேதான் இதைக் கட்டணும்… ‘ ‘

புரிந்து கொண்டானோ என்னமோ, மேலும் கேள்வி கேட்டுக் கொண்டு அவன் நிற்கவில்லை.

இரும்புக் கம்பிகளையும் கதவுக்கான தகட்டையும் சிமென்ட் மூட்டைகளையும் கொண்டு வந்து இறக்கிய போது மருதனின் உதவி தேவைப்பட்டது. அவனுடைய குடிசைக்குச் சென்று ‘ ‘இதுகளையெல்லாம் ஜாக்கிரதையா களவுபோகாமப் பார்த்துக்கறீங்களா ? ‘ ‘ என்று கேட்டேன்.

‘ ‘அதுக்கென்னங்க ஆகட்டும் ‘ ‘ என்றான் அந்த நண்பன்.

இப்படித் தொடங்கியது எங்கள் உறவு. உறவா ? பந்தமா ? அப்படி எல்லாம் பெரிய வார்த்தைகளைப் போட்டு எனக்கும் அவனுக்கும் இடையே இருந்த உறவைப் பெரிதுபடுத்த நான் விரும்பவில்லை. ஊதியமாக, நுாறு ரூபாய்க்காக எந்த வேலை சொன்னாலும் செய்ய அவன் தயாராக இருந்தான் என்றும் நான் சொல்ல மாட்டேன்.

***

அந்த மருதன் இறந்து கிடக்கிறான். அவன் இடத்தை நிரப்ப நான் வேறு ஒருவரைத் தேடியாக வேண்டும். ஆனால் அவனைப் போல ஒருவர் கிடைப்பாரோ ?

‘ ‘மருதா இப்படி சுடுகாட்டுல தனியா இருக்கியே, பயமா இல்லே ? ‘ ‘ ஒரு சமயம் கேட்டேன்.

‘ ‘பயம் ஏதுங்க ? இது தொழிலு! ‘ ‘

‘ ‘இங்கே மயானத்துக்கு ராத்திரி வேளையிலே குடுகுடுப்பைக்காரங்களும், மந்திரவாதிங்களும் வந்து ஏதேதோ செய்வாங்களாமே ? ‘ ‘

‘ ‘அப்படி எல்லாம் இங்கே இல்லிங்க… ‘ ‘

‘ ‘சுடுகாட்டுல பேய் பிசாசு இருக்கும்னு சொல்றாங்களே ? ‘ ‘

‘ ‘அதெல்லாம் நான் பார்த்தது இல்லிங்க… சும்மா சின்னப் பிள்ளைங்களை பயமுறுத்தச் சொல்லுவாங்க! ‘ ‘

‘ ‘பேய் பிசாசு நிஜம்மாவே இல்லீங்கறியா ? ‘ ‘

‘ ‘எனக்குத் தெரியாதுங்க. நான் பார்த்தது இல்லீங்க! ‘ ‘

சுடுகாட்டில் வசிக்கும் மருதனே பேய்களையும் பிசாசுகளையும் பார்த்தது இல்லை என்றால் வேறு யார்தான் பார்த்திருக்க முடியும் ? ஆத்மார்த்தமாக அவனிடமிருந்து இந்த உண்மையை நான் தெரிந்து கொண்டேன். உண்மைகள் எங்கிருந்தோ நமக்குக் கிடைத்துக் கொண்டுதான் இருக்கின்றன.

இப்படியொரு ஆத்மபோதனை செய்த மருதன் இப்போது இல்லை. அவன் கற்பித்த உண்மை என் மனதுள் ஆழ்ந்து இருக்கிறது. அவனுடைய அனுபவங்களை நான் என்னுள் உணர்ந்திருக்கிறேன்.

***

டண் டண் என்ற ஓசை கேட்டது. கூடவே சங்கு ஒலி. ஓஹோ ஹோ! ஒரு உடலின் இறுதி யாத்திரை.. எழுந்து நின்று திரும்பி நோக்கினேன். பாடையைச் சுமந்தபடி ஒரு சிறு கூட்டம் ‘கோவிந்தா ‘ கோஷம் இட்டபடி வந்து கொண்டிருந்தது.

புதைக்கவோ எரிக்கவோ, எதற்காக வாயினும் உதவ மருதன் இல்லை. அவர்கள் என்ன செய்வார்கள் ? மருதன் இருந்ததால்தான் அந்த மயானத்துக்கு அர்த்தம் இருந்தது. அவன் இல்லை. இறந்து கிடக்கிறான். அவனுடன் அந்த மயானமும் இறந்து கிடக்கிறது. மருதன் இல்லாதபோது மயானமும் இல்லை.

இந்த மயானத்துக்கு உயிர் ஊட்ட வேண்டும் என்றால், இங்கு இன்னொரு மனிதன் உழைக்க வரவேண்டும். அப்படி இன்னொரு மருதன் வருவது என்பது சாதாரண சமாச்சாரம் அல்ல. இந்த மயானம் காக்கும் உத்தியோகம் பரம்பரை பாத்தியதையாக இருக்கலாம். மருதனுக்கு சந்ததி இல்லையாகையால் அவனுடைய நெருங்கிய தாயாதிகளில் எவருக்காவது உரிமை போய்ச் சேரலாம். இந்த உரிமையை நிலைநாட்டி வேறு ஒருவர் வெட்டியான் உத்தியோகத்தை ஏற்று வர வெகு நாட்கள் ஆகும். மாதங்கள் கூட ஆகலாம். ஏன், எதாவது பங்காளிகளுக்குள் உரிமைப் பிரச்னை வந்து, அதனால் வில்லங்கம் எழுந்தால், காலியிடத்தை நிரப்ப ஆண்டுகள் கூட செல்லும்.

அதுவரை இந்த மயனாம் இறந்து கிடக்கும். இந்த மயானத்தின் மரணம் இந்த ஊர்மக்களை பாதிக்க இருக்கிறது. நல்ல காலமாக அதோ அக்கரையில் ஒரு மயானம் இருக்கிறது… ஓ, இந்த மயானம் ஒரு நதிக்கரையில் இருக்கிறது என்று சொல்ல மறந்து விட்டேன்!

அந்த அக்கரை மயானத்துக்கு உடல்களைக் கொண்டு செல்லலாம். ஆற்றைத் தாண்டக் கூடாது, என்று சொல்வார்கள். அது எங்கே இக்காலத்தில் நடைமுறையில் இருக்கிறது ? மருத்துவமனைகளில் இறந்தவர்களின் உடலை டாக்ஸியில் ஏற்றி வாராவதி வழியாக ஆற்றைக் கடந்து, அமெரிக்காவில் இறந்த இந்திய V I P உடல்களை விமானத்தில் ஏற்றி சமுத்திரத்தைத் தாண்டி கொண்டுவரும்போது, கேவலம் இந்த ஆற்றைக் கடப்பதுதானா தவறு ?

நடந்தேன். வந்தவர்கள் பாடையை நிழல்பார்த்து இறக்கி வைத்தனர். இரண்டு பேர் வெட்டியானைத் தேடி அலையப் புறப்பட்டனர். நேராக அவர்களிடம் சென்று அவர்களில் நால்வரை அழைத்துக் கொண்டு மருதனின் குடிசைக்குச் சென்றேன்.

குடிசையின் கதவைத் தள்ளி மருதனின் உடலை அவர்களுக்குக் காட்டினேன். திடுக்கிட்டு அவர்கள் பின்வாங்கினர்.

‘ ‘அதோ அந்த அக்கரை இடுகாட்டுக்குப் போங்க, ‘ ‘ என்று அவர்களுக்கு அறிவுரை வழங்கினேன்.

‘ ‘ஆத்தைத் தாண்டக் கூடாதுங்களே ? ‘ ‘

நான் நினைத்ததுதான். எப்படியாவது போங்க, என்று எண்ணியவாறு நடந்தேன். கிடங்கைப் பூட்டிவிட்டு ஜீப்பைக் கிளப்பி விட்டு நான் செல்ல வேண்டும். சென்று சேரியில் மருதனின் மரணத்தைப் பற்றிச் சொல்லி விட்டு, ஒரு கூலியை அழைத்துக் கொண்டு வர வேண்டும். ஜீப்பில் இரண்டு டிரம்களைத் துாக்கி வைத்துத் திரும்ப வேண்டும்.

திரும்ப வேண்டுமா என்ன ? கடைக்கு இன்று ஒருநாள் மருதன் இழப்புக்கு வருத்தம் தெரிவிக்கும் நிமித்தமாக விடுமுறை. கடையில் காத்திருக்கும் ஊழியரை வீட்டுக்குப் போகச்சொல்லி விட்டு கடையைப் பூட்ட வேண்டும்.

அந்த மனிதனின் மரணத்தால் ஊர் மக்கள் மட்டுமல்ல, நான் ஆத்மார்த்தமாக லோகாயதமாகப் பாதிக்கப் பட்டிருக்கிறேன்.

தன்னை ஆட்சிசெய்த மனிதனை இழந்து இந்த மயானமும் மரணமடைந்து கிடக்கிறது.

‘சில்லென்று பூத்த

சிறுநெருஞ்சிக் காட்டினிலே

நில்லென்று சொல்லி

நெடுந்துாரம் போனீரே!… ‘

ம ந ராமசாமி – மணிப்பால்

mnrwriter@gmail.com

Series Navigation