ஒரு பிரச்சனையின் இரண்டு முகங்கள்

This entry is part [part not set] of 28 in the series 20100829_Issue

புதியமாதவி


———————–

கடந்தவாரம் தொலைக்காட்சியில் (ராஜ்/பொதிகை என்று நினைக்கிறேன்)
பெண்ணுரிமைக் குறித்தக் கருத்தரங்கம் நடந்துக் கொண்டிருந்தது.
பேராசிரியர் பத்மாவதி விவேகானந்தன், அரங்க மல்லிகா என்று
என் நட்பு வட்டத்தின் முகங்களைப் பார்த்தவுடன் அவர்கள்
கருத்துகளைக் கேட்கும் ஆர்வத்தில் உட்கார்ந்திருந்தேன்,

பெண் விடுதலை என்பது
“பெண் குறைந்தப்பட்சம் அவள் சார்ந்தப் பிரச்சனைகளுக்கு
அவளுக்கு இருக்கும் முடிவு எடுக்கும் அதிகாரவெளி” என்று
அடையாளப்படுத்தப் பட்டது. உண்மைதான்.
இந்தக் கருத்தின் உள்ளும் புறமும் பயணம் செய்யும் போது
‘ இந்த முடிவு எடுக்கும் அதிகாரம்’ என்பதைப் பற்றிய
பல்வேறு முகங்களை நாம் பார்க்க முடியும்.

ஷாஜஹானைத் தன் அழகால் மட்டுமல்ல தன் அறிவுக்கூர்மையாலும்
மும்தாஜ் ஆட்சி செய்துக் கொண்டிருந்தாள் என்கிறார்கள்.
இன்றைக்கும் கூட அரசியல் தலைவர்களின் அதிகாரத்தை
தீர்மானிக்கும் “கிட்சன் கேபினெட்” பற்றி எழுத ஆரம்பித்தால்
மெகா தொடர் எழுதலாம்!
அக்காமார்கள் (தஞ்சை மராத்திய அரசில் தேவதாசிகள்)அரசனுக்கு வட்டிக்கு
கடன் கொடுத்த வரலாறு குறித்த ஆவணங்கள் தஞ்சை சரஸ்வதி
மஹால் நூலகத்தில் இருப்பதாகவும் அவர்களைப் பற்றி நான்
வாசித்து எழுத வேண்டும் என்றும் அழைக்கிறார் என் நண்பர் ஒருவர்.

பெண்களின் ஒரு பக்கம் இப்படி இருந்தால் இன்றைக்கும்
பெண்ணை மட்டும் மண்ணென்ணெய் ஊற்றி எரித்தச் செய்திகளால்
நிரம்பி வழிகிறது நம் நிகழ்காலம்.
இத்தனை எண்ணங்களும் அந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் போது
வந்து அலைமோதிக்கொண்டிருந்தன..

அப்போதுதான் அந்த இரண்டு பெண்களின் கருத்தும்
என்னைக் கொஞ்சம் யோசிக்க வைத்தது.
ஒருவர் தொழிலதிபராக தன்னை வளர்த்துக் கொண்ட பெண்.
தன் கணவர் இறந்தப் பின் தான் மறுமணம் செய்துக் கொண்டதையும்
அந்த மறுமணத்திற்கு ஆதரவாக இருந்தது மட்டுமல்ல,
மறுமணத்தின் தேவையை எனக்குப் புரிய வைத்தவர்களும் என்
பிள்ளைகள் தான் என பெருமையுடன் சொன்னார்.
அப்போது அந்தப் பெண்ணின் முகத்தில் தெரிந்தக் கம்பீரம்..
மகிழ்ச்சி…, அவர் வார்த்தைகளின் சத்தியத்தை வெளிச்சமிட்டது
என்று தான் சொல்ல வேண்டும்.

உடனே எதிர்முனையில் இருந்த இன்னொரு பெண் பேச ஆரம்பித்தார்.
“எனக்கும் மறுமணம் செய்து கொள்ள விருப்பம் தான். மறுமணத்தின்
தேவையை நான் உணர்ந்திருக்கிறேன்.
என்றாலும் என்னால் மறுமணம் செய்வதென்பது சாத்தியப்படாது” என்றார்.
‘விருப்பம் இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்கிறீர்கள்,
தேவையை ஆதரிக்கிறீர்கள்.. ஆனால் செய்து கொள்ள முடியாது …
என்றால் உங்களுக்கு முடிவு எடுக்கும் அதிகாரம் இல்லையா?’
என்ற கேள்வியை முதல் பெண்மணி கேட்கிறார்.
இவர் சொன்னார்…விரக்தியான ஒரு புன்னகையைத் தவளவிட்டு..

‘உங்களுக்கு இருப்பது ஆண் மக்கள், எனக்கு இருப்பது பெண் மக்கள்..’
இவ்வளவு தான்..
அதற்கு மேல் அவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள் என்பதை விட்டு
நான் வெளியில் வந்துவிட்டேன்.
அந்த இரண்டாவது பெண்ணின் முகமும் கண்களும் அவர் சொன்னக்
காரணமும் இன்னும் என்னைத் துரத்துகிறது..

ஜெர்மன் கல்சுருகியில் தோழி தேவா ஹெரால்ட் இல்லத்தில் தங்கி
இருந்தப்போது இதே விசயத்தைப் பற்றிப் பேசிய நினைவு வருகிறது.
ஜெர்மனியில் குடும்பநல வழக்குகளில் தமிழ்-ஜெர்மன்
மொழிபெயர்ப்பாளராக இருக்கிறார் தேவா
புலம்பெயர்ந்தப் பெண்கள் சிலரின் மறுமணத்தில் அப்பெண்களின்
மூத்தக் கணவருக்குப் பிறந்தப் பெண்குழந்தைகள் அனுபவிக்கும்
பாலியல் கொடுமைகளைப் பகிர்ந்து கொண்டார்.
கணவன், தன் குழந்தைகள் என்று இருவருக்கும் நடுவில் மறுமணம்
செய்து கொண்ட அந்தப் பெண்கள் அனுபவிக்கும் மன உறுத்தல்
வல்லாங்கை விட கொடுமையானது.

முடிவு எடுக்கும் அதிகாரத்தைப் பெறும் வழித்தடத்தை
யார் தீர்மானிக்கிறார்கள்?

பெண் என்பவள் அவள் மட்டும்தானா?

அவளைச் சுற்றி எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும்
கோள்களின் விசையே அவள் விசையைத் தீர்மானிக்கிறதா?

Series Navigation