ஒரு நல்ல சிநேகிதி

This entry is part [part not set] of 28 in the series 20090409_Issue

எஸ் வைதீஸ்வரன்மாலதியின் தாயாரின் கட்டுரையில் ஒரு தாயின் ஈடுசெய்யமுடியாத இழப்பும் ஆற்றமுடியாத துக்கமும் ஆழ்ந்த மனக் குரலாக வெளிப்பட்டிருக்கிறது..

மாலதியின் இழப்பு அவருக்கு மட்டுமல்ல.. சக கவிஞர்களான எங்களுக்கும் இன்னும் எத்தனையோ இலக்கிய நண்பர்களுக்கும் அது ஒரு பேரிழப்புத் தான். அநேகமாக வாரத்தில் இரண்டு மூன்று முறையாவது உச்சிப் பகலில் அவரிடமிருந்து தொலை பேசி எனக்கு வந்து விடும். அது அவருடைய உணவு இடைவேளை .. ஆபீஸ் காரியங்களை ஒதுக்கி விட்டு கொஞ்ச நேரம் விடுதலையாக மனம் திறந்து கவிதைகளைப் பற்றி இலக்கிய விவகாரங்களைப் பற்றி அவருக்கு பேசினால் தான் நிம்மதியாக இருக்கும். தான் எழுதிய கவிதையை வாசித்துக் காட்டுவார். தான் படித்த மற்றவர்கள் கவிதையைப் பற்றி தீவிரமாக விவாதிப்பார்.. குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்வார்.. தன் மகளுக்காக அனாதை இல்லத்திலிருந்து ஒரு குழந்தையை தேர்வு செய்த விவரங்களை திறந்த மனசுடன் எனக்கு தெரிவிப்பார்.. குழந்தையை தனதாக்கிக் கொண்டபிறகு அதன் ஒட்டுறவு தன்னை எப்படி ஆனந்தத்தில் குளிப்பாட்டியது என்பதையெல்லாம் தன்னை மறந்து பேசிக் கொண்டே இருப்பார்.
” இப்படி ஆபீஸ் தொலை பேசியை ”இவ்வளவு” சொந்தமுடன் பாவிக்கிறீர்களே..பரவாயில்லையா? ‘ என்று கேட்பேன்
”நான் இதைத் தவிர ஆபீஸில் வேறு எந்த சலுகையையும் பயன் படுத்திக் கொள்ளுவதில்லை.. பதவி உயர்வைக் கூட
எதிபாராமல் என் உழைப்பை சற்று அதிகமாகவே நான் கொடுத்து வருகிறேன் ” என்பார்கள்.

மாலதி அவரை மிகவும் பாதித்த நல்ல கவிஞர்களின் பாராட்டு விழாக்களுக்காக நிறைய நிதி உதவி செய்திருக்கிறார்கள்;
ஆனாலும் அவருடைய பெயர் அறிவிக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் ..நல்ல கவிஞர்களை விட நல்ல மனமுள்ள நட்புறவுள்ள
மனிதர்களை பார்ப்பது அரிதானது.. மாலதி இந்த இரண்டு அம்சங்களும் ஒருங்கே அமைந்தவர்கள்..
இப்போதும் ஏதாவது ஒரு உச்சிப் பகலில் ”இப்போது மாலதியிடமிருந்து அழைப்பு வராதா ..? ” என்று நான்
தொலை பேசியை ஆவலுடன் பார்ப்பதுண்டு..

–வைதீஸ்வரன் —

Series Navigation

எஸ் வைதீஸ்வரன்

எஸ் வைதீஸ்வரன்